தமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை! திருந்தவும் இல்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை!
திருந்தவும் இல்லை!
‘’யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’’, ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ ஆகிய தமிழ் நெறிகள் உலகெங்கும் பரப்பப்படவில்லை. இதனால், இனம், சமயம்(மதம்) முதலானவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பெற்று உலகெங்கும் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இத்ததகைய படுகொலைகளிலிருந்து மீண்டவர்களும் இத்தகைய படுகொலைகளுக்குத் துணை நிற்கின்றனர். உலக நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய உலக அமைப்பு எதுவும் உருவாகவில்லை. இருக்கின்ற உலக அமைப்புகள் வல்லமையாளர்கள் கைப்பிடிகளில் உள்ளன. எனவே அவர்கள் ஆட்டுவிப்பிற்கேற்ப ஆடுகின்றன. எனவே, மனிதப் படுகொலைகளுக்கு எதிரான செயல்பாடுகள் இல்லை. எனவே, தமிழீழத் தேசியத் துக்கநாளின் பொழுது நாம் உலக அமைதி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வலியுறுத்துவோம்
படுகொலைகள் பற்றிய வருத்தம் இருந்தாலல்லவா, அமைதியை நாடி மக்கள் செல்வர். ஆனால் மனிதப்பேரழிவுகள் பற்றிய எந்த ஓர் எண்ணமும் இல்லாமல் அல்லவா உலகம் இயங்கிக் கொண்டுள்ளது.
உலகில் தோன்றிய முதலினம் – தாயினம் – தமிழினம், தன் தாயகப் பகுதியிலேயே அழிக்கப்பட்டது குறித்து உலகம் கவலை கொள்ளவில்லை. எனவே, தமிழ் ஈழத்தில் இனப்படுகொலை தொடருகின்றது; மலேசியாவிலும் ஆதரவற்ற அடிமை இனமாகக் கருதி இன ஒடுக்கு நடை பெற்று வருகின்றது.
பல நாடுகள் இணைந்து கூட்டாகக் கட்டற்ற வன்கொடுமைகளை அவிழ்த்துவிட்டுத் தமிழீழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்தியுள்ளன.
ஒரு தேசிய இனத்தை அல்லது சமய குழுவை முழுதாகவோ பகுதியாகவோ அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் இனப்படுகொலை என ஐநா தீர்மானத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஈழத்தில் நடந்தது இதுதானே!
மனிதக் குழு ஒன்றினை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடே இனப்படுகொலை எனப்படுகிறது.
ஈழத்தில் நடைபெற்ற செயல்பாடும் இதுதானே!
ஓர் இனக் குழுவின் உறுப்பினர்களைக் கொல்வதும் குழுவின் உறுப்பினர்களுக்கு உடலிலும் உள்ளத்திலும் கொடுந் தீங்கினை ஏற்படுத்துவதும் இனப் படுகொலை.
ஈழத்தில் நடைபெற்றதும் நடை பெறுவதும் இதுதானே!
அந்த இனக் குழுவில் புதிதாகப் பிறப்புகளைத் தடுக்கும் நோக்கில் செயற்படுவதும் இனப்படுகொலை.
கட்டாயக் கருத்தடைகள் மூலம் ஈழத்தில் இனப்படுகொலைதானே தொடருகின்றது.
சுருக்கமாகச் சொல்வதானால், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கையின் சிங்கள அரசு மேற்கொண்ட -மேற்காெள்ளும் நடவடிக்கைகளே இனப்படுகொலை என வரையறுக்கலாம்.
சிங்கள அரசு மட்டுமல்ல அதற்கு உதவிய இந்தியா முதலான நாடுகளும் இனப்படுகொலை புரி்ந்தவைதானே
இந்தியாவிற்கு அடைக்கலமாக வந்த தமிழர்களை விரட்டியடித்ததும் இனப்படுகொலைதானே!
குண்டடிபட்டும் கை கால் முதலான உறுப்புகள் இழந்தும் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்தவர்களை விரட்டியடித்ததும் இனப்படுகொலைதானே!
ஆள வேண்டியவர்களை வாழவிடாமல் அழித்த சிங்களத் தலைவர்களுக்கும் படைத்துறையினருக்கும் தண்டனை இல்லையே!
தண்டனைக்கு வாய்ப்பு இருக்கக்கூடாது என்பதற்காகப் பேரினப்படுகொலைகளை உள்நாட்டுப் போர் என்று மூடிமறைக்கின்றன உலக நாடுகள்.
சிங்கள இலங்கை அரசோ பயங்கரவாதிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றினோம் என்கிறது.
போரில் ஏற்பட்ட படுகொலைகளால் மனம்மாறிப் புத்த சமயத்தைத் தழுவிய அசோக மன்னனால்தான் இலங்கையில் புத்தம் பரவியது. போரில்லா உலகத்தை உருவாக்கப்பாடுபட வேண்டிய இலங்கை அரசு – படுகொலைகளற்ற பாரினைப் (பூமியைப்) படைக்க வேண்டிய இலங்கையின் புத்த அரசு படுகொலைகளில்தானே இன்பம் காண்கின்றது. புத்தரும் பல சமயங்களும் தோன்றிய இந்தியாவின் ஆரிய அரசும் இனப்படுகாலைகளுக்கு உடந்தையாகவும் தூண்டுதலாகவும் இருப்பதில்தானே களிபேருவகை கொள்கிறது.
10 ஆண்டுகள் ஆகியும் இனப்படுகொலைகளை இனப் படுகொலையாகக்கூடச் சொல்லாத நிலைதானே இன்றும் நிலவுகிறது. உலகம் இனப்படுகொலைக் குற்றத்தை இயல்பான குற்றமாகப் பார்க்கும் பொழுது இனப்படுகொலைக் குற்றவாளிகள் எங்ஙனம் குற்றத்தை ஒப்புக் கொள்வர்? குற்றத்தை ஒப்புக்கொள்ளாத பொழுது அதை உணர்ந்து வருந்துவது எங்ஙனம்? குற்றச்செயலுக்கு வருந்தாதவர்கள் திருந்துவது எவ்வாறு? அவர்கள் திருந்தாத பொழுது பிறரும் அக் குற்றப்பாதைகளில் செல்வதைத் தடுப்பது எப்படி?
போர் நிலததிலும் வாழ் நிலத்திலும் கொடுமையான முறையில் உயிர் பறிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நம் அஞ்சலி!
அவர்களுக்கு வீர வணக்கங்கள் செலுத்தும் இந்நேரத்தில்
தமிழீழம் தமிழர்களின் தாயகம்
இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
கொலைக்குற்ற உடந்தையாளர்களும் தூண்டியோரும் தண்டிக்கப்பட வேண்டும்
என்பதை உலகெங்கும் வலியுறுத்துவோம்!
வரும் துயர நாளிற்கு முன்னதாகவே இவர்களுக்குத் தண்டனைகள் வழங்கச் செய்து மறைந்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் உண்மையான அஞ்சலி செலுத்துவோம்!
எஞ்சியோர் உரிமை நிலத்தில் உரிமையோடு வாழ வழி காண்போம்!
தமிழீழம் மலரட்டும்! உலகில் அமைதி தவழட்டும்!
வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply