(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 64/69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

65/69

எல்லீசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப்பிரதி / The Ellis’ Manuscript(2009)

தமிழார்வலராகவும் திருக்குறள் ஈடுபாட்டாளராகவும் இருந்தவர் இங்கிலாந்தில் இருந்து இங்கே அதிகாரியாக வந்த எல்லீசர்(F.W.Ellis). இவருடைய திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களின் மொழி பெயர்ப்பைச் சென்னைப்பல்கலைக்கழகம் ‘திருக்குறள் விளக்கம்’ என்னும் பெயரில் வெளியிட்டது. இளம் அகவையிலேயே அவர் இறந்துவிட்டதால் (அல்லது இறக்கும்படிச் செய்யப்பட்டதால்) அவர் விட்டுச்சென்ற கையெழுத்துப் படிகளை அறிஞர் போப்பு இங்கிருந்து எடுத்துச் சென்று பாடிலியன் (Bodleian) நூலகத்தில் சேர்த்தார். இதனைக் கேள்விப்பட்ட பேராசிரியர் ப.மருதநாயகம் அங்கே சென்று அக்கையெழுத்துப் படியை ஆராய்ந்தார். அதில் மேலும் மூன்று அதிகாரங்களுக்கு அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பும் விளக்கக் குறிப்புகளும் இருக்கக் கண்டார். அவற்றை ஒளிப்படி எடுத்து நம் நாட்டிற்குக் கொண்டுவந்தார். அதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் முன்னுரைகள் எழுதி வெளியிட்டார். அதுவே இந்நூல்.

முன்னுரையில் தமிழின் தனிச்சிறப்பை உணர்த்தும் எல்லீசரின் வரிகளைப் பின்வருமாறு பேரா. ப.மருதநாயகம் குறிப்பிட்டுள்ளார்: :கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் புகழ்வாய்ந்த நூலை வெளியிடுவதற்கு அரை நூற்றாண்டிற்கு முன்னரே திராவிட மொழிகளின் தனித்தன்மை பற்றிய கருத்து எல்லீசால் அறிவிக்கப்பட்டது. தென்னிந்திய மொழிகள் யாவும் சமற்கிருதத்திலிருந்து தோற்றம் பெற்றவை என்ற எண்ணம் வேரூன்றியிருந்த காலத்தில் அவற்றை முறையாகக் கற்ற எல்லீசு, “தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் சமற்கிருதத்திலிருந்து பெறப்பட்டவையல்ல; அவற்றின் வாழ்வுக்கு அது தேவையற்றது. அவை ஒரு தனி மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை; சமற்கிருதம் அக் குடும்பத்தோடு பின்னால் கலந்து விட்டாலும் அதற்கு அக்குடும்பத்தோடு நெருங்கிய உறவு கிடையாது” (ப.V) என்று தெளிவாக அறிவுறுத்தினார். தமிழின் தொன்மையைக் கண்டறிந்த எல்லீசுக்குத் தமிழ் இலக்கியங்களின் பெருமையை உணர்வதும் எளிதாயிற்று. ஆக்குசுபோர்டு பல்கலைக்கழகத்து நூலகமான பாடிலியன் நூலகத்திலுள்ள அச்சேறாத கட்டுரையொன்றில், தமிழுக்கும் ஈபுரு மொழிக்குமுள்ள ஒற்றுமைகளைச் சுட்டும் எல்லீசு மனிதவாழ்வுபற்றிய நூல்கள் தமிழில் உள்ள அளவு வேறுஆசிய மொழி எதிலும் இல்லையென்று தெரிவிக்கிறார்.”

அல்லும் பகலும் தேடித்தேடித் தமிழ்ச்சுவடிகளை அச்சேற்றிய உ.வே.சா. அவர்கள் சில பாடல்களில் பாடபேதமுள்ள சொற்களை அச்சேற்றியிருப்பார். அவற்றைப் பாடபேதக் குறிப்புகளிலும் சுட்டிக்காட்டியிருக்க மாட்டார். அவற்றில் ஒன்று, புறநானூற்றுப்பாடல் 34இல்  இடம் பெறும்

“பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்“

என்னும் அடியாகும். எல்லீசரின் மேற்கோளில் இவ்வடி

குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்” என இடம் பெற்றிருக்கும்.

இவ்வாறு எல்லீசரின் மேற்கோள் வரிகள் நமக்குப் பயனுள்ள வகையில் அமைவதைச் சுட்டிக்காட்டியிருப்பார்.

சிலம்பின் ஒலி: ஆறு பரல்கள்(2010)

நூலில் ஆறு கட்டுரைகளை  அளித்துள்ளார். காளிதாசன் பாடல்களில் சிலம்பு ஒலிப்பதை முதல் கட்டுரையில் குறிப்பிடுகிறார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தையும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் சாபக்கிளீசு(Sophocles) எழுதிய ஆந்திகொனி (Antigone)யையும் ஒப்பிட்டு அடுத்த கட்டுரை அமைகிறது. உருசிய அறிஞர் பகுதின்(Bakhtin) கருத்துகள் அடிப்படையில் கட்டமைப்பு, பாடுபொருள், காப்பியக்கூறுகள் யாவற்றிலும் பிறநாட்டுக் காப்பியங்களிலிருந்து வேறுபட்ட சிறந்த காப்பியமாகச் சிலப்பதிகாரம் உள்ளது என்பதை மூன்றாவது கட்டுரை நிறுவுகிறது.

நான்காம் கட்டுரையில் சிலப்பதிகாரம் குறித்த அடியார்க்கு நல்லாரின் திறனாய்வுகளையும் ஐந்தாம் கட்டுரையில் சிலம்பில் தெ.பொ.மீ. காணும் புதுமைகளையும் விளக்குகிறார். இறுதிக் கட்டுரையில் சிலப்பதிகாரத்திற்கு இராமச்சந்திர தீட்சிதர், அலெயின் தேனியலு(Alain Sanie’lou), ஆர்.பார்த்தசாரதி ஆகியோர் அளித்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்புப் போக்குகள் குறித்து விளக்குகிறார். அம்மூன்று மொழிபெயர்ப்புகளும் செய்துள்ள மன்னிக்க முடியாத தவறுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. நிறைவாக, “இம்மூவரின் மொழி பெயர்ப்புகளும் மூலத்தின் சிறப்பு பிற மொழியாளர்க்கு உணர்த்தப் பெறவேண்டும் என்றெண்ணும் தமிழ் ஆர்வலர்களுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக மன நிறைவு அளிப்பன அல்ல. மூவரில் ஒருவரும் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சி உடையவர் அல்லர்; தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் இலக்கியம், தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றில் முழு ஈடுபாடு கொண்டவர் அல்லர். பழந்தமிழ் இலக்கியப் புலமையும் ஆழமான ஆங்கில அறிவும் உண்மையான தமிழ்பற்றும் உடைய ஒருவர் சிலப்பதிகாரத்தை ஆங்கிலக் கவிதை நடையில் தர முன்வர முனைதல் வேண்டும்” எனச் சிறப்பாகத் தொகுத்துத் தந்துள்ளார். இத்தகையவர்களுக்கே நாம் மொழி பெயர்ப்புப் பணிகளை ஒப்படைக்க வேண்டும். இத்தகையோரின் மொழிபெயர்ப்புகளையே நாம் போற்ற வேண்டும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 66/69)