தமிழர் தலைவிதி தமிழர் கையில் :

பேர்லினில இடம்பெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம் ! 

 

பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கம் செருமன் தலைநகர் பேர்லினில் இடம்பெற்றது.

இலங்கைத்தீவின் தேசிய இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும், ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் செயற்பட்டு வருகின்றது.

கனாடாவில் இடம்பெற்றிருந்த மக்கள் அரங்கத்தின் தொடர்சியாகத் தற்போது செருமனியில் இடம்பெற்றுள்ளது.

செருமன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒத்துழைப்பும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதனை முன்னெடுத்திருந்தது.

பேர்லின் தமிழ்பள்ளிச் சிறார்களின் நடனங்கள், நாடகம், பாடல் எனப் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்றிருந்த இந்த மக்கள் அரங்கத்தில் (தமிழகம்) தமிழர் தேசிய இயக்கச் சார்பாளர் தோழர் தியாகு,  தலைமையர் வி.உருத்திரகுமாரன் சிறப்புரைகள் இடம்பெற்றிருந்தன.

செருமன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பேர்லின் சார்பாளர், செருமன் ஈழத்தமிழர் மக்களவை  சார்பாளர்  உரைகளும் இடம்பெற்றிருந்தன.

மக்கள் இயக்கத்தின் நிலைப்பாடு செயல்பாடு குறித்து சுதன்ராசு அவர்கள் கருத்துரைகளை வழங்கியதோடு, பொதுமக்களின் கேள்விகளுக்கும் மறுமொழிகள் அளிக்கப்பட்டன.

தமிழீழ மக்களின் தேசியத்தன்னுரிமை அடிப்படையிலும் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பரிகார நீதியின் அடிப்படையிலும் தமிழீழ மக்கள் தமக்கென இறைமையும்  விடுதலையும் கொண்ட தனிநாட்டை அமைத்துக் கொள்வதற்கான அனைத்து உரித்தையும் கொண்டவர்கள் என்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழீழ மக்கள் தமது தன்னுரிமையினை வெளிப்படுத்தும் மக்கள்நாயக வழிமுறையாகவே இப்பொது வாக்கெடுப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது.

தேசிய இனச் சிக்கலுக்கு அரசியற்தீர்வாக தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவு தமிழீழ மக்களின் முன்வைக்கப்பட்டு, பொதுவாக்கெடுப்பில் மக்கள் வெளிப்படுத்தும் மக்கள்நாயக முடிவுக்கு ஏற்ப அரசியற்தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அனைத்துலக ஆதரவினைத் திரட்டும் பணியினை பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் மேற்கொண்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  tmdas5@hotmail.com  TGTE 

 

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]