தமிழக அரசிற்குப் பாராட்டும் சீராட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழக அரசிற்குப் பாராட்டும் சீராட்டும்
தமிழ்நாட்டில் – மாமல்லபுரத்தில் – 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டியை அரசு சிறப்பாக நிகழ்த்தி இன்று(09/08/22) நிறைவு விழாவும் நிகழ்கிறது. போட்டியில் வாகை சூடிய அனைவருக்கும் பாராட்டுகள். பங்கேற்ற பிற போட்டியாளர்களுக்கு அடுத்து வெற்றியைச் சுவைக்க வாழ்த்துகள். சிறப்பாக நடத்திய தமிழக அரசிற்கும் வழி நடத்திச் செல்லும் மாண்புமிகு முதல்வர் மு.க.தாலினுக்கும் பாராட்டுகள்.
ஆடி 12, 2053 / 28.07.2022 முதல் நடைபெறும் சதுரங்க விழாவிற்கு வந்துள்ள 186 நாடுகளிலிருந்து பங்கேற்ற 1,736 பன்னாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தமிழக அரசின் விருந்தோம்பலையும் பல்வகை ஏற்பாடுகளையும் மிகவும் மகிழ்வுடன் பாராட்டி வருகின்றனர். போட்டியாளர்கள் மட்டுமல்லாமல், ஆர்க்குடே துவார்க்கோவிச்சு (Arkady Dvorkovich) தலைமையில் உள்ள பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பின்(International Chess Federation/Fide) பொறுப்பாளர்களும், இலாரண்டு பிரெயிடு(Laurent Freyd) தலைமையிலான நடுவர்களும் பிற விருந்தினர்களும் மனமாரப் பாராட்டி மகிழ்கின்றனர்.
பொதுவாக ஈராண்டு அல்லது குறைந்தது ஓராண்டு கால வாய்ப்பு எடுத்துக் கொண்டு பன்னாட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்து முடிப்பர். ஆனால் நான்கு திங்கள் கால வாய்ப்பில் அனைத்து நிலை அதிகாரிகளும் அமைப்பினரும் சிறப்பாகப் பணியாற்றிச் செம்மையாக சதுரங்க ஞாலப்போட்டியை நிகழ்த்தி வருகின்றனர்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
(திருவள்ளுவர், திருக்குறள் 517)
என்னும் தமிழ் மறைக்கேற்ப முதல்வர் மு.க.தாலின் பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்து அவரவர்கள் தத்தம் கீழ் உள்ளவர்களில் தக்கவர்களைக் கொண்டு சிறப்பாக நடத்தி வருவதற்கு வழிகாட்டும் அவருக்கும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன், உணவு அமைச்சர், தகவல் தொழில் நுட்ப அமைச்சர் முதலான பிற அமைச்சர் பெருமக்களுக்கும் தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. தலைமையில் செயல்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்களுக்கும் தொண்டாற்றியவர்களுக்கும் அன்பு கலந்த பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.
பாராட்டும் பொழுது சீராட்டையும் தெரிவிக்க விரும்புகிறோம். சீராட்டு என்பது சிறு சண்டை என்னும் பொருளில் இங்கே கையாளப்பட்டுள்ளது. சிறு சண்டை என்று குறிப்பிடுவதன் காரணம், அரசின் தமிழ்ப்பணியிலுள்ள குறைபாடுகளே. இவை குறித்து “சதுரங்கப் பெருவிழாவில் வெட்டப்படும் தமிழ்!” என்னும் கட்டுரையில் தெரிவித்துள்ளோம்.
நாம் குறிப்பிட்ட பின்னர் விளம்பரங்களில் ‘சதுரங்கம்’ இடம் பெற்றது மகிழ்ச்சிதான். எனினும் அடையாள அட்டை, பதாகை, மேடை, சான்றிதழ், நினைவளிப்பு, என ஒவ்வொன்றிலுமே தமிழ் இடம் பெற்றிருக்க வேண்டும். சுற்றுலா வருவோர்க்கு வழிகாட்டுவதுபோல் விளையாட்டரங்கும் குறித்த வழிகாட்டுக் குறிப்புகளையும் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டுச் சிறப்புகளையும் தமிழிலும் ஆங்கிலம், செருமனி, பிரெஞ்சு, உருசியன் முதலான உலக மொழிகளிலும் இடம் பெறும் வகையிலும் கையேட்டை அனைவருக்கும் கொடுத்திருக்க வேண்டும். இதைக் குறிப்பதன் காரணம் அடுத்து வரும் விழாக்களிலாவது இவற்றைக் கடைப்பிடிப்பார்கள் என்ற நப்பாசையில்தான்.
இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டரசின் தமிழ்க்கடமையை மறக்கும் அவலத்தை மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். முன்பே இதனைச் சுட்டிக்காட்டியிருந்தாலும் தொடர்ந்து குறிப்பிடும் வண்ணம் தொடர்ந்து ஆங்கிலமே எங்கும் கண்களில் படுவதால் நாமும் மீண்டும் சொல்ல விரும்புகிறோம்.
மேலே படம் 1 இல் உள்ளது முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கல்வெட்டு ஆங்கிலத்தில் இருப்பது. படம் 2 இல் மேடை விளம்பரம் ஆங்கிலத்தில் இருப்பது. இந்த நேரம் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது நிகழ்ந்த ஒரு செயல் நினைவிற்கு வருகிறது. விழா ஒன்றின் பொழுது ஏற்பாட்டைப் பார்வையிட வந்த கலைஞர் அவர்கள், தம் அருகில் இருந்த தமிழ்வளர்சசி பண்பாட்டுத்துறைச் செயலர் அறிஞர் ஒளவை நடராசனிடம் எதையோ சுட்டிக்காட்டி ஏதோ கூறினார். முதல்வர் கலைஞர் புறப்பட்டுச் சென்றதும் உயரதிகாரிகள் ஒளவையிடம் வந்து “முதல்வர் ஐயா என்ன சொன்னார்” என்றார்கள். “அங்கே மட்டும் ஏன் ஆங்கிலம் இருக்கிறது என்றார். அதனை மாற்றி விடுங்கள், அப்பொழுதுதான் முதல்வர் வருவார்” என்றார். உடன் அவ்வாறு செய்துவிட்டு இனி எல்லா நிகழ்ச்சிகளிலும் தமிழ்ப்பதாகைகள், தமிழ் விளம்பரங்களையே வைப்பதாகக் கூறி அவ்வாறே செய்தனர். தந்தை எட்டடி பாய்ந்தால் தான் பதினெட்டடி பாயும் முதல்வர் முனைப்புடன் செயல்பட்டால் தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் இருக்கும் அல்லவா? அழைப்பிதழ், கல்வெட்டு, மேடைப்பின்னணி, விளம்பரம் யாவும் தமிழில் இருந்தால்தான் பங்கேற்பேன் என்றால் அனைவரும் உடன் ஆவன செய்வார்கள் அல்லவா? இதனைப் பிற அமைச்சர்களும் அதிகாரிகளும் பின்பற்றித் தமிழை நிலைக்கச் செய்வார்கள் அ்ல்லவா?
“தமிழ் தமிழ்” என்று முழங்கிக் கொண்டு, தமிழை மறந்து வாழும் ஆட்சிப் பொறுப்பினர் பிற மாநிலங்களைப் பார்த்தாவது திருந்த வேண்டும் அல்லவா? இன்றைக்கு உலகமே கையில் – கைப்பேசியில் – வந்து விட்டது. அதில் பார்க்கும் செய்திகளில் பிற மாநிலங்கள், பிற நாடுகள் எங்கும் அவரவர் தாய்மொழி வீற்றிருக்கத் தமிழ்நாட்டில் ஆங்கிலம் அரசோச்சும் வேதனையான சூழலைப் பார்க்க முடிகிறது. சான்றுக்குச் சில படங்களை மேலே பார்க்கலாம்.
படம் 3. அண்மையில் மராட்டிய அரசு பதவியேற்றபொழுது அமச்சரவை பதவியேற்பு விழா என மராட்டியத்தில் அறிவிப்பு இருப்பதைப் பார்க்கலாம். இந்தி வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒன்றியப் பொறுப்பாளர்களின் மாநிலமான குசராத்தில், குசராத்தி மொழியிலேயே அறிவிப்பு, விளம்பரம் முதலானவை இருப்பதைப் படம் 4,5,6 இல் காணலாம். படம் 7 இல் கருநாடக மாநிலம் பெங்களூரில் பிற்பட்டோர் ஆணையப் பொன்விழா நிகழ்ச்சியில் கன்னடம் மட்டும் மேடைப்பின்னணியில் அழகு செய்வதைப் பார்க்கலாம். அவர்களெல்லாம் உணர்வால் தத்தம் மொழியன்பர்களாக இருக்கின்றனர். தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டுத் தொடர்புடையோர் வெட்கமும் வேதனையும் அடைய வேண்டாவா? அங்கெல்லாம் மாநில மொழி மட்டுமே வீற்றிருக்க இங்கோ ஆங்கிலம் மடடுமே அல்லது ஆங்கிலமும் இணைந்து இருக்கும் சீரற்ற நிலை ஏன்? இதன் உச்சக் கட்டம்தான் இது தமிழ்நாட்டவருக்கான அரசு அல்ல என்று கூறுவதன் மூலம் அரசு முத்திரையை ஆங்கிலத்தில் பயன்படுத்தியிருப்பது(படம் 8).
தெய்வப்புலவர் திருவள்ளுவர், மகிழ்ச்சியால் சோர்ந்து கடமை தவறியவர்க்குப் புகழில்லை என உலகின் எப்படிப்பட்ட நூலறிஞர்களும் கூறுவதாகக் கூறுகிறார்.
Leave a Reply