(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 61/69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

62/69

அறிவியல் கவிஞர் குலோத்துங்கன்

கவிஞர் குலோத்துங்கன்பற்றிய இரு நூல்களையும் தொல்காப்பியர் முதல் குலோத்துங்கன் வரையிலான கவிஞர்கள்பற்றிய நூலையும் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேலைநோக்கில் குலோத்துங்கன் கவிதைகள் (மணிவாசகர் பதிப்பகம், சென்னை 2016)

 குலோத்துங்கன் எனும் முனைவர் வா.செ.குழந்தைசாமியின் கவிதைத் தொகுதிகள் பின்வரும் தலைப்புகளில் ஆராயப்படுகின்றன.

 1. மரபும் தனி ஆற்றலும்
 2. அறிவுப் பின்புலமும் கவிதைக் கோட்பாடும்
 3. கருத்துக் குவியலா?புதுமைச் செவ்வியல் கவிதையா?
 4. உணர்ச்சி, ஆளுமை, கவிதை
 5. புதுக் கவிதையும் தமிழ் யாப்பும்
 6. பெண்ணழகு, பெண்ணின்பம், பெண்ணியம்
 7. மனிதம், மாந்தநேயம், மார்க்குசியம்
 8. பகுத்தறிவு, நாத்திகம், பெரியார்
 9. கவிதையில் அறிவியல் பாடம்
 10. தத்துவம் கவிதையாக
 11. வையம் ஓர் இன்ப வீடு
 12. குவலயத் துயரம் நீக்கும் தேட்டம்
 13. ஆண்டவன் மக்கள் யாங்கள்
 14. கடவுளும் கொடியன் தானோ?
 15. மானுடத்தின் வெற்றிப் பயணம்

 குலோத்துங்கனின் பணி வாழ்க்கையிலிருந்து விலகி முற்றிலும் அவரது கவிதைகளைப்பற்றிய பகுப்பாய்வும் கருத்தாய்வுமாக இந்நூலை அளித்துள்ளார் பேரா.ப.ம.நா. மேலும், டி.எசு.எலியட்டு, வேருடுசு ஒர்த்து, யான் மிற்றன், இராபர்த்து பிராசுட்டு, இலாருடு தென்னிசன், ஆண்டுரூ மார்வெல், ஆடென், யான் தன், சாக்குரட்டீசு, செல்லி, இருவிங்கு இலேட்டன் போன்ற மேலைநாட்டுப் படைப்பாளர்களின் கவிதைகளோடும், கருத்துகளோடும் ஒப்பிட்டுக் குலோத்துங்கன் கவிதைகளின் திறனாய்வை மேற்கொண்டுள்ளார்.

(காப்பிய வானில் ஒரு புதிய விண்மீன் : குலோத்துங்கனின் மானுட யாத்திரை) A New Star in the Epic Sky: Kulothungan’s Journey of Man(NCBH,2012)

குலோத்துங்கனின் மானுட யாத்திரை எனும் காப்பியம் கீழ்வரும் உட்தலைப்புகளில் பாரக்கப்படுகிறது:

1.) தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘மானுட யாத்திரை’க்குரிய இடம். 

2.) உலகளாவிய பார்வையும் ஒரு தனிக்குரலும்

3.) கவிஞனின் நோக்கில் மன்பதையும் அரசியலும்

4.) அறிவியலாகக் கவிதை, கவிதையாக அறிவியல்

5.) ஒரு பகுத்தறிவாளன் பார்வையில் ஆன்மிகமும் சமயமும்

இந்த ஐம்முகக்காட்சியின் மூலம் குலோத்துங்கனின் மானுட யாத்திரைக் காப்பியத்தில் நம்மையும பயணம் மேற்கொள்ள வைத்துள்ளார் பேரா.ப.ம.நா.

தொல்காப்பியர் முதல் குலோத்துங்கன் வரை :  தமிழ் உள்ளத்தின் விரிந்த பரப்புகள் (Tolkappiar to Kulothungan: Dimensions of Tamil Mind(2013))

தமிழ்ச்செவ்வியல் மொழியின் மொழியியல், இலக்கியம், குமுக விழுமியங்கள் குறித்த நூல். குறிப்பாகத் தொல்காப்பியம்,  சங்க இலக்கியக்காலம், புறநானூறு, தமிழ்ப்புலவர்களின் அறிவாண்மை, உரையாசிரியர்களின் புலமை முதலிய விழுமியங்கள் கூறப்படுகின்றன.

தமிழின் மாட்சிமையையும் புகழையும் செழுமிய பண்புகளின் பல கூறுகளையும் இந்நூலில் விளக்குகிறார். தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தின் தனித்துவ அழகையும் ஆழத்தையும் உறுதியான நிலைத்த  மேலாதிக்கத்தையும் எடுத்துரைக்கும் முதன்மைப் பண்புகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

பின்வரும் பதினெட்டு ஆய்வுக்கட்டுரைகளில் தமிழின் தனித்துவச் சிறப்புகளையும்  மேனாட்டார் கருத்துகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.-

 1. ஏ.சி.பருனல் கூறும் ஐந்திர மரபும் தொல்காப்பியமும்: ஓர் ஆழமான ஆய்வு
 2. “அரசனே! எங்களுக்குச்செல்வம் தேவையில்லை”: சங்கப்புலவரகளின் உரிமைகளும் கடமைகளும்
 3. புறநானூற்றின் காலம்
 4. திருக்குறளில் பிறர் நலம் பேணல் என்னும் அறம்
 5. முருக வழிபாடும் திருஞானசம்பந்தரும்
 6. இளம்பூரணரின் தொல்காப்பிய உரை
 7. பேராசிரியரின் பொருளதிகார உரையும் கவிதைக் கோட்பாடும்
 8. நச்சினார்க்கினியரின் திறனாய்வுத் திறன்
 9. பரிமேலழகர் வடமொழிச் சார்புடையவரா?

10.படைப்பிலக்கியமாக அடியார்க்கு நல்லாரின் உரை

11.எல்லீசர்: மொழியியல் வல்லுநர், மொழி பெயர்ப்பாளர், திறனாய்வாளர்

 1. வருவது உரைப்போனாகக் கவிஞன் : பாரதி
 2. புரட்சியாளனாகக் கவிஞன் : பாரதிதாசன்
 3. அறிஞர் அண்ணாவின்பேச்சாற்றல் : மாநிலங்களவைச் சொற்பொழிவுகள்
 4. கலைஞர் கருணாநிதியின் ‘காலப் பேழையும் கவிதைச்சாவியும் ‘
 5. கவிமணியின் ‘உமர்கய்யாம் பாடல்கள்’
 6. சிற்பி : தமிழினத்தின் மனச்சான்றாக
 7. குலோத்துங்கன் : கவிதையும் அறிவியலும்

சங்கச்சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா(2019)

சிறந்த படைப்பாளியாகத் திகழ்ந்த இலெனின் தங்கப்பாவினுடைய படைப்புகளின் வழியே அவருடைய ஆளுமைத் திறத்தைக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தும் பாங்கில் சங்கச்சான்றோர் வழியில் இலனின் தங்கப்பா என்னும் நூலை அளித்துள்ளார். இதில் 15கட்டுரைகள் உள்ளன.முதல் கட்டுரைத் தலைப்பு ‘மரபு’. இதில் பாரதியார் பாரதிதாசன் மரபுடன், புதுக்கவிஞர்கள், வானம்பாடிக் கவிஞர்கள், மரபுக்கவிஞர்கள், தனித்தமிழ்க்கவிஞர்கள் என்னும் பிரிவுகளையும் குறிப்பிடுகிறார். இவற்றில் தனித்தமிழ் மரபைச் சேர்ந்தவர் இலெனின் தங்கப்பா என வகைப்படுத்தியுள்ளார். வெவ்வேறு கவிமரபில் வந்த பாவலர்களின் பாடல்களையும் பெருஞ்சித்திரனார் வரையறுக்கும் பாடலுக்கான கூறுகளையும் குறிப்பிட்டுமரபு வழி வந்த இலெனின் தங்கப்பாவைப் போற்றுகிறார். 

‘சங்கச்சான்றோர் வழி’ என்னும் இரண்டாம் கட்டுரையில், சங்கச்சான்றோர் பாடல்களின் தழுவல்களாக இன்றைய சூழலை முன்வைத்து அவர் எழுதியுள்ளவை சங்கத் தமிழின் சிறப்பையும் சான்றோர் கையாண்ட கவிதை உத்திகளின் உயர்வையும் புலப்படுத்துகிறது என்கிறார்.

‘பின்னைக் காலனித்துவம்’ என்பது மூன்றாவது கட்டுரை. தமிழர்க்கு ஊறுசெய்யும் எல்லா அரசியல், சமுதாய நிகழ்வுகள்பற்றியும் அவ்வப்பொழுது எளிய இனிய தமிழில் தம் கடுஞ்சினத்தை வெளிப்படுத்தும் வகையில் கவிதைகள் எழுதும் தங்கப்பா ஆங்கில வழிக் கல்வியும் பேச்சுவழக்கில் ஆங்கிலக் கலப்பும் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதைச் சுட்ட பல உத்திகளைக் கையாண்டு கவிதைகள் படைத்தமையை விளக்குகிறார்.

நான்காம் கட்டுரை ‘இயற்கை ஆற்றுப்படை’. கலிங்கத்துப்பரணியில் கையாளப்பட்டுள்ள யாப்பு வடிவங்கள் பின்பற்றப்பட்டுள்ள ‘புயல் பாட்டு’, சிற்றூர் வாழ்க்கையைச் சிறப்பிக்கும் ‘யான் ஓர் எளியேன்’, பாரதியின் குயில்பாட்டைப்போன்ற கற்பனையும் நடையும் உள்ள ‘ஆந்தைப்பாட்டு’, ‘மீண்டும் காக்’கைகள்’, ‘கரிக்குருவி’ ஆகியன, ‘மலைமகள்’, ‘பாறையும் முகிலும் ஆகிய இயற்கையைச் சிறப்பிக்கும் பாடல்களை எடுத்துக்காட்டுடன் விளக்குகிறார். ‘அடிச்சுவடுகள்’ தொகுதி, யாப்பு வடிவத்தில் சில மாறுதல்கள் செய்து, முருகியல் இன்பத்தைப் பெருக்குகிறது என்கிறார். ‘புயல் எழுக’ என்னும் தலைப்பிலான வெண்பாக்களில்  அதிர்ச்சி தரும் புத்துவமைகளைக் காணலாம்.

‘வாழ்வென்னும் புதிர்’ என்னும் ஐந்தாவது கட்டுரையில் எது வாழ்க்கை என்னும் தங்கப்பாவின் நூல் உலக அரங்கிற்குக் கொண்டு செல்ல வேண்டிய ஒன்று என விளக்கியுள்ளார். இந்நெடுங்கவிதை, பாரதியின் ஞானரதத்தை ஒத்து அமைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

ஆறாவது தலைப்பு ‘அரசியல் அங்கதம்’. அரசினர், வணிகர், சமயத்தலைவர்கள் ஆகியோர் கூட்டணி அமைத்து நாட்டு வளத்தை இரக்கமின்றி அழித்துத் தங்கள் நலத்தைப் பெருக்கிக் கொள்வதைச் சாடி, தங்கப்பா ஏராளமான அங்கதக் கவிதைகள் எழுதியுள்ளதை இதில் குறிப்பிடுகிறார்.

‘தமிழினம்’ என்னும் தலைப்பிலான ஏழாவது கட்டுரையில் இன்று வாழும் புலவர்களும் ஆசிரியர்களும் கலைஞர்களும் மக்கள் தொண்டர்களும் அரசியல் தலைவர்களும் எவ்வாறெல்லாம் தமிழ்க்குமுகாயத்தில் பல துறைகளிலும் சீர்கேடுகள் பெருகி வருவதற்குக் காரணமாக உள்ளார்கள் என்று சாடுவதை விளக்குகிறார்.

தனித்தமிழ்ப்பாவலரான தங்கப்பாவின் ஆங்கில இலக்கிய அறிவு குறித்து எட்டாம் கட்டுரையில் விளக்குகிறார். இதன் தொடர்ச்சியாக அவரின் மொழிபெயர்ப்புத்திறன் குறித்து ஒன்பதாம் கட்டுரையில் சிறப்பிக்கிறார்.

தங்கப்பாவின் ‘ஆளுமை’, ‘இல்லறம்’, ‘நிறைவாழ்வு’, ‘இனப்பற்று மேலை அறிஞர்கள்’ என அடுத்தடுத்து (10,11,12,13 ஆம் கட்டுரைகள்) அமைகின்றன. பேரா.ப.மருதநாயகம். நிறைவாகக் கலைமாமணி புலவர் நாகியின் கையறுநிலைப் பாடலையும் இலெனின் தங்கப்பா படைத்துள்ள 40 நூல்களின் பட்டியலையும் அளித்துள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 63/69 )