ஆளுநர் எதிர்ப்புத் தீர்மானத்திற்கு முதல்வருக்குப் பாராட்டும் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான முறையை நீக்க வேண்டலும்

நேற்று (பங்குனி 27, 2054/10.04.2023) தமிழ்நாட்டுச்சட்டமன்ற வரலாற்றில் ஒரு முதன்மையான நாள். மாநிலத் தன்னாட்சிக்குக் குரல் கொடுக்கும்  வரலாற்றிலும் சிறப்பான திருப்புமுனை நாள். மேதகு ஆளுநர் திரு இர.நா.இரவியின் அடாவடித்தனமான போக்கிற்கு எதிராக முதல்வர் மு.க.தாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் சிறப்பிற்குரியது. இத் தீர்மானம் கொண்டு வந்து அவர் ஆற்றிய உரையும் வழியுரையாக அமைச்சர் துரைமுருகன் ஆற்றிய உரையும் சிறப்பானவை. இருவரையும் சட்டமன்றப்பேரவை உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம்.

மேலிட அறிவுறுத்தலுக்கிணங்க ஆளுநர் இர.நா. இரவி பேசும், செயல்படும் வகைகள் மக்களாட்சி நலனுக்கும் மாறானவை; அரசியல் அறநெறிக்கும் மாறானவை. பெரும்பான்மை பெறாத பிற மாநிலங்களில் காணிக்கை அளித்தும் தடம் புரளச் செய்தும் பாசக ஆட்சி அமைத்துள்ளது. அம்முயற்சியிலும் இன்னும் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் அமைதியாகப் பார்வையாளராக இருக்க வேண்டிய ஆளுநரை ஆட்டுவித்துக், கருத்துக் கலகம் நடத்திப், பேரவையின் கண்ணியத்தைக் குலைத்து ஆட்சியைச் சிதைக்க முடியுமா எனப் பார்க்கிறது. தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாகக் கூறிய ஒருவர், ஆளுநருக்கு எதிராகப் பேசினால் விளைவுகளைச் ச்நதிக்க நேரும் எனக் கூறியதும் இதன் ஒரு பகுதியே! சட்ட மன்றத்தின் மாண்பை மதிக்காமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களால் ஏற்றுச் சட்டமன்றச் செயலகத்தால் அனுப்பப்படும் சட்ட வரையங்களுக்கு(மசோதாக்களுக்கு) ஒப்புதல் அளிக்காமல் காலங் கடத்துவதும் மிகவும் கண்டனைக்குரியதே.  பொதுவாகச் சட்ட வரையங்களை ஏற்காமல் நிலுவையில் வைத்திருந்தால், ஆளுநரின் ஆய்வில் இருப்பதாகச் சமாளிப்பர். ஆனால், நிலுவை என்பது மறுப்பே என்கிறார் இந்த ஆளுநர். வெளிப்படையாக மறுப்பதற்கு ஆண்மை – ஆளுமை இல்லாதவர் இங்ஙனம் உரையாற்றுகிறார். ஒன்றிய அரசின் ஆட்டம்தான் இதுவும் என்பதால் அதுவும் தான் ஆட்டுவிப்பதால் ஏற்படும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.

இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் சட்டம் அமைதியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலும் அரசின் சீரான செயற்பாட்டிற்கு உரிய பணிகளை ஆற்ற வேண்டிய கடமையிலும் இருக்கும் முதல்வர் மு.க.தாலின் பன்முறை தாமும் பிற அமைச்சர்களும் தலைவர்களும் ஊடகத்தினரும் எடுத்துரைத்தும் அடங்காத ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது பாராட்டிற்குரியதே. தனித்தீர்மானத்தை அறிமுகப்படுத்தும் பொழுது, “இரண்டாவது முறையாக ஆளுநர்பற்றித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய விரும்பத்தகாத ஒரு சூழலை, இந்த அரசு உருவாக்கவில்லை. ஆனால் ஆளுநர், அரசியல் சட்டத்தைக் கடந்து ஓர் அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுவதால் இப்படியொரு தீர்மானத்தை இரண்டாவது முறையாக நான் முன்மொழிய வேண்டிய வலக்காரத்தை(வலுக்கட்டாயத்தை) ஏற்படுத்தியிருக்கிறார்.” எனத் தெளிவாக முதல்வர் மு.க.தாலின் பேசியுள்ளதன் மூலம், வேறுவழியின்றியே தனித்தீர்மானம் மூலம் ஆளுநரின் செயற்பாடுகளைக் குடியரசுத்தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்த்தியுள்ளார்.

ஆளுநருக்கு எதிரான முதல் தீர்மானம் இவ்வாண்டு தொடக்கத்தில் சனவரித் திங்கள், அவர் அரசின் உரையில் சிலவற்றை விடுத்தும் சிலவற்றைச் சேர்த்தும் பேசியதற்கு எதிராக நிறைவேற்றப்பட்டது. இப்பொழுது சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் வரையங்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் உரிய காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்து இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் குறித்துப் பேசக்கூடாது என்று உள்ள விதியைத் தளர்த்துவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட பிறகே முறைப்படி முதல்வரின் தனித்தீர்மானம் கொணர்ந்து ஏற்கப்பட்டுள்ளது.

இதன் உடனடி விளைவாக மேலிடம் தளர்ந்ததால் இணையவழிச் சீட்டாட்டத்திற்கான வரையத்தில் கையொப்பமிட்டு ஏற்று அனுப்பியுள்ளார். பிற நிலுவைகளையும் ஏற்று அனுப்ப வேண்டும். அவ்வாறு ஆளுநர் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் மாநில அரசுடன் மோதும் அரசியல்வாதி ஒருவரை ஆளுநராகப் பொறுப்பில் வைப்பது தவறு என்பதை உணர்ந்து அவரைக் குடியரசுத்தலைவர் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு தமிழ்நாடு விழிப்புடன் இருப்பதை உணர்ந்து அடுத்த ஆளுநரை இணக்கமாக நடக்கச் செய்யும் வகையில் வழிகாட்டி அமர்த்த வேண்டும்.

இத்தீர்மான உரையின் பொழுது முதல்வர் தெரிவித்த குறிப்பிடத்தக்க ஒன்று, குடியரசுத்தலைவர்மீது பொறுப்பு அறவுக் (impeachment) கண்டனையைக் கொணர்ந்து பணித்தள்ளலுக்கு அரசியல்யாப்பு வழி வகுத்துள்ளதுபோல் ஆளுநர் மீதும் பொறுப்பு அறவுக் கண்டனையைக் கொணர வழி வகுக்க வேண்டும் என்பதே. ஒன்றிய ஆட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மாநில உரிமைகளைக் காப்பதற்கு இது வழி வகுக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத்தலைவர் மீதே பொறுப்பு அறவுக் கண்டனை கொணர வாய்ப்பு உள்ளபோது,  அவரால் அமர்த்தப்படுபவர் மீதும் இக்கண்டனையைக் கொணருவதில் தவறில்லை. எனவே, நாடாளு மன்ற உறுப்பினர்கள் மூலமும்  அரசு நடவடிக்கை மூலமும் ஆவன செய்து விரைவில் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

இவற்றுடன் மற்றொரு தீர்மான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் சடங்கு ஒன்று உள்ளது. அதை நீக்கப் பேரவையில் தீர்மானம் கொணர்ந்து நீக்க வேண்டும். இது குறித்து, அடிமையின் அடையாளமான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தேவையில்லை! என்று முன்பே(இதழுரை, அகர முதல நாள் 16.02.2014) எழுதியுள்ளோம். ஆங்கிலேயர் ஆட்சியில் ஆளுநர், பேரவையில் திருவடி எடுத்து வைப்பதையும் திருவாய் மலர்வதையும் போற்றும் வகையில் இச்சடங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. விடுதலை நாட்டில் இதற்கு  என்ன தேவை? தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்துக் கூறுகிறது. அரசியல் யாப்பு இதனை வலியுறுத்தவில்லை. ஆளுநர் உரை என்பது அரசின் உரையே. இதனை வாசிப்பதால் அல்லது வாசிப்பதாகக் கருதுவதாக அறிவிக்கப்படுவதால் அவர் உரையாகாது. அரசு உருவாக்கும் உரைக்கு ஆளுநருக்கு எதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்? எனவே, இந்த உரையை அரசின் செயற்பாட்டு உரை என்று சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் தீர்மானம் என்பதை விலக்கி விட்டு, செயற்பாட்டு அறிக்கை ஏற்புத் தீர்மானம் என மாற்ற வேண்டும்.

நிறைவாக ஓர் ஐயம். தி.மு.க. கூட்டணி உறுப்பினர்கள் எண்ணிக்கை 159. ஆனால் அவையில் தீர்மானம் நிறைவேற்றத்தின் பொழுது 144பேர்தான் இருந்துள்ளனர். காரணம் என்ன? ஒன்றிய அரசின் காதலர்கள் யாரும் உள்ளனரா? மு.க.தாலின் கூட்டணித் தலைவர் என்ற முறையில் இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துத் தமிழ்நாட்டின் நலன் தொடர்பான எல்லா நேர்வுகளிலும் ஒருமித்த கருத்திற்கு வழியேற்படுத்த வேண்டும்.

மாண்புமிகு முதல்வரையும்  அவை முன்னவரான நீர் வளத்துறை அமைச்சரையும் பேரவை உறுப்பினர்களையும் மீண்டும் பாராட்டுகிறோம். பிற நடவடிக்கைகளையும் தொடர்ந்து விரைவில் எடுக்க வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல