பாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன! – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 19/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
20/ 69
தேவநேயப் பாவாணர்: சொல்லாய்வும் சொல்லாடலும் (2017)
தமிழின் தொன்மை, தனித்தன்மை, மூல மொழியாகும் தாய்மை, பிற மொழிகள் கடன்பெற்ற சொல்வளம் முதலியவற்றை பாவாணர் வாழ்ந்த காலத்துப் புறப்பகைவர்களும் அகப்பகைவர்களும் எள்ளி நகையாடினர். ஆனால், இன்றைக்கு உலக அறிஞர்கள் அவற்றை ஏற்றுப் போற்றுகின்றனர்.
இச்செய்தியைக் குறிப்பிடும் பேரா.ப.மருதநாயகம், கடந்த முப்பது ஆண்டுகளாக மேலைநாட்டு மொழியியல் அறிஞர்களால் ஆய்வு மேற்கொண்டு ஏற்கப்பெற்ற கருத்துகளின் அடிப்படையில் பத்துக் கட்டுரைகளில் பாவாணரின் சொல்லாய்வுத் திறத்தை விளக்கியுள்ளார்.
மொழி யாராய்ச்சி மட்டுமன்றி, ஆரிய மதத்திற்குத் தொடர்பில்லாத தமிழ மதம் குறித்தும் முதல் நூலாக விளங்கும் திருக்குறள் குறித்தும் பாவாணர் தெரிவிக்கும் ஆய்வுரைகளையும் நாமறியத் தந்துள்ளார்.
முன்னுரை முடிவுரையுடன் பின்வரும் பன்னிரு தலைப்புகளில் ஆய்வுரை வழங்கியுள்ளார்.
1.) என்றுமுள தென்தமிழ்: பாவாணரின் முதற்றாய் மொழி; 2.) பாவாணரின் மொழியியல் கோட்பாடுகள்; 3.)இன்றைய நோக்கில் பாவாணரின் அறைகூவல்கள்; 4.) மீண்டும் பாவாணரின் எழுச்சி; 5.)பாவாணர் பார்வையில் வடமொழி வரலாறு; 6.) இந்திய மொழிக் குடும்ப ஆய்வு; 7.) தமிழர் மதம்; 8.) வள்ளுவமும் தமிழ் மரபும்; 9.) தமிழ் இலக்கிய வரலாறு: பாவாணர் பார்வையில்; 10.) தமிழ்-வடமொழி உறவு 11.) உலக மொழிகளில் தூய்மை இயக்கங்கள்; 12.) இனப்பற்று : தமிழரும் மேலை அறிஞரும்.
பாவாணரின் சொல்லாய்வு, தனியாய்வுகளையும் அன்றைய பாவாணர் கருத்துகளை இன்றைய மேனாட்டார் ஏற்றுவருவதையும் தொடர்பான ஒப்பாய்வுக் கருத்துகளையும் தம் ஆய்வுக் குறிப்புகளையும் இந்நூலில் வழங்கியுள்ளார். இதில் இடம் பெற்றுள்ள 11 ஆவது தலைப்பான ‘உலக மொழிகளில் தூய்மை இயக்கங்கள்’ தனிச் சிறு நூல் வடிவில் திருமண அளிப்பாக வெளியிடப்பட்டது. அது குறித்த குறிப்புகள் தனியே உள்ளன.
ஒரு சொல்லைத் தமிழ்ச்சொல்லாக மெய்ப்பிக்கும் பொழுது வேர்ச்சொற் பொருளின் பொருத்தம்,மரபு, இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு ஆகியவற்றையும் கணக்கில் கொள்வார் என்பதைத் தெரிவிக்கிறார்.
“பாவாணர் மேற்கொண்ட சொல்லாய்வு ஏற்புடைத்தன்று என்று அதனை முற்றுமாகப் புறக்கணித்துத் தப்ப முயலும் அவர் காலத்திருந்த சமற்கிருத மொழியாளரும் தமிழ் வல்லாரும் பின்னைய தலைமுறையினரும் அவரது முடிவுகளில் சிலவற்றையேனும் எடுத்துக் கொண்டு ஏதுக்கள் காட்டி முறையாக மறுத்துத் தமது கருத்தை யாவரும் ஏற்கும் வண்ணம் நிலைநாட்டும் முயற்சியில் என்றும் ஈடுபட்டதில்லை; அவரது தொடர்ந்த அறைகூவல்களிலிருந்து விலகி ஓடினார்களேயன்றி அவற்றுள் ஒன்றுக்கேனும் நேரான விடையளிக்க இதுகாறும் முன்வந்தாரிலர்” என்று இந்நூலில்நமக்கு உணர்த்துகிறார்.
தமிழின் தொன்மைக்கான ஆதாரங்கள் பெருகி வந்தபின்னர், ஆராய்ச்சிப் போலியர் தொன்மை ஒரு சிறப்பாகுமா எனக்கேட்டுத் தமிழின் சிறப்பைக் குலைக்க முயன்று வருகின்றனர். ஆம். தொன்மை ஒரு சிறப்புதான் எனப் பாவாணர் வழி இந்நூலில் உணர்த்தியுள்ளார்.
தமிழினத்தையும் தமிழ் மொழியையும் தமிழ்ப்பண்பாட்டையும் சிறப்பித்துப் பாடியவர்களையும் தமிழ் இனம், மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் உயர்வை ஆழ்ந்த ஆய்வுகள் மூலம் நிலைநாட்டிய பாவாணர் போன்றோரையும் தமிழகத்து இளைய தலைமுறையினர் அடையாளம் கண்டுகொண்டு உரிய பாராட்டை வழங்காமல் இருப்பது பெருங்கொடுமை எனத் துயரத்துடன் குறிப்பிடுகிறார்.
பாவாணரின் ஆராய்ச்சி முடிவுகளைத் தொகுத்துத் தருவதோடு நில்லாமல், அவரது கருத்துகளை அரண் செய்யும் மேலை மொழியியல் வல்லுநர்களின் அண்மைக்கால ஆய்வுகளையும் நமக்கு நன்கு விளக்கியுள்ளார்.
பாவாணரின் ஆய்வு நூல்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெறாதவர்கள் அவரைப்ற்றி அறிய உதவும் கைந்நூலாக இந்நூல் விளங்குகிறது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 21/ 69 )
Leave a Reply