தலைவர் தாலினுக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர் தாலினுக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுகள்!
தி.மு.க.பொதுக்குழு கூடித், தலைவரையும் பிற பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது அல்லது நியமித்துள்ளது. திமுகக் கட்சித் தலைவராக முதலமைச்சர் மு.க.தாலின், திமுகப் பொதுச்செயலாளராகத் துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல், திமுகத் துணைப் பொதுச்செயலாளர்களாகக் கனிமொழி, இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.இராசா, அந்தியூர் செல்வராசு ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு தங்கள் பொறுப்பைத் தொடர்ந்தவர்களுக்கும் புதிய பொறுப்பை ஏற்றவர்களுக்கும் பாராட்டுகள். சிறப்பாகச் செயலாற்றி நாட்டிற்கும் மக்களுக்கும் தொண்டாற்ற வாழ்த்துகள். தமிழ் வளர்ச்சி, தமிழின முன்னேற்றம் முதலியவற்றைப் பேச்சளவில் கருதாமல் உண்மையாக அவற்றின் வளர்ச்சிக்கு ஒல்லும் வகையெல்லாம் பாடுபடவும் வேண்டுகிறோம்.
தி.மு.க.பொறுப்பாளர்கள் பல்வேறு நிலைகளில் தத்தம் திறமைகளை வெளிப்படுத்தியும் அரசுப்பணியும் மக்கள்பணியும் ஆற்றியும் இப்போதைய நிலைக்கு வந்துள்ளனர்.
மேடைப்பேச்சாளரும் வழக்குரைஞரும் இலக்கியவாதியும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1971 முதல் பத்துமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் தலைவராக விளங்குபவர். தி.மு.க.வின் பொருளாளர், முதன்மைச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளர் முதலான பொறுப்புகளை வகித்துத் தம் ஆளுமையைக் காட்டி வருபவர். இவர் இருக்குமிடம் கலகலப்பாக இருக்கும். மேடைப்பேச்சுகளிலும் சிரிப்பலைகளை ஏற்படுத்துவார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் மேனாள் நடுவண் ஆமைச்சருமான த.இரா.பாலு தன்னுடைய பதினாறாம் அகவையில் தி.மு.க.வில் இணைந்தவர். இவர் 1982 ஆம் ஆண்டு தி.மு.க.வின் சென்னை நகர மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இப்போது ஆறாம் முறையாக மக்களவை உறுப்பினராக உள்ளார். எரிபொருள் துறை அமைச்சராகவும் (1996-1998), சுற்றுச்சூழல்-வனத்துறை அமைச்சராகவும் (1999-2003), கப்பல்-நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் (2004-2009) பணியாற்றி ஆட்சிப் பணியாண்மையிலும் பட்டறிவு பெற்றவர்.
திண்டுக்கல் இ. பெரியசாமி வத்தலக்குண்டு ஒன்றியத் தலைவராகத் (1986 – 1991) தம் அரசியல் பொறுப்பு வாழ்வைத் தொடங்கியவர். 1989 – 1991, 1996-2001, 2006-2011, 2016-2021 என நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வேறுபாட்டில் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் வைப்புத் தொகையை இழந்தமை குறிப்பிடத்தக்கது. சிறுதொழில்-நண்பகல் உணவு அமைச்சராகவும்(1996-2021) வருவாய்-வீட்டுவசதித்துறை அமைச்சர்(2006-2011) ஆகவும் திகழ்ந்தவர், இப்போது கூட்டுறவுத் அமைச்சராகக் கடமையாற்றுகிறார்.
முனைவர் க. பொன்முடி திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக வளர்ந்து ஒருகிணைந்த விழுப்புரம் மாவட்டச் செயலாளராக உயர்ந்து இப்போது துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். சிறந்த பேச்சாளரான இவர், தி மு க வினரால் இனமான இளய பேராசிரியர் என்று அழைக்கப்படுகிறார். 1989, 1996, 2001, 2006, 2016, 2021 ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நலவாழ்வுத்துறை அமைச்சர்(1989-1991), போக்குவரத்து அமைச்சர்(1996-2001), உயர் கல்வி அமைச்சர் (2006 – 2011) பொறுப்புகள் மூலம் மக்கள் தொண்டாற்றியவர் இப்போதைய அமைச்சரவையிலும் உயர்கல்வி அமைச்சராக உள்ளார்.
வாதாடி வாகை சூடுவதில் சிறந்த வழக்குரைஞர் ஆ. இராசா தன்னுரையால் கேட்பவரைப் பிணிக்கும் நாவன்மை மிக்கவர். 1996, 1999, 2004, 2009, 2019 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றி வருபவர். தகவல், தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகத் திகழ்ந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக அணி செய்கிறார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராசு 1996-இல் அந்தியூர் சட்டசபைத் தொகுதியில் வெற்றிபெற்றார். கைத்தறி துறை அமைச்சராக இருந்தவர்(1996-2001), ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளராகவும் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார். இப்போது மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கவிஞர் கனிமொழி கருணாநிதி மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். இலக்கிய ஆர்வலரான இவர் இதழியல் துறையில் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல் வாழ்வில் வாழ்க்கையைத் தொடருகிறார். உயர்நிலைச் செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக இருந்தும் மகளிரணி மாநிலச் செயலாளராக இருந்தும் கழகத் தொண்டாற்றியவர். ‘இந்து’ இதழின் தேசிய அச்சகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார். இப்பொறுப்பில் தேர்நதெடுக்கப்பட்ட முதல் பெண்மணி இவரே ஆவார். தூத்துக்குடி மக்களவை உறுப்பினராக உள்ள இவரைத் தூத்துக்குடித் தொகுதியில் மக்களுடன் காணலாம். கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய கவிதை நூல்களைப் படைத்துள்ளார். பாம்பே செயசிரீயுடன் இணைந்து சிலப்பதிகார இசைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். காட்சிக்கெளியவர் என்பதே இவரின் தனிச்சிறப்பு.
திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார்; உயர்நிலைக் குழுவிலும் உள்ளார். 1986 ஆண்டு தி.மு.க. சார்பில் புள்ளம்பாடி ஒன்றியப் பெருந் தலைவராக அரசுப் பொறுப்பைத் தொடங்கினார். கடந்த 1989 முதல் 1999 வரை மின்சாரத்துறை, பால்வளத்துறை, செய்தித்துறை, தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து உணவுத் துறை-கூட்டுறவுத் துறை அமைச்சர்(1996-2001) போக்குவரத்துத்துறை அமைச்சர்(2006-2011) வேளாண்துறை அமைச்சர்(2008-2009) என அமைச்சுப்பொறுப்புகளில் செயல்பட்டார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் போல் திருச்சி கலைஞர் அறிவாலயத்தைச் சிறப்பாகக் கட்டியது இவரது சிறப்புகளில் ஒன்றாகும்.
மு.க.தாலின், 1967இல் தன் 14ஆம் அகவையில், தன் மாமா முரசொலி மாறனுக்காகத் தேர்தல் பரப்புரை தொடங்கியவர், இப்பொழுது நாடெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். வட்டச் சார்பாளர், மாவட்டச் சார்பாளர், பொதுக்குழு உறுப்பினர்(1973), செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்றுக் களப்பணிகள் ஆற்றினார். நெருக்கடிக் காலத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணுகைச் சட்ட(மிசா)த்தின்படித் தளையிடப்பட்டுச் சிறைவாழ்க்கையில் தள்ளப்பட்டார். கட்சியின் பொறுப்புப் படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணி அமைப்பாளர்(1980-1984), இளைஞர் அணிச்செயலாளர்(1984-2017), பொருளாளர்(2008-2018),எதிர்க்கட்சித் தலைவர்(2016), செயல் தலைவர்(2017-2018), தலைவர்(2018 முதல்) எனப் பலநிலைகளில் கட்சி வளர்ச்சிக்குப் பாடுபட்டார். இப்பொழுது இரண்டாம் முறையாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாநகராட்சித்தலைவர்(1996, 2001), ஊரக வளர்ச்சி-உள்ளாட்சித் துறை அமைச்சர்(2006), துணை முதல்வர்(2009), முதலமைச்சர்(07.05.2021 முதல்) என ஆட்சிப்பொறுப்பில் இருந்து நற்பணி ஆற்றி வருகிறார். முதல்வராக இருந்து, நான் முதல்வன், பசுமைத் தமிழ்நாடு இயக்கம், புதுமைப்பெண், முதலமைச்சர் காலைஉணவுத்திட்டம் முதலான திட்டங்கள் மூலம் மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வருகிறார். இந்தியத் தேச அளவில் பிற மாநிலத் தலைவர்களால் விரும்பப்படுபவராகவும் இந்தியக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வல்லமை மிக்கவராகவும் விளங்குகிறா்.
கட்சியின் புதிய பொறுப்பாளர்களுக்கு நாம் அறிவுரைகூற வேண்டிய தேவைஇல்லை. அவர்களின் தலைவரே நல்லறிவுரை கூறியுள்ளார். “நாம் பயன்படுத்தும் சொல் மிக மிக முக்கியமானது. மிக மிக எச்சரிக்கையாகப் பேசுங்கள்” என யாகாவாராயினும் நா காக்க என்று அவர் சொல்லியுள்ளதை யாரும் மறக்கக் கூடாது. நா காப்போர் விளையாட்டிற்காகவும் யாரையும் இகழ்ச்சியாகப் பேச மாட்டார்கள். எனவேதான் திருவள்ளுவர்.
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.(திருக்குறள் 995) என்கிறார்.
தன்னுரையில், “அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார். காலங்காலமாகத் தமிழ் இலக்கியங்கள் இதனைத் தெரிவித்து வருகின்றன. சங்கக்கால மன்னர்களும் புலவர்களும் ஆட்சிப்பொறுப்பின் சுமை குறித்துக் கூறியுள்ளனர்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் மழை பெய்யாவிட்டாலும் விளைச்சல் குறைந்தாலும் இயற்கைக்கு மாறானவை தோன்றினாலும் நாட்டின் காவலனான தலைவனையே இந்த அகன்ற உலகம் பழிக்கும் என்கிறார் வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர்
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும்
காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்
என்பன அப்பாடலடிகள்(புறநானூறு 35, 27-29).
எனவே, பொறுப்பாளர்களும் கட்சியினரும் ஆட்சிப்பொறுப்பின் நலன்களை மட்டும் எண்ணிக் கொண்டிராமல், அதன் சுமைகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சிறு பழியும் தங்களால் ஆட்சிக்கு ஏற்படா வண்ணம் மக்கள் நலனில் கருத்து செலுத்த வேண்டும்.
ஒன்றிய அரசின் இந்திததிணிப்புகள் குறித்து முதல்வரும் தலைவருமான மு.க.தாலின் ஒன்றிய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தித் திணிப்பு எதிர்ப்பை அலங்கார முழக்கமாகக் கருதாமல் உள்ளத்தின் அடியில் இருந்து உணர்வுபூர்வமாக உணர்ந்து இந்தித்திணிப்பின் தீமையை மக்களிடமும் ஒன்றிய ஆட்சியாளர்களிடமும் உணர்த்த வேண்டும். இந்தித் திணிப்பை அல்ல, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத பிற மாநிலங்களில் மறைமுகமாகத் திணிக்கப்படுவதால் இந்தியையே எதிர்க்க உறுதி கொள்ள வேண்டும். அதே நேரம் தமிழ். தமிழ் மக்களின் எல்லா நிலைகளிலும் பயன்படு மொழியாகத் திகழ உழைக்க வேண்டும். தி.மு.க.வின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வண்ணம் அவரவர் நடத்தும் கல்விக்கூடங்களில் தமிழையே பயிற்று மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தியையும் சமற்கிருதத்தையும் கற்பிப்பதை நிறுத்த வேண்டும். பெயரளவிற்கு இந்தி ஒழிக எண்பதாலோ, தமிழ் வாழ்க என்பதாலோ இந்தித்திணிப்பு நிற்காது, தமிழும் வாழாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆரவார அரசியலுக்கு இடம் தராமல், ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும்.
எனவே, புதிய பொறுப்பாளர்கள் பிறருக்கு முன் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து தமிழ்நாட்டைத் தமிழ் வழங்கும் நாடாக விளங்கச்செய்யும் வகையில் ஒல்லும் வகையெல்லாம் உழைத்து மேலும் பல உயர்வுகள் எய்த வாழ்த்துகிறோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
Leave a Reply