51against_hanging

தமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு! காரணமானவர்களை அரசியலிலிருந்து தூக்கு!

 51fishermen5

  இலங்கையில் பண்டாரநாயக்கா தலைமையாளராக(தலைமைஅமைச்சராக) இருந்தபொழுது 1956 ஆம்ஆண்டில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டது. இருப்பினும் அவர் படுகொலைசெய்யப்பட்ட பின்பு,1959இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால்,1978 இல் ஐக்கியத் தேசியக்கட்சி அரசாங்கத்தில் இதற்குப் பல வரையறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் தூக்குத்தண்டனை அல்லது மரணத்தண்டனை என்பது ஏட்டளவில்தான் உள்ளது. இதனால் 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையில் மரணத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்றத்தால் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களும் ஆயுள்தண்டனைபோல் சிறைவாசியில் தங்கள்வாழ்வைக் கழிக்கின்றனர்.

  சிங்களக் கொடுங்கோல் அரசு சிங்களர்க்கான தூக்குத்தண்டனையைத்தான் ஒழித்ததே தவிர, நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்தது. முள்ளிவாய்ய்கால் பேரவலத்திற்குப் பின்பும் அதன் படுகொலை தொடர்கதையாகத்தான் உள்ளது.

  சிங்கள அரசின் தமிழின அழிப்பின் ஒரு பகுதிதான் இதுவரை 578 தமிழக மீனவரைச் சிங்களக்கடற்படை சுட்டுக் கொன்றது. இப்பொழுது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுபோல் ஒரு நாடகமாடியுள்ளது.

  கார்த்திகை 12, 2042 / நவ.28, 2011 அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஃச்டசு, வில்சன், பிரசாத்து, இலாங்லெட்டு ஆகியோரை இலங்கைக் கடற்படையினர், போதை பொருள் கடத்தியதாகத் தளையிட்டனர். அவர்களுக்கு இலங்கை உயர்நீதிமன்றம் ஐப்பசி 13,2045 / 30.10.2014 அன்று தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

  தமிழினப்பேரழிப்பில் கொடுங்கோல் சிங்களம் ஈடுபட்டுவருவதில் ஒரு பகுதிதான் இது. சுப்பிசாமி, பாசக அரசின் கூட்டு முயற்சியால் அரங்கேறும் நாடகமாகவும் இருக்கலாம் என்பதே பலரின் ஐயப்பாடு. கொடுங்கோல் சிங்கள அரசு தமிழர்கள் உயிர்களைப் பறிக்க இருந்த பொழுது இவர்களின் தலையீட்டால் அவர்கள் உயிர் பிழைத்ததுபோல் நாடகமாடி நல்ல பெயர் எடுக்க மேற்கொள்ளும் முயற்சியாக இருக்கும் என்பதே பெரும்பாலோர் எண்ணம்.

  ஐவர் உயிர் காப்பாற்றப்படவேண்டும். அவ்வாறு காப்பாற்றப்பட்டபின்பும்நயவஞ்சகர்களை இருக்க வேண்டிய இடத்தில்தான் வைக்க வேண்டும். பொய்யான போதை வழக்கிலிருந்து இவர்களைக்காக்கத் தவறியதால் காங்., பாசக அரசுகள் சிங்களச் செயற்பாட்டிற்கு உடந்தையாளரகாகக் கருதப்படுவதில் தவறில்லை! இதுவரை சிங்களச்சிறையில் அல்லற்படும் தமிழக மீனவர்களுக்குத் தொடர் வாழ்வுத் தொகை தராததும் தவறாகும்.இனியேனும் சிங்களச்சிறையிலிருக்கும் தமிழக மீனவர் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் மாதம்தோறும் இருபதாயிரம் உரூபாய்க்குக் குறைவில்லாமல் பொருளுதவி அளிக்க வேண்டும்.

  தமிழர் நலன் தொடர்பில் மத்திய அரசிற்குஎதிராகக் குரல் கொடுத்து வரும் அ.தி.மு.க. அரசு, முனைப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். மடல் அனுப்பிக் கொண்டிராமல் அமைச்சர் குழுவொன்று நேரில் மத்திய அரசின் பொறுப்பில் உள்ளவர்களைச் சந்தித்து அனைவரும் விரைவில் விடுதலை அடைய ஆவன செய்ய வேண்டும்.

  இராமநாதபுர மாவட்ட மீனவர்கள் நாள்தோறும் இவர்களின் விடுதலைக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். அதே நேரம், அவர்கள், போக்குவரத்துச்சீர்குலைவு முதலான செயல்களில் ஈடுபடுவது அவர்களின் பொதுநலனுக்கு எதிரானது என்பதை உணர வேண்டும். எனவே, அமைதியான முறையில் அழுத்தமான எதிர்ப்பைக் காட்ட வேண்டும். பிற மாவட்ட மீனவர்களும் தமிழ் அமைப்புகளும் தமிழ்நலம் நாடும் கட்சிகளும் இவர்கள் விடுதலைக்காகப்போராடுவது வரவேற்கத்தக்கது.ஆனால், தங்கள் தலைவியின் விடுதலைக்காகப் பல வகைகளிலும் போராடிய ஆளும் கட்சியினர், அமைதி காப்பது வருத்தத்திற்குரியதே! மீனவர்களின் விடுதலைக்கான அவர்களின் அமைதியான கிளர்ச்சியே அரசின் கவனத்தைப் பெரிதும் ஈர்ப்பதாக அமையும். கட்சித்தலைமை சரியான முறையில் வழி நடத்த வேண்டும்.

  •  ஐவர் விடுதலை, இதுவரை கொல்லப்பட்ட ஒவ்வொருவர் குடும்பத்தினருக்கும் உரூபாய் ஐம்பது இலட்சம் உதவி,
  • உறுப்புகள் இழந்த ஒவ்வொருவருக்கும் முழுமையான உடல் நலனுக்கான அனைத்துச் செலவையும் தருவதுடன் உரூபாய் 30 இலட்சம் உதவி,
  • படகு, வலை முதலான உடைமைகளை இழந்தவர்களுக்கு அவற்றைப்புதியதாக வழங்குவதுடன் ஒவ்வொருவருக்கும் உரூபாய் 20 இலட்சம் உதவி

இந்திய அரசு வழங்க வேண்டும்.

இத்தகைய இழப்பீட்டைச் சிங்களஅரசிடமிருந்தும் பெற்றுத் தரவேண்டும்.

இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

மீனவர்கள் கண்ணீர்

கொடுங்கோல் சிங்களரை ஒழிக்கட்டும்!

காரணமான இந்தியர்களை உரிய பொறுப்புகளில் இருந்து அகற்றட்டும்!

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை

(திருவள்ளுவர், திருக்குறள் 555)

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png

ஐப்பசி 16, 2045 / நவ.2, 2014