(4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக!– தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்

5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக!

தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம் 1956 நிறைவேற்றப் பட்டதிலிருந்து  இதுநாள் வரை தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்காகப் பல்வேறு அரசாணைகள், தொடர்பான சுற்றறிக்கைகள், மடல்கள், வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்வளர்ச்சித்துறை இணையத்தளத்தில் 02.08.1968 முதல் 02.11.2021 வரையிலான 120 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில முன்னர் வெளியிடப்பட்டவற்றையே வலியுறுத்திப் பின்னரும் வெளியிடப்பட்டனவாக இருக்கின்றன. இவ்வாறு மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளமையே தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் எந்த அளவில் இருக்கிறது என்ற துயரநிலையை வெளிப்படுத்துகிறது.

திருவள்ளுவர் ஆண்டு, திங்கள், நாள் குறிக்கப்பட வேண்டும் என 03.02.1982, 09.12.2008, 08.11.2012 ஆம் நாள்களில் ஆணைகள் (எண் 91 /எண் 70/ எண்158) பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழில் கையொப்பமிட வேண்டியது குறித்தும் வெவ்வேறு காலங்களில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது குறித்தும் தமிழில் முதலெழுத்து குறிப்பது குறித்தும் இவ்வாறு பல செயல்பாடுகள் குறித்தும் வெவ்வேறு ஆணைகள் வந்துள்ளன. எளிய நடைமுறைகள் கூட முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்னும் பொழுது பயன்பாட்டிற்கு வராத ஆணைகளால் என்ன பயன் என்பதா? தமிழ்நாட்டு அலுவலகங்களில் தமிழ் இருக்கக் கடுமையான நடவடிக்கை தேவை என்பதா?

ஆட்சிமொழிச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தாத அரசு அலுவலர்கள் மீது  நடைமுறையில் உள்ள தமிழ்நாடு குடிமைப்பணியாளர் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு 06.01.1982(எண்  24) இலேயே அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையைச் செவ்வையாக நடைமுறைப்படுத்தியிருந்தாலே தமிழ், ஆட்சிமொழியாகச் செவ்வனே வீற்றிருக்கும். ஆட்சிமொழிச் செயலாக்கத்தை நிறைவேற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணை இருந்தும் பயனற்றுப் போனதன் காரணம் பல அலுவலகங்களில் அவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலையில் தமிழைப் புறக்கணிப்பவர்களாகத்தான் உள்ளமைதான்.

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்காக அவ்வப்பொழுது ஆணைகள் பிறப்பிப்பதை விட முன்னர்க் கூறியவாறு தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்தால் போதுமானது. ஆனால் அதற்கான துணிவும் வினைத்திட்பமும் தமிழ்வளர்ச்சித் துறையிடம் இல்லாதபோது தனித்தனி ஆணைகள் தேவைப்படத்தான் செய்கின்ற.

ஆணைத் தொகுப்பு என்றால் எல்லா ஆணைகளின் தொகுப்பாக இருக்கக் கூடாது. அதனால் பயனில்லை. அந்தத் துறையில் தேவையில்லை, இந்தத் துறைக்கு விதிவிலக்கு என்பன போலில்லாமல் செயலகத்துறை உட்பட அனைத்துத் தறைகளிலும் அரசு, அரசு நிறுவனங்கள், பிற மாநில அலுவலகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் என அனைத்து வகைகளிலும் அனைத்து நிலைகளிலும்  தமிழே அலுவலக மொழியாக இருக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்க வேண்டும்.

விதிவிலக்குகளை அகற்ற வேண்டும் என்பதற்கு ஒரு சான்று. செயலகத்துறைகளில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய 2.8.1968 ஆம் நாளிட்ட அரசாணை(எண் 1609)யில் “எல்லாத் துறைகளிலுமே சில குறிப்பிட்ட பொருள்களில் உள்ளூராட்சி அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், துறைத்தலைவர்கள் ஆகியோர்களோடு தமிழிலேயே கடிதப் போக்குவரவு நடத்த வேண்டும்” என இருக்கிறது. என்ன அது? குறிப்பிட்ட பொருள்களில் மட்டும்? அப்பொழுது ஏதோ ஒரு சூழலில் இவ்வாறு குறித்திருக்கலாம். இப்பொழுது தொகுப்பில் ஆணைகளின் தொகுப்பாகப் பொருண்மைகளின் தொகுப்பாகக் கருதி, சில குறிப்பிட்ட பொருள்களில் என்பதை எடுத்து விட வேண்டும்.

இதுபோல் சட்டம், நிதித்துறைகளை விதிவிலக்காகக் குறிப்பிட்டும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கும். இப்பொழுது எந்தத்துறைக்கும் விதிவிலக்கு அளிக்க வேண்டிய தேவையில்லை. கையொப்பங்கள் பட்டியல்களில் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று முதலிலும், தமிழில் இருந்தால் அடைப்பிற்குள் ஆங்கிலத்தில் பெயர் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டும் ஆணைகள் இருக்கும். இவ்வாறெல்லாம் இல்லாமல் நிதித்துறையாக இருந்தாலும் நீதித்துறையாக இருந்தாலும் வேறு எத்துறையாக இருந்தாலும் தமிழில் கையொப்பம் இருந்தால் மட்டுமே செல்லத்தக்கது என அறிவிக்க வேண்டும்.

இவ்வாறெல்லாம் இப்போது ஆணையில் இருக்கக் கூடாது. இதுவரை வெளிவந்த ஆணைகளின் பொருண்மைகளின் அடிப்படையில் அனைத்துக் கூறுகளும் அடங்கிய புதிய ஆணையை வெளியிட வேண்டும். இப்புதிய ஆணையில் எந்த விதிவிலக்கிற்கும் இடம் தரக்கூடாது. இதுவரை வந்த ஆணைகளில் பல தெளிவின்மையும் குறைபாடுகளும் இருக்கும். அவற்றை எல்லாம் களைந்து விட்டு முழுமையானஆட்சிமொழிச் செயலாக்கத்திற்கு எவை எவை தேவையோ அவற்றை மட்டும் குறிப்பிட்டு ஆணை பிறப்பித்தால் போதுமானது. ஆணைத் தொகுப்பு என்றால் பழைய ஆணைகளை வரிசையாகத் தொகுத்துத் தராமல் செயல்படுத்த வேண்டிய ஆணைகளின் தொகுப்பாக இருக்க வேண்டும்.

ஆட்சிமொழிச்சட்டம் என்பது நூற்றுக்கு இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள அலுவலக எழுத்துப் பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமல்ல. ஆட்சிமொழிச்சட்டம், “தமிழ், தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும்” என்றுதான் கூறுகிறது. எனவே, ஆணைத் தொகுப்பு என்பது தேவைக்கேற்ப புதிய ஆணைகளின் தொகுப்பாகவும் இருக்க வேண்டும். அதனால் தமிழ்க் கையொப்பம், தமிழ் முதலெழுத்து, தமிழ்ப்பெயர்ப்பலகை, தமிழ் மடல் போக்குவரத்து முதலிய ஆட்சித்தமிழ்ச் செயலாக்கங்கள் யாவுமே பொதுமக்களுக்கும் உரியது என ஆணை சேர்க்க வேண்டும்.

தமிழ் ஆட்சி மொழித்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தும் ஆர்வம் இருப்பின் நம் வேண்டுகோளை ஏற்றுப் புத்தாணை(த் தொகுப்பு) பிறப்பிக்கட்டும்! தமிழ் எங்கும் நிலைக்கட்டும்!

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற. (திருவள்ளுவர், திருக்குறள் 661)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தொடரும் கட்டுரைகள்:

6. ஆட்சித் தமிழ்ச் சட்டம் 2022 இயற்றுக!

7. திரைத்துறையின் தமிழ்க்கொலைகளைத் தடுத்திடுக!

8. இதழியல் துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்திடுக!