நீ உயர - கவிஞர் சீனி நைனா முகமது
நீ உயர
உயரத் துடிக்கிறாய் உரிய வழியெது
உனக்குத் தெரியுமா தம்பி – கொஞ்சம்
உட்கார்ந்து முதலில் சிந்தி
உயர்வுத் தாழ்வுக்கோர் உண்மைக் காரணம்
உள்ளத்தில் இருக்குது தம்பி – அதை
ஒழுங்கு படுத்துநீ முந்தி
வெள்ளத்தின் அளவே தாமரை மலருமே
வெருங்குளமானால் அழியும் – புது
வெள்ளத்தில் மீண்டும் தழையும்
உள்ளத்தில் உயர்ந்தால் உயர்ந்திடும் வாழ்க்கை
உன்வச மாகிடும் உலகம் – இதை
உணரத் திருக்குறள் உதவும்
நல்லதை நினைத்து நல்லதை உரைத்தால்
நல்லவை வந்துனை சேரும் – நீ
நடந்தால் வாழ்த்துகள் கூறும்
பொல்லாத நரியின் குணங்கள் வளர்ந்தால்
புள்ளி மான்களா கூடும் – இந்தப்
புவியே உனைவெறுத் தோடும்
விதைக்கிற எண்ணம் செயலாய் முளைக்கும்
விளைநிலம் தானே உள்ளம் – அது
வீணாய்க் கிடந்தால் பள்ளம்
விதைப்பதை விதைத்தால் முளைப்பது முளைக்கும்
விதியெனக் கொண்டால் விதிதான் – இதை
விளங்கிட சொன்னால் மதிதான்
நன்றி : பின்னணிப் படம்: இராமலட்சுமி இராசன், பிளிக்கர்
Leave a Reply