(தமிழ்நாடும் மொழியும் 17 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 18

பல்லவப் பேரரசுதொடர்ச்சி

கடிகாசலம், பாகூர் இவ்விரண்டிடங்களிலும் விளங்கிய வடமொழிக் கல்லூரிகளில் முறையே நான்கு வேதங்களும், பதினான்கு கலைகளும் கற்பிக்கப்பட்டன. மேலும் பாகூர் கல்லூரியில் பதினெட்டுவகை வித்தைகளும், மறைகள், சாத்திரங்கள், புராணங்கள் முதலியனவும் சொல்லித்தரப்பட்டன.

பல்லவர் காலத்திலே சைவமும் வைணவமும் நன்கு வளர்க்கப்பட்டன. மகேந்திரன் அரசாட்சியின் தொடக்கத்தில் சமண சமயம் செல்வாக்குப் பெற்றபோதிலும், சைவ சமயக் குரவர்களான அப்பர், சம்பந்தர் ஆகியோரின் ஓயாத உழைப்பாலும், அவர் தம் பாக்களின் செல்வாக்காலும் சமணமும் பௌத்தமும் நிலை தடுமாறின. சங்ககாலத்திலே அரும்பிய சைவ வைணவ சமயங்கள் பிற்காலப் பல்லவர் காலத்திலே (கி. பி. 700-900) ஓங்கிய மரங்களாகச் செழித்துச் சீரும் சிறப்பும் கொண்டுவிளங்கின. மன்னன் ஆதரவும், மக்களின் பக்கபலமும் சேரச்சேர, காற்றொடு சேர்ந்த கனலெனச் சைவ வைணவ சமயங்கள் தமிழ்நாடு முழுதும் பரவலாயின.

பல்லவ மன்னர்கள் பழைய கோவில்களைப் புதுப்பித்தனர்; புதிய கோவில்களைக் கட்டினர். செங்கற் கோவில்கள் எல்லாம் கருங்கற் கோவில்களாக மாறின. மொட்டை மலைகள் எல்லாம் கோவில்களாக மாற்றப்பட்டன. மலைகளின் சரிவுகளிலே குடைவரைக் கோவில்கள் குடையப்பட்டன. மலைகள் கற்களாக உடைக்கப்பட்டு, அடுக்கப்பட்டுக் கோவில்களாகக் கட்டப்பட்டன. நாட்டுமக்களிடையே சமயக் குரவர்களின் பக்திப் பாடல்கள் வேகமாகப் பரவின. இதனால் – சைவமும் வைணவமும் நன்கு செழித்தன; ஓங்கின. பிற சமயங்கள் வீழ்ந்தன.

பல்லவர் வளர்த்த கலைகள்

தமிழக வரலாற்றிலே பல்லவர்க்குப் பல பொன்னேடுகளை அளித்தவை அவர்களால் வளர்க்கப்பட்ட கலைகளே. பல்லவர்கள் பல கலைகளையும் வளர்த்தபோதிலும் அவர்களுக்குப் பெருமை அளித்த கலைகள் சிற்பக்கலையும் கட்டடக் கலையுமாம். பல்லவராட்சியில் மண்ணாலும், மரத்தாலும் ஆன கோவில் எல்லாம் கற்கோவில்களாக மாறின. தமிழகத்திலே முதன் முதல் குகைக் கோவில்களும் கற்றளிகளும் ஏற்படுத்திய பெருமை பல்லவர்க்கே உரியது. பல்லவர் காலத்தில் செழிப்படைந்த கலைகள் சிற்பக்கலையும் (Sculpture). கட்டடக்கலையும் (Architecture) ஆம். பல்லவர் காலக் கோவில்கள் இரு வகைப்படும். முழு மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக் கோவில்கள்; கற்களை அடுக்கி அமைக்கப்பட்ட கற்றளிகள். சிற்பக் கலையை வளர்த்த பல்லவருள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், இராசசிம்மன், அபராசிதவர்மன் என்போராவர். இந்நால்வரும் தனித்தனியே சிற்பக் கலையை வளர்த்தனர். ஒவ்வொருவரும் தமக்கெனத் தனிவகையான சிற்பங்களை வகுத்தனர். எனவே பல்லவர் காலச் சிற்பக்கலை நான்கு விதமான முறைகளை உடையது.

கி. பி. 600-630 வரை தொண்டை நாட்டையும் சோழ வள நாட்டையும் ஆட்சி புரிந்த பல்லவப் பேரரசனாகிய மகேந்திரவர்மனே கோவில் கட்டிட அமைப்பில் புதியதொரு முறையை உண்டாக்கினான். தென்னாட்டில் முதன் முதலில் கற்கோவில்களைக் கட்டத் தொடங்கிய பெருமை இவனுக்கே உரியது. பெரிய பெரிய கற்பாறைகளைக் குடைந்து, அவற்றுள் தூண்களும், சுவர்களும், முன்மண்டபமும், கருப்பக்கிருகமும் அமைத்து, கற்கோவில்கள் கட்டப்பட்டன. இக்கோவில்களை அமைத்த வகையைப்பற்றி மகேந்திரனது மண்டகப்பட்டு குகைக்கோவிலில் உள்ள வடமொழிச் சாசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது.

“செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் முதலியன இல்லாமலே மும்மூர்த்திகளுக்கு இக்கோவில் விசித்திர சித்தன் என்னும் பேரரசனால் கட்டப்பட்டது.” இதன் மூலம் விசித்திரசித்தன் என்னும் சிறப்புப் பெயருடைய மகேந்திரவர்மன், செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு கோவில் எழுப்பும் பழைய முறையை மாற்றி, கருங்கற் பாறைகளைக் குடைந்து குகைக் கோவில்களை அமைத்தான் என்பது நன்கு புலனாகும். இவ்வாறு இவன் அமைத்த குகைக் கோவில்கள், மாமண்டூர், தளவனூர், திருச்சி, பல்லாவரம் சீயமங்கலம், சித்தன்னவாசல், வல்லம், மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மேலைச்சேரி என்னும் இடங்களில் உள.

அடுத்து பட்டத்திற்கு வந்த மாமல்லனாகிய நரசிம்மவர்மன் தன் தந்தையைப் போன்று சிறந்த கலைஞன் ஆவான். இவன் மலைகளையே கோவில்களாக மாற்றினான். இவனும் இவனுக்குப் பின்னர் பட்டத்திற்கு வந்த பரமேசுவரவர்மனும் மகாபலிபுரம், சாளுவன் குப்பம் முதலிய இடங்களில் குகைக் கோவில்களையும், இரதக் கோவில்களையும் அமைத்தனர். மேலும் மாமல்லன் காலத்தில் கோவிற் சுவர்களில் பலவகை மிருகங்கள், பூக்கள், கொடிகள் செதுக்கப்பட்டன. எனவே அவை கோவிற்சுவரையே மறக்கச் செய்தன. மாமல்லபுரத்திலுள்ள பாண்டவர் இரதங்கள் நரசிம்மன் அமைத்தவையே. அர்ச்சுனன் தவம், இடையன் பால் கறத்தல் ஆகிய சிற்பங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்ந்துவிடும் தகுதியுடையன. தவம் செய்யும் பூனை, அதன் அருகில் அச்சம் ஏதுமின்றி இருக்கும் சுண்டெலிகள் ஆகியன அமைந்த சிற்பம் பெரிதும் கலை நுணுக்கம் வாய்க்கப்பெற்று மாமல்லனின் கலை விருப்பத்தையும் சிற்பியின் நுண்கலைத்திறனையும் உலகம் உள்ளளவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பல்லவர் துறைமுகமாகிய கடல்மல்லை நரசிம்மவர்மன் காலத்தில் பன்மடங்கு விரிவடைந்தது. தனது சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்பதை நரசிம்மவர்மன் இதற்குச் சூட்டவே அன்றுமுதல் கடல்மல்லை மாமல்லபுரமாயிற்று. இன்று இது மகாபலிபுரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு தமிழகத்தின் சிற்பக் கலையின் சீரிய பண்புகள் அனைத்தையும் காணலாம். திருமங்கை மன்னரால் பாராட்டப்பெற்றுள்ள இப்பதி செங்கற்பட்டிற்குக் கிழக்கே இருபது கல் தொலைவில் உள்ளது.

கடல் மல்லையில் நாம் காணும் முதல் மண்டபம் மகிடாசுரமர்த்தனியின் குகைக்கோவிலாகும். இம் மண்டபத்தின் முற்புறத்தில் ஆறு தூண்கள் உள்ளன. இதன் உட்பாகம் கற்பாறையைக் குடைந்ததாகிய ஒரு கூடமாக விளங்குகிறது. இதனது நடுச்சுவர் மையத்தில் சிவன் உமையுடன் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டு களிக்கலாம். நான்கு கரங்களோடு நந்தியின்மீது பதித்திருக்கின்ற இணையடியோடு இறைவன் விளங்குகின்றான். அயனும் அரியும் கூப்பிய கைய ராய் இறைவனுக்குப் பின்புறம் நிற்கின்றனர். இறைவியின் மடியில் தமிழ்க் கடவுள் முருகன் வீற்றிருக்கின்றார். இதன் தென்புறச் சுவரில் சிற்பி வெகு அழகாக துர்க்கை அரிமா மீதேறி மகிடாசுரனோடு போர் புரியும் காட்சியினை வெகு அற்புதமாய்ச் செதுக்கி உள்ளான். இங்குள்ள சிற்ப வேலைகள் எல்லாம் சுவர்ச்சிற்பமாக அமைந்துள்ளன. இம்மண்டபத்தில் காணும் குறிப்பிடத் தகுந்த மற்றொரு காட்சி ஆயிரம் தலைகளோடு கூடிய ஆதிசேடன் மீது திருமால் அரிதுயில் கொள்வதாகச் செதுக்கி இருப்பதாகும்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்