சமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்?

வரும் மாசி 02, 2052 / 14.02.2021 அன்று ‘சமற்கிருதம் செம்மொழி அல்ல’ என்னும் இணையவழி உரையரங்கம் நடக்க இருப்பதற்கான அழைப்பிதழைப் பார்த்ததும் எதிர்க்குரல் வரும் என எதிர்பார்த்தவர்களிடமிருந்து எதிர்ப்புக்குரல் வெறுப்பாக வந்துள்ளது. அதே நேரம் மிகுந்த வரவேற்பும் உள்ளது. ஒருவர், “சமற்கிருதம் மொழியே அல்ல, அதனைச் செம்மொழி அல்ல எனச் சொல்ல வேண்டிய தேவையே இல்லையே” என்றார். இரு தரப்பாருக்கும் நன்றி.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(திருவள்ளுவர், திருக்குறள் 423)

 என்பதையும்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

(திருவள்ளுவர், திருக்குறள் 355)

என்பதையும் அறிந்தவர்கள், உரையாளர்கள் கருத்துகளைக் கேட்கும் முன்னரே தலைப்பைக் கண்டு அலறுவானேன்!

உரையரங்கத்தில் வினா விடை அரங்கம் உள்ளபொழுது அதில் தங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். அதற்கான வாய்ப்பு இருக்கும் பொழுது சமற்கிருதம் பற்றிய உண்மை வெளியே வரும் என உள்ளம் குமைவது ஏன்? என்றுதான் புரியவில்லை.

உரையங்கத்தில் பங்கேற்போர் சமற்கிருத நூல்களைப் படித்தவர்களே! ஆனால், எதிர்ப்பவர்கள், சமற்கிருத நூல்கள்பற்றிய தவறான பொய்யான உயர்வுச் செய்திகளைப் படித்து விட்டு அதனடிப்படையில் எழுதுகிறார்கள். சிலர் சமற்கிருத வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுகிறது என்பதாலும் பேசுகிறார்கள். “கிணற்றுத் தவளைகளுக்கு வடமொழியின் மேம்பாடு தெரியாது” எனக் கூறுபவர்கள்தாம் சமற்கிருதத்தின் இயல்பு அறியாக் கிணற்றுத் தவளைகளாக உள்ளனர்.

இந்நிகழ்ச்சியின் காரணம் “வடமொழி வெறுப்பு என்பதும் அறிவீன உரை” என்பதும் தவறு.

பிராமணர் உட்பட எச்சாதியினரையும் அந்தணர் என அழைப்பது தவறு.  எச்சாதியாய் இருந்தாலும் அறவோரே அந்தணர் ஆவார். எனவே மடலாடல் ஒன்றில் ஒருவர் அவ்வாறு குறிப்பது தவறு. ஆதலின் அந்தணர் வெறுப்பு இது என அவர் குறிப்பிட்டுள்ளதும் தவறு. பிராமணரைத்தான் அவ்வாறு அவர் குறிப்பிடுகிறார். இது பிராமண வெறுப்பல்ல. நாங்கள் வாழ்ந்த திருநகரில்(மதுரையில்) பக்கத்து வீடுகளில் எதிர் வீடுகளில் பின் வீடுகளில் எனச் சுற்றிலும் பிராமண நண்பர்களே இருந்தார்கள். யாருடனும் வெறுப்பு காட்டியதில்லை. நான் தலைவராக இருந்து நடத்திய இறைநெறி மன்றத்தில் பெரும்பாலும் பிராமண நண்பர்களே செயலர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் முதலான பொறுப்பார்களாக இருந்தார்கள். எனவே, கருத்து கூற வழியின்றித் திசை திருப்ப முயல்வதுதான் அறிவீனம்.

வடமொழிக் கருத்துகள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும் என்கிறார் ஒருவர். சமற்கிருத நூல்கள் இழிகாமம்(ஆபாசம்), ஒழுக்கக்கேடு, அறக்கேடு நிறைந்தன என ஆய்வறிஞர்கள் தெரிவிக்கின்றனர்  அத்தகைய கருத்துகள் தமிழில் எழுதப்பட வேண்டிய தேவை இல்லை. “இயற்கை நெறிப்பட்ட ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே நிகழும் உறவை மட்டுமே தமிழர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் குதிரையுடன் உடலுறவு கொள்வதும் அவ்வாறு அரசிகள் உறவு கொண்டு பிள்ளைகள் பெற்றதுமான செய்திகளை ஆரிய வேதங்கள் கூறுகின்றன. இராமன் முதலானோரும் இவ்வாறு பிறந்ததாகத்தான் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. ஆடுகளுடனும், காளை மாடுகளுடனும் உடல் உறவு கொள்வதை இரிக்கு வேதம் கூறுகிறது. உடன் பிறந்தவர்களுக்குள் – அண்ணன் & தங்கை அல்லது அக்கா & தம்பியர்களுக்குள் – உடல் உறவு கொள்ளும் ஒழுக்கக் கேட்டை இரிக்கு வேதம் பரிந்துரைக்கிறது. தந்தை தன் மகளுடன் உறவு கொண்டதை அதர்வ வேதம் கூறுகிறது.”

“கிருட்டிணன் அர்ச்சுனனின் மனைவியாகிய தன் தங்கை சுபத்திராவுடன் உறவு கொண்டதையும், அவளின் மருமகள் -அபிமன்யுவின் மனைவி – இராதையுடன் குடும்பம் நடத்தியதையும் ஆரியப் புராணங்கள் கூறுகின்றன. மற்றோர் கதைப்படி கருணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதன் மனைவியே இராதா. கிருட்டிணனுக்கு அத்தை முறை. இப்படிப் பார்த்தாலும் கிருட்டிணன், தன் அத்தை இராதாவுடன் உடலுறவு கொண்டு வாழ்ந்துள்ளான்.” இவையெல்லாம் தமிழில் எதற்குத் தேவை?

அப்படி என்றால் வேதங்களையும் நான்மறைகளையும் தமிழ் இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறுகின்றனவே என எண்ணுகிறீர்களா? சிறப்பிற்குரியனயாவும் தமிழ் நூல்களே! 

 தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடும் நான்மறைகள் ஆரிய மறைகள் அல்ல. தமிழ் மறைகளே! உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர், நான் மறை என்பதற்கு “இருக்கும் யசுரும் சமமும் அதர்வணமும் என்பாரு முளர், இது – பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாகச் செய்தார் ஆகலின்” என்று எழுதும் உரை மிகவும் தெளிவாக இதனை உணர்த்துகிறது.

மேலும் அவரே, “அதர்வம், வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின்” என நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை யியல், நூற்பா சு0, உரை) கூறியுள்ளமை ஆரிய வேதங்களைத் தமிழர்கள் ஏற்கவில்லை என்பதை உணர்த்தும்.

திருஞானசம்பந்தருக்குப் பூணூல் சடங்கு செய்த பொழுது பிராமணர்கள் ஆரிய வேதம் ஓதியதற்கு எதிராக நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர்” எண்ணிறந்த தமிழ்ப் புனித வேதம் ஓதியதாகச் சேக்கிழார் கூறுகிறார் (பெரியபுராணம் பாடல் சுபு67).

பிராகிருத நூற்கருத்துகளைத் திருடி அவற்றைச் சமற்கிருத நூல்களாக்கிச் சமற்கிருதத்தை உயர்த்தியும் பிராகிருதத்தைத் தாழ்த்தியும் கூறியதால், பிராகிருத மொழியினர் சமற்கிருதத்தை வெறுப்பு நோக்கில் பார்க்கின்றனர் என்ற ஆய்வில் எடுத்துக்காட்டான கவிதையே அழைப்பிதழில் குறிக்கப்பட்டுள்ளது.  இதைக் குறிப்பிட்டுள்ளதன் காரணம் பரிதிமாற் கலைஞர் முதலான அறிஞர்கள் தமிழ் நூற்கருத்துகளைக் களவாடி அழித்துச் சமற்கிருத நூல்கள் எழுதப்பட்டதாகக் கூறியுள்ளார்கள் அல்லவா?  அதுபோல் பிராகிருத மொழி நூற் கருத்துகளையும் களவாடி அழித்துள்ளர் என்பதை உணர்த்தத்தான். நாம் திருடியவர்களையும் திருட்டுப் படைப்புகளையும் உயர்வாகக் கருதும் அறியாமை போலின்றிப் பிராகிருத மொழியினர் திருட்டு நூலார் மீது சினம் கொண்டுள்ளனர் என்பதை அறியச்செய்யத்தான் அப்பாடலைக் குறிப்பிட்டிருந்தேன்.

“எல்லா மொழிக்கும் முந்தையது”, “சமற்கிருதம் படித்துத் தமிழ்க் காவியம் படைத்தனர்”, “சமற்கிருதம் பேரளவான சொல்வளமும, இலக்கிய இலக்கியவளமும கொண்ட  செம்மொழி” என்பன போன்று மடலாடலில் இடம் பெற்ற செய்திகள் தவறு என்பதை உணர்த்தத்தான் இவ்வுரையரங்கம்.

அதே நேரம், சமற்கிருத மொழியைப் படிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. விரும்புநரும், ஒப்பிலக்கிய ஆய்வாளர்களும் திறனாய்வாளர்களும் இலக்கிய அன்பர்களும் படிக்கட்டும். அதைத் தடுக்கவில்லை. பெரும்பாலான நூல்களில் செவ்வியல் தன்மை இல்லை என்பதை உணர்ந்து படிக்க வேண்டும். அவ்வளவுதான். அதே நேரம் பிற மொழியாளர்களின் செல்வத்தில் அவரவர் மொழியை வளர்க்காமல் சமற்கிருதத்திற்குச் செலவிடுவதும் அதனைத் திணிப்பதும் குற்றமாகும். என்றாலும் உரையரங்கத்தின் நோக்கம் அதனைக் கூறுவதல்ல. சமற்கிருமொழியில் உள்ள நூல்கள் செவ்வியல் தன்மையற்று உள்ளன என்பதையும் அம்மொழி செம்மொழியல்ல என்பதையும் பகிர்ந்து கொள்ளத்தான்.  

நான் 1996 இல் பேரளவிலான சமற்கிருத அகராதி ஒன்றை வாங்கி அவ்வப்பொழுது சொற்பொருள்களைப் பார்த்து வந்தேன். 2003(?) இல் சமற்கிருத உரையாடல் வகுப்பில் பயின்றேன். அவ்வப்பொழுது சமற்கிருத நூல்களின் மொழிபெயர்ப்புகளையும் சமற்கிருத நூல்கள் குறித்த கட்டுரைகளையும் படித்து வந்தேன். இவற்றால் சமற்கிருதம் பற்றிய மறைக்கப்படும் உண்மைகள் உணரத் தொடங்கின. செம்மொழி ஏற்பில்லாமலே செம்மொழி எனச் சமற்கிருதத்திற்கு உதவியது அறிந்த பின்னர், அம்மொழியின் செம்மொழித் தன்மைகளைப் படிக்கத் தொடங்கினேன். எல்லாமே பொய்யாயும் புனைந்துரையாயும் இருந்தன. எனவே, சமற்கிருதம் செம்மொழி அல்ல என எழுதுவதற்கான குறிப்புகளைத் திரட்டிக் கட்டுரை எழுதி வந்தேன். முகநூல் குறிப்பு ஒன்றில் சமற்கிரும் செம்மொழி அல்ல என்றும் இது குறித்து நான் எழுதி வருவதாகவும் குறிப்பிட்டேன. இதில் பேரா. ஒருவர், “எழுதுங்கள் படிக்கிறேன். எனினும் நான் அதற்கு உடன்படவில்லை” என்று குறிப்பிட்டார். உடன்படாவிட்டாலும் படிப்பதாகக் கூறிய அவரின் நடுவுநிலைமை உணர்வு பாராட்டும்படி இருந்தது .இன்று அவரே என்ன சொல்ல வருகிறோம் என்பதை அறியும் முன்னரே எதிர்க்கும் நடுவுநிலையற்ற போக்கைக் கடைப்பிடி ப்பது வியப்பாக உள்ளது.

நான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே மலையாளம் பயின்றவன். மலையாள மொழி வெறுப்பாளன் அல்லன். அதே நேரம் மலையாளத்திற்குச் செம்மொழித்தகுதி வழங்க இருந்த பொழுது “மலையாளம் செம்மொழியல்ல” என்று மாலைமுரசு நாளிதழில் செவ்வி அளித்திருந்தேன்.  இது குறித்துக் கட்டுரை எழுதிப் பலவகையிலும் பரப்பினேன்.

கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் மொழி என்பதால் ஒரு மொழியை வெறுக்கத் தேவையில்லை. கற்க வாய்ப்பிருந்தால் அதிலுள்ள நல்லனவற்றை அறியலாம். பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை அழித்து வரும் சிங்கள அரசு மீது கடுஞ்சினம் உள்ளது. அதனால் சிங்கள மொழியை வெறுக்கவில்லை. சிங்கள மொழியையும் படித்தேன். ‘தமிழும் சிங்களமும்’ என ஒரு கட்டுரையும் எழுதி உள்ளேன்.

இவைபோலச் ்சமற்கிருத மொழி மீது வெறுப்பு கிடையாது. அதேநேரம் நாம் படித்து அறிந்த உண்மைகளப் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது இதழாளன் என்ற முறையிலும் மொழி ஆர்வலன் என்ற முறையிலும் என் கடமையாகக் கருதி இந்த உரையரங்கத்தை நடத்துகின்றேன்.  எனவே மொழி வெறுப்பு வண்ணம் பூச வேண்டா.

சமற்கிருத வெறுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டதெனில், சமற்கிருத ஆரவலர்களைப் பங்கேற்க அழைத்திருக்க மாட்டோம். அறிந்த உண்மையைப் பிறர் அறியச் செய்யும் ஆய்வு நோக்கே இவ்வுரையரங்கத்தின் அடிப்படை நோக்கம்.

உரையரங்கத்தைக் கேட்காமலேயே இப்படித்தான் பேசுவார்கள் என ஊகித்து எதையும் எழுத வேண்டா.  பங்கு கொண்டு ஐயங்கள் இருப்பின் அங்கே கேளுங்கள். அல்லது அதற்கான கால வாய்ப்பு இல்லை யெனில், வினாக்களை எழுதி அனுப்புங்கள். தக்க மறுமொழியை அளிக்கிறோம். அல்லது இவ்வுரைகள் கட்டுரை வடிவில் அகரமுதல மின்னிதழில் வெளி வரும். அவற்றைப் படித்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். பின்னர் இவை காணுரையாகவும் வெளிவரும். அப்பொழுதும் கேட்டு ஐயம் தீராவிட்டால் வினாக்களைத் தொடுக்கலாம். எனவே, தமிழுக்கு எதிராகச் சொல்வனவற்றைக் கருத்துரிமையாகக் கருதுநர்கள், நடுநிலை ஆய்வுரைகளையும் கருத்துரிமைகளாக ஏற்க வேண்டுகிறேன்.

மடலாடல் குழுக்களில் கருத்து தெரிவித்தவர்கள் யாவரும் என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்களே எனவே, அவரவர் பெயரைக் குறிப்பிட்டுத்தனித்தனியே மறுமொழி விடுத்துக் குழாயடிச் சண்டையாக மாற்றாமல் பொதுவில் எழுதியுள்ளேன்.

இந்நிகழ்ச்சி நடைபெறுவது உலக மொழியார்வலர்களுக்குப் பெருமையே! பெருமையே! பெருமையே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல