கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாம் மாநாடு

(மார்ச்சு 30, மாநிலக்கல்லூரி, சென்னை)

மின்மடல் இழை

அன்புள்ள தமிழ் ஆர்வலர்களே,

வரும் கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாவது மாநாட்டில் ‘ தமிழ்மொழித்தொழில்நுட்பத்தின் வளர்ச்சி’ என்பதே மையக் கருத்தாக அமைகிறது. எனவே மாநாட்டிற்குமுன்பே அதுபற்றி இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சிகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். தமிழகத்தில்மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளில் தமிழ்மொழித் தொழில்நுட்பத்தில் பலர் ஈடுபட்டுவருகின்றனர். அவைபற்றியெல்லாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் இந்த மின்மடல் இழை தொடங்கப்படுகிறது.

மொழித்தொழில்நுட்பம் ( Language Technology)

 பேச்சுத்தொழில்நுட்பம் (Speech Technology)

ஒளிவழி எழுத்துணர்த் தொழில்நுட்பம் (Optical Character Recognition Technology)

ஆகிய மூன்று பெரும் பிரிவுகளில் தமிழ் ஆர்வலர்கள் செய்திகள் அனுப்பினால் பயனுள்ளதாக அமையும். பிற மொழிகளுக்கு மொழித்தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள  மென்பொருள்கள் என்னென்ன, அதற்குத் தேவையான கணினிமொழியியல் (Computational Linguistics) ஆய்வின் வளர்ச்சி என்ன என்பதுபற்றி கருத்துகள் அமையலாம். எடுத்துக்காட்டாக,  பேச்சு – எழுத்துமாற்றி (Automatic Speech Recognizer – ASR) மென்பொருள்  எந்தெந்த மொழிகளில் இன்று உருவாக்கப்பட்டுள்ளன? அதற்கான ஆய்வுத் தேவை என்ன?  தமிழில் இந்தத் தொழில்நுட்பம் எந்த அளவு வளர்ச்சி பெற்றுள்ளது?  நீடிக்கும் சிக்கல்கள் என்ன? இதுபோன்று, எழுத்து – பேச்சுமாற்றி ( Text To Speech – TTS), மொழிப்பிழை திருத்திகள்  (Proof reading tools), இயந்திரமொழிபெயர்ப்பு(Machine Translation) என்று பல தொழில்நுட்பங்கள்பற்றி கருத்து தேவை. இவற்றிற்கான தமிழ்க் கணிணிமொழியியல் ஆய்வுகள் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளன?

 

  மேற்கூறிய அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் உள்ளீட்டு மென் பொருள்களின்(Inputdevices)- குறியேற்றம்(Encoding),   எழுத்துருக்கள் (Fonts),  விசைப் பலகைகள்(Keyboards)  ஆகியவற்றின் – வளர்ச்சியும் மிக அடிப்படையானது. இதுபற்றியும் நாம் பெற்றுள்ள வளர்ச்சி, நீடிக்கும் சிக்கல்கள்பற்றியும் கருத்துகள் தேவைப்படுகின்றன.  இந்தப் பிரிவையும் இணைத்து, மொத்தத்தில் நான்கு பிரிவுகளிலும் கணிணித்தமிழ் பெற்றுள்ள மொழித்தொழில்நுட்ப வளர்ச்சிகளைத் தயவுசெய்து அனுப்பிவையுங்கள். மாநாட்டின் வெற்றிக்கும், தமிழ்மொழித்தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் இது பயனுள்ளதாக அமையும்.

  தமிழில் பல மின்னாடல் குழுக்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் உள்ள உறுப்பினர்கள் இச்செய்தியைத் தங்கள் குழு உறுப்பினர்களுக்குத் தயவுசெய்து தெரிவிக்கவும். தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் ஆர்வத்துடன் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.

 

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி  :

ndsundaram@hotmail.com

ndeyvasundaram01அன்புடன்

 ந. தெய்வ சுந்தரம்