(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் . மருதநாயகம் 66/69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

67/69

  அச்சில் உள்ள தமிழ் நூல்கள்

மேற்குறித்த நூல்கள்தவிர, மேலும் சில நூல்களையும் எழுதியுள்ளார். அவை அச்சில் உள்ளன. அவற்றில் தமிழ் நூல்கள் வருமாறு:

  1. தமிழ் அழகியல் – உலகளாவிய ஒப்பு நோக்கு

தமிழரின் அழகுணர்வு நீண்ட நெடுங்காலமாகவே மொழி, இலக்கியம், கவிதையியல், இசை, நடனம், சிற்பம், ஓவியம் ஆகிய துறைகளிலெல்லாம் வெளிப்படுத்தப் பெற்றுள்ளது. இதன் தொன்மையையும் சிறப்பையும் எபிரேய, கிரேக்க, உரோமானிய, ஆரிய இனத்தாரின் மொழிகளிலும் கலைகளிலும் இலக்கியங்களிலும் காணப்பெறும் அழகுணர்வோடு ஒப்பிட்டுப் பார்க்கு்ம் பொழுது நன்கு உணர முடியும். இத் தொகுதியிலுள்ள பதினெட்டுக் கட்டுரைகளும் காய்தல், உவத்தல் இன்றி இத்துறைகளில் ஆய்வை மேற்கொண்டுள்ளன. இக்கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள எல்லா முடிவுகளும் செய்திகளும் தக்க ஆதாரங்களுடன் அவ்வத்துறைகளில் ஆழ்ந்த பயிற்சியுடைய மேலைநாட்டு விற்பன்னர்களின் கருத்துகளுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தமிழின் உட்பகைவர்களும் புறப்பகைவர்களும் மறைக்கும் மறுக்கும் பல உண்மைகளை நம்மவர் அறிந்து கொள்ள வேண்டுமென்பதே இந்நூலின் தலையாய நோக்கமாகும்.

 சிறந்த ஒப்பிலக்கிய அறிஞரான பேரா.ப.ம.நா. தமிழ் அழகியலை உலகளாவிய ஒப்பு நோக்கில் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார் எனலாம்.

2. ஒப்பில் தொல்காப்பியம்

மொழியியல் அறிஞரான பேரா.ப.ம.நா. தொல்காப்பியத்தை இடைச்செருகல்கள் இன்றிப்பதிப்பித்தும் தொல்காப்பிய ஆய்வுக் கட்டுரைகளைப்படைத்தும் தம் தொல்காப்பியப் புலமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று அதிகாரங்களில் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடுபற்றிக் கூறும் கருத்துகளையும் அவர் வரையறை செய்யும் தமிழ்க்கவிதை இயலையும் பிளேட்டோ, அரிசுடாட்டில், இலாஞ்சைனசு, ஓரசு, ஆனந்த வர்த்தனர், அபிநவகுப்புதர், குந்தகர், இராசசேகரர்,தண்டின் போன்றோரும் இன்றைய மேலைத்திறனாய்வாளர்களும் கவிதையின் பிறப்பு, தன்மை, பயன்பற்றிக் கூறும் ஆய்வுமுடிவுகளோடு ஒப்பிட்டுக் காட்டித் தொல்காப்பியரே இத்துறையில் தலைமையிடம் பெறத்தக்கவர் என்பதை நிறுவும் இருபதுக்கு மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். சமற்கிருத இலக்கண, இலக்கிய நூல்கள் பலவும் தொல்காப்பியத்திற்குக் கடன்பட்டிருப்பதையும் தொல்காப்பியத்திற்குப் பின் வந்த தமிழ் இலக்கண நூல்களும் கன்னட மலையாள மொழிகளில் எழுதப்பெற்ற கவிசரா மார்க்கம், (இ)லீலா திலகம், போன்றவையும் தொல்காப்பியத்தின் வழி நூல்களே யென்பதையும் இக்கட்டுரைகள் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. பிற மொழி நூல்களுக்கும் தொல்காப்பியம் மூல முதல் நூலாக இருக்கும் சிறப்பை இந்நூல்போல் வேறு நூல் உணர்த்தவில்லை.

3. ஒப்பில் கம்பன்

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்னும் பழமொழி கம்பனின் கவிச்சிறப்பை உணர்த்தும். ‘ஒப்பில் வள்ளுவம்’, ‘ஒப்பில் தொல்காப்பியம்’ என நூல்களை அளித்துள்ள ஒப்பிலக்கிய அறிஞர் பேரா.ப.ம.நா. ‘ஒப்பில் கம்பனையும்’ நமக்கு அளித்துள்ளார்.

கிரேக்க மொழியிலுள்ள இலியத்து, ஒதிசி எனும் ஓமரின் வாய்மொழிப்பாடல்கள், இலத்தீன் மொழியிலுள்ள ஈனியித்து என்னும் வரைமொழிக் காப்பியம் இத்தாலிய மொழியிலுள்ள தாந்தேயின் தெய்விக இன்பியல் நாடகம் எனும் செவ்விலக்கியம் சமற்கிருதத்திலுள்ள வியாசபாரதம், வால்மீகி இராமாயணம், ஆங்கிலத்திலுள்ள விண்ணுலக இழப்பு என்னும் மிலட்டனின் அரிய நூல் ஆகியவை உலகப் பன்மொழி அறிஞர்கள் அறிந்தவை. இவற்றை யெல்லாம் படைப்பிலக்கியங்கள் என்று மதிப்பீடு செய்யும்போது கம்பனின் இராமகாதை பிற எல்லாவற்றையும் விடப் பல கூறுகளில் உயரந்திருப்பதைப் பன்மொழியறிவும் நேர்மையுணர்வும் இலக்கியத் திறனாய்வுத்திறனும் உடைய மேனாட்டறிஞர் சிலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். விபுலானந்தர் அடிகளார் தமது செகசிற்பியர்பற்றிய ‘மதங்க சூளாமணி’ என்ற நூலின் முன்னுரையில், “கம்ப நாட்டாழ்வார் அகலக் கவிகளுள் முதன்மை பெற்று விளங்குவதுபோல் செகசிற்பியார் நாடகக் கவிகளுள் முதன்மை பெற்று விளங்குகிறார்” என்று கூறுவார்.

ஐந்நூறு பக்கங்கள் கொண்டபேரா.ப.மருதநாயகத்தின் நூல் உலகக்காப்பியங்களோடெல்லாம் ஒப்பிட்டுக் கம்பனின் காப்பிய உயர்வை நிறுவுகிறது.

அச்சில் உள்ள ஆங்கில நூல்கள் வருமாறு:

  1. Tirukkural as the Book of the World

(உலக நூலாகத் திருக்குறள்)

திருவள்ளுவரின் திருக்குறளை உலகப்பொதுநூலாக ஏற்க வேண்டுமென்று தமிழன்பர்கள் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர். அதற்கிணங்கத் திருக்குறளைக் கிரேக்க, உரோமானிய, ஆரிய, மேலை ஐரோப்பிய இனத்தவர்களின் அறநூல்களோடெல்லாம் ஒப்பிட்டு அஃதே உலக நூலென்னும் தகுதிக்கு உரியதென்று உலகப் பன்மொழி அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இந்நூல் வேண்டுகிறது. பிளேட்டோ, அரிசுடாட்டில், கேட்டோ, மார்க்கசு அவுரேலியசு, மனு, கெளடிலியர், பத்துருகரி,மாக்கியவல்லி, இசுப்பினோசோ,மோந்தேயின், பேகன் போன்றோர் விட்டுச்சென்றுள்ள படைப்புகளெல்லாம் கடடமைப்பிலும் கருத்துச் செறிவிலும் இலக்கியத்தரத்திலும் வள்ளுவரின் நூலைச் சற்றும் நெருங்க முடியாதவை என்னும் கருத்தை இந்நூலிலுள்ள கட்டுரைகள் ஐயத்திற்டமின்றி நிறுவுகின்றன.

  1. On translating Tamil Classics

(தமிழ்ச்செவ்விலக்கியங்களை மொழிபெயர்ப்பதுபற்றி)

பழந்தமிழ் இலக்கிய நூல்களை முழுமையாகவும் தேவைக்கேற்ப சிற்சில பாடல்களையும் மொழி பெயரத்துள்ளனர். இவ்வாறு, சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றையும் திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெரிய புராணம் போன்ற காப்பியங்களையும் ஆங்கிலத்திலும் பிற மேலை மொழிகளிலும் மொழி பெயர்க்கும்போது ஏற்படும் இடையூறுகளையும் சிக்கல்களையும் மொழிபெயர்ப்பு வல்லுநர்கள் அறிவர். சங்க இலக்கியஙக்ளில் சிலவற்றை ஏ.கே.இராமானுசன், சியார்சு ஆர்த்து, மார், அ.வெ.சுப்பிரமணியன்போன்றோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். திருக்குறளைப் போப்பு அடிகளாரும் எல்லீசரும் தமிழ் அறிஞர்கள் பலரும் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துள்ளனர். சிலப்பதிகாரத்தை அலெயின் தேனியலு, ஆர்.பார்த்தசாரதி போன்றோரும் மணிமேகலையைப் பிரேமா நந்தகுமார் முதலியோரும் ஆங்கிலத்தில் தந்துள்ளனர்.

இம்மொழிபெயர்ப்புகளின் நிறைகளையும் குறைகளையும் இந்நூல் சுட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது.

  1.  Tamil Poetry Since Bharati

(தமிழ்க்கவிதை: பாரதிக்குப் பின்)

பாரதியைத் தொடர்ந்து தமிழ்க்கவிதைக்கு வளம் சேர்த்த பன்னிருவர் பற்றிய நூல் இது. இந்நூலில் பாரதி, பாரதிதாசன், கவிமணி தேசிகவிநாயகம்,இலெனின் தங்கப்பா, பெருஞ்சித்திரனார், கலைஞர் மு.கருணாநிதி, அபுதுல் இரகுமான், குலோத்துங்கன், சிற்பி, வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருடைய கவிதைகள் மேலை நோக்கில் ஆராயப்படுகின்றன. இறுதிக் கட்டுரையில் இன்று வாழும் கவிஞர்கள் பலரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளன. இவையெல்லாம் இக்காலத் தமிழ்க்கவிதைகளைத் தமிழறியாதார்க்கு ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வதோடு, தமிழ் இன்னும் உயிர்த்துடிப்புள்ள கவிதை ஊடகமாகச் செயல்பட்டு வருகிறது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. மொழி பெயர்ப்பு வல்லுநரான பேரா.ப.ம.நா. எளிய முறையில் சிறப்பாக இப்பணியை முடித்துக் கவிஞர்களைச் சிறப்பித்துள்ளார்.

  1. Twelve Custodians of Tamil Culture

(தமிழ்ப்பண்பாட்டுப் பாதுகாவலர்கள் பன்னிருவர்)

தமிழின் அகப்பகைவர்களும் புறப்பகைவர்களும் இணைந்து காலந்தோறும் , தமிழினம், மொழி,இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் மீது பன்முகத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை. இத்தாக்குதல்களிலிருந்து தமிழ்மொழி, தமிழினம் முதலியவற்றைக் காக்கும் வகையில், பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்ப்பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு முன்னிலை வகித்த பன்னிருவர்பற்றிய கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். எல்லீசர் எனும் ஆங்கிலேயரும் விபுலானந்த அடிகள், தனிநாயக அடிகள் ஆகிய ஈழத்தமிழறிஞர் இருவரும் மறைமைலயடிகள் என்னும் தனித்தமிழ் இயக்க முன்னோடியும் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு, பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி அரிய நூல்களும் கட்டுரைகளும் எழுதியதோடு, தமிழுக்காகக் களத்தில் இறங்கிப் போராடிச் சிறை செல்லத் துணிந்தவரும் ஆகிய இலக்குவனாரும், ஆட்சியிலிருந்தபோதும் இல்லாதபோதும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரைகள் சொற்பொழிவுகள் மூலமாகத் தமிழ்ப்பணியாற்றிய அறிஞர் அண்ணாவும் புலவராகவும புரவலராகவும் திகழ்ந்து தமிழுக்குப் பலவழிகளில் தொண்டு செய்த சிற்பி பாலசுப்பிரமணியமும் அறிவியல் அறிஞராகத் இருந்தும் ‘மானுடயாத்திரை’ எனும் அரிய காப்பியம் யாத்த வா.செ.குழந்தைசாமியும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் கவிப்பேரரசு வைரமுத்துவும் பன்மொழிப்புலவர் தெ.பொ.மீ.யும் இந்நூலில் இடம் பெறுகின்றனர்.

  1. Overshadowed Classics in Tamil

(புகழ் மங்கிய தமிழ்ச்செவ்விலக்கியங்கள்)

சங்க இலக்கியங்கள் உலக அறிஞர்களால் போற்றப்பட்டு வருகின்றன. எனினும் சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களாகிய குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, பரிபாடல், கலித்தொகை ஆகியவையும் பத்துப்பாட்டு நூல்களாகிய திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு ஆகியவையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகிய திருக்குறள், நாலடியார் ஆகிய இரண்டும் பின்வந்த காப்பியங்களில் சிலம்பு, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவையும் மட்டுமே உலக அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவற்றிற்குக் கிடைத்த வரவேற்பு ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, மலைபடுகடாம், ஐந்திணை நூல்கள், பழமொழி நானூறு,மணிமேகலை, பெரியபுராணம், தேம்பாவணி போன்ற தகுதியுடைய செவ்வியலக்கியங்களுக்குக் கிடைக்கவில்லை. எனேவ, இந்நூல்களின் மேல் உலக அறிஞர்களின் பார்வைபடவேண்டும் என்பதற்காக இவற்றின்மீது ஒளிவீச்சைப் பாய்ச்சியுள்ளார் பேரா.ப.ம.நா. இவற்றின் சிறப்புகளைத் தக்க சான்றுகளுடன் எடுத்துரைக்கும் கட்டுரைகளை இந்நூலில் அளித்துள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 68/69)