தமிழ்மறை திருக்குறளே மெய்ப்பொருள் ; ஆரிய மனுமிருதியோ பொய்ப்பொருளாகும்

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு

(அதிகாரம்:மெய்யுணர்தல், குறள் எண்:351)

பொய்யானவற்றை மெய் என்று நம்புவது மயக்கந் தருவது; அறியாமையுடையது; பேதைமையானதாகும். வாழும் வாழ்க்கையில் அறிவைப் பயன்படுத்தி எஃது உண்மை எது பொய் என்பதை அடையாளங்கண்டு உண்மையை உணர வேண்டும்.

உண்மையை உணர்கின்ற பொழுது நமக்குள் படிந்திருக்கின்ற மருள் என்னும் மயக்கத்தை நாம் நீக்க முடியும். அவ்வாறு மருள் என்னும் மயக்கத்தை நீக்கினால் நம் பிறப்பு மாண்புள்ள பிறப்பாக, பொருள் நிறைந்த பிறப்பாக அமையும்.. இல்லையென்றால் நம் பிறப்பு மாண்பில்லாததாகி விடும்.

மக்களில் சிலர் மெய்ப்பொருளை உணர்ந்தவர்களாக இல்லை; பொய்ப்பொருளை உண்மையென்று நம்புகின்றனர். இத்தகு நம்பிக்கைகள் அவர்களை மூடர்களாக்கி விடுகின்றன.

ஆறறி வதுவே அவற்றொடு  மனனே

என்கிறது தொல்காப்பியம். எது சரி, எது பிழை, எது மெய் , எது பொய் என்பதை ஆறாம் அறிவாகிய பகுத்தறிவால் ஆராய்ந்து அறிய வேண்டும். இவ்வாறு ஆராய்வது மெய்ப்பொருளைக் கண்டறிய உதவும்; இவ்வாறு மெய்ப்பொருளைக் கண்டறிந்து தெளிவடைந்தவர்களே மெய்யறிஞர்கள் எனப்படுகின்றனர். அவர்கள் பெற்றுள்ள உணர்வு மெய்யுணர்வு எனப்படும்.

நம்முள் மருள் என்னும் மயக்கம் தோன்றுவதற்கும் நீங்காமல் இருப்பதற்கும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் முதலான அறக்கேடுகள் ஒரு வகையில் கரணியமாக அமைந்து விடுகின்றன.

அறியாமை இயல்பாக இருப்பதே; அந்த அறியாமை அறிவின் விரிவால் விலக வேண்டும். ஆனால் தொடர்ந்து அறிவில் தெளிவில்லாதவர்களாகவும் அறியாமையை உடைமையாகக் கொண்டவர்களாகவும் மாந்தர் இருப்பாராயின் அவர்கள் மெய்யுணர்வாளராக இருக்கவியலாது. இதனால்தான் பலர் மூடத்தனங்களில் மூழ்கி உண்மையை அறிய முடியாமல் தங்கள் வாழ்நாளைக் கடக்கின்றனர். மூடத்தனங்கள் மாந்தரை மிக மிக இழிவானவர்களாக்கி விடுகின்றன.

கயிற்றையும் பாம்பையும் பார்த்து கயிற்றைப் பாம்பு எனக் கருதுவதும் கழுதையையும் குதிரையையும் பார்த்து கழுதையைக் குதிரை என்பதும் எடுத்துக்காட்டுக்குரியவை. அதே போல் மக்களில் உலக நலனுக்கும் மக்கள் நலனுக்கும் எதிர்ப்பான முரணான நூல்களைப் பின்பற்றிச் செல்வதும் மாந்த வாழ்வுக்கும் நலத்திற்கும் ஒற்றுமைக்கும் எதிர்ப்பான நெறிகளைப் பின்பற்றுவதும் பொய்யின் பாற்படும் மருட்சியை உருவாக்குவதாகும். 

மாந்த மாண்பை உணர்த்தி மாந்த நேயத்தைப் பேணுவது தமிழ்மறையாம் திருக்குறள் மெய்ப்பொருள் உணர்த்தும் உண்மை நூலின் அடையாளமாகும். மாந்தருக்குள் பாகுபாட்டை விளைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என மாந்தப் பண்புக்கு எதிரிடையான இழிவுகளை ஊட்டும் மனுமிருதி பொய்ப்பொருள் உணர்த்தும் பொய்மை நூலின் அடையாளமாகும்.

புடை பரப்பி வீற்றிருக்கும் இயற்கை நிலம், நீர், தீ, வளி, விசும்பு எனப் பூதப்பொருள்களாக இயைந்து கிடக்கின்றது. இவ்வியற்கை கூறுகள் இயைந்து, இயங்கிக் கொண்டிருப்பதுதான் இயற்கை அமைப்பு  முறை. அந்த இயக்கத்தையும் அதன் பேராற்றளையும் மாந்த மனத்துள் உணர்கின்றோம். இதனை உணர உணர மாந்தன் மிக மிகச் சிறிய நுண்ணிய அற்ப உயிரியாகி விடுகின்றான். நான், நீ என்று செருக்கியும் தருக்கியும் திரியும் ஆணவப் போக்கிலிருந்து அகன்று அடங்கி ஒடுங்கி தன்னடக்கம் பெறுகின்றான்.

மரத்தால் செய்யப்பட்ட யானையைப் பார்த்து யானை என்பதும் மரத்தைப் பார்த்து மரம் என்பதும் இவை ஒன்றுக்குள் ஒன்று இயைந்திருப்பதை அறியாததாகும். பரந்திருக்கும் இயற்கைக்குள் மூலக்கூறுகள்  ஐம்பூதங்களாகவும் அவ்வைம்பூதங்கள் யாவும் பரம்பொருளாகவும் கிடப்பதை ஆய்ந்துப் பார்த்தால் உணரலாம். இவற்றுள் இயங்கும் இயக்கம் ஒன்றே. அதனை ஆராய்வதும் அறிவதும் அறிவியலாகவும் மெய்யறிவியலாகவும் கிடக்கின்றது. எனவே இந்தப் பேராற்றலை ஆராயாமல் அறியாமல் வெறும் கலையுரைத்த கற்பனைகளுக்குள் ஆழ்ந்திருப்பது தெளிவைத் தராது. எனவே மெய்ப்பொருளை அறிய முற்படுவோம்; பிறப்பினைப் பொருளுடையதாக்குவோம்.

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு

(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:351)

சொல் விளக்கம் :

பொருளல்லவற்றை = மெய்ப்பொருள் அல்லாதவற்றை / உண்மை அல்லாதவற்றை

பொருளென்றுணரும் = உண்மையெனக் கருதும்

மருளானாம் = அறியாமை உடையதாம் / மயக்கம்  உடையதாம்

மாணாப் பிறப்பு = மாண் ஆகாத பிறப்பு ; மாண்பும் உயர் அறிவுச் சிறப்பு இல்லாத வாழ்வு

கருத்து :

உண்மையை உணராமல் பொய்மையை நம்பிச் சீரழிவது மாண்புடைய வாழ்வாகாது.

இரா. திருமாவளவன்