ஆதித்த காிகாலனைப் பிராமணர்களே கொன்றனர்!
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 60 / 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
61 / 69
கவிதைத் திறவுகோல்
The Treasure–Trove of Time and the Verse–Key: An English Translation of Kalaignar Karunanidhi’s காலப் பேழையும் கவிதைச் சாவியும்(2009)
புது வரலாற்றியம்(New Historicism) என்பது கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக மேனாட்டாரால் கையாளப்பெறும் வரவேற்பிற்குரிய திறனாய்வு முறையாகும். இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறும் வகையில் ‘கலைஞரின் காலப்பேழையும் கவிதைச்சாவியும்’ என்னும் கவிதைத் தொகுதி உள்ளது என்கிறார். இந்நூலை ஆங்கிலத்தில் கவிதை விளக்கங்களுடனும் சிறப்புகளுடனும் திறனாய்வு நோக்கில் நமக்குப் பேரா.ப.ம.நா. தந்துள்ளார்.
கவிதைத் திறவுகோல் கொண்டு காலப் பேழையினைக் கவனமாகத் திறந்து தமிழக வரலாற்றை நோக்க வேண்டியதன் இன்றியமையாமையை ஆங்காங்கே கலைஞர் அழுத்தமாகச் சொல்வதாகப் பேரா.ப.மருதநாயகம் குறிப்பிடுகிறார். வரலாற்றை வாளும் கேடயமுமாகக் குறிப்பிட்டு வரலாறு தெரிந்தால்தான் பகைப்புலத்தைச் சந்திக்க இயலும் எனக் கலைஞர் கூறுகிறார். அவர் கூறும் வரலாற்று உண்மைகளில் குறிப்பிடத்தகுந்தது ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டதாகும். கொலைகாரர்கள் பழியிலிருந்து தப்பிப்பதற்காக அவரது குடும்பத்தினரே கொன்றதாகக் கதை கட்டி விட்டனர். அதனால் உண்மை மறைக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்குடிக் கல்வெட்டுச் செய்தி மூலம் பிராமணர்களே அவரைக் கொன்றனர் என்ற உண்மையைப் பதிவு செய்துள்ளார். இத்தகைய வரலாறு கூறும் கவிதையை மூல நயம் சிதையாமல் மொழிபெயர்த்துள்ளார்.
கலைஞர் கருணாநிதி – கலை நாயகன் (Kalaignar Karunanidhi : Hero as Artist (Seethai pathippagam, 2013) எனும் ஆங்கில நூல் கலைஞரின் படைப்புகளை ஆராய்கிறது. இந்நூலின் உட்தலைப்புகள் 1) கவிதைகள் : இனப் பெருமிதவுணர்வுபற்றியவை, 2) கவிதைகள் : மாந்த வாழ்வின் தன்மையும் நோக்கும்பற்றியவை, 3) பழந்தமிழ்ச் செவ்விலக்கியங்களின் மீட்டுருவாக்கங்கள், 4) வரலாற்றுப்புதினங்கள், 5) சிறுகதைகள், 6) நாடகங்களும் திரைப்படங்களும், 7) கட்டுரைகளும் சொற்பொழிவுகளும், 8) கடிதங்கள், 9) தன்வரலாறுகள் ஆகியன.
பேராசிரியர் நன்னன் – ஆளுமை, புலமை, தொண்டு(2013)
பெரியாரியல் படைப்பாளர், தொலைக்காட்சி வாயிலாகத் தமிழைத்தவறின்றி எழுத வழிகாட்டிய தமிழறிஞர் முனைவர் மா.நன்னன் அவர்களின் தமிழ் ஆளுமை, தொண்டு முதலியவை இந்நூலில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
- நன்னன் என்னும் ஆளுமை, 2. புலவர் போற்றும் பேராசிரியர், 3.பகுத்தறிவுப் பாதையில் திருக்குறள், 4. அறிஞர் சுட்டும் தமிழ் நெஞ்சம், 5. பெரியாரைப் பேணி ஒழுகல், 6. எழுத்து அறிவித்த இறைவன் ஆகிய தலைப்புகளில் அறிஞர் நன்னனின் உரைநடைச்சிறப்பு, உரைச்சிறப்பு, தமிழில் கலந்து விட்ட மாசுகளை அகற்ற மேற்கொண்ட முயற்சி முதலியவற்றைத் திறம்படவிளக்கியுள்ளார். முடிவுரையில், இராபருட்டு பிரெளனிங்கு(Robert Browning) என்பார் எழுதிய இலக்கண வல்லுநர் ஒருவர் குறித்த பாடல் அறிஞர் நன்னனுக்கு அப்படியே பொருந்தவதைச் சுட்டிக் காட்டியிருப்பார். அப்பாடலின் தொடக்க வரிகளும் இறுதி வரிகளும் வருமாறு:
மரணம் அவர் கழுத்தை நெருக்கிப் பிடித்தபிடி
இறுகும்போதும் அவர் இலக்கணத்தை விடவில்லை.
.. .. .. எம் கடன் என்றும்
மூச்சுள்ளவரை மொழிப்பணிசெய்துகிடப்பதே!
தமிழைத் தமிழாகவே வளர்க்கப்பாடுபட்ட அறிஞர் நன்னனின் அருமை பெருமைகளை அருமையாக உரைக்கும் நூல் இது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 62/69)
Leave a Reply