jayalalitha06

  மாநில முதல்வர், தலைமையாளரைச் சந்திப்பதும் மாநிலநலன்களுக்கான வேண்டுகைகளையும் நிதித் தேவைகளையும் தெரிவிப்பதும் வாதாடிப் பெறுவதும் இயல்பான ஒன்றுதான். அந்த வகையில், நரேந்திரர் தலைமையாளராகப் பதவியேற்றதும்  தமிழக முதல்வர்  (வைகாசி 20, 2045 / சூன் 3, 2014 அன்று) அவரைச் சந்தித்துள்ளார். தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக ஏறத்தாழ 64 பக்க முறையீட்டை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் வேண்டப்படுவனவற்றைக் குறிப்பிட்டு அவற்றை நிறைவேற்ற உதவுமாறு வேண்டுவது வாலாயமான ஒன்றுதான். இவைபோல், முல்லை-பெரியாறு, காவிரிநீர்  முதலான அண்மை மாநிலத்துடனான சிக்கல்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இவற்றை மததிய அரசின் கவனத்திற்குக்  கொண்டு வருவதும் பாராட்டிற்குரியதுதான்.

  பஃகுரைன் சிறையில்வாடும் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டியும்  முறையிட்டுள்ளார். தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் நலன் பேணப்பட வேண்டும் என்பதும் பாராட்டிற்குரியதுதான்.

      ஆனால் உண்மையில் உலகத் தமிழர்களால் பாராட்டிற்குரியதாகக் கருதப்படுவது,  ‘’மத்திய அரசின் வெளியுறவுக்கொள்கைதான் எங்களுடைய கொள்கை’’ என உரிமையை விட்டுக்  கொடுக்காமல் ‘’தமிழர் நலன் தொடர்பான கொள்கை எனில் தமிழர்கள் கருத்துகளுக்கே  முதன்மை கொடுக்க வேண்டும்’’ என நடந்து கொண்டது.

    இதனடிப்படையில், கச்சத்தீவை மீட்பது குறித்துக் குரல் கொடுத்துள்ளது தமிழக மீனவர் நலனுக்கும் ஈழத்தமிழர் நலனுக்கும் பாதுகாப்பாய் அமையும்.

 

  தமிழ் ஈழம் தொடர்பாகவும் இனப்படுகொலைக்கான உசாவல் தொடர்பாகவும்  கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும், தேர்தலுக்கு முன்பும் தேர்தலின் பொழுதும் இவற்றை வலியுறுத்தியதும் நாடகமல்ல என்பதை மெய்ப்பித்துள்ளார். இவற்றை வலியுறுத்தியதன் மூலம், இந்திய வெளியுறவுக்கொள்கையில் தமிழர் பற்றிய கொள்கைகள் தமிழ்நாட்டரசைக் கலந்துபேசாமல் எடுக்கக்கூடாது என்பதையும் தமிழர் விழைவுகளுக்கேற்பவே தமிழர் பற்றிய வெளியுறவுக் கொள்கை அமைய வேண்டும் என்பதையும் இயம்பி, இந்திய அரசின்தவறான வெளியுறவுக்கொள்கையைக் கண்டித்துள்ளார் என்றே கருதலாம்.

 jaya_modi01

அகரமுதல (வைகாசி 18, 2045/ சூன் 1, 2014) இதழில்,

 

   ”மத்திய அரசில் அஇஅதிமுக பங்கேற்கும் வாய்ப்பும் வரலாம். இதன் மூலம் அமைச்சர் பதவிகள் பெற்று, வேண்டும் வகையில் தமிழ்நாட்டின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். என்றாலும் . . . . . . . இதனைக் கைவிடுவது அக்கட்சிக்கு நல்லது.” என்றும் குறிப்பிட்டிருந்தோம். அதற்கேற்ப, அவர் கூட்டணிக்குக் குழைந்து பதவிப் பேச்சை வேண்டாதது அவரது பெருமிதத்தைக் காட்டுகிறது. (இனி ஒரு வேளை பின்னர் எப்பொழுதாவது அரசில் பங்கேற்கும் சூழல் வரலாம்.) ஆனால், இப்பொழுது பதவிப்பேரங்கள் மூலம், தமிழர் உரிமைகளை விட்டுக் கொடுக்கும்  கயமைத் தன்மையில்  ஈடுபடாமல் உயர்ந்து விட்டார்.  (எனவே, மத்திய அரசில் சேருவது என்பது தமிழர் நலன் அடிப்படையில்தான் என்பதை உணர்த்தி விட்டார்.) இப்பொழுது பதவிக்காக மண்டியிட்டிருந்தாரெனில், தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுக்கும் உரிமையை இழந்திருப்பார்.

     தன்மானமும் தன்மதிப்பும் கொண்டு தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு குறித்தும் பன்னாட்டு அவை மூலம் இனப்படுகொலையாளிகள்  தண்டிக்கவேண்டியது குறித்தும் வேண்டியுள்ளார்.

    அகர முதல இதழில், மேற்குறித்தவாறு தெரிவித்ததன்  தொடர்ச்சியாக,

   ”தமிழ் நாட்டுச் சட்ட மன்றத்தில் ஈழம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தச் செய்ய வேண்டும்.

 சிங்கள இனப்படுகொலையாளிகளும் உடந்தையாக இருந்த காங்.குற்றவாளிகளும் அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.

    பன்னாட்டு நீதிமன்றத்தின் முன்னர் பட்சே போன்ற கொலையாளிகள் நிறுத்தப்பட்டுத் தண்டனை பெற இந்தியா ஆவன செய்ய வேண்டும்.

 என வேண்டியிருந்தோம். எனவே, மாண்புமிகு முதல்வரின் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

 

  ஈழத்தமிழர் உரிமைக்காகவும் நலனுக்காகவும் குரல் கொடுத்த மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவி செயலலிதா அவர்களை உலகத் தமிழர்களும் மனித நேயர்களும் பாராட்டுவது போன்று அகரமுதல இதழும் பாராட்டி மகிழ்கிறது!

 

  அதே நேரம், தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர்கள் வதைபடாமலும் உதைபடாமலும் நம்நாட்டுக் குடிமக்களுக்கு இணையாக வாழவும் வழி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகின்றது. மத்திய அரசின் குறைபாட்டைச் சுட்டிக்காட்டி அவர் உரிமைக்குரல் கொடுப்பதுபோல், தமிழ்நாடு அரசு ஆற்ற வேண்டிய தமிழர் நலன், ஈழத்தமிழர் நலன்களை நாம் யாரிடம் சென்று முறையிடுவது? அவரிடம்தானே கேட்க முடியும். அப்படி, இனி யாரும் கேட்பதற்குத் தேவையில்லாத வகையில் தமிழ்நாட்டில் தமிழும் தமிழரும் உரிமையுடனும் முதன்மைச்சிறப்புடனும் வாழ வழி செய்ய வேண்டுகின்றோம்.

தமிழ் ஈழம் சார்ந்த வெறியுறவுக் கொள்கை அமைய உரிமைக் குரல் கொடுத்துள்ள  மாண்புமிகு முதல்வர் உறுதியும் துணிவும் கொண்டு  வாகை சூட வாழ்த்துகிறோம்.

 

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின். (திருக்குறள் 648)

வெல்க முதல்வர்! மலர்க தமிழீழம்!

வீழ்க இனப்படுகொலையாளிகள்!

 

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

வைகாசி 25, 2045 / சூன் 8, 2014

http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png