C.M.Cell02C.M.Cwll01

மிழை விலக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவு

   தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு தலைமைச் செயலகத்தில் இயங்குவதையும் இப்பொழுது இணைய வழியாகக் குறைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு இருப்பதையும் அனைவரும்அறிவார்கள்.  தனிப்பிரிவிற்கு மடல் அனுப்பினால், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளது. மக்கள் அனுப்பும் முறையீடுகளைப் பெரும்பாலும் வேறு துறைக்கு மாற்றுதல் அல்லது முறையான மறுமொழி அளிக்காமை முதலானவையே பெரும்பாலும் துறைகளின் பணிகளாக நிகழ்கின்றன. முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பப்படும் மடல்கள்மீது துறைகளின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதற்கு ஒரு சான்று.

  பொதுநூலகத்துறையில் நூல் வாங்குவதற்கு அளிக்க வேண்டிய விண்ணப்பங்கள் தமிழில் இல்லை எனக் குறிப்பிட்டு அவற்றை உடன் தமிழில் வெளியிடுமாறு தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் மாசி 02, 2044/ பிப்.14, 2013 அன்று வேண்டியிருந்தோம். ஆனால், நூல்களுக்கான ஆணைகள் வழங்கப்பெற்ற பின்னர்தான் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் இருந்து 22.07.2013 அன்று தமிழில் விண்ணப்பங்கள் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு மடல் அனுப்பப்பட்டது. இதனடிப்படையில் அடுத்த ஆண்டாவது தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு மார்கழி 22, 2044 சனவரி 06. 201 அன்று மடல் அனுப்பினோம். புதிய விண்ணப்பம் ஆங்கிலத்தில் இருந்தது மட்டுமல்ல, ஆங்கிலத்தில்தான் நிரப்ப வேண்டும் என்றும் இருந்தது. ஆங்கில நூல்களுக்குப் பக்க வரையறை கிடையாது. தமிழ் நூல்களுக்குப் பக்க வரையறை உண்டு. இத்தகைய மொழிப்பாகுபாட்டை நீ்க்குமாறு வேண்டியும் பயனில்லை. ஆனால், புள்ளி விவரப்படி, தமிழ் வளர்ச்சி இயக்ககத்திலிருந்து உரியவருக்கு மேலனுப்பப்பட்டதாகக் கோப்பு முடிக்கப்பட்டிருக்கும். தனிப்பிரிவில் வெற்றிக்கணக்கில் சேர்ந்திருக்கும்

 இத்தகைய அவலங்கள் இருப்பினும் தனிப்பிரிவால் பயன் பெறுவோர் மிகுதியாக உள்ளனர். எனவேதான் இப்பிரிவிற்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பெருகி, இப்பொழுது திங்கள் ஒன்றுக்கு 40,000 விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து தனிப்பிரிவிற்கு வருகின்றன. முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலத்திலிருந்து மடல் உரிய துறைக்கு அனுப்பப்படுவதாலும், காலமுறையில் அறிக்கை கேட்டும் கூட்டம் நடத்தியும் தனிப்பிரிவில் அனுப்பப்பட்ட முறையீடுகள் நிலை குறித்துக் கேட்பதாலும் தங்கள் தொடர்பான கோப்புகள் விரைவில் நகர்கின்றன என்ற மன அமைதி மக்களுக்குக் கிடைக்கிறது. மக்களுக்கும் அரசுத்துறைகளுக்கும் பாலமாக இருப்பது முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம்தான்.

   மக்களின் முறையீடுகளைக் கிணற்றில் போட்ட கல்போல் பாவிக்கும் துறையினர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு நடவடிக்கை விவரம் குறித்து தெரிவிக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதாலேயே முறையீடுகள்பற்றிய நடவடிக்கைகள் விரைவாக வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

 தனிப்பட்ட பாதிப்புகள், கேடான நிலையில் உள்ள சாலை, தண்ணீர்வசதியின்மைபோன்ற குறைகளை நீக்குதல், மருத்துவச் செலவு உதவி வேண்டல், துயர்துடைப்பு நிதி வேண்டல் போன்ற நலம் சார்ந்த குறைபாடுகள், பணிக்குறைபாடுகள், ஓய்வூதியச் சிக்கல்கள், அரசின் நல்வாழ்வுத்திட்டங்கள் கிடைக்காமை போன்ற பல்வேறு எண்ணற்ற சிக்கல்கள் மக்கள் சந்திப்பனவாகும். எனவே, ஆயிரக்கணக்கில் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு முறையீடுகள், மடல்கள் வருகின்றன. அஞ்சல் பிரிப்புப் பணிபோன்றது என்றாலும் தனிப்பிரிவினர் முறையீடு தெரித்தவர்களுக்கு உரிய மறுமொழி கிடைக்கும்வரை சலிக்காமல் துறையினரிடம் நினைவூட்டு அனுப்பி நடவடிக்கை எடுத்து வருவது பெரிதும் பாராட்டிற்குரியதுதான்.

  மக்கள் குறைகளைக் களைய வேண்டும் என்பதில் கருத்து செலுத்தியபோதும் அவர்கள் தமிழை விலக்கி வைப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழக அரசின் ஆட்சி மொழிக் கொள்கை என்பது அலுவலகங்களில் தமிழை ஆட்சிமொழியாக நடைமுறைப் படுத்துவதுதான். பிறருக்கு முன்முறையாக இருக்க வேண்டிய முதலமைச்சரின் தனிப்பிரிவினர், தங்களுக்கு மட்டும் விதிவிலக்காக ஆங்கிலமே அலுவலக மொழி எனக் கருதுவது ஏன்? எனப் புரியவில்லை. இதனால் அவர்கள், தமிழ்நாட்டரசிற்கும் அதைத் தலைமைதாங்கி நடத்திச் செல்லும் மாண்புமிகு முதல்வருக்கும் இழுக்கு ஏற்படுத்துகிறார்கள் என்பதை அறியவில்லையா?

CMCell- acknowledgement

   தனிப்பிரிவிலிருந்து ஒப்புகை மடல் முறையீடு அனுப்பியவர்களுக்கு அனுப்பப் பெறும். ஒப்புகை மடல் தமிழில் அச்சிட்ட படிவ முறையில் இருக்கும். ஆனால், தனிப்பிரிவினர், மனு எண், கோரிக்கை, அனுப்பப்பட்ட அலுவலகம், முகவரி முதலானவற்றை ஆங்கிலத்தில்தான் தட்டச்சிட்டு அனுப்புகின்றனர். தமிழில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் சுருக்கி அடிக்கின்றேன் எனத் தவறாகத்தான் அச்சிடுகின்றனர். முகவரிகளும் தவறான எழுத்தொலிப்பில்தான் உள்ளன. துறையின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளதால், பொதுமக்களுக்குத் தங்கள் விண்ணப்பம் எந்தத் துறைக்கு அனுப்பப்பட்டது என்பது புரியவில்லை.

   இணையவழி முறையீடுகளைப் பதியும் பொழுது ஆங்கிலத்தைவிடத் தமிழில் குறைவான சொற்கள் பதியும் வகையில் உள்ளன. சுருக்கமாகவாவது தமிழில் தெரிவிக்கலாம் என்றால் பொதுவாகத் தமிழ்ப்பதிவுகள் ஏற்கப்படுவதில்லை. ஏற்கப்பெறாச் சூழலில் சரி செய்யுமாறு தனிப்பிரிவினரிடம் வேண்டினால், “ஆங்கிலத்தில் அனுப்புங்கள். நாங்கள் ஆங்கிலத்தில்தான் நடவடிக்கை எடுக்கிறோம்” என நாணமின்றிக் கூறுகின்றனர். (விளக்கமாக மின்னஞ்சலில் அனுப்பினால், அவ்வாறு அனுப்பியதை நாம் தொலைபேசி வழி தெரிவித்தால்தான் உடன் நடவடிக்கை எடுக்கின்றனர். பிற நேர்வுகளில் மின்னஞ்சலில் அனுப்பிப்பயனின்று.)

  தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டி, 02.11.2043 / 17.11.2012, 26.05.2043/ 08.06.2012 ஆகிய நாள்களில் மடல்கள் அனுப்பியுள்ளோம். இதன் தொடர்பில் செயலகத் தமிழ் வளர்ச்சித்துறையினர், தமிழ் ஆட்சிமொழி தொடர்பான அரசாணையை மட்டும் அவர்களுக்கு அனுப்பிவிட்டு வாளாவிருந்துவிட்டனர். முதலமைச்சர் தனிப்பிவினருக்கு அறிவுறுத்துவதா என்ற தயக்கம் அவர்களுக்கு. துணிவின்மையும் தயக்கமும் செயல்படா நிலைக்குத் தள்ளிவிடும் என்பதைத் தமிழ்வளர்ச்சித்துறையினர் உணர வேண்டும்.

  தமிழக முதல்வர் அலுவலகம் தமிழை நடைமுறைப்படுத்தாமை முறையற்ற செயல் என்பதைத் தொடர்புடையவர்கள் உணரவேண்டும். தமிழில் தட்டச்சிடக் குறைபாடு இருப்பின், அதனை நீக்க வேண்டும். அதையும் மீறி ஆங்கிலத்தைப் பயன்படுத்துவோர் மீது அரசாணைக்கிணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்வளர்ச்சித்துறையினர் உரிய ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து, முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஆட்சிமொழி ஆய்வு மேற்கொள்ளச் செய்து தமிழ் ஆட்சி மொழிச்செயலாக்கத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகிறோம்.

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

feat-default

   அகரமுதல 83, வைகாசி 31, 2046 / சூன் 14, 2015