அதிகார வெறி இருப்பின், பாசக ஆளும் மாநில முதல்வராகலாமே!

பாசக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் ஆட்டம் அனைவரும் அறிந்ததே! அவர்களை ஆட்டுவிப்பவர்கள் ஒன்றிய அரசின் முதன்மைப் பொறுப்புகளில் இருப்பதை நாமறிவோம். எனவே, தமிழக ஆளுநர் தனியரசு நடத்துவதற்கு அவர்களை மட்டும் குறை கூறிப் பயனிலை. எனினும் பின்னணியில் இருப்பவர்கள் மறைமுகமாகச் செயற்படுவதால் ஆளுநரின் குறைகளைச் சுட்டிக்காட்டினாலே அது பின்னணியினரையும் குறிக்கும். எனவே, தமிழ்நாட்டு ஆளுநரை மையப்படுத்தியே இக்கட்டுரை அமைகிறது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய  தென் மாவட்டங்கள் பெருமழையால், ஊர்களை மூழ்கடிக்கும் வெள்ளப்பெருக்கால் பெரும்பாதிப்பிற்கு உள்ளாயுள்ளன. முதல்வர் மு.க.தாலின் தலைமையிலும் நெறியுரைகளுக்கிணங்கவும் அமைச்சர் பெருமக்களும் பல்துறை அதிகாரிகளும் மீட்புப் பணிகளிலும் துயர் தணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் ஆளுநரின் கடமைகள் யாவை? ஒன்றிய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டிற்கு வேண்டிய நிதியுதவியைப் பெற்றுத்தரலாம்; ஒன்றிய அரசின் உதவிகள் கிடைப்பதில் காலத்தாழ்ச்சி ஏற்படும் சூழலில், ஆளுநர் கையாளும் வகையில் ஒன்றிய நிதியம் ஒன்றை ஏற்படுத்தவும் அதன் மூலம் உடனடி நிதியுதவி வழங்கவும் ஏற்பாடு செய்யலாம்; கொடையுள்ளம் கொண்டவர்களிடம் இருந்து நிதி பெற்றுத் தரலாம்; அதைவிட்டுவிட்டுத் தானே அதிகாரிகள் கூட்டம் நடத்துவது அதிகாரிகளுடன் கலந்து பேசுவது போன்ற செயல்களில்  ஈடுபடுவது அவரது அதிகார வெறியையே காட்டுகிறது.

பல்கலைக்கழகங்களில் தலையிடுவது, அரசின் கல்விக் கொள்கையில் தலையிடுவது, பேரவைத் தீர்மானங்களையும் அரசின் மடல்களையும் கிடப்பில் போடுவது, ஆட்சி அதிகாரத்தில் தலையிடும் வண்ணம்  அதிகார உலா வருவது, மாநில அரசின் தலைமையாக எண்ணிக்கொண்டு கூட்டங்கள் போடுவது, மாநிலத் தன்னாட்சியைச் சிதைப்பது எனப் பல வகைகளில் தன் அதிகாரப் பசியையும் அதிகார வெறியையும் ஆளுநர் வெளிப்படுத்தி வருகிறார். அரசினர், ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர், அரசியலார், இதழாளர் எனப் பல தரப்பாரும் அவ்வப்பொழுது இடித்துரைத்து வந்தாலும் செவி மடுப்பதில்லை. அதன் தொடர்ச்சியான உச்சக்கட்ட நிலைப்பாடுதான் போட்டி அரசாங்கம் நடத்துவதுபோல் தானே தனியாகக் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது.

ஆளுநர் இரா.ந.இரவி, 19.12.2023 அன்று மத்திய அரசுத்துறைகள்,  பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு துயர் தணிப்புப்  பணிகள் தொடர்பில் சென்னை, ஆளுநர் மாளிகையில்  ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

“இந்தியப் படைத்துறை, கடற்படை, கடலோரக் காவல் படை, விமானப்படை, தேசியப் பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எஃப்), தொடரித் துறை,  இந்திய தொடர்பாடல் கழக நிறுவனம்(பிஎசுஎன்எல்), இந்திய வானிலை மையம் (ஐஎம்டி), இந்திய விமானப் போக்குவரத்துத்துறை ஆணையம் (ஏஏஐ), இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் சார்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்பட்டபோதும் மாநில அரசின் எந்தவொரு சார்பாளரும் வரவில்லை.” என ஆளுநர் மாளிகைச் செயலகம் அறிவித்துள்ளது. ஒன்றிய அதிகாரிகள் அச்சத்தில் பங்கேற்றிருப்பர்.

ஒன்றிய அரசு அதிகாரிகளாயினும் மாநிலம் தொடர்பான சிக்கல்களில் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் செயற்படவேண்டும் என்பதை ஆளுநர் மறந்தாலும் இவர்கள் மறக்கக் கூடாது.

ஆளுநரின் கெடுமதி செயல்கள் குறித்து முன்னரே, “இந்தியக் கூட்டரசில் ஆளுநர் என்பது பொம்மைப்பதவியே. எனினும் நெருக்கடி நேரத்தில் ஒன்றிய அரசின் சார்பில் செயல்படும் அதிகாரம் படைத்தவராக மாறி விடுகிறார் .ஆனால், அதற்காக இயல்பான நேரங்களில் அவர் தான்தான் தலைவர் என்று அரசின் அன்றாடப் பணிகளில் குறுக்கிடுவதோ அத்து மீறி அதிகாரம் செலுத்த முற்படுவதோ மக்களாட்சிக்குத் தீமைகளையே விளைவிக்கும். ஆனால், பா.ச.க.ஆட்சியில், பா.ச.க ஆட்சி செய்யா மாநிலங்களில் ஆளுநர்கள் அரசின் பணிகளில் குறுக்கிட்டு முதல்வருடன் முரண்பட நடந்து கொண்டு, ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல்படுவதைச் சிதைக்கிறார்கள்.  ஆனால், ஆளுநர்கள் தன் விருப்பில் செய்வன அல்ல இவை. ஒன்றிய அரசின் உந்துதலில் பா.ச.க ஆட்சியை மாநிலங்களில் மலரச்செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே செய்கின்றனர். உண்மையில், மாநில அரசுகளை அடிமைப்படுத்த நினைக்கும் இத்தகைய ஆளுநர்கள் ஒன்றிய அரசின் அடிமையரே!” எனக் குறிப்பிட்டிருந்தோம். (செய்தக்க செய்யா ஆளுநர், அகரமுதல நாள் 05.05.2022)

அரசியல் யாப்பு விதி 158இன்படி, ஆளுநர் நாடாளுமன்ற எந்த அவையிலும் அல்லது சட்ட மன்றங்களின் எந்த அவையிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது. இவ்வாறு சொல்வதன் காரணம், மக்கள் சார்பாளர்களின் பணிகளில் ஆளுநர் குறுக்கிடக் கூடாது என்பதற்காகத்தான். அவ்வாறிருக்க, ஆளுநர், சட்டமன்றத் தீர்மானங்களைப் புறக்கணிப்பது, மக்கள் சார்பாளர்களால் உருவான அமைச்சரவையை ஒதுக்கித் தள்ளும் வகையில் செயற்படுவது போன்று செயற்படுவது சிறிதும் முறையல்லவே.

உச்சநீதி மன்றமும் ஆளுநர்களைக் கொட்டியுள்ளது. இருப்பினும் “நான் சொல்வதே விதி, நான்  செய்வதே சட்டம்” எனத் தான்தோன்றித் தனம் எனக் கூறும் வகையில் நடந்து கொள்வது தொடர்கிறது.

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும் (திருக்குறள் 346)

என்னும் திருவள்ளுவரின் திரு மொழியை அவருக்கு அணுக்கமாக இருப்போர் அவருக்குச் சொன்னால் நன்று.

ஆளுநர்கள் ஒன்றிய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையே தூதர்களாக இருக்க வேண்டும்; தோழர்களாக நடந்து கொள்ள வேண்டும்; மக்கள் நலனில் கருத்து செலுத்துபவர்காளகத் திகழ வேண்டும்; மாநில அரசை மதிப்பவராகச் செயற்பட வேண்டும். அவ்வாறில்லாமல் ஒன்றிய அரசின் எடுபிடிகளாகப் பணியாற்றக் கூடாது; ஒன்றிய அரசின் ஏவலர்களாக நடந்து கொள்ளக் கூடாது; மாநில அரசை ஆட்டிப் படைப்பவர்களாக அகங்காரம் கொள்ளக் கூடாது.

ஆளுநர்கள் , மாநில அரசுகள் கேட்கும்போதோ இன்றியமையா நேர்வுகளிலோ அறிவுரைஞர்களாகக் கருத்துகள் தெரிவிக்க வேண்டும் நெறியுரைஞர்களாக ஆற்றுப்படுத்த வேண்டும் உற்றுழி உதவும் நண்பர்களாக விளங்க வேண்டும்.

இரா.சே.ச. ஈடுபாட்டாளர்களை அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்க பாசக விரும்பினால், பாசக ஆளும் மாநிலங்களில் அவர்களை முதல்வர்களாக ஆக்கலாம். மாறாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பிப் போட்டி முதல்வர்போல் செயற்படச் செய்யக் கூடாது.

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்

சீரல் லவர்கண் படின்.   (திருக்குறள் – 977)

 சிறப்பான தன்மை அதற்குப் பொருந்தாச் சிறியோரிடம் சேர்ந்தால் அவர்களைச் செருக்கு கொள்ளச் செய்யும் என்கிறார் திருவள்ளுவர்.

நமக்கு இது புரிகிறது. ஆனால், சிறப்பான தன்மையை அடைந்தவர்களுக்கு இது புரியவில்லையே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல 6.12.2054 +++ 22.12.2023