பிற துறை  தமிழன்பர்களே! தமிழ்ப்புலமை பெறுங்கள்!

அல்லது தமிழ்ப்புலமையாளரை மதியுங்கள்!

 thamizh02

“தொண்டு செய்வாய் தமிழுக்கு! துறைதோறும்,  துறைதோறும் துடித்தெழுந்தே!” எனப் பாவேந்தர் வேண்டியவாறு பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் தொண்டாற்றி வருகின்றனர். தாங்கள் சார்ந்த துறைகளில் தமிழ்ப்பயன்பாடு பெருகவும் உழைத்து வருகின்றனர். எனினும் இத்தகையோருள் பெரும்பான்மையர் தங்களின் தமிழார்வமும் தங்கள் தமிழ்த் தொண்டும் தங்களின் தமிழ்ப்புலமைக்கு அளவுகோல் எனத் தவறாகக் கருதுகின்றனர். கற்றது கைம்மண் அளவு என்பதை மறந்து விட்டுத் தங்களுக்குத் தெரிந்த அளவு தமிழையே உயர்ந்த அளவாகக் கருதிவிடுகின்றனர். எனவே, சொல்லாக்கங்கள், தமிழ் இலக்கியச் செய்திகள், தமிழ் அறிவியல் செய்திகள் முதலானவற்றில்  தங்கள் தமிழறிவையே அளவுகோலாகக் கொண்டு எழுதி வருகின்றனர். இதனால் தமிழ் மரபு அறியாமலும் தமிழ் வரலாறு அறியாமலும் பிழையான செய்திகள் உலா வருகின்றன. இத்தகையோர் தங்களின் தமிழறிவை வளர்த்துக் கொண்டு தொண்டாற்றினால், தமிழுக்கும் பெருமை! அவர்களுக்கும் பெருமை!

    கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும்

    கொள்ளார் அறிவுடையார்.

(திருக்குறள் 404) என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருவாக்கை எண்ணுக! இதன்மூலம், பிற துறை அறிவில் அல்லது மொழியறிவில் சிறந்த கருத்துகள் தெரிவிப்பினும் அத்துறை அல்லது மொழிப்புலமையாளர்கள்  ஏற்றுக் கொள்ளார் எனப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, தமிழிலும் புலமை பெற வேண்டும்.

இதே போல், தமிழறிஞர்களும் பிற துறை அறிவைப் பெற்று, பிற துறைகள் வாயிலாகவும் தமிழ்த் தொண்டாற்ற வேண்டும்.

பிற துறையாளர்களே! பிற மொழியாளர்களே! தமிழறிவு பெறுக!

தமிழ்த்துறையினரே! பிற மொழியறிவும் பிற துறையறிவும் பெறுக!

தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்போம்!

இதழுரை

25.02.2045 / 09.03.2014feat-default