அரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு

 rajini04

அரசியலில் பங்கேற்க யாவருக்கும் உரிமையுண்டு. பிற துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பதுபோல் திரைத்துறையினருக்கும் அந்த உரிமையுண்டு. என்றாலும் நாட்டு மக்களுக்கு எத்தொண்டும் ஆற்றாமல், அவர்களின் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகக் குரல் கொடுக்காமல், அவர்களின் போராட்டக்களங்களில் தோள் கொடுக்காமல், நன்கறிநிலை(popularity) உள்ளதால் மட்டுமே அரசியல் தலைமையையும் நாட்டுத்தலைமையையும் எதிர்பார்த்து அரசியலில் காலடி எடுத்து வைப்பது என்பது வீண் கனவே!. அப்படி எந்த ஒரு துரும்பையும் மக்களுக்காக எடுத்துப் போடாதவர்களை அரிசியலில் இறங்கவும் முதல்வர் பதவியை அணி செய்யவும் சிலர் அழைக்கின்றார்கள் எனில், இச்செயல் அழைப்பவர்களின், துதிபாடி ஏதோ ஆற்றிக் கொள்ள விரும்பும் செயலாகவோ அறியாமையாகவோதான் இருக்கமுடியும்.

நடிப்பாலும் உழைப்பாலும் திரையுலகின் முன்னணி இடத்தைப்பிடித்திருப்பவர் இரசினிகாந்து.அவர் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குத் தமிழ் நாட்டிற்கோ தமிழ் மக்களுக்கோ எத் தொண்டும் ஆற்றியவரல்லர். அவர் படம் சார்ந்த முத்திரைகளைப் பயன்படுத்தி ஆடைகள் அல்லது பிற பொருள்கள் விற்பதில் ஆர்வம் காட்டிய அவர் மனைவியின் வணிகச் செயலை நிறுத்தி அவரது நேயர்களின் பொறுப்பில்கூட அவர் விட்டவரல்லர். அவர் மனைவி நடத்தும் பள்ளிக்கூடமும் பிற கல்வி வணிகம் சார்ந்த கொள்ளைக்கூடம்போன்றதே யன்றி வேறல்ல.

   நாளும் அல்லலுறும் நாட்டு மக்களுக்காக எத்தொண்டும் ஆற்றாமையும் சிங்களவர்களால் நாளும் மடியும் தமிழக மீனவர்கள் துயர்கண்டு வருந்தாப் போக்கும் தமிழ்ஈழத்தில் நூறாயிரக்கணக்கான தமிழர்கள் வஞ்சகத்தில் கொலையுண்ட போது அமைதிகாத்த போக்கும் பாரறிந்தனவே! ஆனால், அவரை அரசியல் கட்சியில் சேர்க்கச் சில கட்சிகள் விரும்புகின்றன.அவர் மூலம் வாக்குகளை அறுவடை செய்யலாம் என்ற தவறான எண்ணத்தில் கட்சிகள் விரும்புவதால் நமக்கு ஒன்றும் இல்லை. ஆனால், அவரை முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதுபோல் சிலர் குரல் எழுப்புவதுதான் வேடிக்கையாக உள்ளது. தமிழன்பர்கள்போல் காட்டிக் கொண்டிருந்த இயக்குநர் சேரனும் இயக்குநர் அமீரும் இரசினிமுதல்வராக வரவேண்டும் என்று அண்மை நிகழ்வொன்றில்   வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெருவாரியான சட்ட மன்ற உறுப்பினர்கள் அவரைத் தலைமைப்பொறுப்பேற்க அழைக்கும் சூழலில் அவர் மறுப்பதுபோல் இவர்கள் பேசுவது புரியவில்லை. அரசியல் இயக்கம் நடத்துங்கள் என வேண்டுகோள் விடுக்கலாம். அது தவறல்ல. திரையில் தோன்றியதும் முதல்வர் நாற்காலிக்கனவு காண்பதுபோல் இரசினி சார்பில் இவர்கள் கனவு கண்டு அக்கனவை அவரிடம் திணிக்கும் பொல்லாப்போக்குதான் புரியவில்லை.

இவ்வாறு இவர்கள் பிற மாநிலங்களுக்குச் சென்று அம்மாநிலத்தேசியத்தைச் சாராத ஒருவரை மாநிலத்தலைமைக்கு அழைக்க இயலுமா? தமிழ்நாடு எவ்வளவு காலத்திற்குத்தான் திறந்த வீடாக இருக்கப் போகின்றது?முதலில் இவ்வாறு கூக்குரலிடுவோர், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்காகவும் இந்தியக் கண்டத்தில் உள்ள தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டிலுள்ள பிறருக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் உலகத் தமிழர்களுக்காகவும் இரசினியைச்செயல்படச் சொல்லட்டும்! அல்லது இரசினியை அவர் பிறந்த அல்லது வளர்ந்த மாநிலத்தில் முதலமைச்சராகக் குரல் கொடுக்கட்டும்! (இதனை ஏற்க அம்மாநிலத்தவர்கள் இளித்தவாயர்களல் அல்லர் என்பது நாம் அறிந்ததே!) அவர் சிறந்ததற்குக்காரணமான தமிழ்நாட்டில் தொண்டாற்றத்தான் வேண்டுமே தவிர, வேறு எண்ணம் வரக்கூடாது.இதுவரையும் தமிழ்மக்கள் நலனுக்காக எதுவும் செய்யாத இரசினி, தன் உழைப்பை இனியாவது தமிழ் மக்களுக்காகவும் செலவிடட்டும்!

தமிழ்த்தேசியர்களே தமிழ்நாட்டை ஆளவேண்டும்என்னும் உண்மையைத் தமிழக மக்களுக்கு விதைக்கட்டும்!

 kuspu01

இரசினிபோன்று அல்லாமல் சில காலம் தி.மு.க.வில் இருந்து இப்பொழுது காங்.கில் இணைத்துக் கொண்ட நடிகை குட்பு பற்றியும் நாம் எழுதவேண்டி உள்ளது.

கடலில் மூழ்கும் ஓட்டைப்படகுபோன்ற காங்.கில் சேர்ந்த குட்பு தமிழ்நாட்டு மக்களால், தமிழர்களால் நன்கறிநிலை அடைந்தவர். எனினும் தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளாரே தவிர, இதுவரை தமிழர் நலன்காக்க எதுவும் குரல் கொடுத்ததில்லை.

மக்களிடம் வரவேற்பு இழந்த கட்சி என்று புரிந்துகொள்ளாமல் அனைத்து இந்தியக்கட்சி தரும் வரவேற்பு கொண்டு மகிழ்கிறார்! மகிழட்டும்! ஆனால், அங்கு சேர்ந்தவர் தமிழ், தமிழர் நலனுக்காகக் குரல் கொடுத்தார் என்றால் பாராட்டலாம்! அவருக்கும் முதலமைச்சர் பதவிக்கனவு இருக்கக்கூடும்! அப்படிப்பட்டவர்க்கு இப்படிஎல்லாம் பேசினால்தான் காங்.கட்சி தனக்குப்பதவி யளிக்கும் என்ற எண்ணம் வந்திருக்கலாம்! ஆனால், அவர் சேர்ந்துள்ள கட்சி தமிழ்நாட்டில் விரட்டியடிக்கப்பட்ட பொன்விழாவைக் கொண்டாட உள்ள கட்சி என்பதை அவர் உணரவில்லை! ஆரவார மயக்கத்தில் மூழ்கித் தவறான கருத்தைத் தெரிவித்துள்ளார். அரச பயங்கரவாதத்தையும் அரசின் ஒடுக்குமுறையையும் சிங்கள இனத்தின் வஞ்சகக் கொடுஞ்செயல்களையும் கொலைகளையும் எதிர்த்து நிற்கும் ஓர் அமைப்பை அது குறித்த வரலாறு தெரியாமல் தவறாகக்சித்திரிக்கிறார்.  தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது மக்களின் நலன்காக்கும் கேடயமாகவும் பகை வெல்லும் வாளாகவும் திகழும் மனிதநேயக் கட்சி. இந்தியாவில் பகத்சிங்கு முதலானோரைப்பாராட்டும் நாம், சுபாசுசந்திரபோசின் படைமுயற்சியைப் பாராட்டும் நாம், ஆங்கிலேயர்களை எதிர்க்கப் போராடியவர்களைப் பாராட்டும் நாம்,   இவை போன்ற செயல்களில் ஈடுபடும் எந்நாட்டவராக இருந்தாலும் அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் நாம், இவ்வாறு போரிடுபவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்திய அரசு எதிர்க்கும் மாயவலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்!

இதனை அறிந்தும் அறியாமலும் உள்ள குட்பூ தேவையற்று விடுதலைப் போராட்ட வீரர்களை வன்முறையாளர்களாகக் கூறியது கண்டிக்கத்தக்கது.

இனியேனும் அவர் தமிழ் ஈழ வரலாற்றைப் படிக்கட்டும்! நம் நாட்டு விடுதலைப் போராட்டங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கட்டும்!சிங்களர்களால் தமிழினம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதையும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இந்தியா முதலான பலநாடுகளின் துணை கொண்டும் வஞ்சகமாகவும் கொத்துக்குண்டுகளாலும் எரிகுண்டுகளாலும் ஏவுகணைகளாலும் ஈழத்தமிழ் மக்கள்அழிக்கப்பட்டதையும் அதற்குப் பின்னரும் எஞ்சியவர்கள் கடத்தப்பட்டும் கற்பழிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வரும் துயரச் சூழலையும் அறியட்டும்! தான் தவறாகத் தெரிவித்த கருத்திற்கு வருத்தம் தெரிவிக்கட்டும்! அதன்பின்னராவது அவர் காங்.கட்சியில் உண்மைக்காக மனித நேயத்துடன் குரல் கொடுக்கட்டும்! உணர்ச்சி வயப்படுவோர் கோவிலும் கட்டுவார்கள்! கல்லறையும் கட்டுவார்கள்! என்பதை உணரட்டும்!

தனக்கு வாழ்வளித்த தமிழ் மக்களுக்காகத் தான் சேர்ந்த கட்சித்தலைமையில் உரிமைக்குரல் எழுப்பட்டும்!

அதுவரை தமிழர் நலனுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் தமிழக மேடைகளில் ஏறத் தகுதியற்றவர்களே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

 கார்த்திகை 14, 2045 / நவம்பர் 30, 2014

http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png