(முன்னிதழ்த்தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 23 – நிறைவு

திறனாய்வு (தொடர்ச்சி)

இலக்கியத்தின் சமுதாய உள்ளடக்கம் பற்றிய கோட்பாடுகளும் அணுகு முறைகளும் இங்கு வளர்ச்சியடைந்தது போல் இலக்கியத்தின் உருவம் பற்றிய விமர்சனக் கோட்பாடுகளும் ஈழத்தில் இக்காலப் பகுதியில் வளர்ச்சியடைந்தன. இலக்கிய வடிவங்கள், இலக்கியப் பாகுபாடு, இலக்கிய ரசனை என்பவை பற்றிய சிந்தனைகளை இவை உள்ளடக்கின. இவ்வகையில் கவிதைக் கோட்பாடுகளை வகுத்துக் கூறும் முருகையனின் ஒரு சில விதி செய்வோம், முருகையனும், கைலாசபதியும் எழுதிய கவிதை நயம், ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன. கைலாசபதியின் இலக்கியமும் தினாய்வும் என்னும் நூலும் இப்பிாிவில் அடங்கக்கூடியதே. புனைகதை வடிவம் பற்றிய சிவத்தம்பியின் புனைகதையும் கதைப்பின்னலும் என்னும் கட்டுரையும் கவிதை நாடகம் பற்றி எம்.ஏ. நுஃமான், மு. பொன்னம்பலம் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும், புதுக் கவிதையின் அமைப்பு பற்றி சிறிபதி, சபா செயராசா ஆகியோர் எழுதிய சில கட்டுரைகளும் இலக்கிய வடிவங்கள் பற்றிய குறிப்பிடத்தக்க கட்டுரைகளாகும்

இலக்கிய விமர்சனம், இலக்கியக் கொள்கை, இலக்கிய வரலாறு ஆகியவை தனித்தனித் துறைகள் எனினும் அவை முற்றிலும் வேறுபட்டவை அல்ல. ஒன்றை ஒன்று சார்ந்தும் உள்ளடக்கியும் செல்வன. அவ்வகையில் விமர்சன பூர்வமான இலக்கிய வரலாற்று நூல்கள் சிலவும் இங்கு தோன்றின. இவ்வகையில் பேராசிாியர் வி. செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாறு பலருக்கு ஆதர்சமாகவும் முன்னோடியாகவும் அமைந்தது. கலாநிதி ஆ. வேலுப்பிள்ளையின் தமிழ் இலக்கியத்தின் காலமும் இலக்கியத்தின் ஈழத்தறிஞர் பெரு முயற்சிகள், கனக செந்திநாதனின் ஈழத்து இலக்கிய வளர்ச்சி, சொக்கனின் ஈழத்து நாடக இலக்கிய வளர்ச்சி, சுப்பிரமணிய ஐயாின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் முதலிய நூல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.

தனிப்பட்ட படைப்புகள் படைப்பாளிகள் பற்றி விமர்சன பூர்வமான மதிப்பீடுகள் இங்கு பெருமளவு செய்யப்படவில்லை எனினும் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் நடைபெற்றுள்ளன. கைலாசபதியின் இரு மகாகவிகள், சிவத்தம்பியின் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், தில்லைநாதனின் வள்ளுவர் முதல் பாரதிதாசன் வரை, செம்பியன் செல்வனின் ஈழத்துத் தமிழ் சிறுகதை மணிகள் ஆகிய நூல்கள் இவ்வகையில் குறிப்பிடத் தக்கன. இவற்றுள் செம்பியன் செல்வனின் நூலே முற்றிலும் ஈழத்துப் படைப்பாளிகள் பற்றியது. இவ்வகையில் மகாகவி பற்றி சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ. நுஃமான் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பிடத் தக்கன. தனிப்படைப்பு என்ற வகையில் மகாகவியின் சாதாரண மனிதனது சாித்திரம் பற்றி சண்முகம் சிவலிங்கம் எழுதிய விாிவான விமர்சனம் ஈழத்து விமர்சன முயற்சிகளுள் மிக முக்கியமான கவனத்துக்குாிய ஒன்றாகும். இவைதவிர ஈழத்தில், இலக்கிய விமர்சனத்துறையில் ஆ. சிவநேசச்செல்வன், கலா பரமேசுவரன், சித்திரலேகா, மனோன்மணி சண்முகதாகு, மு. நித்தியானந்தன், செ. யோகராசா, துரை மனோகரன், க.சண்முகலிங்கம், எஸ்.எம்.சே. பைசுதீன், கே.எசு. சிவகுமாரன், எம்.எச்.எம். சம்சு, சி. மௌனகுரு முதலியோரும் குறிப்பிடத்தக்க முயற்சிகள் செய்துள்ளனர்.

சமீப காலமாக ஈழத்து இலக்கிய விமர்சன முயற்சிகளில் மொழியில் அறிவின் செல்வாக்கையும் காண முடிகின்றது, இலக்கியம் மொழியினால் ஆகும் ஒரு கலை என்ற வகையில் மொழியில் அறிவு இலக்கிய விமர்சனத்தில் நன்கு பயன்பட முடியும். மேலைத் தேயங்களில் இத்துறை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் அண்மையில் வௌிவந்த முத்துச்சண்முகனின் இலக்கியக் கோட்பாடு என்ற நூலில் மொழியில் அறிவு நன்கு பயன்பட்டுள்ளதைக் காணலாம். ஈழத்தில் கலாநிதி சண்முகதாசு, எம்.ஏ.நுஃமான் ஆகியோர் இத்துறையில் சிறு முயற்சிகள் செய்துள்ளனர். சண்முகதாசின் ஆக்க இலக்கியமும் மொழியியலும், கவிஞரும் மொழியும், எம்.ஏ. நுஃமானின் ஆக்க இலக்கியமும் நடையியலும், ஈழத்து நாவல்களின் மொழி முதலிய கட்டுரைகள் இத்துறையில் ஆரம்ப முயற்சிகளாகக் கருதத்தக்கன.

பின்னிணைப்பு

ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு உதவும் நூல்களும் சிறப்பிதழ்களும்

1. நூல்கள்

 

கணபதிப்பிள்ளை, சி. இலக்கிய வழி, சுன்னாகம், 1964
கணபதிப்பிள்ளை மு., ஈழநாட்டின் தமிழ்ச்சுடர்மணிகள். சென்னை, 1967
கணேசையர், ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சாிதம், யாழ்ப்பாணம், 1939
கந்தையா வி.சீ. மட்டக்களப்புத் தமிழகம், யாழ்ப்பாணம், 1964
குமாரசாமிப்புலவர், தமிழ்ப்புலவர் சாித்திரம், யாழ்ப்பாணம், 1916
சதாசிவம் ஆ., ஈழத்துத் தமிழ்க்கவிதைக் களஞ்சியம், கொழும்பு 1964
சதாசிவம்பிள்ளை ஆர்ணோல்டு, பாவலர் சாித்திர தீபகம், யாழ்ப்பாணம், 1886
சலீம் ஏ. ஆர். எம்., ஈழத்து முசுலீம் புலவர்கள், கொழும்பு, 1962
சிவத்தம்பி, கா, தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், சென்னை 1968,
சிவத்தம்பி, கா. ஈழத்தில் தமிழ் இலக்கியம், சென்னை, 1978.
சுப்பிரமணியம், நா., ஈழத்துத் தமிழ் நாவல்கள், நூல் விபரப்பட்டியல், யாழ்ப்பாணம், 1977.
சுப்பிரமணியம், நா., ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம், யாழ்ப்பாணம், 1978.
செந்திநாதன் கனக., ஈழத்துத் தமிழ்நாவல் வளர்ச்சி, சென்னை, 1967.
செம்பியன் செல்வன், ஈழத்துச் சிறுகதை மணிகள், யாழ்ப்பாணம், 1973.
சொக்கலிங்கம் க., ஈழத்துத் தமிழ்நாடக இலக்கியம்,யாழ்ப்பாணம், 1978.
சொர்ணலிங்கம், ஈழத்தில் நாடகமும் நானும், யாழ்ப்பாணம், 1968.
நடராசா, எம்.எக்சு.சி. ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு, கொழும்பு, 1972.
பூலோகசிங்கம், பொ., தமிழிலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெருமுயற்சிகள், கொழும்பு, 1971.
Sivakumaran K.S. Tamil writings in Sri Lanka, Colombo, 1974
Cassiee Chetty Symon, Tamil Plutarch, 1859.

  1. சிறப்பிதழ்கள்

     

இளந்தென்றல், தமிழ்ச்சங்கம், கொழும்பு வளாகம் 1971-72
தமிழ் சாகித்திய விழா மலர், இலங்கைக் கலாசாரப் பேரவை வௌியீடு, கல்முனை 1975.
தமிழ் இலக்கிய விழா மலர், இலங்கைக் கலாசாரப் பேரவை, யாழ்ப்பாணம், 1972
தினகரன் நாடக விழா மலர், கொழும்பு, 1969.
நாவலர் மாநாட்டு விழா மலர், ஆறுமுக நாவலர் சபை, யாழ்ப்பாணம், 1969.
பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழா மலர், நூற்றாண்டு விழாச்சபை வௌியீடு, யாழ்ப்பாணம்,1972.
புதுமை இலக்கியம், தேசிய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டு மலர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கொழும்பு, 1975.
மறுமலர்ச்சிக் காலம், இலக்கியச் சிறப்பிதழ். கலைப் பெருமன்றம், தெல்லிப்பளை, 1973.

** இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் ** முற்றும்.