யாருக்கு அளிக்கலாம் வாக்கு? – இ.பு.ஞானப்பிரகாசன்
யாருக்கு அளிக்கலாம் வாக்கு? – வாக்காளப் பெருமக்களுக்கான ஒரு தேர்தல் திட்டம்!
இ.பு.ஞானப்பிரகாசன்
வந்துவிட்டது நாடாளுமன்றத் தேர்தல்! பத்தாண்டுக்கால அட்டூழியக் காங்கிரசு ஆட்சிக்கு முடிவு கட்ட நமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு! இதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம், பயன்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லையா என்பதே இப்பொழுது நம் முன் உள்ள பெரிய கேள்வி.
தெருவில் கிடக்கிற சொறிநாய் கூடக் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் குரைத்துக் கொண்டே இருந்தால் என்ன ஏதெனப் பார்ப்பார்கள். ஆனால், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றச் சொல்லி ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நாம் நடத்தி வரும் போராட்டங்களை இதுவரை செருப்பளவுக்காவது மதித்திருக்கிறதா இந்த இந்திய அரசு? இப்பொழுது கூட, இலங்கைக்கு எதிராக ஐ.நா-வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கைக்கு ஆதரவாக மூன்று முறைகளுக்கு மேல் திருத்தி விட்டு, அப்படியும் அந்த இற்றுப் போன தீர்மானத்துக்கு வாக்களிக்கக் கூட விருப்பமில்லாமல் அந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்து விட்டுத்தான் நம்மிடம் வாக்குக் கேட்க வருகிறார்கள் காங்கிரசார்!
இதை விட ஓர் இனத்தை அவமானப்படுத்த முடியுமா?
இப்படிப்பட்ட அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டாமா?
இனி தமிழர்களிடம் வம்பு வைத்துக் கொண்டால் நாம் இந்திய அரசாட்சியை நினைத்துப் பார்க்கவே முடியாது எனும் பீதியை இந்தக் காங்கிரசுக்காரர்களுக்கு ஏற்படுத்த வேண்டாமா?
தமிழர்களைப் பகைத்துக் கொண்டதால் காங்கிரசு அடையவிருக்கும் படுதோல்வியைப் பார்த்து இனி வரும் இந்திய ஆட்சியாளர்கள் தமிழர்களை எண்ணி மிரள வேண்டாமா?
மண்ணுலகிலேயே நரகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நம் ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் மீள வேண்டாமா?
அப்படியானால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் நம் வாக்குகளைத் திட்டமிட்டுச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்! அதற்கு ஒரு கூர்மையான திட்டத்தை முன்வைப்பதே இந்தப் பதிவின் நோக்கம்!
யாருக்கு வாக்களிப்பது?
இத்தனை ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இந்த முறை இது கொஞ்சம் சிக்கலான கேள்வியாகத்தான் ஆகி விட்டது தமிழ்நாட்டில்.
கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதந்து வந்து காப்பாற்றுவார் என்று தமிழர்கள் காலங்காலமாய் நம்பிய கருணாநிதி, தமிழர்களையே பிணமாக்கிக் கட்டுக் கட்டாக அடுக்கிச் சிங்களர்கள் எரித்தபொழுதும் மரம் போலத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்பொழுது அந்தக் காங்கிரசைக் கழற்றி விட்டுத் தேர்தலைச் சந்திக்க வந்திருக்கிறார்.
அதே நேரம், ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற, அதுவரை உலகில் யாருக்குமே தெரியாத பேருண்மையை (!) நமக்கு உணர்த்த முயன்ற செயலலிதா இன்று அனைத்து விதங்களிலும் ஈழ ஆதரவாளராய் மாறி நிற்பதாகக் கூறுகிறார்!
சரி, தமிழர் சிக்கல்கள் அனைத்துக்காகவும் தொடக்கக் காலம் முதல் போராடி வரும் வை.கோ அவர்களுக்கு வாக்களிக்கலாமா எனப் பார்த்தால் அவர் போட்டியிடுவதோ வெறும் எட்டே தொகுதிகள்!
ஆகவே, இவர்களில் யாரை நம்பி அல்லது யாரை எதிர்த்து எப்படியென வாக்களிப்பது என்பது இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம்மைப் பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கியிருப்பதில் வியப்பில்லை. இந்தக் குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டு தெளிவாக வாக்களிக்க நமக்குத் தேவை ஒரு பன்னோக்குத் திட்டம் (Master Plan). ஏன், கட்சிகள் மட்டும்தான் கூட்டணி, வாக்கு வங்கி எனப் பலவற்றையும் பற்றி ஆராய்ந்து திட்டமிட்டுத் தேர்தலைச் சந்திக்க வேண்டுமா? வாக்காளர்களான நாமும் ஒவ்வொரு கட்சி, கூட்டணி பற்றியும் அவர்களின் நிலைப்பாடு, கொள்கை, உறுதிமொழி, குறிப்பிட்ட சிக்கல்களில் அவர்களின் கடந்த கால நடவடிக்கை, எதிர்காலப் போக்கு என அனைத்தைப் பற்றியும் விரிவாக அலசி ஒரு முடிவுக்கு வரலாம் வாருங்கள்!
தி.மு.க-வுக்கு வாக்களிப்பவன் தமிழனா?
இனியும் தி.மு.க-வுக்கு வாக்களிக்கலாமா எனத் தமிழ் உடன்பிறப்புக்கள் இந்தத் தேர்தலிலாவது சிந்திக்க முன்வர வேண்டும்!
2004 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கு நாம் மாபெரும் வெற்றியை அளித்தோம். இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழர் ஒருவர் துணைப் பிரதமர் பதவிக்கு அழைக்கப்படும் அளவுக்கு இந்திய அரசியல் வானில் கருணாநிதிக்குப் பெரும் பலத்தைக் ஏற்படுத்திக் கொடுத்தோம். ஆனால், வரலாறு காணாத அந்தச் செல்வாக்கை அவர் எதற்குப் பயன்படுத்தினார்? தமிழினத்தையே அழிப்பதற்கு!
இலங்கையில் நடத்தப்பட்ட இன அழிப்பில் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தமிழர்கள் செத்தார்கள்! தமிழ்ப் பெண்கள் நட்டநடுத் தெருவில், வெட்டவெளியில் கூட்டம் கூட்டமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள்! ‘நடுவணரசுக்கான ஆதரவைத் தி.மு.க விலக்கிக் கொள்கிறது’ எனும் ஒற்றை வரி அறிவிப்பால் இந்த அத்தனை கொடுமைகளையும் நிறுத்தித் தமிழினத்தையே காப்பாற்றும் வல்லமை இருந்தும் கருணாநிதி அதைச் செய்யவில்லை. மாறாக, நடுவணரசுக்கு எதிரான தமிழ் மாணவர்களின் போராட்டத் தீயைப் பொறியிலேயே அணைக்கும் விதமாகப் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் இழுத்துச் சாத்தினார்!
ஈழச் சிக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று உளவுத்துறையை விட்டு ஆராய்ந்தார்! இல்லை என்று அறிக்கை கிடைத்ததும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று நாடகமாடினார்! எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக, உலகம் காணாத உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றை நடத்தி, போர் முடிந்து விட்டதாக அறிவித்து, பதுங்குகுழிகளிலிருந்த தமிழர்களையெல்லாம் வெளியே வரச் செய்து அழித்தார்!
ஆம்! கருணாநிதி ஈழத் தமிழினப் படுகொலைக்குத் ‘துணை போனார்’ என்பது பசப்புச் சொல்! தமிழினப் படுகொலையைக் கண்டு கொள்ளாமல் இருந்ததோடும், அதை நிறுத்தும் ஆற்றல் தன் கையிலிருந்தும் அதைச் செய்யாமல் இருந்ததோடும் நிறுத்திக் கொண்டிருந்தால் அந்த இனப்படுகொலைக்கு அவர் ‘துணை போனார்’ என்பதோடு நாமும் நிறுத்திக் கொள்ளலாம். ஆனால், தமிழர்கள் ஒளிந்துகொண்டு விட்டார்கள், எத்தனை குண்டுகள் போட்டாலும், இரும்பு அரண் போல் கிடந்து காக்கும் தமிழர்த் தேசிய மரமான பனை மரத்தைத் தாண்டி எந்தக் குண்டும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றவுடன், ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மக்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கை எனும் ஆயுதத்தைப் பயன்படுத்தி அவர்களை வெளியே கொண்டு வந்து சாகடித்தாரே, அவரை எப்படி இந்தப் படுகொலைக்குத் ‘துணை போனவர்’ எனச் சொல்ல முடியும்? கொலை செய்பவனுக்கு உதவி புரிபவனுக்குத்தான் உடந்தைக் குற்றவாளி எனப் பெயர்; இப்படிக் குற்றத்தின் மூளையாகவே செயல்படுபவனுக்குப் பெயர் முதன்மைக் குற்றவாளி!!
கேட்டால், போர் நின்று விட்டதாகச் சொல்லி அவரை ஏமாற்றி விட்டார்கள் என்பார்கள் அப்பாவித் தி.மு.க தொண்டர்கள். சரி, அப்படியே இருக்கட்டும். அஃது உண்மையாக இருந்தால், அவரது உண்ணாநிலைப் போராட்டம் முடித்த பிறகும் போர் தொடர்வது பற்றிக் கேட்டதற்கு “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்று ஏன் சொன்னார்? “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று செயலலிதா சொன்னதை விடக் குரூரமான வார்த்தையாடல் இல்லையா இது?
ஆனால், இப்பேர்ப்பட்ட இரண்டகத்துக்குப் பின்பும், 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் கருணாநிதிக்குத்தான் வாக்களித்தோம். அதனால் ஏற்பட்ட பயன் என்ன? நடந்து கொண்டிருந்த இனப்படுகொலை நின்றதா? இல்லை! மாறாக, தேர்தல் வெற்றியைக் கொண்டாடத் தி.மு.க-வினர் இங்கே வேட்டுக்கள் வெடித்த அடுத்த நிமிடம் அங்கே முள்ளிவாய்க்காலில் பேரழிவு ஆயுதங்கள் வெடித்தன. வரலாறு காணாத கொடுமையாக ஒரே நாளில் நாற்பதாயிரம் தமிழர்கள் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்டார்கள். ஆனால், அது பற்றி எள்முனையளவும் கவலையின்றி, அதே நேரத்தில் இங்கே தி.மு.க-வினர் தங்கள் வெற்றியை இனிப்பு வழங்கிக் கொண்டாடிக் கொண்டிருந்தனர், கருணாநிதி உட்பட!
“இவையெல்லாம் பழங்கதைகள். இன்றைய நிலைமை என்ன? அப்படிப்பட்ட காங்கிரசை இந்தத் தேர்தலில் தூக்கியெறிந்து விடவில்லையா எங்கள் தலைவர்?” என்கிறார்கள் உடன்பிறப்புக்கள். ஆம், தூக்கியெறிந்தார். எப்பொழுது? ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடெங்கும் மாணவச் செல்வங்கள் சீறி எழுந்து, மொத்தத் தமிழ்நாடும் அதற்கு ஆதரவாகத் திரும்பிய பின்னர். வேறு வழியில்லாமல். இதை நான் சொல்லவில்லை; 12.06.2013 அன்று நிகழ்ந்த, காங்கிரசைச் சேர்ந்தவரான திருநாவுக்கரசரின் இல்லத் திருமண விழாவில் கருணாநிதியே தன் திருவாய்மலர்ந்து சொல்லியிருக்கிறார்.
“திருநாவுக்கரசர் நான் அவரோடு ஒட்டி இருக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். ஒட்டி இருந்த என்னை, வெட்டி விட்டது யார் என்பது அவருக்கே தெரியுமென்று கருதுகிறேன்” என்ற கருணாநிதியின் அந்த வார்த்தைகளுக்கு, மக்கள்தான் தன்னைக் காங்கிரசை விட்டுப் பிரித்து விட்டார்கள்; தானாக விரும்பிப் பிரிவில்லை என்பதைத் தவிர வேறென்ன பொருள் இருக்க முடியும்?
ஆக, காங்கிரசுடன் கருணாநிதிக்கு இன்னும் கள்ள உறவு நீடிக்கிறது என்பதுதான் உண்மை! நாம் தி.மு.க-வுக்கு வாக்களித்தால் அந்த வெற்றியை மறுபடியும் கருணாநிதி, சோனியா காலடியில்தான் கொட்டுவார் என்பது உறுதி!
இவ்வளவுக்கும் பிறகும், இனியும் தி.மு.க-வுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என அடம் பிடிப்பவர்களே, தமிழினத் தலைவர் என இன்னும் கருணாநிதிக்கு வடம் பிடிப்பவர்களே, தலைவர் பிரபாகரன் சொன்னாராம்; இராசபக்சேவாவது சொந்த இன மக்களுக்காக வேறு இன மக்களாகிய நம்மை அழிக்கிறான்; ஆனால், கருணாநிதி சொந்த இன மக்களையே அழிக்கிறாரே என்று! இதில் அணுவளவாவது தவறு இருக்கிறதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! இராசபக்சேவை விடக் கொடிய தமிழின எதிரியான, துரோகியான கருணாநிதி தமிழினத் தலைவரா? அவருக்குத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டுமா? சொல்லுங்கள்!
முதன்முதலில் நாம் கருணாநிதிக்கு எதற்காக வாக்களிக்கத் தொடங்கினோம்? நினைவிருக்கிறதா? நன்றாகச் சிந்தனையைக் கூட்டிப் பாருங்கள்! அவர் ‘பராசக்தி’ முதலான படங்களில் நல்ல கதை, வசனம் எழுதியதற்காகவா? திருக்குறளைப்பரப்பியமைக்காகவா? திருவள்ளுவருக்குக் கோட்டமும் சிலையும் நிறுவியதற்காகவா? கண்ணகியின் புகழை வெளிக்கொண்டு வந்ததற்காகவா? இல்லை, ‘தொல்காப்பியப் பூங்கா’ போன்ற பல நூல்கள் படைத்ததற்காகவா? இவற்றுள் எதற்காகவும் இல்லை. அவர் தமிழர்களுக்காகப் போராடுபவர் என்பதற்காக! தமிழர் சிக்கல்களில் தமிழ் மக்கள் தரப்பில் நிற்பவர் என்பதற்காக! உலக அளவில் தமிழர்களுக்கு எங்கே, எந்தச் சிக்கல் பிரச்சினை வந்தாலும் குரல் கொடுக்கக்கூடியவர் என்பதற்காக! ஆனால், இப்பொழுது இவை எதுவுமே இல்லை என்று ஆன பின்னும், தமிழ் மக்களையே அழித்தவர் அவர், அப்படி அழிப்பவர்களோடு இன்னும் உறவு பூண்டிருப்பவர் அவர் என்று ஆன பின்னும் அவருக்குத்தான் வாக்களிப்பது என நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்றால், முதலில் நீங்கள் தமிழர்தானா? சிந்தியுங்கள்!
விடுதலைச் சிறுத்தைகளுக்கு வாக்களிப்பவன் மட்டும் தமிழனா?
கருணாநிதிக்குப் பொருந்தக்கூடிய இந்தக் குற்றச்சாட்டுகளுள் ஏறத்தாழ அத்தனையும் திருமாவளவனுக்கும் பொருந்தும்.
தாழ்த்தப்பட்ட தமிழ் உடன்பிறப்புகளுக்கு இதோ கிடைத்து விட்டார் ஒரு மீட்பர் என்றும், தமிழ்ச் சமூகத்துக்காகத் திருமணம் கூடச் செய்து கொள்ளாமல் தன் வாழ்வையே ஒப்படைத்துவிட்ட ஈகைச் செல்வர் என்றும், ஊழல் கறை படிந்த கருணாநிதிக்கு மாற்றாக நேர்மையான தமிழினத் தலைவர் ஒருவர் கிடைத்தே விட்டார் என்றும், இன்னும் என்னென்னவோ வகைகளிலும் திருமாவளவனை எண்ணிப் பூரித்த பல்லாயிரம் இளைஞர்களில் ஒருவன்தான் நானும். ஆனால், திருமாவளவன் செய்த, செய்கிற தமிழின இரண்டகங்கள், அத்தனையையும் தவிடு பொடியாக்கி நெஞ்சில் ஆறாத காயத்தை உண்டாக்கி விட்டன!
தமிழர்களைக் காங்கிரசு அழிக்கத் தொடங்கியதால் இனி எக்காலத்திலும் அதனுடன் கூட்டணி கிடையாது என்று மேடையேறி முழங்கி விட்டு, அந்த இனப் படுகொலையைக் காங்கிரசு நடத்தி முடிக்கும் வரை கூடக் காத்திராமல் அக்கட்சியுடன் தோளோடு தோள் நின்று திருமாவளவன் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்ததை யாரால் மறக்க முடியும்?
ஈழத்துக்காக யார், எப்பொழுது, எந்தப் போராட்டம் நடத்தினாலும் உடனுக்குடன் முன்வந்து, உயிரைக் கூட மதிக்காமல் எப்பேர்ப்பட்ட போராட்டத்திலும் கலந்து கொள்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் குறிக்கப்படும் நம் தமிழ்ச் சொந்தங்கள்தாம். அப்பேர்ப்பட்ட தமிழ்ப் பற்றாளர்களைக் கடந்த பத்தாண்டுகளாகக் காங்கிரசுக்கு வாக்களிக்க வைத்த, வைக்கிற திருமாவளவனின் இரண்டகத்தை வரலாறு ஒருகாலும் மன்னிக்கப் போவதில்லை!
சாதியின் பெயரால் தமிழ் மக்களையே, அதுவும் தமிழ் உணர்வு மிகுந்த குறிப்பிட்ட பிரிவினரையே, தமிழர்களை அழித்தவர்களுக்கு ஆதரவு தர வைக்கும் திருமாவளவனின் இந்தப் போக்கு கருணாநிதியின் தமிழினத் துரோகத்துக்குத் துளியும் குறைந்ததில்லை.
இலங்கைக்குப் போனால் தலைவர் பிரபாகரனுடனும், இந்தியாவில் இருந்தால் சோனியாவுடனும் கைகுலுக்கும் திருமாவளவன், ‘முள்வலி’ எழுதிய அதே எழுதுகோலால் காங்கிரசுடனான கூட்டணிக்கும் கையொப்பமிடும் திருமாவளவன் தமிழனா? சிந்திக்க வேண்டும் இந்த நேரத்திலாவது!
எனவே, உண்மையான தமிழ்க் குருதியில் பிறந்த யாரும் இனி தி.மு.க-வுக்கோ விடுதலைச் சிறுத்தைகளுக்கோ கனவிலும் வாக்களிக்க மாட்டார்கள்!
தமிழர்களுக்கு மட்டும்தான் எதிரியா காங்கிரசு?
காங்கிரசு எதிர்ப்பு என்பதே தமிழ்ப் பற்றின் காரணமாக எழுவதுதான் என்று பெரும்பாலோர் நினைக்கிறார்கள். தவறு! அதுவும் ஒரு காரணம்; அது மட்டுமே காரணமில்லை.
தமிழர்கள் மட்டுமில்லை, இந்தியாவில் எந்தப் பகுதியில் எத்தனை மக்கள் செத்தாலும் அது பற்றிக் காங்கிரசுக்கு எந்த வித அக்கறையும் கிடையாது என்பதற்கு மிக அண்மைக்கால எடுத்துக்காட்டுதான் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள ஒப்புதல். அது மட்டுமா?
கருவிலிருக்கும் குழந்தைகள் உட்பட வருங்காலத் தலைமுறையையே அழித்துவிடக்கூடிய எண்டோசல்பான் போன்ற தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக உலக அரங்கில் குரல் கொடுப்பது, சொந்த நாட்டு மக்களின் நிலங்களைப் பிடுங்கி வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது, அயல்நாட்டு நிறுவனங்களுக்காக இந்தியாவின் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் சீரழிப்பது, அதைத் தட்டிக் கேட்கும் மக்களை இராணுவத்தை வைத்துக் கொல்வது, குப்பையில் தூக்கிப் போட வேண்டிய தரத்திலுள்ள போர்க் கப்பல்களையும், விமானங்களையும் வாங்கி அந்த இராணுவ வீரர்களையும் அழிப்பது எனக் காசு கொடுத்தால் எப்பேர்ப்பட்ட கொடூரத்தையும் யாருக்கும் செய்யத் தயங்காத காங்கிரசு, தமிழர்களுக்கோ, இந்திய மக்களுக்கோ மட்டுமில்லை, மனித இனத்துக்கே, உலக உயிரினங்கள் அனைத்துக்குமே தீங்கு விளைவிக்கும் கட்சி!!
இராகுல் ஆட்சிக்கு வந்தால் நாட்டையே புரட்டிப் போட்டு விடுவார் என இங்கே சில இளைஞர்கள் எதிர்பார்க்கிறீர்கள். தமிழர் சிக்கல்களில் அவருடைய நிலைப்பாடு என்ன என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் நினைப்பது போல் அவர் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி வைத்துக் கொண்டு காத்துக் கிடக்கும் நல்லவர், வல்லவர் என்றே வைத்துக் கொள்வோம். ஒன்றா, இரண்டா, மூன்றா… கடந்த பத்து ஆண்டுகளாக அவருடைய கட்சிதானே இங்கே ஆண்டது? புதிதாக என்ன செய்தார் அவர்? சிந்தித்தீர்களா? கேட்டால் அவர் கையிலா அதிகாரம் இருந்தது என்பீர்கள். அவர் அம்மாதானே நாட்டையே வழிநடத்தினார் இந்தப் பத்தாண்டுகளில்? பெற்ற தாயையே தன் வழிக்குக் கொண்டு வர முடியாதவர் நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கூட்டணித் தலைவர்கள் அத்தனை பேரையும் தன் வழிக்குக் கொண்டு வந்து, தன் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி ஒரு சிறப்பான நல்லாட்சியை வாரி வழங்கி விடுவார் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? 67 ஆண்டுக்கால இந்திய வரலாற்றில் இந்த அளவுக்கு மக்களைச் சீரழித்த, நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஓர் ஆட்சியை இந்தியா சந்தித்ததே கிடையாதே, அப்படிப்பட்ட இந்த ஆட்சியைத் திருத்தவோ, இதன் மனித விரோதப் போக்குக்கு எதிராகவோ ஒரு வார்த்தையாவது அவர் வாய் திறந்து இதுவரையில் பேசியதுண்டா? அப்படிப்பட்டவர் தான் ஆட்சிக்கு வந்தால் மட்டும் கிழித்துக் கீரை விதை நட்டு விடுவாரா? கொஞ்சமாவது சிந்தியுங்கள் நண்பர்களே!
“உங்களுக்குப் பிடித்த தலைவர் யார்” எனக் கேட்டால் பெண் எனும் ஒரே காரணத்துக்காக சோனியாவின் பெயரைச் சொல்லும் இளம்பெண்களே! சோனியா என்ன செய்தார் என்பது தெரியுமா? ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபொழுது அவர் நடந்து கொண்ட விதம் உங்களுக்குத் தெரியுமா? ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்று கூறியபொழுது, “அதெல்லாம் அந்த நாட்டு உள்விவகாரம். அதில் நாம் என்ன செய்ய முடியும்?” என்று கூறி விட்டு இரண்டாயிரம் கோடியையும், அளவற்ற இராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து அந்தக் கொடுமை தொடர வழி செய்தவர் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஈழ இனப்படுகொலையை நிறுத்த அமெரிக்கா களமிறங்கத் தீர்மானித்தபொழுது ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் அதைத் தடுத்து நிறுத்தியவர் அவர் என்பது தெரியுமா? தீவிரவாத ஒழிப்பு எனும் பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளை வேடிக்கை பார்ப்பவர் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? பெண்களுக்கு எதிராகவும், மனிதநேயத்துக்கு எதிராகவும் இவ்வளவு கொடுமைகளைச் செய்த, செய்கிற ஒருவருக்குப் பெண் என்னும் ஒரே காரணத்துக்காக வாக்களிக்கப் போகிறீர்களா? சிந்தியுங்கள்!
தமிழர்கள் மட்டுமில்லை, ஆறாம் அறிவு கொண்ட எந்த மனிதப் பிறவியும் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்!
பொதுவுடைமைக் கட்சிகள் (எ) காங்கிரசு!
நேர்மை,ஒப்படைப்பு(அர்ப்பணிப்பு), கொள்கையில் உறுதி, மக்களுக்காகக் களமிறங்கிப் போராடுதல் என இந்திய அரசியலில் வழக்கொழிந்து விட்ட அரிய குணங்களையெல்லாம் இன்றும் கடைப்பிடிப்பவர்கள் நம் சிவப்புத் துண்டுத் தோழர்கள்! ஈழத்து இனப்படுகொலையின்பொழுது கூட அதற்காக இங்கே முதன்முதலில் குரல் எழுப்பிய கட்சி இந்தியப் பொதுவுடைமைக் (இந்தியக் கம்யூனிஸ்டு) கட்சிதான் என்பது எக்காலத்திலும் தமிழர்கள் மறக்கக்கூடாத ஒன்று!
ஆனால், மூன்றாம் அணிக்கு வாக்களிப்பது பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் தடுக்கிற ஒரே காரணம் அவர்களுடைய காங்கிரசு ஆதரவு!
மதச்சார்பின்மை எனும் ஒரே ஒரு காரணத்துக்காக, காங்கிரசு எப்பேர்ப்பட்ட மோசமான ஆட்சியை நடத்தினாலும் பொதுவுடைமைக் கட்சிகள் (Communists) அவர்களுக்குத்தான் ஆதரவளிக்கின்றன!
2004 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு அடுத்தபடியாக மிக அதிகமான தொகுதிகளை வென்ற பொதுவுடைமைக் கட்சிகள், காங்கிரசோ பா.ச.க-வோ ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக மக்கள் தங்களுக்கு அளித்த அந்தப் பெரும் வெற்றியைக் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தவே பயன்படுத்தின.
ஆனாலும், 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் கணிசமான தொகுதிகளில் மக்கள் இவர்களை நம்பி வாக்களித்தார்கள். ஆனால், மறுபடியும் பொதுவுடைமைக் கட்சிகள் தங்கள் ஆதரவைக் காங்கிரசுக்குத்தான் வழங்கின. இதற்கு எதற்காக மூன்றாவது அணி? நேரடியாகக் காங்கிரசுக்கே வாக்களித்து விடலாமே?
இந்நேர்வில் தி.மு.க-வுக்கும் பொதுவுடைமைக் கட்சிகளுக்கும் பெரிதாக வேறுபாடு எதுவும் இல்லை. இவர்களுக்கு வாக்களிப்பதும் காங்கிரசுக்கு வாக்களிப்பதும் ஒன்றேதான். எனவே, ஆட்சி மாற்றத்தை விரும்பும் யாரும் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு, மூன்றாவது அணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்!
வாக்களிக்கலாமா ஆம் ஆத்மிக்கு?
தேசிய அளவில் பார்க்கும்பொழுது காங்கிரசு, பா.ச.க இரண்டுக்கும் சரியான மாற்று ஆம் ஆத்மிதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், எந்தத் தமிழ்க் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் இந்தத் தேர்தலைச் சந்திக்கும் அவர்களுக்கு நாம் வாக்களித்தால், நாளை ஆட்சிக்கு வந்த பின், தமிழர் சிக்கல்களில் அவர்கள் தவறான போக்கைக் கையாண்டால் அவர்களுக்கு எடுத்துச் சொல்வது யார், தமிழர் சார்பாக அவர்களுடன் பேசுவது யார் என்பது பெரிதும் அச்சுறுத்துகிற கேள்வி.
இதையும் மீறி நாம் அவர்களுக்கு வாக்களித்தாலும், முதன்முறை நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கிற அவர்கள், அதுவும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் நாடு முழுவதும் தனித்துப் போட்டியிடும் அவர்கள், தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங்களில் போதுமான எண்ணிக்கையில் தொகுதிகளைக் கைப்பற்றாவிட்டால் அவர்களை நம்பி வாக்களிக்கும் நம் நிலைமை?… ஈழச் சிக்கல், காவிரிச் சிக்கல், முல்லைப் பெரியாறு சிக்கல், தமிழ் மீனவர் சிக்கல், வேளாண் நிலத்தில் எரிகுழாய் பதித்தல் எனத் தமிழர் சிக்கல்கள் அனைத்தும் உச்சத்தில் இருக்கும் வேளையில் வெல்வார்களா மாட்டார்களா எனத் தெரியாத ஒரு கட்சிக்கு வாக்களித்து, நடுவணரசைக் கைப்பற்ற ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கிற வாய்ப்பை நழுவ விடலாமா?
அதே நேரம், இன்னொன்றையும் நாம் சிந்திக்க வேண்டும்!
தமிழர் சிக்கல்களில் மிக முக்கியமான, மேற்கண்ட பட்டியலில் இல்லாத ஒன்று ‘கூடங்குளம் அணுமின் நிலையச் சிக்கல்!’ அதை வழிநடத்துகிற சுப.உதயகுமாரன் அவர்கள் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவதை நாம் மறக்கக்கூடாது!
இந்தியாவில் காந்தியடிகளுக்கு அடுத்தபடியாக இந்த அளவுக்குக் கூடுதலான எண்ணிக்கையிலான மக்களை, இப்படி ஆண்டுக்கணக்காக ஒரே இலக்கை நோக்கிச் சிந்தாமல், சிதறாமல் அறப் போராட்டத்தில் ஈடுபட வைத்த மாமனிதர் சுப.உதயகுமாரனைத் தவிர வேறு யாரும் கிடையாது! ஆனால், மூன்றாண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகும் அணுமின் நிலையத்தினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி நம் மக்களுக்குத் துளியும் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதுதான் வேதனை! பல் முளைக்காத பச்சைக் குழந்தை கூட ஒருமுறை சுட்டுக்கொண்டால் மறுபடியும் நெருப்பைத் தொடாது. ஆனால், செர்னோபில், புகுசிமா என அடுத்தடுத்து அணு உலைகளின் கோர முகத்தைப் பார்த்த பின்னும் நாம் அணு உலைகள் பாதுகாப்பானவை என நம்புகிறோம் என்றால் என்ன சொல்வது!
“கூடங்குள அணுமின் நிலைய அணுஉலை ரியாக்டர்களில் நீண்டகாலப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படவில்லை. குளிரூட்டும் முறை பழுதடைந்தால் அதைச் சரி செய்துகொள்ளக்கூடிய பாதுகாப்புகள் முறையாக வடிவமைக்கப்படவில்லை. புக்குசிமா அணுமின் நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கு இந்தக் குறைபாடுதான் முக்கிய காரணம். குளிரூட்டும் சாதனங்களின் முக்கிய கருவிகள் மிகவும் பலவீனமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. பூமியதிர்வுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கவனத்தில் கொள்ளப்படாமல்தான் இந்த அணுஉலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் நேர்ந்தால் தானாகவே செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் வசதிகள் இதில் இல்லை!” – இப்படியெல்லாம் கூறுவது நான் இல்லை,
சுப.உதயகுமாரன் இல்லை, இரசிய அறிவியலாளர்கள்!!! ஆம்! எந்த இரசியாவுடன் இணைந்து இந்திய அரசு இதை நிறுவி வருகிறதோ அதே இரசிய நாட்டு அறிவியலாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை இது. கூடங்குளம் அணுஉலைத் திட்டம் பாதுகாப்பானது என்ற இரசியாவின் உறுதியை மறுத்து அந்நாட்டு அறிவியலாளர்களே அளித்த இந்த அறிக்கையை, இரசிய அரசு கமுக்கமாகப் பாதுகாத்து வைத்திருந்ததை நார்வே நாட்டின் நம்பகத்தன்மையுள்ள இணையத்தளம் ஒன்று வெளியிட, 21.10.2011 அன்று வெளிவந்த ‘பிரண்ட்லைன்’ இதழும் பதிவு செய்துள்ளது!
ஆக, கூடங்குளம் அணுமின் நிலையம் என்பது தமிழ்நாட்டுக்கே வைக்கப்பட்டுள்ள உலை என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், இது தொடர்பாக நாம் தொடுக்கும் எல்லா வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முதற்கொண்டு எல்லா நீதிமன்றங்களும் மீண்டும் மீண்டும் தள்ளுபடி செய்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் இந்தச் சிக்கலை எழுப்பி, அரசின் இந்த முடிவைக் கொள்கை வழியில் திரும்பப் பெறச் செய்வதே ஒரே வழி! அதற்கு உதயகுமாரன் அவர்கள் இந்தத் தேர்தலில் வென்றே ஆக வேண்டும்!
காங்கிரசு, பா.ச.க, இருவருமே அணுமின் நிலையத் திட்டத்தை ஆதரிக்கும் சூழலில், சுப.உதயகுமாரன் அவர்கள் உறுதியளிப்பது போல், உள்ளூர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் அதை நிறைவேற்றுவது தங்களுக்கு விருப்பமில்லை எனும் நிலைப்பாட்டைக் கொண்ட ஆம் ஆத்மிதான் நமக்கு இருக்கும் ஒரே தேர்வு! எனவே, அந்தக் கட்சியில் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு இந்தச் சிக்கலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதாக உதயகுமாரன் அவர்கள் முடிவெடுத்திருப்பது மிகவும் சரியானது, சிறப்பானது! அந்த முடிவை நாம் ஆதரிக்காவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் தலையில் தாங்களே அணுகுண்டு போட்டுக்கொள்ள விரும்பியதாக நாளைய வரலாறு கூறும்!
இதுவும் இனப்படுகொலைதான்!
ஈழத் தமிழர் நலன் கருதிக் காங்கிரசைப் புறக்கணிக்கக் கோரும் நாம், நம் கூடவே வாழும் இசுலாமிய உடன்பிறப்புக்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பா.ச.க-வுக்கு வாக்களித்தால் வரலாறு நம்மை மன்னிக்காது!
இராசபக்ச இலட்சக் கணக்கில் தமிழர்களைக் கொன்றான் என்றால், மோடி ஆயிரக்கணக்கில் இசுலாமியர்களைக் கொன்றான். இந்த எண்ணிக்கை தவிர இருவருக்குமிடையில் என்ன வேறுபாடு?
ஆட்சி மாற்றம் வேண்டும்தான்! ஆனால், அதற்காக இந்தியா முழுக்க உள்ள இத்தனை கோடி இசுலாமியர்களின் பாதுகாப்பை நாம் கேள்விக்குறியாக்கி விட முடியாது! எனவே, போட்டியிடும் எட்டு தொகுதிகளிலும் பா.ச.க-வைத் தோற்கடிப்போம்! இந்த மோடி வித்தையெல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதைப் பறைசாற்றுவோம்!
அப்படியானால், அந்தக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள்?…
அவை பற்றித் தனித் தனியாகப் பார்க்கலாம் வாருங்கள்!
இராமதாசு மட்டும் தமிழனா?
தமிழினப் படுகொலையின்பொழுது பா.ம.க ஏற்படுத்திய ஈழப் பிரச்சினை தொடர்பான விழிப்புணர்வும், பன்னாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் சார்பிலான ஒற்றைக் குரலாகத் தன் ‘பசுமைத் தாயகம்’ மூலம் ஈழச் சிக்கலுக்காக இன்று வரை வாதாடுவதும் வரலாற்றில் பதிவு செய்யத்தக்க தமிழ்ச் சேவைகள் என்பது மறுக்க முடியாத உண்மைதான்!
ஆனால், ஈழச்சிக்கல் தேர்தல் வெற்றிக்கு ஒருமுறை உதவாமல் போனவுடனேயே, அடுத்த (2011) சட்டமன்றத் தேர்தலிலேயே அதே தமிழினக் குருதி படிந்த காங்கிரசுடன் துளியும் வெட்கமின்றிப் பா.ம.க கூட்டணி சேர்ந்த கண்ணறாவியை மறக்க முடியுமா? கருணாநிதி – திருமாவளவன் ஆகியோருக்கும் இராமதாசுக்கும் என்ன பெரிய வேறுபாடு? தமிழர்களைக் காங்கிரசு அழித்துக் கொண்டிருந்தபொழுதே கூட்டணியில் இருந்தார்கள் அவர்கள். இராமதாசு அப்போதைக்கு விலகி நல்ல பெயர் எடுத்துக்கொண்டு, பிறகு மீண்டும் வந்து சேர்ந்து கொண்டார், அவ்வளவுதான்! மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின், தேவைப்பட்டால் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி சேரக்கூட நொடியும் தயங்க மாட்டார் இராமதாசு என்பதுதான் உண்மை!
தே.மு.தி.க பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. பா.ச.க-வுடனான கூட்டணி எதிர்பார்த்தபடி அமையாவிட்டால் காங்கிரசுடன் கை கோக்கக் கடைசி நிமிடம் வரைக்கும் ஆயத்தமாக இருந்தவர்தான் அவர் என்பது இங்கே பச்சைப் பிள்ளைக்குக் கூடத் தெரிந்ததுதான்.
ஆட்சி மாற வேண்டுமானால், பா.ச.க கூட்டணிக்குத்தான் வாக்களித்தாக வேண்டும் என நம்புபவர்கள் கூட இந்த இரண்டு கட்சிகளுக்கும் வாக்களிப்பது பற்றிக் கருதிப் பார்க்க வேண்டும்! காரணம், நாளைக்கே பா.ச.க-வுடனான அமைச்சரவைப் பங்கீடு விரும்பியவாறு அமையாவிட்டால் அடுத்த நிமிடமே இவர்கள் காங்கிரசுக்குத் தங்கள் ஆதரவை வழங்கத் தாமதிக்க மாட்டார்கள்!
தேர்தல் களத்திலிருக்கும் ஒரே தமிழன் வை.கோ!
ஆம்! உண்மையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்திலிருக்கும் ஒரே தமிழன் வை.கோ அவர்கள்தாம்!
இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் சிக்கல், முல்லைப் பெரியாற்றுச் சிக்கல் எனும் வேளாண் தமிழர்கள் சிக்கல், இசுடெர்லைடு ஆலைச் சிக்கல் எனும் நகரத் தமிழர்கள் சிக்கல், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் மீனவத் தமிழர்கள் சிக்கல், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் ஆபத்தாய் விளங்கும் அணு உலைச் சிக்கல் என எல்லாத் தரப்புத் தமிழ் மக்களின் சிக்கல்களுக்காகவும் தொடர்ந்து, இடைவிடாமல் போராடி வரும் வை.கோ-வை விடச் சிறந்ததொரு தமிழர் தலைவனைத் தமிழன்னை இதுவரை கண்டதில்லை!
கடந்த ஐம்பதாண்டுக்காலமாக அரசியலில் இருக்கிறார். ஆனால், ஊழல், கையூட்டு (இலஞ்சம்) என ஒரே ஒரு குற்றச்சாட்டாவது உண்டா? இப்பேர்ப்பட்ட தலைவருக்கு இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நாம் தோல்வியை மட்டுமே பரிசளிக்கப் போகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
ம.தி.மு.க மட்டும் தமிழ்நாட்டில் குறைந்தது முப்பது தொகுதிகளிலாவது போட்டியிடுவதாக இருந்தால், பா.ச.க கூட்டணிக்கு நாம் கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்திருக்கலாம், வை.கோ-வை நம்பி ஆட்சி செய்யும் அப்படியொரு நிலைமையில் சிறுபான்மையருக்கு எதிராக மோடியால் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட முடியாது எனும் திடமான நம்பிக்கையில். ஆனால், ம.தி.மு.க போட்டியிடுவதோ வெறும் எட்டு இடங்களில்.
ஆனால், அந்த எட்டு இடங்களிலாவது அவரை வெல்லச் செய்ய வேண்டியது தமிழர்களின் தலையாய கடமை! காரணம், ஈழச் சிக்கலுக்காகக் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும் தமிழ் மக்கள், ஈழத்தில் சிக்கல் தொடங்கிய காலத்திலிருந்து அதற்காக இங்கே குரல் கொடுத்து வரும் வை.கோ அவர்களை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்தால் அதை விட முட்டாள்தனம் வேறு எதுவுமே இருக்க முடியாது!
சுருங்கச் சொன்னால், மதவெறித் தாமரையைப் புறக்கணிப்போம்! சேற்றிலிருக்கும் செந்தாமரையாக அதில் இணைந்திருக்கும் ம.தி.மு.க-வை மட்டும் ஆதரிப்போம்!
அ.தி.மு.க!
கன்னியாகுமரியில் ஆம் ஆத்மியும், எட்டு தொகுதிகளில் ம.தி.மு.க-வும் நமது தேர்வு என்றால், மிச்சமிருக்கும் தொகுதிகளில் நமக்கு மிஞ்சியிருக்கும் ஒரே தேர்வு அ.தி.மு.க-தான்!
சலித்துக் கொள்ளாதீர்கள் நண்பர்களே! வேறு வழி இல்லை. இதை நான் விரும்பிச் சொல்லவும் இல்லை.
செயலலிதா திருந்தி விட்டதாகவோ, முழுக்க முழுக்க ஈழ ஆதரவாளராய் மாறி விட்டதாகவோ நம்பும் அளவுக்கு நான் குழந்தை இல்லை. ஆனாலும் அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கச் சொல்வதன் காரணம் மற்றவர்களெல்லாரும் அவரை விட மோசமாக இருப்பதுதான்!
ஆட்சியைப் பிடிப்பதற்காக செயலலிதா ஈழ ஆதரவாளராய் நடிப்பதாகவே வைத்துக் கொள்வோம்; மற்றவர்களெல்லாரும் அப்படி நடிப்புக்காகக் கூட ஈழத்தை ஆதரிக்கவில்லையே!
அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழர் சிக்கல்களையெல்லாம் தீர்ப்பாரா என்பது அப்புறம். ஆனால், இந்தச் சிக்கல்களையெல்லாம் பற்றித் தெளிவான உறுதிமொழிகளையாவது அவர் கொடுத்திருக்கிறார். மற்றவர்கள் அப்படி வாயளவில் ஒப்புக்கொள்ளக் கூட முன் வராத நிலையில் இவர்களில் யாருக்கு வாக்களிப்பது அறிவுடைமை என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!
அட, இந்த உறுதிமொழிகள் ஒரு பக்கம் இருக்கட்டும். தனி ஈழத்துக்கு ஆதரவாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை மீட்டுத் தந்தது, சாந்தன் – முருகன் – பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழ்நாட்டின் சார்பாக வாதாடியது என்று தமிழர் சிக்கல்களுக்காக செயலலிதா இதுவரை மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைகளைக் களத்திலிருக்கும் மற்ற நான்கு கூட்டணிகளில் வேறு எதனிடமாவது நாம் எதிர்பார்க்க முடியுமா?
ஆக, இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க-வை விட நல்ல தேர்வு வேறு எதுவும் இருக்க முடியாது என்பதே உண்மை!
“ஏன், செயலலிதா மட்டும் தேர்தல் வெற்றிக்குப் பின் காங்கிரசுக்கு ஆதரவளிக்க மாட்டாரா” என்கிறீர்களா? கண்டிப்பாக மாட்டார்!
மூன்றாவது அணி, ஆம் ஆத்மி, பா.ச.க என மூன்று வாய்ப்புகள் இருக்கும்பொழுது இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, எப்பொழுதுமே தனக்கு ஆகாத சோனியாவின் முகாமுக்கு செயலலிதா போவதற்கு வாய்ப்பில்லை.
மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் செயலலிதாவின் அடுத்த குறி கருணாநிதியின் ‘தமிழினத் தலைவர்’ பீடம்!
தமிழ்நாட்டில், கருணாநிதிக்குக் கிடைத்த அத்தனையும் செயலலிதாவுக்கும் கிடைத்து விட்டன. ஆனால், இத்தனை ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலேயே வளர்ந்தும், வாழ்ந்தும், மூன்று முறை முதல்வராக இருந்தும் கூட அவரைத் தமிழினத் தலைவராக இல்லாவிட்டாலும், குறைந்தது தமிழராகக் கூட ஏற்றுக்கொள்ள இங்கு யாரும் ஆயத்தமாக இல்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஈழச் சிக்கல், மூவர் தூக்குத் தண்டனைச் சிக்கல் எனத் தமிழ் மக்களின் இனநலன் சார்ந்த சிக்கல்கள் பலவற்றிலும் செயலலிதா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அவரைத் தமிழினத் தலைவர் அரியணைக்கு இப்பொழுது மிக அருகில் கொண்டு வந்து விட்டன. வெண்ணெய் திரளும் இப்படியொரு வேளையில் தாழியை உடைத்துக் கொண்டாவது காங்கிரசுக்கு ஆதரவளிக்க அவர் என்ன சோனியாவுக்குச் சொந்த பந்தமா,இராகுலுக்கு ரத்தச் சொந்தமா?
அப்படியானால், அ.தி.மு.க மூலம் பா.ச.க ஆட்சிக்கு வந்தால் வரவேற்கலாம் என்கிறாயா, மேலே நீ காட்டிய பா.ச.க எதிர்ப்பெல்லாம் வெறும் கண்துடைப்பா எனக் கேட்பீர்கள்.
இல்லை! பா.ச.க ஆட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லைதான். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என உறுதியாக இருக்கிறேன். நம் மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் எனத் திடமாக நம்புகிறேன். எனவே, அவர்களுக்கு ஒரு நல்ல தேர்வை (choice) அடையாளம் காட்ட விரும்புகிறேன், அவ்வளவுதான்.
இதுவரையான நமது அலசலில் தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க, தே.மு.தி.க, பொதுவுடைமைக்கட்சிகள், ஆம் ஆத்மி ஆகிய அனைத்துமே தேர்தல் முடிந்த பின் காங்கிரசுடன் சேரக்கூடியவைதான் என்பதைப் பார்த்தோம். எனவே, மிச்சமிருக்கும் பா.ச.க – அ.தி.மு.க இரண்டில் எது நல்ல தேர்வு என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!
பா.ச.க-வுக்கு வாக்களித்தால் அந்த மதவெறிக் கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்பது உறுதி. மாறாக, அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தாலோ அ.தி.மு.க ஆதரவுடன் மூன்றாவது அணியோ, ஆம் ஆத்மியோ, அ.தி.மு.க-வே கூட ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது. எனவே, இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது நல்லது எனச் சிந்தியுங்கள்!
ஒருவேளை, இந்த மூன்று வாய்ப்புகளும் அமையாமல் அ.தி.மு.க – பா.ச.க கூட்டணியே அமைந்தாலும், சிறுபான்மையர் எதிர்ப் போக்கையோ, தமிழர் எதிர்ப் போக்கையோ பா.ச.க கையிலெடுத்தால் செயலலிதா அதற்கு ஆதரவாக இருக்க மாட்டார் என நாம் நம்பலாம்.
காரணம், தொடர்ந்து இரண்டு முறை வாசுபாய் அரசுக்குப் பேராதரவளித்த தமிழ் மக்கள், மோடி நடத்திய குசராத்து கோரத் தாண்டவத்தால் இன்று எந்தளவுக்கு அந்தக் கட்சி மீது வெறுப்பில் இருக்கிறார்கள் என்பதை அவர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். அவருடைய இதே ஆட்சியில்தான் மோடியின் வருகைக்கு எதிராக இங்கே கறுப்புக் கொடிப் போராட்டங்களும் முற்றுகைகளும் நாம் நடத்தினோம். எனவே, பா.ச.க-வின் சிறுபான்மை மக்கள் நலனுக்கெதிரான நடவடிக்கை எதற்காவது துணை நின்றால் அடுத்த ஆண்டு இரமலான் பெருநாள் கஞ்சி குடிக்கக் கூட இசுலாமியர் முகத்தில் விழிக்க முடியாது என்பது அவர் அறியாததில்லை.
அதே போல, காலங்காலமாகத் தமிழினத் தலைவனாகக் கருணாநிதியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தமிழ் மக்கள் அவருடைய தமிழின இரண்டகத்துக்குப் பின் எந்த அளவுக்கு அவர் மீது காழ்ப்புணர்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதும் வெட்டவெளிச்சமான ஒன்று. எனவே, செயலலிதா மட்டுமில்லை, கொஞ்சமாவது அடிப்படை அறிவுள்ள யாருமே இவ்வளவையும் பார்த்துவிட்டு இனியும் சிறுபான்மையர் நலனுக்கோ, தமிழர் நலனுக்கோ எதிரான நடவடிக்கைகளுக்குத் துணைபோகத் துணிய மாட்டார்கள்!
சரி, அப்படியே செயலலிதாவுக்கு வாக்களித்தாலும் அவர் ஆதரவில் ஆட்சியைப் பிடிக்கும் மூன்றாவது அணியோ, ஆம் ஆத்மியோ, பா.ச.க-வோ, அல்லது செயலலிதாவே பிரதமரானால் கூட அதனால் தமிழீழம் கிடைத்துவிடுமா எனக் கேட்பீர்கள்.
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே! இந்த நால்வர் மட்டுமில்லை, ம.தி.மு.க-வையும் நாம் தமிழரையும் தவிர, இந்தியாவில் வேறு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் நமக்குத் தமிழீழத்தைப் பெற்றுத் தர மாட்டார்கள்! இந்தியா எனும் இந்தப் பலபட்டறைத் தேசிய அமைப்பை வைத்துப் பிழைக்கும் இந்திய தேசியக் கட்சிகளால் நம் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு தனி தேசிய அடையாளம் கிடைப்பதை ஒருநாளும் பொறுத்துக்கொள்ள முடியாது!
எனவே, இவர்கள் யாராவது ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் கிடைக்கும் என்பதற்காகவோ, இலங்கை மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணை தொடங்கும் என்பதற்காகவோ நான் செயலலிதாவுக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. ஆனால், காங்கிரசுடன் ஒப்பிடும்பொழுது இந்தியாவில் வேறு எந்தக் கட்சிக்கும் அந்த அளவுக்குத் தமிழர்கள் மீது தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. எனவே, புதிதாக ஆட்சிக்கு வருவோர் யாராக இருந்தாலும், அவர்கள் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக எதிராகச் செயல்பட வாய்ப்பில்லை. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பன்னாட்டு முயற்சிகளைத் தடுப்பது, இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களைத் திருத்தச் சொல்வது போன்ற குள்ளநரித்தனங்களைச் செய்ய வேண்டிய தேவை இந்தியாவில் காங்கிரசைத் தவிர வேறெந்தக் கட்சிக்கும் கிடையாது. எனவே, காங்கிரசைத் தவிர வேறு எந்தப் பேய் வந்து நடுவணரசில் அமர்ந்தாலும் தமிழர்களுக்கு அது நல்லதுதான்; காங்கிரசை முதலில் அதிகாரத்திலிருந்து அகற்றுவதுதான் முக்கியம் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்!
ஆக, ‘வாக்காளர்களுக்கான திட்டம்’ என்று தலைப்பில் சொன்னது இதுதான்:
தமிழர், இந்தியர், மனிதர் என எந்த நோக்கிலிருந்து பார்த்தாலும் தீங்கு விளைவிப்பதாகவே தென்படுகிற காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்றியே ஆக வேண்டும்!
அதற்கு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க, தே.மு.தி.க, பொதுவுடைமைக்கட்சிகள் ஆகிய காங்கிரசு ஆதரவுக் கட்சிகள் அனைத்தையும் நாம் இந்தத் தேர்தலில் கூண்டோடு புறக்கணிக்க வேண்டும்!
அதற்காகப் பா.ச.க-வுக்கு வாக்களித்தால், அவர்கள் மீண்டும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆட்டம் போடும் வாய்ப்பு இருப்பதால் அதையும் நாம் தவிர்க்க வேண்டும்!
எனவே, மிச்சமிருக்கும் ஒரே கட்சியும், காங்கிரசு அளவுக்குத் தமிழர்க்கு எதிராகவோ , பா.ச.க அளவுக்குச் சிறுபான்மையர்க்கு எதிராகவோ இல்லாத கட்சியுமான அ.தி.மு.க-வுக்கு நாம் வாக்களிக்க வேண்டும்!
அதே சமயத்தில், எந்தத் தமிழர் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு நாம் இந்த முடிவை எடுக்கிறோமோ அதே சிக்கல்களுக்காகத் தொடக்கக் காலத்திலிருந்து போராடி வரும் வை.கோ, சுப.உதயகுமாரன் ஆகியோரை ஆதரிப்பதும் நமது கடமை என்பதை உணர்ந்து, குறிப்பிட்ட எட்டு தொகுதிகளில் ம.தி.மு.க-வையும், கன்னியாகுமரியில் ஆம் ஆத்மியையும் நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும்!
இதுதான் திட்டம்!
இதன் மூலம் காங்கிரசையும் ஆட்சியிலிருந்து அகற்றலாம்!
பா.ச.க ஆட்சிக்கு வருகிற வாய்ப்பையும் குறைக்கலாம்!
தவறி பா.ச.க ஆட்சிக்கு வந்தாலும் சிறுபான்மை மக்களுக்கோ, தமிழர்களுக்கோ எதிராக எதுவும் செய்ய விடாமல் கூட்டணிக் கட்சிகளின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருக்கும்படியாகவும் செய்யலாம்!
மிக்க நன்றி ஐயா!
இணையத்தில் முதன்முறையாக நம் தனித்தமிழ் இதழில் என் படம் வெளிவந்திருப்பது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி!
இரண்டாக இருந்த கட்டுரையை ஒரே பதிவாக்கி இப்படித் தேர்தல் நேரத்தில் தாங்கள் வெளியிட்டிருப்பது இது இன்னும் பலரைச் சென்றடைய வழிவகுக்கும் என நம்புகிறேன்.
வாழ்த்தும் பாராட்டும்! உங்கள் பணி தொடரட்டும்!