இங்கிலாந்து நாட்டின் “ஐந்தாவது உலகப் பொருளாதார முன்னேற்றம் – தமிழ்  சாதனையாளர்கள் விருது விழா – 2019” கடந்த திங்கட் கிழமை நாள் 09.09.2019 அன்று இலண்டன் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. பல நாட்டுத் தொழிலதிபர்களின் முன்னிலையிலும், இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அங்குள்ள பிற தமிழ் அமைப்பினர்களின் போற்றுதலோடும் இவ்விருது விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

உலகத் தமிழர் அமைப்பு (WTO ) மற்றும் கூட்டமைப்பின் தலைவர் திரு. சேகப்பு இரவிபாலன் இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்த,  நடன ஆசிரியர், சன் தொலைக்காட்சி புகழ்மங்கை திருமதி.திவ்யா தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில், உயர்த்திரு. நியா கிரிஃபித், மார்ட்டின் வொய்ட்பீல்டு, வீரேந்திர(சர்மா)முதலான இலண்டன் (MP) பாராளுமன்ற உறுப்பினர்களும், செனிவா நாட்டின் (MP) பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. சசீந்திரன் முத்துவேல், டாடா (TATA ) நிறுவனத்தின் இங்கிலாந்து பிரிவுத் தலைவர் திரு. டிம் எல் சோன்சு, தென்னாப்பிரிக்கா, பிரான்சு, குவைத்து, செருமன், துபாய், இந்தியா, கொரியா போன்ற நாடுகளிலிருந்து பல சாதனையாளர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மதிப்புமிகு மூத்த தொழிலதிபர் உயர்திரு. விசிபி சந்தோசம், தென்னாப்பிரிக்கா தொழிலதிபர் திரு. கார்த்திகேசன் முத்துசாமி, குவைத்து தொழிலதிபர் திரு. ஐதர் அலி போன்றோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், நம் சல்லிக்கட்டு நாயகன் திரு. கார்த்திகேய சேனாபதி, குவைத்து கவிஞர் திரு. வித்தியாசாகர், இலண்டன் தொழிலதிபர் திரு. சாகீர் உசேன்,, பிரான்சிலிருந்து வந்திருந்த திருமதி. இரேசுமி  சவகர் கணேசு, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் திரு. குமரன் (கவுண்டர்), இளம் தொழில் வல்லுநர்கள் திரு. சுகேந்திரன் மூலே,  திரு. அகமது வதூது  முதலானவர்க்குச்  சாதனையாளர் விருதும் வழங்கி இம்மாமன்றம் பல நாட்டுத் திறமையாளர்களைச் சிறப்பித்தது.

                இவ்விழாவில் கவிஞர் திரு. வித்தியாசாகர் அவர்களுக்கு அவரது தமிழ் ஆளுமை, படைப்பு நேர்த்தி,  பல தமிழ்ப் பணித் திறன்களைப் பாராட்டி  “இலக்கியச் சிகரம்” என்ற பட்டமும் தந்து (WTO ) உலகத் தமிழர் அமைப்பு பெருமை சேர்த்தது.

         தொழில் முன்னேற்றம், பல நாடுகளில் உள்ள தொழில்வளம் பற்றியெல்லாம் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் கருத்து பரிமாறிக்கொண்டனர். அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் விருது பெற்ற அனைத்து திறனாளர்களுக்கும் வாழ்த்தினைத் தெரிவித்தனர். வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் அமைப்பின் தலைவர் உயர்திரு. சேக்கப்பு இரவிபாலன்  நன்றி பாராட்டி விழாவை நிறைவு செய்தார்.