தமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்
15/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
16/ 69
அயோத்திதாசரின் சொல்லாடல் (2006):
ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்: அயோத்திதாசரின் சொல்லாடல் (2006) என்பதே நூலின் முழுத் தலைப்பு.
அயோத்திதாசர் குறித்துப் பேரா.ப.ம.நா. பின்வருமாறு கூறுகிறார்:
“அவர் காலத்து மேட்டுக்குடி அறிஞர்கள் பலரும் தமிழ்க் குமுகாயத்தில் பலநூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு உரிமைகள் யாவும் இழந்திருந்த அடித்தட்டு மக்களின் வாழ்வில் அக்கறை காட்டாத நிலையில், அயோத்திதாசர் அவர்களுக்கு இணையான கல்வியறிவை அரிதின் முயன்று பெற்று, தமிழ், ஆங்கிலம், பாலி, வடமொழி ஆகிய மொழிகளைக் கற்று, தமிழகத்துப் பழங்குடிகளுக்காகப் போர்க்கொடி உயர்த்தித் தமது வாழ்நாள் முழுவதும் உள்ளத் தூய்மையோடு பெரும்பாடு பட்டார். தமிழ் இனம், மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றிற்கு எதிரான உட்பகைவர்களையும், புறப்பகைவர்களையும் அடையாளம் காட்டி, அவர்களை அறிவுநிலையில் எதிர்கொள்ள வேண்டுமென்றும், வன்முறையில் ஈடுபடாமல் அறிவு நிலையில் எதிர்வினை செய்ய வேண்டுமென்றும் வற்புறுத்தி அதற்கான வழிமுறைகளை வகுத்துத் தந்தார். ‘‘பறையர் அவர், பார்ப்பார் இவர் என்ற பாகுபாட்டை வெட்டி வீழ்த்த வேண்டும் என்ற புத்த தர்மமான சுயமரியாதையை எல்லாரும் மடைதிறந்து இன்புற்று வாழ எல்லார்க்கும் சொல்வது நல்லார் கருத்தாம்’’. என்று தமது நோக்கை வலியுறுத்தித் தம் கட்டுரைகளிலும் உரைகளிலும் அவர் அதனைச் செயல்படுத்தக் காணலாம்.”
இந்நூலில்,
- தொன்மைப் படைப்பு, குலைப்பு, மீட்டுருவாக்கம்
- வேத உபநிடதங்கள்; மெய்யும் பொய்யும்
- மனுவும் கீதையும்; ஒரு குலத்துக்கு ஒரு நீதி
- வடநூல்களில் வள்ளுவம்
- குறள் காட்டும் வாழ்வு
- தமிழில் பெளத்தம்; பெளத்தத்தில் தமிழ்
- புத்த சரிதமும் ஆதி வேதமும்
- அரசியல் கட்டுரைகள்; சொல்லாடல் கலை
என்னும் தலைப்புகளில் கட்டுரைகள் அளித்துள்ளார். இவற்றில், அயோத்திதாசரின் நூல்களிலிருந்து ஏராளமான மேற்கோள்களைத் தந்து, அவருடைய கருத்துகளில் பெரும்பாலானவை இன்றைய அரசியல், குமுகாயச் சூழல்களிலும் ஏற்புடையவை என்பதை நிலைநாட்டியுள்ளார்.
அண்ணல் அயோத்திதாசர் பல துறைகளில் தமிழ் அறிஞர்களுக்கு முன்னோடியாகவும் தமிழ்க் குமுகாயத்திற்கு வழிகாட்டியாகவும் அடையாளம் காணப்பெற வேண்டியவர். தொட்ட துறையிலெல்லாம் தம் முத்திரையை ஆழமாகப் பதித்தார்; அவர் தொடாத பெரிய துறை ஏதுமில்லை; அரசியல், குமுகாயம், சமயம், கல்வி, மருத்துவம், படைப்பிலக்கியம், பத்திரிகை போன்றவற்றிலெல்லாம் அவருடைய அறிவுப் பங்களிப்பு மூலம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தினார்; இந்நாட்டில் சமயத்தின் பேரால், சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பெளத்தமே தக்க அடைக்கலம் என்பதை அம்பேத்கருக்கு உணர்த்தினார்; பகுத்தறிவு, தன்மானம், நவீனத்துவம் ஆகிய கொள்கைப் போக்குகளின் இன்றியமையாமையைப் பெரியார் ஈ.வெ.ரா. அறிந்து கொள்ளத் துணை செய்தார்; பூர்வ குடிகளின் நலன் எங்கெங்குக் கெடினும் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டும் எனும் எண்ணத்தையும் உறுதியையும் தமக்குப் பின் வந்த தனிமனிதர்களுக்கும், இயக்கங்களுக்கும், கட்சிகளுக்கும் அளித்தார்; உரிமை இழந்தவரும் மறுக்கப்பட்டவரும் கல்வி பெறுவதன் மூலமே தம்மை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதால் எளியவர்க்குப் பள்ளிகளைத் திறந்து விடல், பகலுணவு அளித்தல், கட்டணமின்றிக் கல்வி தரல் ஆகியவை உடனடியாகச் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் என்பதைப் பின்னால் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றவர்களுக்கும் தன் செயல்கள் மூலம் வழிகாட்டினார்; பழந்தமிழ் இலக்கியங்களில் இடைச் செருகல்கள் மூலமாகவும் உரைகள் மூலமாகவும் செய்யப்பட்டிருந்த மோசடிகளைப் பின் வந்த தமிழறிஞர்கள் கண்டு கொள்ள வழி காட்டினார்; அரசியல், பொருளாதார, சமயச் சிக்கல்கள் பற்றிய கட்டுரைகள் எத்தகைய தமிழ் நடையில் அமைய வேண்டும் என்பதற்கும், அரசியல் சதுரங்கத்தில் நகர்த்தப்படும் காய்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு விளைவிக்கப் போகும் இடையூறுகளை முன்னறிந்து எவ்வாறு அவற்றைத் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்பதற்கும் ஆங்கில, தமிழ்க் கட்டுரைகள் எழுதி நீதிக் கட்சியினருக்கு முன் மாதிரியாக இருந்தார்;இவ்வாறு பேரா.ப.ம.நா., அயோத்திதாச பண்டிதர் குறித்து விளக்குகிறார்.
இரண்டாவது கட்டுரை மூலம் ‘வேத உபநிடதங்களின் மெய்யும் பொய்யும்’ குறித்து விளக்குகிறார். வேத உபநிடதங்களின் உண்மையான முகத்தை மேனாட்டறிஞர்கள் மேற்கோள்கள் மூலமும் விளக்குகிறார்.
இருக்கு வேதத்தையும் மனுநீதியையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள வெண்டி தோனிகர் (Wendy Doniger) எனும் சிகாகோ பல்கலைக்கழகத்துச் சமயத்துறைப் பேராசிரியர், பிராமணர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும் சமயச் சடங்குகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் தம் பங்கை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சற்றும் அடக்கவுணர்வோ, கூச்சமோ, தயக்கமோ, மனச்சாட்சியின் உறுத்தலோவில்லாமல் பேசுவதை வேதங்களில் காணலாம் என்பார்.
வேதங்கள் மனிதரால் ஆக்கப்பட்டு வாய்வழி மரபாக வந்தவையே எனக் கணபதி விரிவாக உரைத்துள்ளதை எடுத்துரைக்கிறார்.
இவ்வாறு அறிஞர்களின் ஆய்வுரைத் துணையுடன் வேதங்களைப்பற்றிய பொய்யான பிம்பத்தை உடைக்கிறார்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply