‘தமிழ்’  என்னும் சொல்லுக்குப் பொருள்

தமிழ் என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதா? தமிழ் என்றால், தமிழ் மொழி – தமிழ் பாசை – என்பது பொருள் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆம்; அஃது உண்மைதான். அன்றியும் தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்னும் பொருளும் உண்டு.

இந்த இரண்டு பொருளைத் தவிர மூன்றாவதாக வேறு ஒரு பொருளும் தமிழ் என்னும் சொல்லுக்கு இருந்தது. அப்பொருள் பிற்காலத்தில் வழக்கிழந்து மறைந்து விட்டது. அந்த மூன்றாவது பொருள் என்ன? அதுதான் அகப்பொருள் (காதல்) என்பது. அ ஃ தாவது, தமிழ் என்னுஞ் சொல்லுக்கு அகப்பொருள் என்னும் பொருளும் இருந்தது. கடைச்சங்கக் காலத்தின் இறுதியிலே தோன்றி, சில நூற்றாண்டு வரையில் நிலைபெற்றிருந்து, பிறகு மறைந்துபோன, அகப்பொருள் என்னும் பொருளுடைய தமிழ் என்னும் சொல்லைப்பற்றி இங்கு ஆராய்கிறோம்.

இறையனார் அகப்பொருள் என்னும் ஒரு தமிழ் நூல் உண்டல்லவா? அஃது அகப்பொருள் இலக்கணத்தைக் கூறுகிற நூல் என்பது எல்லாரும் அறிந்ததுதானே! அந்த இறையனார் அகப் பொருளின் உரையாசிரியர், உரைப்பாயிரத்தில் இவ்வாறு எழுதுகிறார்:

“இனி நுதலிய பொருளென்பது நூற்பொருளைச் சொல்லுத லென்பது. இந்நூல் என்னுதலிற்றோவெனின் தமிழ் நுதலிய தென்பது.”

“இனி – நுதலியதுவும் உரைக்கற்பாற்று. அது பாயிரத்துள்ளே உரைத்தாம்:தமிழ் நுதலிய தென்பது.”

இவ்வாறு, இவ்வுரையாசிரியர், இறையனார் அகப்பொருள் என்னும் நூல் தமிழைக் கூறுகிறது என்று உரைக்கிறார். தமிழைக் கூறுகிறது என்றால் பொருள் என்ன? இந்நூல் தமிழ் மொழியின் இலக்கணத்தைக் கூறவில்லை. அகப்பொருள் இலக்கணத்தைத் தான் கூறுகிறது. ஆனால், உரையாசிரியர் இந்நூல் தமிழைக் கூறுகிறது என்று சொல்லுகின்றார். இதன் கருத்து என்ன?.

பத்துப்பாட்டு என்பது ஒரு தொகை நூல். கடைச்சங்கக் காலத்தில் இருந்த புலவர்கள் பாடிய பத்துப் பாட்டுகள் இதில் தொகுக்கப் பட்டுள்ளன. அப்பத்துப் பாட்டுகளில் குறிஞ்சிப்பாட்டு என்பதும் ஒன்று. குறிஞ்சிப்பாட்டைப் பாடியவர் கபிலர் என்னும் புலவர். இப்பாட்டில் அகப்பொருள் செய்தி (காதல் செய்தி) கூறப்படுகிறது. இப்பாட்டின் இறுதியில், “ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு” என்று எழுதப்பட்டிருக்கிறது.

குறிஞ்சிப்பாட்டில் தமிழ் மொழி இலக்கணம் கூறப்பட வில்லை. காதற் செய்தியாகிய அகப்பொருள் கூறப்படுகிறது. ஆனால், அடிக்குறிப்பு, தமிழ் அறிவித்தற்குப் பாடிய குறிஞ்சிப் பாட்டு என்று கூறுகிறது. இதன் பொருள் என்ன? அகப்பொருளைக் கூறினால் ஆரிய அரசன் எவ்வாறு தமிழை அறிந்துகொள்வான்? இங்குத் தமிழ் என்பதன் பொருள் என்ன?

மாறன் பொறையனார் என்னும் புலவர் ஐந்திணை ஐம்பது என்னும் நூலை இயற்றியிருக்கிறார். ஐந்திணைஐம்பது என்பது அகப்பொருளைக் கூறும் நூல். அதாவது, தலைமகன் தலைமகளின் காதல் செய்திகளைக் கூறுகிறது. இந்நூலின் பாயிரச் செய்யுள் இது:

பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய
அன்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ்ச் சேரா தவர்

இந்தச் செய்யுள் ஐந்திணை ஐம்பதைப் படியாதவர் செந்தமிழ் அறியாதவர் என்று கூறுகிறது. இதன் கருத்து என்ன? ஐந்திணை ஐம்பதைக் கற்காமலே பெரும்புலவராக, செந்தமிழ்ப் புலவராகப் பலர் இருக்கின்றனரே! ஐந்திணைஐம்பது தமிழ்மொழி இலக்கணத்தை உணர்த்தும் நூலன்று; அதுகாதற் செய்தியைக் கூறுகிறது. இந்நூலைக் கல்லாதவர் “செந்தமிழ் சேராதவர்” என்பதன் கருத்து என்ன?

எனவே, தமிழ் என்பதற்குத் தமிழ் மொழி, இனிமை என்பவை தவிர வேறு ஏதோ பொருள் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது. அப்பொருள் என்ன என்பதை மேலும் ஆராய்ந்து காண்போம்.

பரிபாடல் என்னும் தொகைநூலில், 9-ஆம் பரிபாடல், முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பரங்குன்றத்தைப் பாடுகிறது. அப்பாடலின் ஒரு பகுதி, தமிழ் என்னும் சொல்லுக்கு உரை கூறுவது போல அமைந்திருக்கிறது. அப்பகுதி வருமாறு:

அகறல் அறியா அணியிழை நல்லார்
இகறலைக் கொண்டு துனிக்கும் தவறிலர்இத்
தள்ளாப் பொருள் இயல்பில் தண்டமிழ் ஆய்வந்திலார்
கொள்ளார்இக் குன்று பயன்

இச்செய்யுளில் பொருள் இயல்பில் தண்தமிழ் என்று கூறியிருப்பது, அகப்பொருள் இலக்கணம்பற்றிய தமிழ் என்று பொருள் பெறுகிறது. இதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையும் இதனையே கூறுகிறது. அவர் உரை இது:

“பொருளிலக்கணத்தையுடைய தமிழை ஆராயாத தலைவர் களவொழுக்கத்தைக் கொள்ளமாட்டார். . . இனி அக்களவிற் புணர்ச்சியை யுடைமையான் வள்ளி சிறந்தவாறும், அத்தமிழை ஆராய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் கூறுகின்றார்.”

இதனால், தமிழ் என்பதற்கு அகப்பொருள் (காதல்) என்னும் பொருள் உண்டென்பது தெரிகிறது. முருகன் அகப்பொருள் முறைப்படி வள்ளியைக் காதல்மணம் செய்தான் என்று கூறப்படுகிற இவ்விடத்தில் “பொருளியல்பில் தண்டமிழ்” (அகப்பொருளாகிய தமிழ்) என்று கூறப்படுவது காண்க.

அவிநயனார் என்னும் புலவர், இதனைத் தெளிவாக விளக்கு கிறார். அவரது செய்யுள்இது:

முற்செய் வினையது முறையா உண்மையின்
ஒத்த இருவரும் உள்ளக நெகிழ்ந்து
காட்சி ஐயம் தெரிதல் தேற்றலென
நான்கிறந்து, அவட்கு நாணும் மடனும்
அச்சமும் பயிர்ப்பும், அவற்கு
முயிர்த்தகத் தடக்கிய
அறிவும் நிறைவும் ஓர்ப்பும் தேற்றமும்
மறைய, அவர்க்கு மாண்டதோரிடத்தின்
மெய்யுறு வகையு முள்ளல்லதுடம் புறப்படாத்
தமிழியல் வழக்கமெனத்
தன்னன்பு மிகை பெருகிய
களவெனப் படுவது கந்தருவ மணமே1.

இச்செய்யுளில் காதல் மணம் தமிழியல் என்று கூறப்படுவது காண்க. எனவே, இறையனார் அகப்பொருள் உரையாசிரியர். அந்நூல் தமிழ் நுதலிற்று என்று உரை கூறியதன் கருத்து. ‘அகப்பொருளைக் கூறிற்று’என்று பொருள்படுதல் காண்க. அன்றியும் குறிஞ்சிப்பாட்டின் இறுதிக் குறிப்பு, “ ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்கு” என்று இருப்பதன் கருத்து, ஆரிய அரசன் பிரகத்தனுக்கு அகப்பொருளைத் தெரிவிப்பதற்காகப் பாடின குறிஞ்சிப்பாட்டு என்பதும் அறியப்படுகிறது. ஐந்திணை ஐம்பதின் பாயிரச் செய்யுள், ஐந்திணை ஐம்பதை ஓதாதவர் செந்தமிழ் சேராதவர் என்பதன்கருத்து, ஐந்திணை ஐம்பதைப் படியாதவர் அகப்பொருளை அறியமாட்டார் என்பதும் தெரிகிறது. இதனால், தமிழ் என்னுஞ் சொல்லுக்கு அகப்பொருள் என்னும் பொருள் இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.

மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருக்கோவையார் என்னும் நூலிலே, தலைமகளைக் கண்டு காதல் கொண்டு வருந்தியதலை மகனுடைய உடல் வாடியிருப்பதைக் கண்ட அவனுடைய தோழன் கூறியதாக ஒரு செய்யுள் உண்டு. அச்செய்யுளிலும், அகவொழுக்க மாகிய காதல் தமிழ் என்று கூறப்படுகிறது. அச் செய்யுள்,

சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
      பலத்தும்என் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலின்
      ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ அன்றி
      ஏழிசைச் சூழல்புக்கோ?
இறைவா? தடவரைத்தோட் கென்கொ
      லாம்புகுந் தெய்தியதே

என்பது.

இச்செய்யுளில், “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்று (அதாவது, சிவபெருமான் மதுரைத் தமிழ்ச்சங்கத்திலிருந்து ஆராய்ந்த அகப்பொருள் என்று) பொருள்படக் கூறியிருப்பது காண்க. சிவபெருமான் இயற்றிய அகப்பொருள் இலக்கண நூலுக்கு இறையனார் அகப்பொருள் என்பது பெயர் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது. அந்நூல் கூறிய பொருள் தமிழ் (அகப்பொருள்) என்று அதன் உரையாசிரியர் கூறியிருப்பதும் கருதத்தக்கது..

மனமொத்த காதலர்களான சீவக நம்பியும் சுரமஞ்சரியும் காதல் இன்பத்தைத் துய்த்தனர் என்று கூறுகிற திருத்தக்கதேவர், அக்காதல் இன்பத்தைஇன்தமிழ் இயற்கை இன்பம் என்று கூறுகிறார். அச்செய்யுள்:

கலைபுறஞ் சூழ்ந்த அல்குல்
   கார்மயில் சாய லாளும்
மலைபுறங் கண்ட மார்பின்
   வாங்குவிற் நடக்கை யானும்
இலைபுறங் கொண்ட கண்ணி
   இன்தமிழ் இயற்கை இன்பம்
நிலைபெற நெறியில் துய்த்தார்
   நிகர்தமக் கிலாத நீரார்.

சீவக சிந்தாமணி, சுரமஞ்சரியார். 70.

இதனால், தமிழ் என்னும் சொல்லுக்கு, காதலாகிய அகப்பொருள் ஒழுக்கம் என்னும் பொருள் இருந்தது என்பதும், இப்பொருளில் இச்சொல் இடைக்காலத்தில் வழங்கிப் பிற்காலத்தில் வழக்கொழிந்து விட்டது என்பதும் அறியப்படுகின்றன.

அடிக்குறிப்புகள்

1. யாப்பருங்கலம், ஒழிபியல், “மாலை மாற்றே சக்கரஞ் சுழிக் குளம்” என்னும் சூத்திர விருத்தியில், எண்வகை மணத்தைப் பற்றிக் கூறும் பகுதியில், இந்தச் செய்யுள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது..

மயிலை சீனி. வேங்கடசாமி
ஆய்வுக் களஞ்சியம் –
தமிழியல் ஆய்வு