சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் குடும்ப நாள், சிங்கப்பூர்

 திருச்சி சமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை பங்குனி 03, 2050 / 17-03-2019 அன்று, சிங்கப்பூர் கிழக்குக் கடற்கரைப் பூங்காவில், சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில், பல இன மக்களும் கலந்துகொண்ட குடும்ப நாள் விழாவைச்  சிறப்பாகக் கொண்டாடியது.

கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் கவிஞர் திரு இறை மதியழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூர் இந்திய முசுலிம் பேரவையின் தலைவர் திரு முகம்மது கௌசு வாழ்த்துரை வழங்கினார்.

“இது போன்ற நிகழ்வுகள், சிங்கப்பூரின் ஒற்றுமை, நல்லிணக்கம், பண்பாட்டுப் பண்புகளைக் கட்டிக் காப்பதற்கும், அதன் அவசியத்தை இளையர்களுக்கு எடுத்துக்காட்டவும் வழி வகுக்கின்றன” என்று குறிப்பிட்டார் சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர்.

மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், புதிர் போட்டிகள், வண்ணம் தீட்டுதல் போட்டி, இல்லத்தரசிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரியவர்களுக்கானப் போட்டிகள், பரிசுக் குலுக்கு போன்றவை விழாவில் இடம் பெற்றன. பெரியவர்கள், இல்லத்தரசிகள், குழந்தைகள் அனைவரும் இவ்விழாவில் கலந்து முதியோர்களைப் போற்றிச் சிறப்பித்தனர். சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் திரு அமானுல்லா நன்றி கூறினார்.

முதுவை இதயாத்து