(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 36/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

37/ 69

‘பக்தி இயக்கமும் தமிழ்க் கவிதை வளர்ச்சியும்'(2015) (தொடர்ச்சி)

ஐந்தாவது கட்டுரையாகப் ‘பக்தி இலக்கியமும் பன்னிரு திருமுறையும்’ அமைகிறது. பாகவத புராணத்தில் முதல் அத்தியாயம் நாற்பத்தெட்டாம் பாடலில் பத்தி இலக்கியம் தமிழ்நாட்டில் தோன்றி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

டி.எசு.எலியட்டு, இலக்கியங்களை நல்ல இலக்கியம் என்றும் மீ உயர் இலக்கியம் என்றும் பிரிக்கிறார்.தேவாரமும் திருவாசகமும் நாலாயிரத்திவ்வியப் பிரபந்தமும் சமயம், இசை, கவிதை ஆகிய மூன்றையும் இணைக்கும் அரியபெட்டகங்களாகத் திகழ்வதால், மீவுயர் இலக்கியங்களாகும். வேற்றுச் சமயத்தினரும் இறை மறுப்பாளர்களும் போற்றிப்புகழும் வகையில் திருமுறைகள் திகழ்கின்றன.

நாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தமிழகம் முழுவதும் சென்று சைவசமயத்தைப் பரப்பியதோடு தமிழையும் தமிழ் இசையையும் அன்பு நெறியையும்பரபப்பினர் என 6 ஆவது கட்டுரையான ‘பன்னிரு திருமுறையும் தமிழும்’ என்பதில் குறிப்பிடுகிறார். ஞானசம்பந்தர் தமிழைப் போற்றினார் என்பதை அவர் தமிழுக்குத் தந்த நூற்றுக்கணக்கான அடைமொழிகளாலும் தம்மைத் தமிழ் ஞானசம்பந்தன், நற்றமிழ் விரகன், தமிழ் விரகன், தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன் என்றெல்லாம் குறிப்பிடுவதாலும் அறியலாம். பத்தி இலக்கியங்கள் தமிழ்க்கவிதை வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பெரும் பங்களிப்பையும் விரிவாக நமக்கு விளக்குகிறார் பேரா.ப.ம.நா. சங்க இலக்கியப்பாடல்கள், சிலப்பதிகாரப் பாடல்களை அடிஒற்றித் திருமுறைப்பாடல்கள் அமைந்துள்ளமையைப் பாவகைகளைக் குறிப்பிட்டுச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். திருமுறைகள் இறைநெறிப்பாடல்களாய் அமைந்திருப்பினும் தமிழ்ப்பாநெறியில் திகழ்வதை நாம் இக்கட்டுரை மூலம் புரிந்து கொள்ளலாம்.

சங்க இலக்கியப் பாவகைகளுடன் திருமுறைப்பாக்களை ஒப்பிட்டவர் அடுத்த 7ஆவது கட்டுரையில் ‘சங்க இலக்கிய மரபும் பன்னிருதிருமுறையும்’ என்ற தலைப்பில் சில ஆய்வு முடிவுகளைத் தெரிவிக்கிறார். பாடாண்திணைக் கூறுகளைக் கையாண்டு மன்னனின் இடத்தில் இறைவனை வைத்துப் பாடத் தொடங்கின திருமுறைகள். கைக்கிளைத் திணையை இறைவன்பால் இறையன்பன் கொள்ளும் அன்பைப்பாட, நாயகநாயகி மரபோடு இணைத்துக் கொண்டன தேவாரமும் திருவாசகமும்.  சங்க இலக்கியங்களிலிருந்து சிற்றிலக்கிய வகைகள் சிலவற்றைப் பத்தி இயக்கம் புத்துருவாக்கம் செய்துகொண்டது.

அறிஞர் அருணாசலம் முதலானவர்களின் ஆய்வுரைகளையும் திருமுறையில் இடம் பெறும் பண்களையும் குறிப்பிட்டுத் தமிழிசையின் தொன்மையையும் தனித்தன்மையையும் வளர்ச்சியையும் சிறப்பையும் பேரா.ப.ம.நா. புலப்படுத்துகிறார்.

இன்றைய இசைக்கலை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றது என்றும் இசையறிவை ஆரியலரல்லாதவரிடமிருந்து ஆரியர் கடன்பெற்றதை மறைப்பதற்காகவே சாமவேதத்திலிருந்து இசை பிறந்தது என அவர்கள் கதை புனைந்தனர் என்றும்  அறிஞர் ஓ.கோசுவாமி, ‘இந்திய இசை வரலாறு’ என்னும் நூலில் அறிவுறுத்துகிறார்.

ஒன்பதாம் கட்டுரை சம்பந்தர் தேவாரத்தில் தொன்மம் குறித்துப்பேசுகிறது. “தொன்மங்களின் ஆழ்ந்த பொருளைத் துலக்கி அவற்றைச் சிறப்புறப் பயன்படுத்தல் தமிழ் இலக்கிய மரபிற்குப் புதியதன்று. சங்கப் பாடல்களில் சிவன், திருமால், திருமகள், முருகன், இந்திரன், இராமன், கண்ணன், பலராமன் ஆகியோர் சுட்டப் பெறுகின்றனர். .. சில பாடல்களில், தொன்ம நிகழ்ச்சிகள் பொருள் பொதிந்த உவமைகளாகிக் கவிதைக்கு அழகூட்டுகின்றன.” சம்பந்தர் தேவாரத்தில் இடம்பெற்ற தொன்மங்களை நன்கு விளக்கியுள்ளார். சம்பந்தர் கையாளும் உத்திகள் யாவும் பத்தி இயக்கத்தின் வெற்றியில் தேவாரத்திற்கான பங்கிற்கு வழி காட்டியாய் அமைந்தன என்பதுடன் இக்கட்டுரையை முடிகிறது. 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 38/ 69)