சிறப்புமுகாம்வாசிகள் மடல்

அனுப்புநர் :
இலங்கைச் சிறைவாசிகள்
இலங்கைச் சிறப்புச்சிறை
மத்தியச் சிறை வளாகம்
திருச்சி
ஐயா
வணக்கம்.
நாம் இந்த  மக்களாட்சி நாட்டின் விருந்தாளிகள். எம்மீது ஐயத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுப், பிணையில் வெளியே வந்தவர்கள் . வழக்கை முடிக்காமல் சொந்த நாட்டிற்குச் சென்று விடுவார்கள் எனும் அடிப்படையில் வெளிநாட்டவர் தடுப்புச் சட்டம் 3[2]உ-ஐப் பயன் படுத்தி எம்மைச் சிறப்பு முகாம்களில் அடைக்கின்றீர்கள். எமது விடுதலைக்கு நீண்ட காலம் ஆகும் என்பதைக் கருத்திற் கொண்டு உச்சநீதி மன்றம், உயர் நீதி மன்றங்கள் “வெளிநாட்டவரை நாம் மதிக்க வேண்டும் என்றும், மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு உயரிய சிறப்புநயப்பு(சலுகை)களைச் சிறப்பு முகாம்வாசிகளுக்கு வழங்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டு உள்ளன. அவற்றில் 15 % நயப்புகளையே தமிழக அரசு வழங்கி வருகின்றது. எமக்கு விடுதலை கிடைத்தால் போதும் என்று இருக்கும் பொழுது, குடும்பங்களை விட்டுப் பிரிந்து இருப்பதால் பெரும் மன அழுத்தத்தில் இருக்கும் நேரத்தில், சில அதிகாரிகள் கொடுக்கும் தொல்லையினால் மேலும் மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றோம்.

 1991 ஆம் ஆண்டு செங்கல்பட்டு, 1999 பூந்தமல்லி சிறப்பு முகாம்கள் தொடங்கிய காலம் முதல் இதுவரை நடைமுறையில் இல்லாத தனியாள் தவறான அதிகாரப் பயன்பாட்டைத் திருச்சிச் சிறப்பு முகாம் வட்டாட்சியர் பெரியசாமி மேற்கொள்கிறார். எம்மைப் பார்க்க வரும் உறவினருக்கும் எமக்கும் உள்ள உறவுக்கான சான்றிதழ் வழங்க வேண்டும்; இரத்த உறவு க்கு மட்டும் இசைவு என்கிறார். அந்த வகையில் அப்பா, அம்மா, தமையன், தம்பியர், மனைவி, பிள்ளைகள் மட்டுமே அடங்குவர். தமக்கை, தங்கையர், அவர்கள் பிள்ளைகளுக்கு எப்படிச் சான்று காட்ட முடியும். மேலும், மாமா, மைத்துனர், பெரியப்பா, சித்தப்பா, சித்தி, முதலான உறவுகளுக்கு எப்படிச் சான்றிதழ் வழங்க முடியும்? அமைதியாக இருக்கும் எம் உணார்வுகளைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறார் இவர்.

 இங்கு ஒருவருக்கு மட்டுமே அப்பா,அம்மா உள்ளனர். மற்றவர்களுக்கு மனைவி பிள்ளைகள், பிற சொந்தங்களே!  எமக்குச் சிலஉறவுகளே இங்கு இருக்கும் நிலையில். நாம் சிறையில் இருப்பதனால் எமது குடும்பத்தையும் எம் உறவுகளே பாதுகாக்கின்றனர். நீங்கள் தரும் 70, உரூபாய் எமக்கு எப்படிப் போதும் என்பதை உங்கள் மனச்சான்று கூறட்டும். எம் உறவுகள் வருவதால்தான் அவர்களால் முடிந்தது  ஏதாவது எங்கள் கையில் தரும் போதும், அவர்களைப் பார்க்கும் போதும் மனத்திற்கு ஆறுதலும் அமைதியும் கிடைக்கின்றன.

 நாங்கள் இந்த நாட்டிற்கு எதிரான  தீவாதம் செய்தவர்கள் அல்லர். இந்த நாட்டில் வாழ முடியாமல் ஆசுதிரேலியா செல்வதற்கு முயன்றவர்கள். 420பிரிவு போன்ற சிறிய வழக்குகளே உள்ளன. எம்மைக் கொடுமை படுத்தும் படி எந்தச் சட்டமும் சொல்லவில்லை.

 1991முதல் 2006ஆம் ஆண்டு வரை சிறப்பு முகாம்களில் குடும்பங்களாகவே தங்கவைக்கப்பட்டு இருந்தார்கள். நம்மவர்களே. பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப் படுவதால் அதனைத் தவிர்த்து வந்தோம். அச்சட்டம் இப்பொழுதும் நடைமுறையில் தான் உள்ளது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
 தனியரின்  அரக்கக் குணத்தால் தமிழகமுதலமைச்சர் அம்மா அவர்களுக்குக் களங்கம் வந்து விடக்கூடாது அதனால் அரசு அதிகாரிகள் உடனடியாக இதனை நன்கு ஆராய்ந்து செயல்படவும். சட்டத்தில் உள்ள  நயப்புகள் அனைத்தும் அரசு செயல்படுத்துவதாயின், வட்டாட்சியரின் விருப்ப்பபடி நாம் நடக்க  இசைவு தருகின்றோம். நாம் வழங்கிய முறையீடுகளுக்கு  விடை அனுப்பாமல் அலட்சியம் செய்வது அரசா? அதிகாரிகளா?. நம்மை திருச்சியில் வைத்திருப்பது சிறப்புச்சிறையா? சிறப்புமுகாமா? உங்கள் மறுமொழிக்கு ஆவலுடன் காத்திருக்கின்றோம் .வாழ்க தமிழ் …வளர்க, தமிழ்நாடு .
படி:
1] அரசு முதன்மைச் செயலகம் (சிறைவாசிகள்)
2]பொது[மறுவாழ்வு]த் துறை
3] மாவட்ட ஆட்சியர் ,திருச்சி
4] காவல் கண்காணிப்பாளர், ‘க்யூ’ பிரிவு உளவுத்துறை