‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா? விளம்பரக்கூத்திற்கா?
‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா? விளம்பரக்கூத்திற்கா?
தூய்மையே நம் செல்வம். எனவே, இந்தியாவைத் தூய்மையாக்குவோம் என்னும் திட்டம் என்னும் எண்ணம் வரவேற்கத்தக்கது. ஆனால், நடைமுறையில் இத்திட்டம் கேலிக்கூத்தாகத்தான் உள்ளது.
அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகளால் இந்தியா தூய்மையாகிவிடுமா? ஆனால் அப்படித்தான் மத்திய அமைச்சர்கள் எண்ணுகிறார்கள்.
உழவாரப்பணி போன்று தூய்மைத் திட்டத்தில், தொண்டு மனப்பான்மையில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். அதற்கு முன்னதாக அரசுப் பணியாளர்கள் தத்தம் கடமையைஆற்றப் பணிக்க வேண்டும்.
மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் தூய்மை பேணப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இன்றைய தூய்மைக்கேடு எந்த அளவில் உள்ளது என்பதற்கு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாகச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
சென்னையில் பறக்கும் தொடரி எனப்படும் கடற்கரை-வேளச்சேரி மின்தொடர் வண்டிப்பாதையில் உள்ள எந்த நிலையத்திலும் கழிப்பறையோ குடிநீர்க்குழாயோ பயன்பாட்டில் இல்லை. அப்படியானால் இந்த இடங்களில் தூய்மைக்கேடு எவ்வாறு இருக்கும் என ஊகிக்கலாம். அது மட்டுமல்ல! இந்நிலையங்களில் குப்பைக் கூளங்கள் எங்கும் உள்ளன.
தூய்மைத் திட்டத்திற்கு எனத் தனி நிதி ஒதுக்கீடு செய்யப் போவதாகவும் இச் செலவினங்களுக்காகச் சில பிரிவுகளில் கூடுதல் வரி விதிக்கப்போவதாகவும் செய்திகள் வருகின்றன. உரிய ஊழியர்கள் தத்தம் கடமையை ஆற்றினால், இருக்கின்ற ஒதுக்கீட்டிலேயே தூய்மையான நாட்டை உருவாக்கலாம் அல்லவா?
மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் உரியவாறு செயல்பட்டால், மக்களுக்கும் தெருவில் குப்பையைக் கொட்டக் கூடாது என்ற விழிப்புணர்வு வந்துவிடும் அல்லவா?
சான்றுக்கு ஒன்று கூற விரும்புகின்றேன். சென்னை மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெளிநாடோ என்று எண்ணுமளவிற்குக் கழிப்பறை சிறப்பான தோற்றத்தில் உள்ளது. ஆனால், அங்கே நீர் வசதி இல்லை. மக்கள் இவற்றைப் பயன்படுத்திவிட்டு நீரைப் பயன்படுத்தாவிட்டால் எப்படி இருக்கும் என்று விளக்கத் தேவையில்லை. அந்த அளவிற்கு மிக மிக மோசமான நிலையில் உள்ளது.
பேருந்து நிலையங்களிலும் வழியிடை நிறுத்தங்களிலும் கட்டணக் கழிப்பறைகள் இருக்கும் நலக்கேடான நிலையை அனைவருமே அறிவர்.
அரசு அலுவலகக் கட்டடங்களில்கூட நாம் தூய்மையைப் பார்க்க முடிவதில்லை.
இறைச்சிக் கடைகள், உணவுக்கடைகள் அருகேயே அவற்றின் குப்பைகள் கொட்டப்பட்டு மக்கள் அடையும் துன்பம் யாவரும் அறிந்ததே! நாட்டில் கழிவறைகள் இல்லாப் பள்ளிக்கூடங்கள்தாம் மிகுதியாக உள்ளன. இவற்றை இத் தூய்மைத்திட்டக் கேலிக்கூத்து சரியாக்கிவிடுமா?
திரையரங்குகள், சந்தைகள், திருவிழா நிகழ்விடங்கள், கூட்ட இடங்கள், கண்காட்சிகள் போன்ற மக்கள் கூடுமிடங்களில் இருக்கின்ற திட்டங்கள், சட்டங்கள் மூலமே தூய்மையைக் கொண்டுவரமுடியும் அல்லவா? அவ்வாறிருக்க மக்களுக்கு நிதிச்சுமை ஏற்படுத்திப் பயனற்ற திட்டமாக மாறப்போகும் இந்தக் கேலிக்கூத்து எதற்கு?
பொதுமக்களுக்கு முன்னோடியாக நாடெங்கும் உள்ள ஆளுங் கட்சியினரை இதில் ஈடுபடுத்தலாம் அல்லவா?
தூய்மைக்கேடற்ற இடங்களுக்கு அவ்விடங்களின் அதிகாரிகள், பணியாளர்களைப் பொறுப்பாக்கியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும் தொண்டு மனப்பான்மையை வளர்த்தும் எளிதில் தூய்மைத் திட்டத்தை நிறைவேற்றலாம். அவ்வாறில்லாமல் இப்போதுள்ள செயற்பாடு விளம்பரக் கேலிக்கூத்தாகத் தொடர்ந்தால் மக்களிடையே வெறுப்புதான் வளரும் என்பதை நரேந்திர(மோடி) அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். (திருக்குறள் 673)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் அறவுரையைப் பின்பற்றித் தூய்மைத் திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல 62 இதழுரை
நாள் தை 4, 2046 / சனவரி 18, 2015
Leave a Reply