எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர்

பதவி விலக வேண்டும்! 

  கருநாடக முதல்வர் எடியூரப்பா  நாளை (19.05.2018) மாலை 4.00மணிக்கு நம்பிக்கை  வாக்கு கோர வேண்டும் என்ற நலல தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவிததுள்ளனர்.

 உச்ச மன்ற நீதிபதிகள் ஏ,கே.சிருகிரி(AK Sikri  ),  சரத்து அரவிந்து  போபுதே (SA Bobde )  அசோக்கு பூசன்( Ashok Bhushan) ஆளுநர் பதவிக்கு மதிப்பளித்து அதே நேரம் மக்களாட்சி மாண்பு காக்கப்படவேண்டும் எனச் சரியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

  யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத பொழுது தனிப் பெரும்பான்மை உள்ள கட்சிக்கு ஆட்சி அமைக்க முன்னுரிமை வாய்ப்பு அளிப்பதே முறையாகும்,  ஆனால், கோவா, மணிப்பூர், மேகாலயா, பீகார்  முதலான மாநிலங்களில் தனிப் பெரும்பான்மை பெற்றிருந்த  பேராயக்(காங்.,)கட்சி, இராசுட்ரிய  சனதா தளம் ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காமல்  பாசக கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்பட்டனர். இங்கெல்லாம் தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு அளித்திருந்தால் அக்கட்சிகள்தாம் ஆட்சி அமைத்திருக்கும்.

  இந்தத் தவறு நேரக்கூடாது எனக் கருதிக் கருநாடகாவில் தனிப் பெரும்பான்மை பெற்ற பாசகவிற்கு ஆட்சி அமைக்கும் உரிமை அளித திருந்தால் சரிதான். ஆனால், அங்கே மொத்தம் 3 கட்சிகளும் இரு தனியரும் தான் வெற்றி பெற்றவர்கள். பாசக தவிர மீதி இரு கட்சிகளும் கூட்டணி  அமைத்து ஆட்சியுரிமை கோரியுள்ளனர். இச்சூழலில் பாசகவிற்கு ஆதரவு தரும் கட்சிகள் எதுவும் இல்லை. அஃதாவது வேறு  கட்சிகளே இல்லாத பொழுது ஆதரவு வாய்ப்பு என்பதற்கே இடமில்லாது போய்விட்டது.  எனவே பாசகவின் தனிப்பெரும்பான்மையால் பயனில்லை, எனவே முதலில் 2 நாள்  அடுத்து 7 நாள் என்று கூறிக்கொண்டிரு்நத பாசக எடியூரப்பாவிற்கு சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை மெய்ப்பிக்க 15 நாள் கால வாய்ப்பு தந்துள்ள  செயல் மக்கள் நாயக முறைக்கு எதிரான செயலாகும்.

 அறுதிப்பெரும்பான்மை இல்லாத ஒருவருக்கு எதற்கு 15 நாள் கால வாய்ப்பு தர வேண்டும்?  ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள எஞ்சிய 2 கட்சிகளிலிருந்தும் பெரும்பான்மைக்கு வேண்டிய  எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியும் கொடுக்க வேண்டியவற்றைக் கொடுத்தும் விலைக்கு வாங்கத்தானே! இஃது அப்பட்டமான முறை கேடல்லவா? அதற்கு ஊக்கம் அளிக்கலாமா? ஆளுநர் கட்சி மேலிடத்திற்கிணங்கக் கட்சிக்காரராகச் செயல்படுவது மிகப் பெருந்தவறல்லவா?

 எதிர்த்துப் போட்டியிட்டுவிட்டு போட்டிக்கட்சியுடன கூட்டணி வைப்பதில் விருப்பமில்லை எனப் பேராயக்(காங்)கட்சி ம.ச.த. உறுப்பினர்கள் கூறி்த் தங்களுக்கு ஆதரவு தருவதாகப் பாசக கூறுகிறது. அப்படி என்றால், இதேபோன்ற நிலைப்பாட்டைப் பாசக உறுப்பினர்களும் எடுத்து அக்கட்சியிலிருந்து விலகலாம் அல்லவா? எனவே சட்டமன்றப் பெரும்பான்மையக் காட்டுவதற்காகப் பாெய்யான தகவல  தரிவிததுக் கால வாய்ப்பு பெறுவதே கட்சித்தாவல தடைச்சட்டத்தைக் கேலிக் கூத்தாக்கத்தான்!

  பெரும்பான்மை என்பது சட்ட மன்ற உறுப்பினர்கள்  எண்ணிக்கை அடிப்படையில் இல்லை.  வருகையின் அடிப்படையில்தான். எனவே, நாளைக்குள் கட்சி மாறுவதற்கான பேரம் படியாது என்பதால் பன்னிருவரைச் சட்டமன்றத்திற்கு வாக்கெடுப்பின் பொழுதுவரவிடாமல்  செய்து  பெரும்பான்மையைக் காட்ட எடியூரப்பா முயலக்கூடாது. ச.ம.உறுப்பினர்கள்  தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால், நாளைக்குள் ஏவல் துறைகள் மிரட்ட வாய்ப்பில்லை. குடும்பத்தினர மூலமும் உடனடியாக உரிய பேரங்களை முடிக்கமுடியாது. அவ்வாறு  இயலும்எனில் 15 நாள்வாய்ப்பு கேட்டிருக்கமாட்டார்களே! எனவே நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் முன்னதாகவே பதவி விலகுவதே எடியூரப்பாவிற்கும் அவர் கட்சிக்கும் நல்லது.

 29 தொகுதிகளில் காப்புத் தொகையைப் பறிகொடுத்து  மாபெரும் தோல்விகளைச் சந்தித்த பின்பும்  குறுக்குவழிகள் மூலம் ஆட்சிக்கட்டிலில் ஏறிப் பெரும் வெற்றியாகப் பரப்ப பாசக திட்டமிட்டு வருகிறது. எனவே கருநாடகா ஆட்சிதான் வேண்டும் என்றால் கோவா முதலான மாநில ஆட்சிகளைத் தனி்ப்பெரும்பான்மைக் கட்சிகளிடம் பாசக ஒப்படைக்கட்டும் அதுவே முறையாகும்.

 ஆளுநர் குடியரசுத்த்லைவரின் முகவர் என்றாலும் கட்சித்தலைமையின் ஆட்டத்திற்கேற்ப ஆடுபவர். எனவே கருநாடக ஆளுநர் வயூபாய் வாலா(Vajubhai Vala) கட்சி மேலிடத்திற்கேற்பவே  அறமற்ற முடிவை எடுத்துள்ளார். தன்பதவி நிலைக்கு எதிராகச் செயல்பட்டதால் அவர் பதவி விலகுவதே முறை.

அவரை இவ்வாறு செய்யத் தூண்டிய தலைமை அமைச்சர் நரேந்திர(மோடி),  பதவி விலக வேண்டும்;  அரசுப்பணிகளில் குறுக்கீடு  செய்த அமீது சா கட்சித்தலைமைப் பொறுப்பில் இருந்து விலக  வேண்டும்.

 கன்னெய், நில நெய் (Petrol, Diesel) ஆகிய எரி நெய்களின் விலை அன்றாடம்  வரையறை செய்ய்ப்படுகிறது. ஆனால், கருநாடகத் தேர்தல்களுக்காக 19 நாள் விலை வரையறை மேற்கொள்ளாமல் விலை உயர்த்தப்படாமல் பாசக அரசு பார்த்துக்கொண்டது. இதனால் 500 கோடி உரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகப் பெரும் ஒட்டுமொத்த தேர்தல் கையூட்டாகும். எனவே வெளிப்படையாகவே  தெரியும் இவ்வூழலுக்காக வெற்றி பெற்ற பாசக உறுப்பினர்களின் வெற்றி செல்லாது எனத் தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசுகளின் தேர்தல் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

மிகப்பெரும் மக்களாட்சி நாடான இந்தியாவில் மக்களாட்சி நெறிகள் தொடர்ந்து குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகின்றன மக்களாடசி மாண்புகள் நிலைக்க மேற்குறித்தவாறு எடியூரப்பா,  வாயூபாய் வாலா, நரேந்திரர்(மோடி) பதவி விலகி மக்களாடசி மாண்பைக் காத்துப் பெருமை யடையட்டும்!

இலக்குவனார் திருவள்ளுவன்