தமிழீழத்தின் அடர்ந்த ஆழமான காடுகளில் ஒன்றில் தமிழ்ஞாலத் தேசியத் தலைவர்  மேதகு பிரபாகரன் அவர்களால் முதன் முதலில் 1989 ஆம் ஆண்டு  மாவீரர் நாள் உரை ஆற்றப்பட்டது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நம் நினைவிற்காக இம்மாவீரர் கிழமையில் வழங்கப்படுகிறது.

“எமது போராட்டத்தில் இன்று ஒரு முதன்மையான நாள். இது வரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் தொடங்கியுள்ளோம். முதல் முறையாக இன்று இந்த மாவீரர் நாளை நாங்கள் தொடங்கியுள்ளோம். எத்தனையோ உலக நாடுகளில் அந்த நாடுகளின் விடுதலைக்காக போரிட்ட படை வீரர்களின், பாதுகாப்புக்காகப் போரிட்ட படைவீரர்களின் நினைவாகவும் இப்படிப் பட்ட மாவீரர் நாட்களைக் கொண்டாடுவது வழக்கம். உங்களுக்குத் தெரியும் இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச்சாவடைந்த ஒவ்வொரு போராளிக்குமாகத் தனிப்பட்ட நினைவு நாட்களைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த வருடத்திலிருந்து வீரச்சாவடைந்த எல்லோரையும் மொத்தமாக வருடத்தில் ஒரு நாள் நினைவு கூர்ந்து அந்த நாளையே “மாவீரர் நாள்” ஆகப் பிரகடனப் படுத்தியுள்ளோம். அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அதாவது எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவதாக வீரச்சாவு அடைந்த “சங்கரின்” நினைவு நாளான இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பறைசாற்றுகின்றோம்!

தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லாப் போராளிகளும் சமம் எனும் ஓர் நோக்கத்துடனும் இந்த நாளை நாம் கொண்டாட முடிவு செய்துள்ளோம்.அதாவது எமது போராளிகளை நினைவு கூரும் நாளை, ஒரு நாளில் வைப்பதால் எல்லோரும் அன்று, எமது இயக்கத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து போராடி வீரச்சாவு அடைந்த இயல்பான உறுப்பினர் வரை எல்லோரையும் சமமாகத் தான் கருதுகிறோம்.

எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முதன்மையான விழாவாக இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாடத் தொடங்குகிறோம்!

 –          மாவீரர் நாள் உரை 1989


எமது தாய்நாடு விடுதலை பெறவேண்டும்.  எம்மைப் பிணைத்திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்பட வேண்டும்.  எமது மக்கள் சுதந்திரமாக,  மதிப்பாகப், பாதுகாப்பாக வாழ வேண்டும்.  இந்த இலட்சியம் ஈடேற வேண்டுமாயின் நாம் போராடித்தான் ஆகவேண்டும்.  இரத்தம் சிந்தித்தான் ஆக வேண்டும்.

நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கிறோம்.  அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தால் நீர்பாய்ச்சி வளர்க்கிறோம்.  இந்த விதை வளர்ந்து  மரமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.

–          மாவீரர் நாள் உரை 1990

 

அமைதியின் கதவுகளை இறுக மூடிவிட்டுப் போரை விரிவாக்கம் செய்வதில் எதிரி முனைப்புடன் அக்கறை காட்டிவருகிறான். . . . .

ஆயுத  வலிமையால் தமிழினத்தை அடக்கி ஆளவேண்டுமென்ற சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்க மனோநிலையில் சிறிதளவேனும் மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. இன வெறுப்பு அரசியல் சேற்றில் சிங்களத்தேசம்

மூழ்கிக்கிடக்கும்வரை தமிழரின் தேசியவிழைவுகளைப் பூர்த்திசெய்யும் வகையில் ஒரு நீதியான, நன்னெறியான அரசியல் தீர்வை நாம் சிங்கள ஆளும் இனத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இந்தக் கசப்பான உண்மையை எமது மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

. . . . . .  அமைதியை அடைவதற்காகவே நாம் போராடுகிறோம்.

.……. … போராடித்தான் நாம் எமது விடுதலையை நிலைநாட்டிக்கொள்ளவேண்டும். சுதந்திரம் என்பது பேரம் பேசிப் பெற்றுக்கொள்ளும் ஒரு  வணிகப் பண்டம் அல்ல. அது இரத்தம் சிந்தி வென்றுகொள்ளப்படும் ஒரு  தூய்மையான உரிமை.

நாம் தொடர்ந்து போராடுவோம். எத்தனை இடர் வரினும், எத்தனை துயர் வரினும், நாம் எமது விடுதலை நோக்கிய பயணத்தைத் தொடருவோம். எமது மக்கள் சிந்திய இரத்தமும் எமது மாவீரர் புரிந்த  ஈகமும் வீண்போகாது இருக்க நாம் உறுதி தளராது போராடுவோம். எமது இலட்சியப் பயணத்தில் எத்தனையோ அறைகூவல்களை, எத்தனையோ  பேரிடர்களை, எத்தனையோ நெருக்கடிகளை நாம் சந்தித்துவிட்டோம். இனி

எம்மை எதுவும், எவரும் அச்சுறுத்தமுடியாது. நாம் துணிந்து போராடுவோம். வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கிறது.  வாய்மை எமக்குச்  சான்றாக நிற்கிறது.

எமது  விடுதலை இயக்கத்தின் தூண்களாய் நிற்கும் மாவீரர்களே!

உங்கள் இரத்தத்தால் எங்கள் விடுதலை வரலாறு  சிறப்பு பெறுகிறது.

உங்கள் இலட்சிய நெருப்பால் எங்கள் போராட்டம்  தூய்மை பெறுகிறது.

உங்கள் ஈகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகிறது.

உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகிறது.

எங்கள் தேச விடுதலையின் சிற்பிகளாகிய உங்களை நாம்  தலைதாழ்த்தி வணங்குகிறோம்.

–          மாவீரர் நாள் உரை 1992

 

இந்த உலகமானது மானிட தருமத்தின் சக்கரத்தில் சுழலவில்லை என்பது எமக்குத் தெரியாததல்ல.

ஒவ்வொரு நாடும் தனது தேசியத் தன்நலத்தையே முதன்மைப்படுத்துகின்றது. மக்கள் உரிமை, மனித உரிமை, கடப்பாட்டு அறத்திலும் பார்க்கப்  பொருளியல்,  வணிக நலன்களே இன்றைய உலக ஒழுங்கமைப்பை நிலைநாட்டுகின்றன.  பன்னாட்டு அரசியலும் சரி,அரசத் தந்திர உறவுகளும் சரி இந்த அடிப்படையில்தான் செயற்படுகின்றன. இந்த நிலையில் எமது போராட்டத்தின்  அறப்பாட்டைப் பன்னாட்டு மன்பதை உடனடியாக ஏற்றுவிடுமென நாம் எதிர்பார்க்கமுடியாது. ஆயினும் நாம் அந்த  ஏற்பிற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வரவேண்டும். மாறிவரும் உலகில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் ஒரு சூழலில், பன்னாட்டுச் சூழ்நிலை எமக்கும் சாதகமாக அமையலாம். அப்பொழுது உலகத்தின் மனச்சான்று அறத்தின் சார்பாக எம்பக்கம் திரும்பும். உண்மையில் எமது போராட்டம் உலகத்தின் கைகளில் தங்கியிருக்கவில்லை. எமது வெற்றியானது, எமது கையில், எமது வலிமையில் எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கின்றது.

நயன்மையும் அறமும் எமது பக்கம் இருந்தால் மட்டும் போதாது. நாம் வலிமை மிக்கவர்களாக இருக்கவேண்டும்.

போராடும் திறமை பெற்றவர்களாக இருக்கவேண்டும். எமது எதிரியான சிங்களப் பேரினவாத அரசு  – எமது சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு – தனியரசு என்ற ஒரே பாதையைத்தான் தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது. அந்தப் பாதையில் செல்வதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை.

இந்தப் பாதை வழியேதான் எமது விடுதலை இயக்கம் தனது இலட்சியப் பயணத்தை தொடகிறது. இந்தப் பாதை மிகவும் கடினமானது. கற்களும், முட்களும் நிறைந்தது. விலங்குகளும்  நச்சுயிரிகளும் நிறைந்தது.

ஆயினும் நாம் இந்தப் பாதை வழியே எமது பயணத்தைத் தொடர்கிறோம். எமது மாவீரர்கள் இந்தப் பாதை வழியாகவே நடந்தார்கள். எமக்கு வழிகாட்டியாக எமக்கு முன்ளே சென்றார்கள். கற்களையும் முட்களையும் அகற்றிப் பாதையைச் செப்பனிட்டுத் தந்தார்கள். விலங்குகளையும்  நச்சுயிரிகளையும் கொன்றொழித்தார்கள். அந்தப் பாதை வழியே விளக்கேற்றி வைத்தார்கள். எமது மாவீரர்கள் ஏற்றிவைத்த அந்தச் சுடரொளியில் தெளிவாகப் புலப்படும் அந்தப் பாதை வழியாக நாம் எமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோமாக.

–          மாவீரர் நாள் உரை 1993

 

எமது தாயக மண்ணில், வரலாற்று  முறையில் எமக்கு உரித்தான எமது சொந்த மண்ணில், நாம் மனஅமைதியாக –  உரிமையாக –  மதிப்பாக – பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதே எமது குறிக்கோள்; இதுவே எமது தேசத்தின் விழைவு.  இந்தத் தேசிய  விழைவை நிறைவுசெய்யும் ஒரு தீர்வையே நாம் வேண்டிநிற்கிறோம். அந்தத்

தீர்வே  நிலையானத் தீர்வாக அமையும்; அந்தத் தீர்வே நிலையான அமைதியையும் தோற்றுவிக்கும். அந்தத் தீர்வு எமக்குக் கிட்டும்வரை, நாம் ஒன்றுபட்ட மக்களாக -ஒன்றுதிரண்ட தேசமாக – தளராத உறுதியுடன் இருக்கவேண்டும்.

–          மாவீரர் நாள் உரை 1994

–           

–          (தொடரும்)