(தோழர் தியாகு எழுதுகிறார் 247 : குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும் – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – பெரியகுளம்!

2023 ஆகத்து 5 காரிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் உயிரற்ற உடல்களாகத் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சாதிமீறிய காதலர்கள் மகாலட்சுமி – மாரிமுத்து… இருவரில் ஒருவரின் உடல் சடலக் கூறாய்வு முடித்து அவசரமாக எரியூட்டப்பட்டு விட்டது. அந்த எரிமேடையில் மகாலட்சிமியின் காதலோடும் உடலோடும் சேர்ந்து எத்தனை உண்மைகள் எரிந்து சாம்பலாயினவோ, யாருக்கும் தெரியாது.

மாரிமுத்துவின் உடலை அவர்களால் அப்படிச் செய்ய முடியவில்லை. அவருடைய பெற்றோர், அண்ணன், ஊர் மக்கள் மருத்துவ மனையில் திரண்டு விட்டனர். நம் தோழர் மதியவன் இரும்பொறையும், அம்பேத்துகர் பிறந்த நாள் போராட்டக் குழுவைச் சேர்ந்த மற்றத் தோழர்களும், அரசியல் சார்புகளுக்கப்பாலும் சாதி கருதாமலும் நியாயத்துக்காக நிற்கக் கூடிய நண்பர்களும் கூடி விட்டனர். அவர்கள் மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிலையெடுத்து நின்றனர்.

மாரிமுத்துவின் உடலை எடுத்துச் சென்று எரித்து விடுமாறு காவல்துறை அதிகாரிகள் கொடுத்த நெருக்குதல் கொஞ்ச நஞ்சமில்லை. வழக்கம் போல் காவல்துறைக்கு முட்டுக் கொடுக்கிற ஆட்களும் அயரவே இல்லை.

கொலை என்றாலும், தற்கொலைக்குத் தூண்டுதல் என்றாலும், சட்டப்படி சடலக் கூறாய்வுக்கு முன் நடக்கக் வேண்டிய மரண விசாரணை நடக்கவே இல்லை. இதனைப் பல முறைக் காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் சுட்டிக் காட்டிய பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை.

பட்டியல் சாதிகள் பட்டியல் பழங்குடிகள் வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் வழிவகைகளின் படி இந்த வழக்கைப் பதிவு செய்யக் கூட காவல் துறை மறுத்து அழிச்சாட்டியம் செய்து வருவது வலுத்த ஐயங்களைத் தோற்றுவிக்கிறது.

ஆனால் பெரியகுளம் காவல்துறை எவ்வித விசாரணையும் இல்லாமல் தற்கொலைதான் என்று முடிவுகட்டி மக்களையும் அவ்வாறே ஏற்கச்செய்ய முயன்று வருகிறது. சாதிவெறியுடன் தணிந்த(தலித்) மக்களை இழிவாகப் பேசுவதில் பேர்போன பெரியகுளம் காவல்நிலையப் பொறுப்பதிகாரி ஆய்வாளர் மீனாட்சி இவ்வழக்கிலும் சாதிய வன்மத்துடன் செயல்பட்டுள்ளார்.

நடந்தது கொலையாக இருக்கலாம் என்று மக்கள் ஐயுறுவதில் நியாயம் உண்டு. ஒருவேளை அது தற்கொலையாகவே இருந்தாலும் அந்தத் தற்கொலைக்கு என்ன காரணம்? யார் தூண்டுதல்? என்பதைப் புலனாய்வு வழியாகத்தான் முடிவு செய்ய முடியும். உயிரிழந்த இருவரில் ஒருவர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதையும், கொடுநிகழ்வுக்கு முன் நடந்த பூசல்கள், வழக்குகள் போன்றவற்றையும் கணக்கில் கொண்டாலே போதும், மாரிமுத்துவின் தாயார் மாலையம்மாள் கொடுத்த முறைப்பாட்டை ப.சா.(எசு.சி) ப.இ.( எசு.டி) வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்வதுதான் முதல் கட்ட நீதியாகும்.

இந்த முதல் கட்ட நீதிக்கான போராட்டத்தை வஞ்சகமாய் முறியடிக்க, காவல் துறையும் வருவாய்த் துறையும் மட்டுமல்ல, வெளிப்படையாகத் தெரியாத சில ஆற்றல்களும் வேலை செய்வதாக ஐயுறக் காரணம் உள்ளது. ஆனால் எல்லாத் தடைகளையும் மீறி பெரியகுளத்தில் தோழர் மதியவன் இரும்பொறையும், போராட்டக் குழுத் தோழர்களும் உறுதியாகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். மாரிமுத்துவின் தாய்தந்தையும் தமையனும் ஊர்மக்களும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் இவர்களுக்குப் பின்னால் மருத்துவமனையின் பிணவறையில் கிடந்த படி போராடிக் கொண்டிருக்கிறார் மாரிமுத்து. இந்தப் போராட்டத்தின் ஆகப்பெரிய வலுவே மாரிமுத்துவின் உயிரற்ற உடல்தான். இந்த உடலை மாரிமுத்துவின் குடும்பத்தார் அகற்றிக் கொண்டு போய் எரித்து விட்டால் உண்மையை அழித்து விட முடியும் என்று கொடியவர்கள் மனப்பால் குடிக்கின்றார்கள்.

உயிரற்ற உடலும் உண்மைக்கு உயிர்கொடுக்கப் போராடும் களம்தான் பெரியகுளம்! செத்தாலும், உடல் சிதைந்தாலும், மண்ணோடு மண்ணாகி மறைந்தாலும் நம் நினைவுகளில் என்றும் வாழ்வார் மாரிமுத்து!

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 277