நான் என்பது  செருக்கல்ல; எனது நம்பிக்கை!

 

வானந் தொடுந் தூரம்

அது நாளும் வசமாகும்,

பாடல் அது போதும்

உடல் யாவும் உரமேறும்;

 

பாதம் அது நோகும்

பாதை மிக நீளும்,

காலம் ஒரு கீற்றாய்க்

காற்றில் நமைப் பேசும்;

 

கானல் எனும் நீராய்

உள் ளாசை வனப்பூறும்,

மூளும் நெருப் பாளும்

நிலமெல்லாம் நமதாகும்;

 

கனவே கொடை யாகும்

கடுகளவும் மலை யாகும்,

முயன்றால் உனதாகும்

உழைப்பால் அது பலவாகும்;

 

நேசம் முதலாகும்’நொடி

தேசம் உனதாகும்,

அன்பில் பிரிவில்லை’ உயி

ரெல்லாம் அமுதூறும்

 

வெற்றி நிலை யாகும்

மனம்போல அது மாறும்,

கடல் மூடும் அலைபோல

நினைப் பொன்றே  வரமாகும்;

 

நானென்று கொண்டாய்

இனி நாமென்று காணேன்

உடல் தீதொன்று மில்லை

உள் உள்ளே நான் நீயே!

*வித்தியாசாகர்