(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

7/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம் 8/ 69

 

பாரதியின் புதுமைப்பெண் குறித்துப் பதினேழாவது கட்டுரையை அளித்துள்ளார்.

நாட்டு விடுதலையில் வேட்கை கொண்டிருந்து பாரதியார் பெண்ணுரிமை பேசுவதிலும் பெருமகிழ்வு கொண்டிருந்தார் என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறார்.

பெண்களைப் பழித்தும் தூற்றியும் அவர்களுக்குக் கல்வியும் பிற நலன்களும் நல்காது அடிமைப்படுத்திக் குழந்தை மணம் மூலமும் கைம்பெண் மறுமணம் மறுத்ததன்மூலமும் சொல்லொணாக் கொடுமைக்கு உட்படுத்தியிருந்ததைக் கண்டு மனம் புழுங்கினார். பெண்களின் நிலை பற்றிய தமது கருத்துகளைக் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் தெளிவாக்கினார். பெண்ணுரிமைபற்றிப் பேசிய காந்தியடிகளும் விவேகானந்தரும் இவரது மதிப்பிற்குரியவர்கள். எனினும்  பெண்களின் நலனுக்கு எதிராக அவர்கள் பேசினால் உடன் எதிர்க்கத் தயங்கவில்லை.

கைம்பெண் மறுமணம்பற்றிச் சிந்திக்காமல் இருப்பது நல்லதென்று காந்தியடிகள் கூறியதற்குக் காந்தியடிகளைக் கண்டித்தார் பாரதியார். பெண் விதவைகளின் தொகையைக் குறைக்க வழி கேட்டால், சிரீமான் காந்தி ஆண் விதவைகளின்தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்கிறார் எனக் கேலி கூறிக் கண்டித்தார்.

மேல் சாதியாருக்குள்ளே ஆண்களின் தொகையைக் காட்டிலும் பெண்களின் தொகை அதிகமாக இருக்கிறது. இதனால், ஒவ்வொரு கன்னிகைக்கும் தனிதனிக் கணவன் கிடைப்பது அரிதாக இருக்கையில் ஒருத்திக்கே ஒருவர்பின் ஒருவராக இரண்டு  மூன்று கணவர் கிடைப்பது எப்படி என்று விவேகானந்தர் கேட்டபொழுது பாரதி சீறினார். விவேகானந்தர் மிக நீசத்தனமான வழக்கமொன்றுக்குத் தம்மையறியாமல் பொய்முகாந்தரம் கூறத் தலைப்பட்டிருக்கிறார் என்று சினந்தார்.

இக்காலப் பெண்ணியலாளர்க்குப் பாரதியின் பெண்ணுரிமைச் செயல்பாடுகள் நிறைவளிக்காமல் போகலாம். ஆனால், அக்காலத்தில் தொலைநோக்குடன் பெண்ணுரிமைச் செயல்பாடுகளில் அவரது பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்கிறார்.

பத்தினின் உரையாடலியம் என்பது பதினெட்டாவது கட்டுரை.

இரசிய அறிஞர் மிக்கேல் பத்தின்(Mikhail Bakhtin) இருபதாம் நூற்றாண்டு இலக்கியக் கோட்பாட்டில் தனியிடம் பெறுபவர். இருபதுகளிலும் முப்பதுகளிலும் இவர் எழுதிய கருத்தாழமிக்க இலக்கியக் கோட்பாட்டுப் படைப்புகள் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பால் எண்பதுகளில் புகழ் பெற்றன. புதினவகைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பது அவர் நம்பிக்கை.  புதினங்களில் குறிப்பிடத்தக்க இடம் உரையாடல்களுக்கு உண்டு. அந்த வகையில் இவர் சுட்டும் உரையாடலியம் இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது.

சிலப்பதிகாரம் ஒரு நாவல் காப்பியம் என்பது பத்தொன்பதாவது கட்டுரை.

உலகக்காப்பியங்களில் முதல்நிலையான தனித்தன்மை உடையது சிலப்பதிகாரம். இதன் புதுமை, புதினத்தன்மை ஆகியவை குறித்து இக்கட்டுரையில் பேரா.ப.ம.நா. விளக்ககிறார்.

இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம், கட்டமைப்பு, பாடுபொருள், காப்பியக் கூறுகள்  ஆகிய யாவற்றிலும் சமற்கிருதம், மேலைநாட்டுக் காப்பியங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டிருப்பதைப் பல நூல்களும் கட்டுரைகளும் தெரிவித்துள்ளன. உ.வே.சா. முத்தமிழும் கொண்டு விளங்குதலின் இயலிசை நாடகப் பொருள்தொடர் நிலைச்செய்யுளென்றும் நாடகஉறுப்புகளை உடைத்தாதலின் நாடகக் காப்பியமென்றும் பெயர் பெறும் என்பார். இத்தகைய சிறப்பு மிக்க சிலப்பதிகாரத்தைப் புதினக் கூறுகள் உள்ளமையால் புதினக் காப்பியம் என்கிறார்.

சிலப்பதிகாரத்தில் மங்கல வாழ்த்துப்பாடல் முதல் இறுதியிலுள்ள வரந்தருகாதை வரை  நாட்டார் வழக்காறு இடம் பெற்றுள்ளது. தொன்ம நிகழ்ச்சிகளையும் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் கூறும் நாட்டுப்புறப் பாடல்கள் இடம் பெறுகின்றன. நாட்டுப்புற மக்களின்நம்பிக்கைகளும் ஆசைகளும் இன்ப துன்ப வுணர்வுகளும் அவர்கள் வழிபடும் சிறு தெய்வங்களும் அவர்களது பண்பாட்டைக் காட்டும் பழக்க வழக்கங்களும் உயர் குடுமு்பத்தார் வாழ்க்கைக்கும் பண்பாட்டிற்கும் அளிக்கப் பெற்றுள்ள முதன்மையைப் பெறக்காணலாம்.சிலப்பதிகாரம் பாடவும் ஆடவும் அமைந்த காவிய நாடகமாகத்திகழ்கிறது.

இவ்வாறு தெரிவிக்கும் பேரா.ப.ம.நா. இளங்கோ அடிகள் பத்தினின் புதினக் கோட்பாட்டைப் பொய்யாக்கும் வண்ணம் காப்பியத்தைப் புதினப்பங்கில் படைத்துள்ளதாக விளக்குகிறார். பத்தின் புதினம் இக்கால வாழ்க்கையோடு தன்னை இரண்டற  இணைத்துக் கொண்டுள்ளதென்று கூறுகிறார். ஆனால், இளங்கோ அடிகள் தம் காப்பியத்தில் காப்பியக் கூறுகளோடு பாமர இலக்கிய வகைகளின் கூறுகளையும் முருகியல் இன்பம்மிகும் வகையில் சேர்த்துச் செய்துள்ளார். மேலை இலக்கியங்கள் பலவற்றில் ஆழங்கால்பட்டவரான பத்தினுக்குக் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலேயே புரட்சிக் காப்பியமான சிலப்பதிகாரம் தோன்றியதை அறியும் வாய்ப்பு கிட்டாமல் போயிற்று. அவர் இதனை அறிந்திருந்தால், தாசுட்டாவெசுக்கியின் புதினங்களைப் போன்று இளங்கோ அடிகளின் காப்பியத்தையும் உச்சி மீது வைத்துக் கொண்டாடி இருப்பார். குறிப்பாக, இந்திர விழா ஊரெடுத்த காதை, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை ஆகியவற்றின் பாடுபொருள்கள் புதினத்தன்மையுடன் விளங்குவதைப் பத்தின் பெருமகிழ்வுடன் குறிப்பிட்டு இருப்பார்.  இவ்வாறு சிலம்பின் புதின இயல்பைக் கூறும் பேரா.ப.ம.நா. சிலப்பதிகாரம் ஒரு புதினக் காப்பியம் எனச் சிறப்பாக விளக்குகிறார்.

இருபதாவதாகப் ‘புதிய வரலாற்றியம்’ என்னும் கட்டுரையை அளித்துள்ளார்.

புதிய வரலாற்றியம்(The New Historicism) என்பது 1952இல்  அமெரிக்கப் பேராசிரியர் கிரீன்பிளாட்டு(Greenblatt) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட திறனாய்வுப் பார்வை. இது மனித இயல் கல்விக்குப் புது வலு தந்தது; எண்பதுகளில் இதன் செல்வாக்கு வியத்தகு அளவில் பரவியது; இலக்கியம், குமுகாய வரலாறு, கலை வரலாறு, படக்கலைக்கல்வி முதலிய அறிவுத் துறைகளிலெல்லாம் தாக்கங்களை ஏற்படுத்தியது; இதனால் சிதைவாக்கத் திறனாய்வின் புகழ் (Deconstruction) மங்கத் தொடங்கியது. இவ்வாறு கூறும் பேரா.ப.ம.நா. புதிய வரலாற்றியம் குறித்து நமக்கு நல்லதோர் அறிமுகத்தை இக்கட்டுரையில் தருகிறார். இதன் நிறைகுறைகளைக் காலம் செல்லச் செல்லத்தான் தெளிவாக உணரமுடியும் என்றும் தெரிவிக்கிறார்.

பெண்கொலை புரிந்த நன்னன் குறித்து இருபத்தோராவது கட்டுரையை அளித்துள்ளார்.

‘இந்து’ ஆங்கில நாளிதழில் 20.10.1996 அன்று வெளிவந்த ஆனைமலை மசானி அம்மன்கோயிலில் உள்ள கல்வெட்டுப்றறிய செய்தியின் தொடர்ச்சியாக இக்கட்டுரையை அளித்துள்ளார். இரவி ஆறுமுகம் என்பார் அக்கல்வெட்டுச் செய்திக்கும் பரணரின் குறுந்தொகைப்பாடல் ஒன்றிற்கும் உள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டியிருந்தார். கல்வெட்டின்படி, கொங்குநாட்டைச்சேர்ந்த ஆனைமலையின் தலைவன் நன்னன் கொன்ற குற்றமற்ற பெண்ணொருத்தியின் நினைவாகக் கட்டப்பட்ட கோயில் இஃது எனத் தெரிய வந்துள்ளது.

நன்னனூர் என்றும் உம்பற்காடு என்றும் வழங்கப்பெற்ற ஆனைமலையில் ஆற்றங்கரையில் நன்னன் ஒரு மாமரத்தைப் போற்றி வளர்த்து வந்ததாகவும் அதன் பழத்தைத் தின்பார் கொடிய தண்டனைக்கு ஆளாவர் என்று ஆணை பிறப்பித்திருந்ததாகவும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஓர் இளம்பெண் நீரில் தானாக விழுந்து மிதந்து வந்த பழத்தைத் தின்றதாகவும் இதனை அறிந்த நன்னன் அவளைக் கொல்ல முடிவு செய்ய அவளது தந்தை பெண்ணின் எடைக்கு எடை தங்கத்தால் சிலையும் 81 ஆண் யானைகளும் தர முன்வந்ததாகவும் அதற்கும் உடன்படாது நன்னன் பெண்ணைக் கொன்றதாகவும்  வரலாற்றுச் செய்தி உள்ளது. இது கி.மு.500 இல் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதுவர்.

குறுந்தொகையின் 292ஆம் பாடலில்

பெண்கொலை புரிந்த நன்னன் போல

என உவமை வழி இச்செய்தி தெரிவிக்கப்படுகிறது.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்

 

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 9/ 69)