சமற்கிருத வாணர்களின் பொய்யுரைகளுக்கு மறுப்புரைகள் – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்
25/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
26/ 69
கபிலர் முதல் கலைஞர் வரை: தமிழ் உள்ளம்(2010)
மனுநூல் அறவுணர்வு சற்றுமில்லாத பண்பாடற்ற பகுத்தறிவிற்கு ஒவ்வாதவிதிகளையெல்லாம் அடுக்கிக் கொண்டே செல்லும். தமிழ் இலக்கியங்கள் அறவுணர்வு சார்ந்த பண்பாட்டுப் பகுத்தறிவுக் களஞ்சியமாக உள்ளன என்பதைக் கபிலரின் குறிஞ்சிப்பாட்டு மூலம் விளக்குகிறார். பதினெட்டாம் நூற்றாண் டில் தமிழகம் வந்த ஐரோப்பிய அறிஞர்கள் தனித்தியங்கும் தமிழின் உயர்வையும் தமிழுக்குக் கடன்பட்டு வாழும் சமற்கிருதத்தின் குறைகளையும் சுட்டியுள்ளனர். செம்மொழி இலக்கியங்களாகப் போற்றப்படும் கிரேக்க, உரோம இலக்கியங்களைவிடத் தமிழ்இலக்கியங்கள் உயர்ந்தும் சிறந்தும் உவகை அளிப்பதை அடுத்து விளக்குகிறார். இவர் கருத்துகளுக்கு மேனாட்டறிஞர்களின் ஆய்வு முடிவுகள் அரண் சேர்ப்பதையும் காணலாம்.
1.) கபிலர் அறிவித்த தமிழ், 2.) உலக அறிஞர்கள் நோக்கில் தமிழ், 3.) செம்மொழிகளில் ஒரு கவிதை மொழி, 4.) சங்க இலக்கியத்தில் சிந்துவெளிப்பண்பாடு, 5.) பத்துப்பாட்டு என்னும் பண்பாட்டு ஆவணம், 6.) சான்றோர் கவிதையும் காளிதாசனும், 7.) காளிதாசன்படைப்புகளில் சிலம்பின் ஒலி, 8.) பத்தி இலக்கியத்தின் மூலவேர்கள், 9.) உரைகற்களாக ஏழு கவிதைகள், 10.) பழமொழி நானூறு: இன்றைய நோக்கில், 11.) கவிதையில் வீர சைவம்: மணிவாசகரும் பசவண்ணரும்,12.) கம்பர் போற்றும் குறள், 13.) திறனாய்வாளராக நச்சினார்க்கினியர், 14.) பாரதியின் கவிதையியல், 15.) மீண்டும் பாவாணரின் எழுச்சி, 16.) கலைஞரின் காலப்பேழையும் கவிதைச் சாவியும், 17.) குலோத்துங்கனின் மானுட யாத்திரை, 18.)தமிழ் இலக்கியம் காட்டும் வாழ்வு நெறி ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன.
இன்றைய மேலை விற்பன்னர்களின் சிந்தனைகளை முன்னிறுத்திப் பார்த்தோமானால், இந்திய இலக்கிய வரலாற்றில் சமற்கிருதத்தின் பங்கும் தன்மையும் மறுஆய்வு செய்யவேண்டிய ஒன்று. தமிழறிஞர்கள் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் வெளிப்படாத உண்மைகள் இப்பொழுது வெளிவந்திருக்கின்றன. சமற்கிருத மொழி உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளிலும் தமிழின் தாக்கம் இருப்பதைப் போலவே அவ் வெல்லா இலக்கியங்களிலும் தமிழ் இலக்கியங்களின் தாக்கம் இருப்பதாகத் தெளிவுபடுத்துகிறார்.
முதல் கட்டுரை கபிலரின் குறிஞ்சிப்பாட்டு குறித்தது. இதில் கந்தருவ மணம் களவு மணத்தினின்றும் முற்றிலும் வேறுபட்டதாயினும் தமிழின் உட்பகைவர்களால் அ்வை இரண்டும் ஒன்றே எனக் காட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுவதை் குறிப்பிடுகிறார். அறவுணர்வு சற்றுமில்லாத, பண்பாடற்ற, பகுத்தறிவுக்கொவ்வாத, மூடநம்பிக்கைகளின் அடிப்படையிலான விதிகளை யெல்லாம் மனுநூல் அடுக்கிக் கொண்டே செல்கிறது என்பதை விளக்குகிறார்.
இராபருட்டு தி நோபிலி(Robert De Nobile), சீகன் பால்கு (Ziegenbalg), எல்லீசன்(F.W.Ellis), வீரமா முனிவர்(Beschi), கால்டுவெல்(Caldwell), பரோ(Burrow, பிரான்சு வாகுரோ(Francois Gros), ஏ,எல்.பெக்கர்(A.L.Becker), கீத்து தெயிலர்(Keith Tailor), ஏ.கே.இராமானுசன், மாருட்டின் செய்மர், போப்பு அடிகளார்(Rev.G.U.Pope), சியார்சு ஆருட்டு(G.L.Hart), இலியன் ஆருடு(Leonhard), தாவீது சுலமன்(David Shulman), (R.E.Asher), பியர் மெயில்(Pierre Meile) சுனிதி குமார்(சாட்டருசி), துபையான்சுகி(Dubiansky), வாசக்கு(Vacek), பக்கு(Buck), பெல்லகிரினி (Guido Pellegrini)போன்ற அறிஞர்கள் பலர் தமிழின் சிறப்புகளைக் குறித்து விளக்கியதை எடுத்துரைக்கிறார்.
தெளிவான கவிதைக் கோட்பாடு, நீண்ட கவிதை மரபு, கவிதைக்கேற்ற மொழி வளர்ச்சி, விரிந்து பரந்த உயர்வற உயர்ந்த கவிதைப் பரப்பு எனும் தகுதியை எடுத்துக் கொண்டோமானால், மேலை விற்பன்னர்களின் கூற்றுப்படியே தமிழுக்குப் பிற செம்மொழிகள் இணையாகா என்பதை மூன்றாம் கட்டுரையில் உரைக்கிறார்.
ஈராசு பாதிரியார், சிந்துவெளிப்பண்பாடு இன்றும் தமிழகத்தில் உயிரோடிருப்பதை விளக்கியிருக்கும பொழுது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்கக்காலத்தில் அப்பண்பாட்டின் தொடர்ச்சி ஆளுமை பெற்றிருந்ததில் வியப்பில்லை என நான்காம் கட்டுரையில் தெரிவிக்கிறார்.
இவ்வாறு அனைத்துக் கட்டுரைகள் மூலமும் தமிழர்களின் ஓருலகக் கோட்பாட்டினையும் தமிழ்ப்பண்பாட்டுச்சிறப்புகளையும் தமிழ் இலக்கிய உயர்வுகளையும் தமிழின மேம்பாடுகளையும் தமிழ் மொழியின் ஒப்பற்ற செம்மையையும் பேரா.ப.ம.நா. சுட்டிக்காட்டுகிறார்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 27/ 69 )
Leave a Reply