(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 52 / 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

53 / 69

 

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

 

இராமானுசரும் தமிழும் குறித்துப் பதின்மூன்றாவது கட்டுரையில் கூறுகிறார். ஆறு உட்பிரிவுகளை உடையது இக்கட்டுரை.

இராமானுசர் சமற்கிருத மொழியில் எழுதிய ஒன்பது நூல்கள் குறித்த விளக்கத்தை முதலில் தந்துள்ளார். அவர் தமிழில் ஏதும் எழுதவில்லையாயினும் அவர் கையாண்ட சமற்கிருத மொழியில் தமிழின் தாக்கம் உள்ளது; அவருடைய கோட்பாட்டின் உருவாக்கத்தில் ஆழ்வார் பாடல்களின் பங்களிப்பு உள்ளது; அவற்றுள் சங்க இலக்கியச் செல்வாக்கு உள்ளது; அவருக்குப் பின் வந்த வைணவ ஆச்சாரியார்கள் தமிழுக்குக் கடன் பட்டுள்ளனர்;  இவற்றை விளக்கித் தமிழும் சமற்கிருதமும் அறிந்த அறிஞர்கள் பல கட்டுரைகளை அளித்துள்ளனர் என்கிறார்.

சங்கரர், சாயணர், இராமானுசர் முதலிய தென்னிந்திய அறிஞர்கள் கையாளும் சமற்கிருதம் வடஇந்திய சமற்கிருத அறிஞர்களின் சமற்கிருத நடையிலிருந்து மாறுபட்டது. இதற்குக் காரணம் தமிழின் தாக்கமே என ஏ.சி.பருனல்(A.C.Burnell) தம் ஐந்திறக் கருத்தாளரின் இலக்கணவாதிகள்(The Aindra School of Sanskrit Grammarians,1875) என்னும் சிறு ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளதை மேற்கோளாக அளித்துள்ளார்.

நீண்ட தொடர்களில் ‘என்று’ என்னும் சொல்லைப் பயன்படுத்தித் தமிழில் எழுதுவதுபோல் ‘இதி’என்னும் சொல்லைப் பயன்படுத்தி மிக நீண்ட முற்றுத் தொடர்களை இச்சமய ஆச்சாரியார்கள் எழுதியுள்ளனர். இது வடமொழி மரபிலிருந்து மாறுபட்டது. இராமானுசரின் வசிட்டாத்துவைதக் கோட்பாட்டை உருவாக்க அவர் ஆழ்வார் பாடல்களுக்குக்கடன்பட்டிருக்கிறார் என எஃப்.டபுள்யூ.எல்லீசர்(F.W.Ellis) தமது திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளதை விளக்கச்சான்றுகளுடன் அளிக்கிறார். இராமானுசர் தம் கீதாபாசியத்தில் கண்ணனின் பண்புகளைக்குறிக்கப் பயன்படுத்தும் அடைமொழிகள் கீதையில் இல்லாதவை. பரிபாடல், புறநானூறு முதலிய சங்க இலக்கியச் செல்வாக்கால் குறிக்கப்பெற்றவை.

இராமானுசர் இறைவனுக்குச் செய்யும் பணிகளைத் தொகுத்துச்சொல்வதற்குத் திருநாவுக்கரசர், ஆண்டாள் ஆகியோர் பாடல்களே மூலங்களாகும். இவ்வாறு தக்க சான்றுப்பாடல்களுடன் பேரா.ப.ம.நா. சுவைபட விளக்குகிறார். திருவரங்கத்தமுதனால் தமது இராமானுச நூற்றந்தாதியில் இராமானுசர் முத்தமிழிலும் ஈடுபாடுடையவர் எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

வெங்கடாச்சாரி எழுதிய ‘தமிழ்-புலப்பாட்டின் ஊர்தி’(Tamil as a Vehicle of Revelation) என்னும் ஆங்கிலக் கட்டுரை வைணவக் கோட்பாட்டின் வளர்ச்சியிலும் பரப்புதலிலும் ஆழ்வார்களின் பாடல்கள் செய்த பங்களிப்பைத் தொட்டுக் காட்டுகிறது.

நாதமுனியின் பேரனாகிய யமுனா அவரது தோத்திர இரத்தினாவில் வியாசரோடும் பரசுராமரோடும் இணைந்து நம்மாழ்வாரின் பெருமையைப் பேசுகிறார். இராமானுசர் தமிழில் எழுதவில்லையாயினும் தமது சொற்பொழிவுகளில் பெரிதும் தமிழைப் பயன்படுத்தியிருந்தார் என வெங்கடாச்சாரி கூறுகிறார்.

பெரியவாச்சான் (பிள்ளை)சமற்கிருதத்தினும் உயர்ந்த இடத்தில் தமிழை வைத்தார். திருமங்கையாழ்வாரின் பாடல் ஒன்றில்(திருமொழி 7.8.7) ‘செந்தமிழ்’ எனக் குறிக்கப்பெறுகிறது.அதற்குப் பெரியவாச்சான் (பிள்ளை), ” செந்தமிழ் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் அஃது எப்பொருளையும் ஐயத்திற்கு இடமற்ற சொற்களால் விளக்குவதாகும்.”எனப் புலப்படுத்துகிறார்.. பெரிய திருமொழியிலே வரும் இன்னொரு பாடல்,” செந்தமிழ் பாடுவார் வணங்கும் தேவர்” என இறைவனைக் குறிக்கிறது. இதற்கு”முதல் மூன்று ஆழ்வார்களைப்போன்றோரின் தூய, கலப்பில்லாத தமிழில் வணங்கப் பெறும் கடவுள்” என்று பொருள்படுமென்றும்  ” அக்கடவுளின் இறைமைத் தன்மை தூய தமிழில் இத்தகைய பெருமைக்குரிய ஆழ்வார்களால் பாடப்படுவதால் மேலும் உயர்கிறதென்றும்” பெரியவாச்சான் (பிள்ளை) விதந்து பேசியுள்ளார். திருமங்கையாழ்வார் இயற்றிய திருநெடுந்தாண்டகத்தில், “செந்நிறத் தமிழோசை வடசொல்லாகி” என்னும் பாடலடி வருகிறது. இதற்குச் சிலர் தமிழ் வடமொழியில் இருந்து வந்தது என்றும் அதனை முதலில் சொல்லியிருக்கக்கூடா தென்றும் தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.பெரியவாச்சான்(பிள்ளை) அதற்கு, அவர்களின் கூற்று அறிவற்றதென்றும் தமிழ் வடமொழியைச்சார்ந்திராது தனித்து இயங்க வல்ல மொழி என்றும் அதன் சொற்கள் பொருளைத் தெளிவாகவும் ஐயத்திற்கு இடமின்றியும் குறிக்கவல்லவை என்றும் விளக்கவுரை எழுதியுள்ளார்.

தமிழின் உட்பகைவர்களும் புறப்பகைவர்களும் சமற்கிருதத்திற்கு ஆதரவாகவும் தமிழுக்கு எதிராகவும் இடைக்காலத்திலேயே பேசி வந்துள்ளனர். 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியவாச்சான்(பிள்ளை) தமிழின் தொன்மைக்கு ஆதரவாக இருந்ததுபோல் 12 ஆம் நூற்றாண்டில் பிறந்த நஞ்சீயாரும் தமிழ்ப்பகைவருக்கு எதிராக இருந்ததைப்பேரா.ப.ம.நா. விளக்கியுள்ளார்.

“தமிழ் தூய்மையற்ற மொழி; கீழ்த்தட்டு மக்களும் தமிழில் எழுதப் பெறும் சமய இலக்கியங்களைப் படிப்பதால் அவற்றின் புனிதத் தன்மை கெடும்; தமிழ் வட்டார மொழி என்பதால் சமற்கிருதம் மூலம் இந்தியா முழுவதும் புரிந்துகொள்ளப்பட முடியாதது” என்பன போன்று பலவாறாகத் தமிழ்ப்பகைவர்கள் கூறிவந்தனர். அவர்களுக்கு நஞ்சீயார் கடுமையாக மறுப்படி கொடுத்துள்ளார்.

“தமிழ் விலக்கப்படவேண்டிய தூய்மையற்ற மொழியென்பது முட்டாள்தனமான முடிவாகும்.”

கீழ்த்தட்டு மக்கள் படிப்பதால் சமயநூல்கள் புனிதத்தன்மை இழப்பதில்லை. அதற்கு மாறாக உலக நன்மைக்கு இத்தகைய சமயப்பரப்புரையே நன்மை செய்யும்.

இந்தியாவின் பிற பகுதிகள் யாவற்றிலும் உள்ள உண்மையான அறிஞர்கள் யாவரும் தமிழ் அறிந்தவர்கள். தமிழறியாத சில அறிஞர்களும் அதனைப் புரிந்து கொள்ளும் பேறு தமக்குக் கிடைக்கவில்லை யென்று வருந்துகிறார்கள்.

பெளத்தர் சமணர் போன்ற  வைதிகர் அல்லாதாரும் தங்களது சமயப்பரப்புரைக்காகத் தமிழைப் பயன்படுத்திக்கொள்வது தமிழின் பெருஞ்சிறப்பை உணர்த்தும்.

பின் நூற்றாண்டுகளில் வந்த வைணவ ஆச்சாரியார்களும் தமிழ் மொழியின் சிறப்பை வற்புறுத்தி வந்தனர் என விளக்கியுள்ளார்.

தொண்டரடிப் பொடியாழ்வார் தமது திருமாலையி்ல்

“குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி

வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி”

இறைவன் வீற்றிருப்பதாக  ஒரு பாடலில் குறிப்பிடுவார்.

திருவரங்கப் பெருமான் பின்புறத்தை வடதிசைக்குக் காட்டியிருப்பதன் காரணம் என்ன?

வடக்கிலுள்ள மக்கள் தமிழ் அறியாதவர்களாக இருப்பதால் பின்புறம் காட்டி நிற்பதாகப்பெரியவாச்சான்(பிள்ளை) கூறுகிறார். அஃதாவது தமிழ் அறியாதவர்கள்மீது தம் அருட்பார்வை படுவதற்கு இறைவனுக்கு விருப்பம் இல்லை என்கிறார்.தமிழை அறியாதவர்களை விரும்பாத இறைவனுக்குத்தான் தமிழல்லாத பிற மொழியில் பூசை நடத்துகின்றனர் இன்றைய மக்கள். அப்படியானால் அவர்களுக்கு எங்ஙனம் திருவருள் கிட்டும்?

வேதாந்த தேசிகர் தமது திராவிட உபநிடத தாத்துபரியஇரத்தினாவளியில் தமிழின் பெருமையை நிலைநாட்டியுள்ளார். இரத்தினாவளியைச்சமற்கிருதத்தில் எழுதிய காரணம் திருவாய்மொழியை மூலத்தில் படித்துத் துய்க்க இயலாத தமிழறியாதவர்கள் அறிய வேண்டும் என்பதற்காககத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பத்தி இலக்கியம் தமிழ்நாட்டில் தொடங்கி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும்பரவியது என்பதைப் பாகவத புராணத்தில் 48ஆம் பாடலில் குறித்துள்ளதை எடுத்துரைக்கிறார்.

நம்மாழ்வார் இனிய தமிழ்ப்பாடல்களைப் பெற்றுக் கொண்டான் என,

“என்னைத்தன்னாக்கி என்னால் தன்னை

இன்தமிழ் பாடிய ஈசனை”

முதலான பாடல்கள் மூலம் நிறுவுகிறார்.

நம்மாழ்வார் இறைவனையே தமிழாகக் காண்கிறார் எனத் தெளிவுபடக்கூறுவதை ஏ.கே.இராமானுசன் வரிகளில் விளக்குகிறார்.

நம்மாழ்வார் சங்க அகப்பாடல்உத்திகளைக் கையாண்டே திருவாய்மொழியில் மூன்றிலொரு பாடல்களைத் தந்துள்ளதாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார். இராமானுசரைக் கூற வந்தவர் அவருக்கு முன்பும் அவர் காலத்திலும் இருந்தவர்களின் தமிழ்உயர்வுக்கருத்துகளையும் நமக்கு அளித்துள்ளார்.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்,தமது ஆச்சாரிய இருதயத்தில், திருவாய்மொழியின் உதவி கொண்டு இராமானுசர் பிரம்ம சூத்திரங்களை விளக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். இராமானுசர் தமிழ்மேல் வைத்திருந்த பற்றை டி.சி.ஏ.இராமானுசம், தம்முடைய ‘பாடல்களின் வழிச் செல்லுதல்’ (Saying it through verses) என்னும் ஆங்கிலக்கட்டுரையில் சான்றுகளே்ாடு விளக்குவதையும் எடுத்துரைக்கிறார். ஆழ்வார்களின் பாடல்கள் இராமானுசரின் உள்ளத்தில் உறைந்து அதனால் தம் உரைகளில் அவற்றின் கருத்துகளை எதிரொலித்துள்ளார் எனப் பல பாடல்கள் மூலம் இக்கட்டுரையில் விளக்குகிறார்.

இவ்வாறு எழுத்தில் தம்  கோட்பாடுகளை விளக்க சமற்கிருதத்தைக் கையாண்ட இராமானுசர், தம் கருத்துகளிலும் பேச்சிலும் அன்றாட வாழ்விலும் தமிழ் ஆழ்வார் பாடல்களையே பயன்படுத்தி உள்ளார் என மெய்ப்பித்துள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 54/69 )