சங்கத்தமிழ் என்று பெயர் சூட்டலாம்!

தமிழ்நாட்டில் ஓடும் வண்டிக்கு எதற்குச் சமக்கிருதப்பெயர்?

தமிழ் அறிஞர் எதிர்ப்பு

 

சென்னை, ஏப்,6-

தமிழ்நாட்டில் ஓடும் தொடரிக்கு(இரயிலுக்கு)ச்சமக்கிருதப் பெயர் வைப்பது ஏன் என்று இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

 

அண்மையில், சென்னைக்கும் மதுரைக்கும் இடையில் மிகுவிரைவுத் தொடரியை இயக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் ஓடும் இந்த வண்டியின் பெயரில் தமிழ் இல்லை. அதன் பெயர் ‘சென்னை -மதுரை தேசசு சிறப்பு இரயில்’ என்பதாகும்.

 பொதுவாகத் தமிழார்வம் மிக்கத் தொடர் வண்டித்துறை அதிகாரிகள் பொறுப்பில் இருந்த பொழுதும் தமிழ்நாட்டுடன் நல்லுறவில் இருந்த பொழுதும் சேரன், சோழன், பாண்டியன், உழவன் என்பன போன்ற தமிழ்ப்பெயர்களை வைத்துள்ளனர்.

அதே நேரம் சிறப்புத் தொடரிகளுக்கு இந்திய அரசு சமற்கிருதப் பெயர்களையே சூட்டுகிறது. அந்த முறையில் மிகு விரைவு  ஆடம்பரத் தொடரியை  தேசசு (Tejas) என்று அழைக்கிறது.

மும்பை-கார்மலி, புதுதில்லி-சண்டிகார், இலக்குனோ-ஆனந்தவிகார் நகரங்கள் இடையே இதுபோன்ற தொடரிகள் இயங்குகின்றன. இனி சென்னை-மதுரை இடையே வியாழன் தவிர பிற 6 நாட்களிலும் இந்தத் தொடரி இயங்கும்.

ஏழைகளுக்கு எட்டாத தொலைவில் இதன் கட்டணம் உள்ளது.

 இதுவொரு புறமிருக்க நாம் மத்திய அரசைக் கேட்க வேண்டிய கேள்வி. தமிழ்நாட்டில் இயங்கும் இதற்குத் தமிழ்ப்பெயர் வைத்தால் என்ன? தேசசு /Tejas என்பது பொதுவான பெயர்; எனவே அவ்வாறுதான் அழைக்க வேண்டும் என மத்திய அரசு கூறும்.

இச்சமற்கிருதச் சொல்லானது பகட்டான / உயர் இன்பம் தரக்கூடிய / ஆடம்பரமான என்பனவற்றை இந்த இடத்தில் குறிக்கிறது. இதனை  நாம் ‘செழுமைச் சிறப்புத் தொடரி’ எனலாம். பொதுவான பெயர் என்னவாக இருந்தாலும் நாம் இச்சிறப்புத் தொடரிக்குச் சிறப்பான தமிழ்ப்பெயரைச் சூட்டலாம் அல்லவா?

எனவே, சங்கம் நடத்தித் தமிழ் வளர்த்த மதுரைக்குச் செல்லும் இந்தத் தொடரிக்குச் ‘சங்கத் தமிழ்’ என்று பெயர் சூட்ட வேண்டும்.

 மக்கள் நாவில் நடமாடிய வேண்டிய பெயர்களாக இல்லாமல், எந்த மக்களும் பேசாத சமற்கிருதத்தில் ஏன் பெயர் சூட்ட வேண்டும்?  மத்தியில் எந்த ஆட்சி இருந்தாலும்  எந்தத் திட்டமாக இருந்தாலும் எந்தக் கட்டடமாக இருந்தாலும் எந்த ஊர்தியாக இருந்தாலும் சமற்கிருதப் பெயர்களையே சூட்டும் கொடுமைக்கு  நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டாவா?

இந்த வகையில் தொடர் வண்டிகளுக்கு மத்திய அரசு சூட்டியுள்ள சில பெயர்களைப் பார்ப்போம்.

Duronto Express : Duronto என்பது  Doorantam என்னும் சமற்கிருதச்சொல்லின் திரிபு. நெடுந்தாலைவு என்று பொருள். சிலர் கருதுவதுபோல் வங்காள மொழியில் இருந்து இச்சொல்லைப் பயன்படுத்த வில்லை. இடை நிறுத்தம் இல்லா நெடுந்தொலைவு செல்லும் விரைவு வண்டிகளைத்தான் இப்படிக் குறிப்பிடுகின்றனர். எனவே,  நெடுந்தொலைவு செல்லும் இவ் விரைவு வண்டிகளை, நெடுவிரைவி எனலாம்.

Garib Rath Express : Garib Rath என்பது சில வகை வண்டிகளின் பெயர். ஏழைகளின் வண்டி/ஏழைகளின் தேர் என்னும் பொருள்களில் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். எனவே இதனை ‘மக்கள் விரைவித் தேர்’ அல்லது ‘எளியர் விரைவித் தேர்’ என்று சொல்லலாம்.

Rajdhani Express: Rajdhani என்றால் தலைநகரம் எனப் பொருள். இவை தலைநகராம் தில்லியை இணைக்கும் தொடரிகள். எனவே இவற்றைத் தலைநகர் விரைவி எனலாம்.

Sampark  Kranti Express என்னும் பெயர்களிலும் தொடரிகள் இயக்கப்படுகின்றன. இச் சமற்கிருதத் தொடர், நகரங்களுக்கு இடையே மிகு விரைவில் தொடர்புகளை ஏற்படுத்துவதைக் குறிக்கின்றது. இவற்றை எழுச்சி மிகுவிரைவி எனலாம்.

Shatabdi என்பதும்   Jan Shatabdi  என்பதும் வேறு சில வண்டிகளின் பொதுப் பெயர்கள். நேருவின் நூற்றாண்டுப் பிறப்பை முன்னிட்டுத் தொடங்கிய புதுதில்லிக்கும் சான்சி சந்திப்பிற்குமான வண்டிக்குச் சதாப்தி எனப் பெயர் இட்டனர். சில இடங்களில் மட்டும் நிற்கும் விரைவுத் தொடரியாகும் இது. இதனை நூறன் விரைவி எனலாம். கட்டணம் குறைவாக எளிய மக்களும் பயன்படுத்தப்படும் வகையில் பின்னர் தொடங்கப்பட்ட வண்டிகளுக்குச் சன சதாப்தி எனப் பெயர் இட்டனர். இதனை எளியோர் நூறன் விரைவி எனலாம்.

இதுவரை சூட்டியுள்ள சமற்கிருதப் பெயர் உள்ள தொடரிகள் தமிழ்நாட்டில் இயங்கினால் அவற்றின் பெயர்களைத் தமிழுக்கு மாற்றம் செய்ய வேண்டும். நகரங்களின் பெயர்களைத் தமிழில் மாற்ற முயலும் தமிழக அரசும் தமிழ் வளர்ச்சி அமைச்சர் மாஃபா பாண்டியராசனும் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போது தொடங்கி உள்ள  தொடரியைத் தமிழிலேயே முதலில் குறிப்பிட்ட வாறு ‘சங்கத்தமிழ்ச் செழுமை விரைவி’ அல்லது ‘தமிழ்ச்சங்கச் செழுமை விரைவி’ என அழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • மாலைமுரசு, 06.04.2019, பக்கம் 5