(வள்ளுவர் சொல்லமுதம் 11 : அ. க. நவநீத கிருட்டிணன் : அ. கொடைநலமும் படைவலமும் – தொடர்ச்சி)

வள்ளுவர் சொல்லமுதம்
கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி

என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர்’

என்பர் சிவப்பிரகாசர். ஒப்புரவு செய்யும் உயர்ந்த உள்ளமுடையார் பிறர்க்கு உதவுவதைத் தமது கடப் பாடு என்று கருதினர். அவர்கள் கைம்மாறு கருதிப் பிறர்க்கு உதவுபவர் அல்லர். மாநிலத்து உயிர்கட்கு மழைவளம் சுரக்கும் மேகம் அவ்வுயிர்கள்பால் எந்தப் பயனையும் எதிர்நோக்குவது இல்லே.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு)

என்னாற்றும் கொல்லோ உலகு” என்பது வள்ளுவர் தெள்ளமுத வாக்கு. பாரியின் கொடைநலத்தைப் பாராட்டிய பாவலர் கபிலர் பெருமானும், அப் பாரியை மாரிக்கு ஒப்பிட்டு உரைப்பார் ” நாட்டில் உள்ள புலவர் பலரும், பாரி, பாரி’ என்று அவன் ஒருவனேயே பாராட்டுகின்றனர். இவ்வுலகத்து உயிர்களைப் புரத்தற்குப் பாரி ஒருவனே அன்றி மாரியும் உண்டே’ என்று வஞ்சப் புகழ்ச்சியாகப் பழிப்பதுபோலப் பாராட்டினர். “செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்பர் சங்கச் சான்றோர், பாடுபட்டுத் தேடிய பணத்தைத் தாமும் துய்க்காது மற் றவர்க்கும்வழங்காது மண்ணுள் புதைத்துவைக்கும் மாந்தரைக் “கேடுகேட்ட மானிடரே !” என்று பழித்துரைப்பார் ஒளவையார். “தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு,” என்று வள்ளுவர் வலியுறுத்துவார். முன்னே கல்வினையால் பொன்னும் மணியும் பொருளும் மருவிய பெருஞ் செல்வர்கள், ஊருணியன்ன உலகவாம் பேரறிவாளராக ஒளிர வேண்டும். உள்ளூர்ப் பழுத்த பயன்மரம் போல நயனுடையாளராகத் திகழவேண்டும். மருந்தாகித் தப்பாத மரம்போலப் பெருந்தகையாளராக விளங்க வேண்டும். ஊருணியும், பயன்மரமும், மருந்து மரமும் உயர்ந்த உள்ளம் படைத்த செல்வர்க்கு உவமைகளாக வள்ளுவரால் ஓதப்படுகின்றன.

ஊருணி நீர், ஊரிலுள்ள மக்களுக்கெல்லாம் பயன்படும். புல் பூண்டு முதலாய ஓரறிவுயிருக்கும் அந்நீர் உதவுவதாகும். ஆயினும் அந்நீர், ஊருணியி னின்று மக்களாலோ மற்ற உயிர்களாலோ எடுத்துப் பயன்படுத்தப் பெறாதொழிந்தால் ஊருணி அழிந்து போகும். அதுபோலவே ஊருணியன்ன செல்வர்கள், தம் செல்வத்தை மற்றவர்க்கு வழங்குவது தம் செல்வம் பெருகவேண்டும் என்று எண்ணும் தன்னல உணர்ச்சியாலேயே ஆகும். நடுவூர்ப் பழுத்த நன்மரம், தன் கனிகளை உதிர்த்தேயாகவேண்டும். பாழாய்ப்போவது பசு வயிற்றிலே போனால் நலந்தானே !வீணே நிலத்தில் விழ்ந்த கனிகள், உண்பவர் கையில் தடையின்றிக் கிடைத்தால் உவப்புடன் உண்ணத்தானே செய்வர். இங்ஙனம் பிறர்க்குப் பயன்தரும் நறுங்கனி விளைக்கும் நன்மரம் போன்ற செல்வர்கள், தமது வளர்ச்சி கருதித் தம் செல்வத்தை மற்றவர்க்கு வழங்குவர். அங்ஙனம் வழங்குங்கால் தம்மால் மற்றவர் பெறும் நலம் தமது புகழ் வளம்பெறுதற்குக் காரணம் என்பதை எண்ணி வழங்குகின்றனர். ஆதலின் இவர்பால் தன்னலத்துடன் பிறர் நலமும் பின்னி நிற்கிறது. மருந்து மரம், தனது வேரிலிருந்து உச்சி வரையி லுள்ள எல்லா உறுப்புக்களானும் மற்றவர்க்கு மருந்தாக உதவுகிறது. இலையும் பூவும் காயும் கனியு மாகிய எல்லாம் நல்ல மருந்துகளாகப் பயன்படும் மரங்கள் சில உள. எடுத்துக்காட்டாக வேம்பினைக் குறிக்கலாம். அது வீசும் காற்றும் மாசற்ற மருந்து என்பர் மருத்துவர். அம் மருந்து மரம், தனக்குரிய அனைத்தையும் மற்றவர்க்கு மருந்தாக வழங்கித் தன்னையே மாய்த்துக்கொள்கிறது. ஐயோ! ஒன்றொன்றாக நம்பால் உள்ள அனைத்தையும் மக்கள் கவர்ந்து செல்கின்றனரே ” என்று கவன்று, தனது பொருளே மற்றவர் கொள்ள மறுப்பதில்லை. தன்னை அடியோடு வெட்டி வீழ்த்தினாலும், தான் தரையில் விழும் வரையில் வெட்டுவானுக்கும் வெப்பு அகற்றும் தட்பமான நிழலைத் தந்துதவும் மாண்புடையதன்றோ !

குறைக்கும் தனயும் குளிர்நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்

என்பது தமிழ்மூதாட்டியாரின் அமுதமொழி. இத்தகைய மருந்துமரம் போன்ற பெருந்தகை யாளர்கள் பிறருக்கு உதவுவதே தமது கடமையெனப் பேணி வாழ்வர். “அன்புடையார் பிறர்க்கு என்பும் உரியர்” என்ற வள்ளுவர் வாய்மொழிக்குத் தக்க சான்றாகத் திகழ்வர். தன்னலம் என்பது அவர்கள் உள்ளத்தே எள்ளளவும் இருத்தற்கு இடனில்லை. பிறர் நலமே அவர்தம் வாழ்வின் பெருநோக்கமாக விளங்கும். இவர்களே தமக்கென வாழாது பிறர்க் கென வாழும் பெருந்தகையாளர்கள்.

“உண்டால் அம்ம இவ்வுலகம்……

தமக்கென முயலா நோன்றாள்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே”

என்று இளம்பெரு வழுதி, அவர்தம் பெருமையை விளக்கினர். பிறர்க்கென முயன்றுவாழும் பெருக் தகை மக்களாலேயே இந்தப் பேருலகம் அழியாது நிலவுகிறது என்பது அவ்வழுதியின் கருத்து. இதனை,

பண்புடையார்ப் பட்டுண்(டு) உலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்” என்ற வள்ளுவர் தெள்ளமுத வாக்கும் நன்கு வலி யுறுத்தும்.

இங்ஙனம் மற்றவர்க்கு உதவி மகிழ்வதையே வாழ்வின் உயர்ந்த நோக்கமாகக் கொண்டு விளங்கிய தண்டமிழ் நாட்டினர், படைவலியிலும் தலைக் கொண்டு போற்றும் ஆற்றல் பெற்று விளங்கினர். “கூற்றுவனே கொதித்து எழுந்து வந்தாலும் அஞ் சாது கூடி எதிர்க்கும் நெஞ்சுரன் உடையதே படை ” என்று படைக்கு இலக்கணம் பகர்வார் வள்ளுவர். பகைவரை வெகுண்டு நோக்கிய கண்கள், பாய்ந்து வரும் வேலைக் கண்டு இமைத்து விடுமாயின் அதுவே தோல்வி என்று கருதும் தோள்வலம் படைத்த வாள் வீரர் வாழ்ந்த நாடு நம் தமிழகம், கையில் தாங்கிய வேலை, எதிர்த்துவந்த களிற்றின்மீது எறிந்து கொன்றவீரன், தன்னைநோக்கிப் பிளிறிவரும் மற்ருெரு பெருங் களிற்றைத் தாக்குதற்கு வேல் நாடினான். தனது மார்பகத்திலேயே பகைவர் எறிந்த வேல் பதிந்திருப்பது கண்டு, அதனைப் பறித்தெடுத்துச் சிரித்து மகிழ்ந்தான். முகத்திலும் மார்பிலும் பகைவருடைய படைகள் தாக்குண்டு, விழுப்புண் படாத நாளை வீணாளாக எண்ணி வெறுக்கும் வீரர்கள் இங்கு வாழ்ந்தனர். இவ்வாறு தமிழர் படைவீரத்தைப்பற்றி, வள்ளுவர் நம் உள்ளம் துள்ளி எழுமாறு சொல்லுவார். .

பகைவர் நாட்டின்மீது படையெடுத்த கொடை யாளனாய சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் ஒன்று கூறினன்: .

‘ மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி

ஈயென இரக்குவ ராயின், சீருடை

முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;

இன்னுயி ராயினும் கொடுக்குவென்; இந்நிலத்து

ஆற்ற அடையோர் ஆற்றல்போற்ரு (து)என்

உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்

துஞ்சுபுலி இடறிய சிதடன் போல

உய்ந்தனன் பெயர்தலோ அரிதே ?

என்று வீரமொழி கூறுகின்றான். பகைவர் எனது அடிபணிந்து ‘ஈ’ என்று இரப்பாராயின் எனக்குரிய பேரரசைக் கொடுப்பது பெரிதன்று. எனது இன் னுயிரை வேண்டினும் ஈவேன். ஆனால், எனது ஆற்றலையும் உள்ளத் துணிவையும் எள்ளி நகையாடும் இழிஞன், தூங்கும் புலியைக் காலால் இடறிய குருடன் போலப் பிழைத்துபோதல் அரிது. இங்ஙனம் பேசிய நலங்கிள்ளியின் வஞ்சினத்தில் அவனது கொடைநல மும் படைநலமும் ஒருங்கு விளங்குதலைக் காணலாம்,

வள்ளுவர் சொல்லமுதம்

வித்துவான் அ. க. நவநீத கிருட்டிணன்