போராளி அறிஞர் இலக்குவனார் – பேரா.ப.மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 67/69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
68/69
-
Ilakkuvanar: Scholar as Warrior
(அறிஞர் இலக்குவனார்: போராளியாக)
பேராசிரியர் சி.இலக்குவனார் குறித்துத் தமிழில் சில வரலாற்று நூல்கள் வந்துள்ளன. சாகித்திய அகாதெமியும் வெளியிட்டுள்ளது. அவர் ஆய்வு குறித்து ஆய்வேடுகளும் வந்துள்ளன. எனினும் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பால் அயல் மொழியாளராலும் அறியப்பட்ட அவர் குறித்த ஆங்கில நூல் எதுவும் வரவில்லை. இலக்குவனாரின் கவிதைகளைத் தொகுத்து ஆய்வு நூல் வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ள பேரா.ப.மருதநாயகம் அதற்கு முன்னதாக அறிஞர் இலக்குவனார்: போராளியாக(Ilakkuvanar: Scholar as Warrior) என்னும் ஆங்கில நூலை வெளிக் கொணருகிறார்.
தகைசால் பேராசிரியராக, அறிஞராக, இலக்கியத் திறனாய்வாளராக, இலக்கணப் புலவராக, மொழியியல் ஆய்வாளராக, இதழாளராக, மொழிபெயர்ப்பு வல்லுநராக, யாவற்றினும் மேலாகப் பதவி இழப்புகளுக்கும் சிறைத் தண்டனைகளுக்கும் அஞ்சா நெஞ்சினராகப் போற்றப்படும் பேரா.சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமையை இதில் விளக்கியுள்ளார். தமிழினம், மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பைத் தம்முடைய எழுத்துகளின் மூலம் புலப்படுத்தியதோடு, அவற்றைக் காக்கக் களத்தில் இறங்கிப் போராடிய பெருமையும் இவருக்கு உண்டு.
முதல் கட்டுரை இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பின் சிறப்பை விளக்குகிறது. பேரறிஞர் அண்ணா மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தின்போது போப்பாண்டவரிடம் அளித்த இரண்டு நூல்களில் இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வும் ஒன்றாகும். அதனை அவர், “Tolkaappiyam is a capsule of Tamil Culture” என்று அறிமுகப்படுத்தினார். இக்கருத்தை இலக்குவனாரின் நூல்களிலிருந்தே அண்ணா பெற்றிருக்க வேண்டும். தொல்காப்பியரின் கால வரையறை, தொல்காப்பிய இடைச் செருகல்கள், தொல்காப்பியர் குறிப்பிடும் அந்தணர் மறை சமற்கிருத வேதத்தைக் குறிக்கவில்லை, தொல்காப்பியம் மூல நூலே, அயல்மொழிச் சொற்களைத் தமிழ்மைப்படுத்தியே எழுத வேண்டும், ‘நிருத்த’ என்னும் நூலை இயற்றிய யசுகர், சில இடங்களில் தொல்காப்பியரைப் பின்பற்றியுள்ளார், தொல்காப்பியர் குறிப்பிடும் என்ப, என்மனார் ஆகிய சொற்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வாழ்ந்த தமிழ்ப்புலவர்களையே குறிப்பிடுகிறது, ‘உம்’ என்பது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் குறிக்கும், அரிசுடாட்டிலுக்கு முன்னரே தமிழ்ப்புலவர்கள் செழுமை வாய்ந்த இலக்கியங்களைப் படைத்திருந்தனர் முதலான இலக்குவனாரின் பல்வேறு முடிபுகளை இதில் உரைக்கிறார்.
இரண்டாம் கட்டுரை ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்:சங்கக்காலம்’ என்னும் நூல் குறித்தது. சங்க இலக்கியக் கருவூலத்தினை நாடும் நகரங்களும், மக்கள், அரசு, கல்வி, இல்லறம், கடவுட் கொள்கை, மெய்யுணர்வுக் கொள்கை, பண்பாடு, நாகரிகம், பொழுதுபோக்கு, பழக்க வழக்கங்கள், வணிகம், போர்கள், புலவர்கள் ஆகிய தலைப்புகளில் பேரா.இலக்குவனார் அளித்துள்ளதைக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியம் முதலான நூல்களின் கால வரிசைக்கிணங்கத் தமிழ் இலக்கியக் காலங்களைப் பகுத்துள்ளதையும் எடுத்துரைக்கிறார்.
துணைக்கண்டமாக இருக்கும் பகுதியில் அக்காலத்தில் குமரி முதல் இமயம் வரை தமிழே வழங்கி வந்தது; பல பெயர்களால் குறிக்கப்பெறும் ஒரு கடவுட் கொள்கையே அக்காலத் தமிழர்கள் அறிந்தது; தொல்காப்பியரும் திருவள்ளுவரும் பெளத்தரோ சமணரோ அல்லர்; கிரேக்கம், உரோம், அரபு நாடுகளுடன் தமிழர்கள் கடல் வழி வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்; கற்றறிந்த சிலரே அறிந்திருந்த சங்க இலக்கியத்தை மக்களிடையே பரப்புவதற்காகச் ‘சங்க இலக்கியம்’ என்னும் வார இதழை நடத்தினார்; சங்க இலக்கியங்களில் தமிழ் என்னும் சொல் காணப்படுவதால் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் காணப்பெறும் திராவிட என்னும் சொல்லில் இருந்து தமிழ் என்னும் சொல் உருவானது எனக் கூறுவது முற்றிலும் தவறாகும்; என்பன போன்ற பேரா.சி.இலக்குவனாரின் முடிவுகளை நமக்கு விளக்குகிறார்.
சங்க இலக்கியங்களை மக்களிடம் எடுத்துச் சென்ற முதல் நூலாக வும் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் துணை செய்யும் கருத்துக் கருவூலமாகவும் இலக்குவனாரின் இந்நூல் விளங்குகிறது.
மூன்றாவது கட்டுரையாக இலக்குவனாரின் திருக்குறள் தொடர்பான நூல்கள் குறித்து விளக்குகிறார். அமைச்சர் யார்? எல்லாரும் இந்நாட்டு அரசர்,வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், திருக்குறள்-எளிய பொழிப்புரை ஆகிய நூல்களே அவை. மேலும் பொதுமக்களிடையே திருக்குறளைப் பரப்புவதற்காக இலக்குவனார், குறள்நெறி(தனிச்சுற்று இதழ்), குறள்நெறி திங்களிருமுறை இதழ், குறள்நெறி நாளிதழ், குறள்நெறி ஆங்கிலத் திங்கள் இருமுறை இதழ் ஆகிய இதழ்களையும் நடத்தியுள்ளார்.
திருக்குறளின் கட்டமைப்பை ஆழமான ஆய்வுக்குட்படுத்தி,ஒவ்வொரு பாலிலும் அதிகார வைப்பு முறையையும் ஒவ்வோர் அதிகாரத்திலும் பாடல் வைப்பு முறையையும் உரையாசிரியர்களிலிருந்து வேறுபட்ட வகையில் எடுத்துக்காட்டி, அதன் செம்மையை(integrity of the text) இலக்குவனார் புலப்படுத்துகிறார்.
திருக்குறளுக்குப் பரிமேலழகர் முதலானோர் ஆரியச் சார்புடன் தவறான விளக்கம் அளித்தமைக்கான மறுப்புகளை நடுநிலையுடன் ஆய்ந்து அளித்துள்ளார்; திருக்குறளுக்கு அறிவியல் நோக்கில் விளக்கங்கள் அளித்துள்ளார்; மாணாக்கர்களிடையேயும் மக்களிடையேயும் ஆய்வாளர் களிடையேயும் திருக்குறளை ஆழப் பதித்துள்ளார் என்கிறார் பேரா.ப.ம.நா.
நான்காவதாகப், பேரா.இலக்குவனாரின் பாவியங்களை நமக்கு அறிமுகப்படுத்தி விளக்குகிறார். இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுதே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’(1933) என்னும் தனித்தமிழ்ப்பாவியத்தை எழுதியுள்ளார். ஒப்பற்ற ஆங்கிலப் புனைவியல் கவிஞராகிய கீட்சின் ‘இசபெல்லா’ என்னும் ஆங்கில இலக்கியத்தைத் தழுவி எழுதியது என்ற வகையில் மொழிபெயர்ப்பு ஆக்கத்திலும் சிறப்பாக ஈடுபட்டுள்ளார். மூலநூலின் படியாக(நகலாக) இல்லாமல், இலக்குவனாரின் காவியம் மூலநூலின் சிறப்பை வெளிப்படுத்தும் தனித்தமிழ்ப் பனுவலாகச் சிறக்கக் காணலாம். பேச்சிலும் எழுத்திலும் சமற்கிருதம் கலக்கவேண்டிய தேவை இல்லை என்பதை எடுத்துக்காட்டும் வண்ணம் இனிய எளிய தமிழில் பாவியம் படைத்துள்ளார்; அவர் கையாண்ட உவமைகளைப் பின்னர் பெருஞ்சித்திரனார், இலெனின் தங்கப்பா முதலானோர் பின்பற்றியுள்ளனர்; இவ்வாறு எழிலரசி பாவியத்தின் சிறப்புகளையும் அதன் கதைச்சுருக்கத்தையும் நயமான பாடல்வரிகளுள் சிலவற்றையும் நமக்குப் பேரா.ப.ம.நா.அளிக்கிறார்.
தம் தமிழ்க்காப்புப் போராடடங்களினாலும் நேர்மையாலும் பேரா.இலக்குவனார் தாம் பணியாற்றிய கல்வி நிறுவனங்களின் தலைவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளானார், பணி நீக்கம் செய்யப்பட்டார்.அத்தைகய நேரங்களில் தம் சிந்தையைப் படைப்புலகின் பக்கம் திருப்பினார்.
அவ்வாறு உருவானதுதான் ‘துரத்தப்பட்டேன்’ என்னும் சிறு பாவியம். இந்நூல் இவரின் தன்வரலாற்று நூலாக அமைந்துள்ளது. விருதுநகர் செந்திற்குமார நாடார் கல்லூரியில் பணியாற்றிய பொழுது அரசியல் காரணங்களால் பணி நீக்கம் செய்யப்பெற்றார். இவருக்கு ஆதரவாக மாணவர்களும் பொதுமக்களும் கிளர்ந்தெழுந்தனர். அப்பொழுது திருக்குறள் முதலான இலக்கிய நூற்கருத்துகளைப் பெய்து எளிய நடையில் ஆசிரியப்பா வகையில் இந்நூலை அளித்துள்ளார். இந்நூல் பெரும்பெயர் பெற்ற தமிழறிஞர்கள் எழுதியுள்ள தன் வரலாற்று நூல்களுக்கு முன்னோடி என்பதோடு அவற்றிற்கான முன்மாதிரியும் ஆகும்.
வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை
அன்னியர் வாக்கு வன்னியர்க் கில்லை
நாடார் வாக்கைப் போடார் பிறர்க்கு
செட்டியார் வாக்குக் கிட்டிடா பிறர்க்கு
தேவர் வாக்கு வேறெவர்க்கும் இல்லை
முதலியார் வாக்கு முதலியார் தமக்கே
என அன்றைய அரசியல் சூழலைப்படம் பிடித்துக்காட்டியுள்ளமை இன்றைக்கும் பொருந்துகிற தல்லவா?
சாதிமுறைகள் சாகுநாள் என்றோ
என அவர் கேட்பது இன்றைக்கும் கேள்வியாக இருக்கும் அவலம்தானே உள்ளது!
புதுக்கோட்டையில் வாழ்ந்த கல்விப்புரவலர் அண்ணல் சுப்பரிமணியனாரிடம் ஆற்றுப்படுத்தும் மற்றொரு பாவியம் மாணவர் ஆற்றுப்படை. தமிழ்ச்சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான ஆற்றுப்படையை இக்காலப் பாடுபொருள்களுக்கும் பயன்படுத்த இயலும் என்பதற்குத் தலையாய சான்றாகத் திகழ்வது இந்நூல்.
பிறவியில் எவரும் பேதையர் அல்லர்
வாய்ப்பும் வசதியும் வாய்க்கப் பெற்றால்
எவரும் பெரியராய் இனிதே உயரலாம்
என மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
ஆற்றுப்படை என்னும் பண்டைத்தமிழரின் இலக்கிய வகையைப் பயன்படுத்தி இக்காலச் சூழலுக்கேற்ப இவர் படைத்துள்ள இலக்கியப்பணியைப் பேரா.ப.ம.நா. பெரிதும் பாராட்டுகிறார்.
பெரியார், அண்ணா, நேரு, திரு.வி.க. பாரதி, பாரதிதாசன் முதலான ஆன்றோர்களைப்பற்றிய சொல்லோவியப் பாடல்களைப் பேராசி.இலக்குவனார் படைத்துள்ளார். புறநானூற்றுத் துறையான இயல்நிலை வாழ்த்துபோல் இவற்றைத் திறம்படவும் அழகுபடவும் அளித்துள்ளார்.
‘பழந்தமிழ்’, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ முதலான இவரின் பிற நூல்களில் வெளிப்படும் பேரா.இலக்குவனாரின் மொழியியல் ஆய்வுத்திறனையும் பழந்தமிழ்ச்சிறப்புகளை எடுத்தோதும் பெருமிதப் பாங்குகளையும் பேரா.ப.ம.நா.விளக்குகிறார்.
தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பால் பிறநாட்டு அறிஞர் உலகால் அறியப்பட்ட இலக்குவனாரின் பணிச்சிறப்புகளையும் அறியும் வண்ணம் வாழ்க்கை ஓவியமாக இந்த ஆங்கில நூலைப் பேரா.ப.ம.நா. படைத்துள்ளார். அடுத்து இலக்குவனாரின் கவிதைச் சிறப்புகளை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்னும் இவர் நோக்கமும் சிறப்பாக நிறைவேறும் எனலாம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 69/69)
Leave a Reply