இலங்கைத் தமிழ்க் கவிதையில் தோன்றிய புதிய அலை -சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி)
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 6
அத்தியாயம் 3. கவிதை தொடர்ச்சி
1960 ஆம் ஆண்டுகள் இலங்கைத் தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரை பிறிதொரு வகையில் முதன்மையான காலப் பிரிவாகும், சமூக விழிப்புணர்வும் முற்போக்குச் சிந்தனையும் தமிழ்க்கவிதையின் தலைமைப் போக்காக மாறிய காலப்பிரிவும் இதுவே. 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 1956 ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து புதினம், சிறுகதை, திறனாய்வுத்துறைகளில் முற்போக்குச் சிந்தனை முதன்மை இடம் பெறத் தொடங்கியது. ஆனால் கவிதையைப் பொறுத்தவரை 60 ஆம் ஆண்டுகள், அதிலும் குறிப்பாக 1965 ஆம் ஆண்டுக்குப் பின்னரே முற்போக்குச் சிந்தனை முதன்மைபெறத் தொடங்கியது. எல்லாரும் இல்லை எனினும் ஒரு கணிசமான தொகைக் கவிஞர்கள் முற்போக்குச் சிந்தனையால் பாதிக்கப்பட்டனர். இவர்களுள் பலர் அரசியல் இயக்கங்களிலும் நேரடியாக ஈடுபட்டனர்.
பசுபதி, சுபத்திரன், புதுவை இரத்தினதுரை போன்றோர் நேரடியான பிரச்சாரப் பாங்கான அரசியல் கவிதைகள் எழுதினர். எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைச் சித்திரிப்பதன் ஊடாக கலாபூர்வமாக அரசியல் உணர்வை வௌிப்படுத்த முனைந்தனர். மௌனகுரு, ஈழவாணன், இ. சிவானந்தன், மருதூர்க்கனி, பண்ணாமத்துக்கவிராயர், கலைவாதி கலீல் போன்றோரும் தம் கவிதைகளில் முற்போக்குச் சிந்தனைகளை எதிரொலித்தனர். மேற்காட்டியவர்கள் எல்லாரும் ஏதோ ஒருவகையில் முற்போக்கு அரசியல் சித்தாந்தங்களுடன் உறவு உடையவர்களாவர்.
இக்காலப் பிரிவில் முற்போக்குச் சித்தாந்தங்களுடன் தம்மை இனம் காட்டிக்கொள்ளாத சீர்திருத்தவாதப் போக்குடைய அல்லது ஆன்மீக நோக்குடைய பல கவிஞர்களும் உள்ளனர். 60ஆம் ஆண்டுகளின் கவிதை முயற்சியில் இவர்களின் பங்களிப்பும் கணிசமானதாகும். சீவா.சீவரத்தினம், வி.கந்தவனம், காரை சுந்தரம்பிள்ளை, பாண்டியூரன், மு.சடாட்சரன், பசீல் காரியப்பர், ஏ.இக்பால், அன்பு முகையதீன், சா.வெ. பஞ்சாட்சரம், பா. சத்தியசீலன், மு.பொன்னம்பலம், குமாரசாமி போன்றோர் இப்போக்குகளின் குறிப்பிடத் தகுந்த பிரதிநிதிகளாவர். இவர்களுள் சிலரின் பிற்காலக்கவிதைகளிலே முற்போக்குச் சிந்தனையின் தாக்கத்தையும் காணலாம். இவர்களுள் சிலர் 60க்கு முன்னரே கவிதை உலகில் பிரவேசித்தவர்கள் எனினும் 60 ஆம் ஆண்டின் பின்னரே முதிர்ச்சியும் பிரபலமும் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்காலப் பகுதியில் எழுதத் தொடங்கிய கவிஞர்கள் சிலரின் கவிதை நூல்கள் சில வௌிவந்துள்ளன.பசுபதியின் ‘பசுபதி கவிதைகள்’, சுபத்திரனின் ‘இரத்தக்கடன்’, இரத்தினதுரையின் ‘காலம் சிவக்கிறது’, ‘ஒரு தோழனின் காதல் கடிதம்’, எம்.ஏ. நுஃமானின் ‘தாத்தாமாரும் பேரர்களும்’, ஈழவாணனின் ‘அக்கினிப்பூக்கள்’, இ. சிவானந்தனின் ‘கண்டறியாதது’, சீவா சீவரத்தினத்தின் ‘வாழும் கவிதை’, வி. கந்தவனத்தின் ‘ஏனிந்தப் பெருமூச்சு’, ‘இலக்கிய உலகம்’, ‘கவியரங்கில் கந்தவனம்’, காரை சுந்தரம்பிள்ளையின் ‘தேனாறு’, ‘சங்கிலியம்’, சா.வே. பஞ்சாட்சரத்தின் ‘எழிலி, பா.சத்தியசீலனின் ‘பா’, மு.பொன்னம்பலத்தின் யுஅது’. அன்புமுகையதீனின் ‘நபிகள் வாழ்வில் நடந்த கதை’ ஆகியன 60, 70 களில் வௌிவந்தன.
1960 ஆம் ஆண்டுகளில் ஈழத்துக் கவிதைகளின் உருவ அமைப்பில் ஏற்பட்ட இன்றியமையா மாற்றம் பற்றியும் இங்கு குறிப்பிடவேண்டும்.
60 ஆம் ஆண்டுகள் வரை யாப்போசையும், சந்தலயமும் கவிதையின் முதன்மைக் கூறுகளாகக் கருதப்பட்டு வந்தன. ‘யாப்புக்குள் இருந்து யாழ்மீட்டுபவள்’ என மகாகவி ஒரு கவிதை எழுதினார். ஓசைநயம் மிக்க பல்வேறு வகையான யாப்பு வடிவங்களிலும், சந்த விகற்பங்களிலும், ஈழத்துக் கவிஞர்கள் அக்கறை காட்டினார். ஆனால் 60 ஆம் ஆண்டுகளில் இறுக்கமான யாப்போசை விருப்பு தளர்ச்சியடைந்தது. பேச்சோசைப் பாங்கான கவிதைகள் பெரிதும் எழுதப்பட்டன. அதற்கேற்ப செய்யுளின் அமைப்பு முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அன்றாட வழக்குச் சொற்கள் இயல்பான சொற் சேர்க்கை, சிறு வாக்கிய அமைப்பு என்பன கையாளப்பட்டன. செய்யுளின் அடி அமைப்புக்கு ஏற்ப அன்றி, பொருள் அமைப்புக்கு ஏற்ப சீர்பிரித்து வரிகள் அமைக்கப்பட்டன. ஓசை நிறுத்தத்துக்காக நிறுத்தக் குறிகளும் இடைவௌி (Space) களும் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு செய்யுளின் யாப்போசை குறைக்கப்பட்டு பொருள் புலப்பாட்டுக்கு ஏற்ப பேச்சோசை நிலை நிறுத்தப்பட்டது. ஒரு செய்யுளுக்குரிய எதுகைமோனை, சீர்தளைக் கட்டுப்பாடுகளை இழக்காமலேயே பேச்சோசையின் சகலப் பண்புகளையும் ஈழத்துக்கவிதை பெற்றது.
மரபு வகையிலான எல்லாச் செய்யுள் உருவங்களிலும் குறிப்பாக வெண்பா, கட்டளைக்கலிப்பா, கட்டளைக் கலித்துறை போன்ற வரையறுப்புகள் மிகுந்த வடிவங்களிலும் கூட ஈழத்து நவீனக் கவிஞர்கள் பேச்சு ஓசைப் பண்பைச் செயற்படுத்தி இருக்கின்றார்கள். மகாகவி, முருகையன், நீலாவணன், எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோரே இதில் முக்கிய பங்களிப்புக்களைச் செய்துள்ளனர் எனலாம். முருகையனின் ‘பேச்சோசையும் பாட்டோசையும்’ என்ற கட்டுரையும் எம்.ஏ.நுஃமானின் ‘பேச்சுமொழியும் கவிதையும்’ ‘மஃகாகவியும் வழக்குத் தமிழும்’ என்ற கட்டுரைகளும் ஈழத்து நவீன கவிதையின் இப்பண்பை எடுத்துக் காட்டுவனவாய் அமைந்தன. புதிய உள்ளடக்கத்தைக் கொண்ட புதிய கவிதைத் தேவைகளுக்கு ஏற்ப மரபுவழிச் செய்யுள் நவீனமயமாக்கப் பட்டதன் விளைவே இப்பேச்சோசைப்பண்பு எனலாம். இது தமிழகத்துக் கவிதையில் காணப்படாத ஒ பண்பஓர் அம்சம் ஆகும்.
1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைத் தமிழ்க் கவிதையில் ஒரு புதிய அலை தோன்றியது. இக்காலப் பகுதியில் ஏற்பட்ட அரசியல் இலக்கிய விழிப்புணர்வும், தென் இந்தியப் புதுக்கவிதைகளின் செல்வாக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை கவிதை உலகுள் இழுத்துவிட்டன. புதிய சமுதாய மாற்றத்துக்காகக் குரல் கொடுக்கும் புரட்சிகரச் சிந்தனை உடையோரே இவர்களுள் அதிகமாகக் காணப்பட்டனர். இவர்கள் யாவரும் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வௌியிடுவதற்குப் புதுக்கவிதை ஒரு இலகுவான சாதனம் எனக் கண்டனர். 1970க்கு முன்பும் ஈழத்துக் கவிதை உலகில் புதுக்கவிதை அல்லது வசன கவிதைப் போக்கு இருந்தது. இன்று தென்னிந்திய இலக்கியத்துடன் தன்னை முற்றிலும் இணைத்துக்கொண்ட புதுக்கவிதையாளர் தருமு சிவராமு ஈழத்தவரே. 60 க்களில் மு. பொன்னம்பலம், கே.எசு. சிவகுமாரன், தா. இராமலிங்கம் முதலியோரும் புதுக்கவிதைகள் எழுதினர். தா. இராமலிங்கம் முதன்மை கவனத்துக்குரிய தனித்துவமான புதுக்கவிதைக்காரராவர். இவரது புதுமெய்க்கவிதைகள், காணிக்கை ஆகிய இரு நல்ல புதுக்கவிதைத் தொகுதிகள் வௌிவந்தன. எனினும் 70க்கு முன்னர் இலங்கையில் புதுக்கவிதை சிறுபான்மையினருக்கு உரியதாகவும் இலக்கிய அங்கீகாரம் பெறாததாகவுமே இருந்தது. ஆனல் 70க்குப் பின்னர் ஈழத்துக்கவிதை பெரும்பாலும் புதுக்கவிதையாகவே மாறிவிட்டது. எல்லா சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் புதுக்கவிதைக்கு இடம் கொடுக்கின்றன. ஏராளமான புதுக்கவிதை வெளியீடுகளும் வௌிவந்துள்ளன. முற்போக்கான கருத்துகளே இன்றைய புதுக் கவிதையின் பலம் என்று சொல்ல வேண்டும். கவித்துவமும் கலைப்பெறுமானமும் உடைய படைப்புக்கள் இவற்றுள்மிகக் சொற்பமாகவே காணப்படுகின்றன. பெரும்பாலான கவிதைகள் துணுக்குகளாகவும், சிறு சிறு கூற்றுக்களாகவுமே உள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால் பெரும்பாலான தமிழ்நாட்டுப் புதுக்கவிதைகளில் காணப்படுவது போன்ற ஓர் இலக்கிய முதிர்ச்சியின்மை பெரும்பாலான ஈழத்துப் புதுக்கவிதைகளின் பொதுப் பண்பாகவும் உள்ளது எனலாம். புதுக்கவிதை உலகில் சில தனி ஆளுமைகள் வளர்ச்சியடையும் வரை நிலைமை இவ்வாறே இருக்கக்கூடும். இத்தகைய தனி ஆளுமையின் வளர்ச்சிக்கான அறிகுறிகளும் சமீபகாலத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. இவ்வகையில் சொந்த அனுபவ வௌிப்பாட்டுக்கு முதன்மை கொடுக்கும் அ. இயேசுராசா, சமூக அரசியல் உணர்வுகளுக்கு முதன்மை கொடுக்கும் வ.ஐ.ச. செயபாலன், சிவசேகரம் ஆகியோர் கலை உணர்வுடன் எழுதும் குறிப்பிடத் தகுந்த புதுக்கவிதையாளர்கள் ஆவர்.
மு. கனகராசனின் ‘முட்கள்’, அன்பு சவகர்சாவின் ‘காவிகளும் ஓட்டுண்ணிகளும்’, திக்வல்லைக்காமலின் ‘எலிக்கூடு’, மேமன் கவியின் ‘யுகராகங்கள்’, சௌமினி, சிவம் ஆகியோரின் ‘கனவுப்பூக்கள்’, பேனா மனோகரனின் ‘சுமைகள்’, மூதூர் முகையதீனின் ‘முத்து’, லோகேந்திரலிங்கத்தின் ‘போலிகள்’, செந்தீரனின் ‘விடிவு’,பூநகர் மரியதாஸின் ‘அறுவடை’ முதலிய புதுக்கவிதைத் தொகுப்புக்கள் 1970க்குப் பின்னர் வௌிவந்துள்ளன.தொகுப்புகள் எதுவும் வௌியிடாதபோதிலும் சபா-ஜெயராசா, சாருமதி, ஜவாத் மரைக்கார் முதலிய அனேகர் இங்கு புதுக்கவிதை எழுதிவருகின்றனர். அன்பு ஜாவகர்ஷா தொகுத்த பொறிகள், சரவணையூர் சுகந்தன் தொகுத்த ‘சுவடுகள்’ ஆகிய புதுக்கவிதைத் தொகுப்புக்களில் ஐம்பதுக்கும் அதிகமான கவிஞர்களின் படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக, உயர் இலக்கியமட்டத்தில் புதுக்கவிதை, மரபுக்கவிதை பற்றிய முரண்பாடு அருகி வருவதை அவதானிக்க முடிகின்றது. இவ்விருநிலை முரண்பாட்டின் சமூக வரலாற்றுப் பின்னணி எவ்வாறு இருப்பினும், நடைமுறையில் செய்யுள் அமைப்பில் எழுவது மரபுக்கவிதை, செய்யுள் அமைப்பை மறுப்பது புதுக்கவிதை என்ற கருத்தே நிலவிவருகின்றது. புதுக்கவிதை என்பதற்கு நவீன கவிதை (Modern Poetry) என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டால் (அதுவே சரியானதும் ஆகும்) பாரதியே தமிழின் முதலாவது புதுக் கவிஞனாவான். ஆனால் பாரதிக்குப் பின்னர் தமிழகத்தில் நவீன வாழ்க்கை உள்ளடக்கத்தை, நவீன கண்ணோட்டத்தில் பிரதிபலிப்பதற்கு செய்யுள் நடையைக் கையாளும் ஆற்றல் உள்ள கவிஞர்கள் தோன்றாததால், செய்யுளை நிராகரித்து பிச்சமூர்த்தி வழியில் புதுக்கவிதை மரபு உருவாகிற்று. நவீன சிந்தனை செய்யுள் நடையில் வௌிப்பாடு பெற முடியாது என்றும் கூறப்பட்டது. ஆனால், ஈழத்திலே நிலைமை வேறு வகையாக இருந்தது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நவீன சிந்தனையுடன் இயைபுறும் வண்ணம் செய்யுள் நடையும் அதன் அச்சமைப்பும் இங்கு மாற்றியமைக்கப்பட்டது. எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் செய்யுளையே கவிதைக்குப் பயன்படுத்தியபோதிலும் அவர்களது படைப்புக்களை மரபுக் கவிதைக்குப் புறம்பான புதுக்கவிதை என்றே ஈழத்தின் பல புதுக்கவிஞர்களும் சில விமர்சகர்களும் கருதி வந்துள்ளனர் என்பது இதை நன்கு விளக்கும். தமிழகத்திலே பாரதிக்குப் பின்னர் இலக்கிய முதிர்ச்சியுள்ள கவிதைகள் எழுதியோர் செய்யுளை நிராகரிக்கும் பிச்சமூர்த்தி வழிவந்த புதுக்கவிஞர்களாகவே இருப்பதுபோல் ஈழத்தில் இலக்கிய முதிர்ச்சியுள்ள கவிதைகள் எழுதியோர் செய்யுளைப் பயன்படுத்திய, மஃகாகவி, வழிவந்த நவீன கவிஞர்களேயாவர் என்பது முதன்மைக் கவனத்திற்கு உரியது. இலக்கிய முதிர்ச்சியுள்ள சிறந்த கவிதைகள் படைப்பதற்குச் செய்யுளைப் பயன்படுத்துவதோ செய்யுளை மறுப்பதோ அடிப்படைக் காரணியல்ல என்பதையே இது காட்டுகின்றது. நவீனத்துவம் பற்றிய விழிப்புணர்வே அதன் அடிப்படையாகும். சமீப காலமாக கவிஞர்கள் மத்தியிலும் திறனாய்வாளர்கள் மத்தியிலும் இந்தத் தௌிவு ஏற்பட்டு வருவதனாலேயே புதுக்கவிதை மரபுக் கவிதை பற்றிய இருநிலை முரண்பாட்டு மோதல் தளர்ச்சியடைந்து வருகின்றது எனலாம்.
இதுவரை இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து நவீன கவிதையின் வளர்ச்சிப் போக்குகள் பற்றிக் கவனித்தோம். இதே காலப் பகுதிகளில் பழைய தலைமுறையைச் சேர்ந்த சிலரும் தொடர்ந்து எழுதி வந்துள்ளனர். இவர்கள் சமய மரபை இறுக்கமாகப் பேணுபவர்கள்; கவிதையைச் சமயச்சார்பான சிந்தனைகளுடன் இணைப்பவர்கள். செந்நெறிப்பாங்கான செய்யுள் நடையை இவர்கள் கையாண்டனர். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் ‘பகவத்கீதை வெண்பாரு இவ்வகையில் விதந்து குறிப்பிடத்தக்கது, புலவர் ஆ. மு. சரிபுத்தீன் எழுதிய ‘நபிமொழி நாற்பது’, இ. இரத்தினத்தின் ‘முருகு’, சிவன் கருணாலய பாண்டியனாரின் ‘அழகியது’ ஆகிய நூல்களும் குறிப்பிடத்தக்கன.
கவிஞர் அப்துல்காதர் லெவ்வை, பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோர் முற்றிலும் இவர்கள் வரிசையைச் சேர்ந்தவர்கள் அல்லர் எனினும் நவீனக் கவிஞர்களாகக் கருதப்படுபவர்களும் அல்லர். மொழிபெயர்ப்பாகவும் சொந்த ஆக்கமாகவும் அப்துல்காதர் லெவ்வையின் பல நூல்கள் வௌிவந்துள்ளன. அவரது ‘செயினம்பு நாச்சியார் சதகம்’ ஒரு வகையில் தேசிகவிநாயகம்பிள்ளையின் மருமக்கள்வழி மான்மியத்துடன் ஒப்புநோக்கத்தக்கது. பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ‘தூவுதூஉம் மலரே’, ‘காதலி ஆற்றுப்படை’ ஆகிய நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத் தக்கன. இவ்வகையில் வித்துவான் வேந்தனாரின் ‘கவிதைப் பூம்பொழில்’ பண்டிதர் வீரகத்தியின் ‘செழுங்கமலச் சிலம்பொலி’ ஆகியனவும் குறிப்பிடத்தக்கன.
(தொடரும்)
சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
Leave a Reply