என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்!

இன்று(ஆடி 19 / சூலை 4) முதல் நான்கு நாள் அமெரிக்க நாட்டில் சிகாகோவில் உலகத்தமிழர்கள் ஒன்றுகூடும் தமிழர் விழா நடைபெறுகிறது. தமிழறிஞர்களைப் புறக்கணித்துள்ளதாக உள்நாட்டுத் தமிழறிஞர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தொடர் படைப்பாளர்கள் வரை வருத்தம் உள்ளது. என்றாலும்,

சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்!

குழுக்கள் பொறுப்புகளில் ஈழத்தமிழர்களைப் புறக்கணித்ததாக அவர்களிடையே பெரும் ஆதங்கம் உள்ளது. என்றாலும் உலக மாநாட்டை நடத்துவது அரிதான செயல் என்ற அளவில் மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்!

கவியரங்கம், தமிழிசை, மரபிசை, (அப்படி என்றால் மரபிசை தமிழிசை இல்லையா?), சேர்ந்திசை, மெல்லிசை, பட்டிமன்றம், சொற்பொழிவு எனப் பல நிலைகளில் தமிழை வருகையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிக்குப் பாராட்டுகள்! எனவே, சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்!

இது தமிழாராய்ச்சி மாநாடு அல்ல. சிறுபான்மை தமிழாராய்ச்சியாளர்களுக்கும் வாய்ப்பளித்துள்ள தமிழர் மாநாடு. தமிழர்கள் ஒன்று கூடுவது மகிழ்ச்சிக்குரியதுதானே! அந்த அளவில் ஒன்று கூடலை நடத்தும் மாநாட்டினரைப் பாராட்டிச் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.

ஏறத்தாழ 50 தமிழ்க்கட்டுரைகள்தாம் மாநாட்டில் இடம் பெறுகின்றன. என்றாலும் பாட்டுப்போட்டி, நடனப்போட்டி, ஓவியப்போட்டி, குறள் தூதர்,குறள் தேனீ, தமிழ்த்தேனீ, குறும்படப் போட்டி, இலக்கிய வினாடி வினா மூலம் இளந்தலைமுறையினரை ஊக்கப்படுத்துகின்றனர்எனவே, சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.

கருத்தரங்க அமர்வு நிகழ்ச்சி நிரல் தமிழில் இல்லை. என்ன செய்வது உலகத் தமிழ் மாநாடு என்றாலே தமிழைப்புறக்கணித்து ஆங்கிலத்திற்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற பொய்யான மரபுதானே எங்கும் பின்பற்றப்படுகிறது. தவறான மரபினைப் பின்பற்றினாலும் தமிழ் உணர்வளார்களுக்கு வடிகாலாக அமையும் எனக் கருதிச் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்!

தமிழ்த் திங்கள், தமிழ் நாளை எல்லா இடங்களிலும் குறிப்பிட்டிருக்கலாம். என்றாலும் ஓரிடத்திலாவது குறிப்பிட்டுள்ளமையால் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.

ஆராய்ச்சி மாநாடுகளில் ஆராய்ச்சியாளர்களுக்குத்தான் முதன்மை கொடுக்க வேண்டும். ஆண்டுவிழா போல் புகழ்வாணர்களுக்கு முதன்மை கொடுக்கும் விழாவாக உள்ளது.  என்றாலும், அவர்கள் வாயிலாகவும் தமிழ் ஆராய்ச்சி கருத்துகள் தூவப்படும் என்ற நம்பிக்கையில், சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.

எழுத வாய்ப்புள்ளவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்பதை இணையம் கொண்டுவந்து விட்டது. அந்த நிலையை மாற்றித் தரமான படைப்புகள் மட்டுமே இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் பாராட்டிற்குரியது. ஆனால், தெரிவுக்குழுவினருக்கே தெரியாமல் கட்டுரைகள் இடம் பெற்றதாக ஆராய்ச்சிக் கட்டுரையாளர்களிடம் வருத்தம் உள்ளது. என்றாலும், வாசிக்கப் போகும் கட்டுரைகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கருத்தில் நிறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில்,  சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.

தமிழர் வாழும் நாடுகளில் இருந்து மேலும் பல ஆராய்ச்சியாளர்கள் இடம் பெறும் வகையில் மாநாட்டினை நடத்தியிருக்க முடியும்.  என்றாலும், நிதி ஆதாரத்தைத் திரட்டும் நோக்கில் நன்கொடையாளர்களையும் புரவலர்களையும் திரட்டும் இலக்கில் வெற்றி பெற்றுள்ளமையால், கிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.

எளிமையாக இருந்தாலும் ஆராய்ச்சிகளைப் பெருக்கும் கருத்தரங்கங்களுக்கு இனி மாநாடு நடத்துவோர் முதன்மை தர வேண்டும். என்றாலும் கலைநிகழ்ச்சி முதலானவற்றின் மூலம் உள்நாட்டுத் தமிழர்களுக்கு உற்சாகமூட்டுவதால் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.

மாநாட்டில் புறக்கணிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பலருக்கு வருத்தம்தான். என்றாலும் மாநாட்டுப் பொறுப்பாளர் நீங்கலான சிலருக்காவது வாய்ப்பளித்துள்ளனரே! எனவே, சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம். வருத்தங்களை மறந்து உலகத் தமிழர்களும் வாழ்த்துங்கள்!

துறைதோறும் தமிழுக்குத் தொண்டாற்றும் வாய்ப்பினை அனைவரும் பெறுவதற்கு மாநாடு வழிகாட்டட்டும்!

தமிழ் அறியாத் தமிழர் இல்லை என்னும் நிலையைக் கொணர மாநாடு வழி காணட்டும்!

தமிழ்மொழிக்கல்வியுடன் தமிழ்வழிக்கல்வியும் உலகெங்கும் உருவாகிப் பரவ மாநாடு வழி அமைக்கட்டும்!

மாட்டின் பேராளர்கள், பார்வையாளர்கள், வருகையாளர்கள், நிகழ்ச்சியாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகிறோம்!

உங்கள் தொண்டு சிறக்கட்டும்! தமிழ் பரவட்டும்!

 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்

(திருவள்ளுவர், திருக்குறள் 394)

 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல