தலைப்பு-இலக்குவனார் பிறந்தநாள் உறுதிமொழி, இலக்குவனார் திருவள்ளுவன், இதழுரை ; thalaippu_ilakkuvanar-piranthnaal-uruthi-_ilakkuvanar-thiruvalluvan-ithazhurai

இலக்குவனார் பிறந்த நாளில்

அயல்மொழித் திணிப்புகளை அகற்ற

உறுதி் கொள்வோம்!

 

 கார்த்திகை 1 அல்லது நவம்பர் 17 தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் பிறந்த நாள். இவ்வாண்டு அவரின் நூற்றுஏழாம் பிறந்த நாள்.

தமிழ்நலப் போராளியாக எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்தவர் பேரா.சி.இலக்குவனார்.

அவர் அறிவுரைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே எழுத்து என்பதற்கு எதிரான போர்க்குரலாகும். ஏதோ, இராசுட்டிரிய சேவா சங்கத்தின் அச்சுப்பதிப்பான பா.ச.க. அரசுதான் இவ்வாறு மொழித்திணிப்பில்  ஈடுபடுவதாக இன்றைய தலைமுறையினர் எண்ணக்கூடாது. காங்கிரசு எனப்படும் பேராயக்கட்சியின் தலையாய கடமையே ஆரியத்திணிப்பையும் இந்தித்திணிப்பையும் செயற்படுத்துவதே! வடக்கே  இந்தியத் தேசியம் அல்லது இந்துத் தேசியம் எனக் கூறிக் கொண்டு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும்  இதுதான் நிலைமை.

பணத்தாள்களில் சமற்கிருதத்தையும் தேவநாகரியையும் திணிப்பதற்காகப் புழக்கத்தில் உள்ள 500 உரூபாய்,1000 உரூபாய் பணத்தாள்களைப்  பா.ச.க. அரசு செல்லாதவை என அறிவித்து  மக்களை இன்னலில் ஆழ்த்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தித்திணிப்பு குறித்து  வைகோ, இராமதாசு, தாலின் முதலான தமிழ கத்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே!  ஆனால், மத்தியில் ஆளும் பொறுப்பில் இடம் பெற்ற பொழுது தமிழகக் கட்சிகள் இது குறித்துக் கவலைப்படவில்லை. இந்தியைப் பரப்புவது தொடர்பான ஆய்வுக்குழுவில் இடம்பெற்று வெளிநாட்டுச் சுற்றுலாவிற்கும் சென்று வந்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது எதிர்க்குரல் எழுப்புவதும் பதவிப்பொறுப்பில் இருந்தால் ஆரியத்தின் காலடியில் பணிந்து கிடப்பதும்  மக்கள் நலனுக்கு எதிரானவையே!

இந்தியா விடுதலைபெற்றுப் பேராயக்கட்சி(காங்கிரசு) ஆட்சி பீடத்தில் அமர்ந்ததிலிருந்து சமற்கிருமதமயமாக்கப்பட்ட இந்தித்திணிப்பு நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. துறைகளின்  பெயர்கள், பதவிப்பெயர்கள், திட்டங்களின் பெயர்கள், முழக்கவரிகள், முத்திரை வரிகள், பாடத்திட்டங்கள் என எங்கும் எதிலும் ஆரியத்திணிப்புதான்.  எப்பொழுதோ ஒரு முறை எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகக் கட்சிகள், பின்னர் அடங்கி விடுகின்றன. ஆட்சியில், ஊடகங்களில்  என எங்கும் இந்தித்திணிப்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவது குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை,

அயல்மொழி திணிக்கப்படும் இடங்களில் நம் அன்னை மொழியாம் தமிழ் அகற்றப்படுகின்றது  என்பதைப் புரிந்து மக்களுக்கு உணர்த்த வேண்டிய தமிழகக் கட்சிகளும் தமிழ் அமைப்பினரும் வாளாவிருக்கின்றனர். மிகச்சில தமிழ் அமைப்புகள் குரல் கொடுத்தாலும் அது எடுபடாவண்ணம் ஆரவாரச் சூழலே உள்ளது.

தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் இந்தி விளம்பரங்கள் பெருகி வருகின்றன. ஐயா,  அம்மா எனப் பண்புடன் அழைக்க அருந்தமிழ்ச் சொற்கள் இருக்க (ஞ்)சி என அயலெழுத்தைப் பெயருடன் சேர்த்து அழைக்கும் பழக்கமும் பெருகி விட்டது.

ஆட்சியில், சமயத்தில், வழிபாட்டில், இசையில், என எத்துறையாயினும் தமிழ், தான் இழந்த இடத்தை இன்னும் மீட்கப் போராடிக் கொண்டுள்ளது. கல்வியில் தமிழ் காணாமல் போய்க்கொண்டுள்ளது. தமிழை வாழ வைக்க வேண்டிய  அரசே கல்விக்கூடங்களில் தமிழைத் துரத்தி வருகின்றது. தமிழ் இல்லா இடத்தில் இந்தி அழுத்தமாக அமர்வது எளிதாகும் அன்றோ?

அரசியல் கட்சிகள், வாக்காளர்களைக் கவர்வது குறித்து எண்ணாமல் வாக்காளர்களின்  தமிழ் மொழி நலன்,  தமிழ் இன நலன் குறித்துச் செயலாற்ற வேண்டும்.

  தமிழ் அமைப்பினர் கட்சி சார்பற்றுச் செயல்பட்டுத் தமிழைத் தமிழ்நாட்டிலாவது வாழ  வைக்க வேண்டும்! தாயக மண்ணில் தமிழ் வாழ்ந்தால் தரணியெங்கும் தமிழ் தழைக்கும்!

எனவேதமிழுக்காகவே போராடித்தமிழாகவே வாழ்ந்த தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் பிறந்த நாளில், அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி கொள்வோம்!

ஒன்றுபட்டுச் செயல்பட்டு வாகை சூடுவோம்!

பேராசிரியர் இலக்குவனார்  விடுத்த பின்வரும் வேண்டுகோள்களை உள்ளத்தில் நிறுத்தித் தமிழை நிலை நிறுத்துவோம்!

எழுத்தாம் உடல் அழிந்தபின்னர், மொழியாம் உயிர் வாழ்வது  எங்ஙனம்? ஆகவே எல்லா மொழிகளுக்கும் ஒரே எழுத்து என்னும் கொள்கையை இன்றே இன்னே தடுத்தல் வேண்டும். ஒரு மொழியை அழித்து அதன் மக்களைப் பிறமொழியாளர்க்கு அடிமையாக்குவதற்கு இதனினும் கொடிய திட்டம் கிடையாது. ஆகவே ஒரே எழுத்து என்ற கொள்கையை உடனே மடியச் செய்ய வேண்டும். தமிழர்களே விழிமின். விழிபோன்ற மொழியைக் காக்க விரைமின்

குறள்நெறி (மலர்1: இதழ்12): ஆனி 18,1995;  01.07.1964

ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே உடலாகும். உடலாம் எழுத்தை அழித்தபின் உயிராகும் மொழி வாழ்வது எங்ஙனம்? ஆகவே ஏனைய மொழிகளை அழித்துவிட்டு இந்திமொழி ஒன்றை மட்டுமே நிலைக்கச் செய்வதற்கு ஒல்லும் வகையால் எல்லாம் ஓயாது முயன்று திட்டமிட்டுச் செயல்புரிந்து வருகின்றனர்.

   இந்திய மொழிகளின் தாய் எனக் கருதத்தக்க நம் தாய் மொழியாம் தமிழையிழந்த பின்னர் நாம் வாழ்வது எற்றுக்கு? மொழியிழந்து, வாழ்விழந்து, மானமிழந்து வாழச் செய்வதா மக்களாட்சி முறை?

 … …..  ….

  இந்திமொழி எழுத்தைத் தமிழுக்குரிய எழுத்தாக ஆக்குவதைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். ஒற்றுமையின் பேரில் நம் உயிரனைய மொழியை அழிக்க வரும்  திட்டத்தை உயிர் கொடுத்தேனும் தடுத்த நிறுத்த ஒன்றுபட்டெழுதல் தமிழரின் தலையாய   கடனாகும். வேற்றுமைகளை மறந்து வீறுகொண்டு எழுமின். வெல்க தமிழ்.

குறள்நெறி (மலர்1 இதழ்9): வைகாசி 2,1995: 15.5.1964

 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை: அகரமுதல 160, ஐப்பசி 28, 2047 / நவம்பர் 13 , 2016

AkaramuthalaHeader