(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

23/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

24 / 69

வள்ளலார் முதல் சிற்பி வரை(2008): (தொடர்ச்சி)

 பதின்மூன்றாவது கட்டுரை பாரியின் இரங்கபாக்கள் குறித்த ஆய்வை மேற்கொள்கிறது.

புறநானூற்றில் நாற்பதுக்கும் மேற்பட்ட கையறுநிலைப் பாடல்கள் இருப்பினும் பாரிக்கான பாடல்களே மிகுதி; இவற்றுள் ஒன்றைத் தவிர ஏனையவை கபிலரால் பாடப்பெற்றவை. வேர்துசுவொர்த்து கவிதையுடன்  கபிலரின் இரங்கற்பாவை ஒப்பாய்வு செய்து தமிழ்ப்பாக்களின் சிறப்பை விளக்குகிறார்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்

எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.(புறநானூறு 112)

இவ்வாறு பாரிமகளிர் தம் தந்தைக்காகப் பாடிய இரங்கற்பாவை உலக இலக்கிய வரலாற்றில் ஓர் அரிய இலக்கிய நிகழ்ச்சி என்கிறார்.

நண்பனை யிழந்தகவிஞன், மனைவியை யிழந்த கணவன், காதலியை யிழந்த காதலன், புரவலனை யிழந்த புலவன் ஆகியோர் தாமே பாடும் இரங்கற்பாக்கள் உலகவிலக்கியத்தில் பலவிருக்கலாம். தந்தை யிழந்த மகனோ மகளோ தானே பாடும் இரங்கற்பா புறநானூற்றிலுள்ள ஒன்றைத் தவிர வேறிருப்பதாகத் தெரியவில்லை.

ஈபுரு மொழியில் விவிலியத்தில் மகனையிழந்த தந்தையின் புலம்பல் உரைநடையில் இடம் பெறுகிறது. அதில் அவன் துயரம் செயற்கையான கவிதை உத்திகளும் அணிநலன்களும் இல்லாமல் இயல்பாய் அமைந்து நம் உள்ளத்தை உலுக்குகிறது. பிற மொழிகளில் உள்ள இதையும் பிற இரங்கற்பாக்களையும் நினைவில் கொண்டு பாரிமகளிரின் பாடலைப் பார்ப்போமானால் அதன் முழுமையான இயற்கைத் தன்மையை உணரமுடியும்.

மேலைக் கவிஞர்களான மிலட்டன், செல்லி, விட்டுமென் போன்றோர் தமது இரங்கற்பாக்களில் தனிமனித இழப்பை உலகின் துயரமாக விரிவுபடுத்த ஒரு பகுதியை ஒதுக்கி விடுவார்கள். ஆனால், பாரிமகளிரின் கவிதை அதனையும் எளிதில் சாதித்து விடுகிறது.

பதினான்காம் கட்டுரை புறநானூறு வீரயுக இலக்கியமா என்பது குறித்து ஆராய்கிறது.

பல்வேறு அறிஞர்கள் வீரயுக இலக்கியம் குறித்துக் கூறும் வரையறைகள், கருத்துகள், வாய்மொழி இலக்கியங்கள் ஆகியவற்றைப் பேரா.ப.ம.நா. அழகுறத் தொகுத்துத் தந்துள்ளார்.

மேலை வீரயுகக்கோட்பாட்டு அடிப்படையில் கைலாசபதி சங்கக்காலத்தை வீரயுகமாக அடையாளம் கண்டார்.  அவருக்கு முன்னோடியாக, 1927இல் தமது ‘இந்திய வீரயுகம்’ எனும் நூலில் என்.கே.சித்தாந்தா, 1952இல் வையாபுரியார் தம் ‘காவியக் காலம்’ நூலில், சாட்டுவிக்கு அறிவித்துள்ள வீரயுகப்பண்புக் கூறுகள் சில முற்சங்கக் கவிதைகள் காட்டும் மன்பதையில் காணப்படுவதாக அறிவித்தனர். 1958 இல் சே.ஆர்.மார்(எட்டுத் தொகை பற்றிய ஆய்வேட்டில்) சங்க இலக்கியப்பாடல்களை வீரயுகப்பாடல்களாகக் கண்டார். எனினும் தெ.பொ.மீ.(தமிழ் இலக்கிய வரலாறு சங்கக்காலம் – 1981) முதலான அறிஞர்கள் கைலாசபதியின் கருத்தை மறுத்தார்கள். இவற்றையும் பேரா.ப.ம.நா. நமக்கு எடுத்துரைக்கிறார்.

கிரேக்க வீரயுகப் பாடல்கள் போர் வெறியையும் அழுக்காறு, பேராசை போன்ற தீக்குணங்களையும் பாராட்டுவன.போரின் கொடுமையையும் மடமையையும் எடுத்துரைத்து மன்னர்களைப் போரைத் தவிர்க்குமாறு வேண்டும் பாடல்கள் தமிழில் உள்ளன.

“புறநானூற்றுப் பாடல்களை மேலை நாட்டார் சுட்டுகின்ற வீரயுக இலக்கியங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் முருகியல் அணுகு முறையில் அவற்றின் கவிதைத் தரத்தை நுட்பமாகப் பார்த்தாலும் தமிழ் இலக்கிய வீரயுகம் புறநானூற்றுக்கு முந்தியதாக இருந்திருக்க வேண்டுமென்பது தெளிவாகும்” என முடிவு கட்டுகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்  25/ 69)