(தோழர் தியாகு எழுதுகிறார் 41 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (3)     

தாராளியமா?

தாராளவியமா?

தாழி அன்பர் ‘சிபி’ எழுதுகிறார்:

தாரளம்+இயம் என்பதில் மகரவீற்று கெட்டப்பின்னர் தாராளவியம் தானே வரும். தாரள+இயம் என நிற்கும் போது உடம்படுமெய் விதியைத் தான் பொருத்தமுடியும். ள+இ என்பதில் அகரம் கெட்டாலொழிய ள்+இ என நிற்காது. அகரம் கெடும் விதி இதற்குப் பொருந்துமாமேலும் தாராளவியம் என்பதே இயல்பான பலுக்கலாக உள்ளது.

*************************

சிபி சொல்லும் தமிழ் இலக்கணத்தில் எனக்கு அவ்வளவாகப் பழக்கம் இல்லை. அது என் குறை. எனவே தமிழறிஞர்களின் கருத்தறிய விரும்புகிறேன். யாரும் “நவ-தாராளவாதமே இருந்து விட்டுப் போகட்டும்” என்று சொல்லவில்லை என்பது நல்ல செய்தி. நவம் வேண்டாம். புதுச் சிந்தனைதான் வேண்டும் என்பதில் அனைவரும் உடன்படுகிறோம். எஞ்சி நிற்கும் கேள்வி: தாராளவியமா? தாராளியமா? இரண்டுமே சரிதான், நாம் தாராளியத்தையே வைத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. சிபி சொல்வது போல் அது இலக்கணப் பிழையாக இருப்பின் தாராளவியத்துக்கு மாறிக் கொள்ளலாம், தாராளமாக!

தாராளியம் பிழையன்று என்றுதான் இலக்குவனார் திருவள்ளுவன் கூறியிருந்ததாகப் புரிந்து கொள்கிறேன். சொல்லாய்வறிஞர் அருளியார் தாராளிகம் என்கிறார். இது குறித்து அவரது விளக்கத்தையும் தெரிந்து கொள்வோம்.

இது ஒருபுறமிருக்க… அடுத்து ஏகாதிபத்தியமா? வல்லரசியமா? என்ற சிக்கலை எடுத்துக் கொள்வோம்.

இரோசிமா நாகசாகியை

மறப்போமா? மன்னிப்போமா?

சப்பான் நாட்டு நகரங்களாகிய இரோசிமா, நாகசாகி மீது நேக் கூட்டணியில் ஒரு நாடாகிய அமெரிக்க வல்லரசு அணுக்குண்டு வீசித் தாக்குதல் நிகழ்த்தியது. இரு குண்டுவீச்சுகள்! உலக வரலாற்றில் இதுவே முதல் அணுகுண்டுத் தாக்குதல். இதுவே கடைசியாகவும் இருந்து விட்டால் மாந்தக் குலத்துக்கே நிம்மதி. ஆனால் இன்றும் அணுவாய்தங்களால் பேரழிவு ஏற்படும் அச்சம் நீடிக்கிறது. இந்தப் பேரழிவைத் தவிர்க்க உறுதியாகப் போராட வேண்டிய தேவை உள்ளது. தன்னை அணுவாய்த வல்லரசாகப் பெருமை பேசும் நாட்டில் நாம் வாழ்கிறோம். அணுவாய்த மோகம் கொண்டவர்களை அறிவியல் பேரறிஞர்களாக மதிக்கும் நாடு! வெட்கம்!

இந்தப் பின்னணியில் இரோசிமா நாகசாகியை மறக்கவோ மன்னிக்கவோ கூடாது என்று நமக்கு நாம் உறுதியேற்கவும், எதிர்காலத் தலைமுறைகளை உறுதியேற்கவும் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். இரோசிமா நாகசாகியை ஞாயப்படுத்தும் முயற்சிகள் புதியவை அல்ல. குண்டுவீசிய காலத்திலேயே அமெரிக்க வல்லரசு அதனை ஞாயப்படுத்தி அறிக்கை விட்டது: இந்த அணுக்குண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாம்! சப்பான் மீது அணுக்குண்டு போட்டுப் பேரழிவை உண்டாக்காம லிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்குமாம். அதன்மூலம் இன்னுங் கூடுதலான  மக்கள் இறந்திருப்பார்களாம்!  பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டதாம் அமெரிக்கா!  இந்தப் பெரும்  படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை சரிதானா?

இரண்டாம் உலகப் போரில் செருமனி, இத்தாலி ஆகியவற்றுடன் சேர்ந்து சப்பான் உக்கிரமாகப் போரில் குதித்தது.  பசிபிக்கு கடல் வட்டாரத்தில் முத்துத் துறைமுகத்தில் (Pearl Harbour)  நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க் கப்பலைத் தாக்கி மூழ்கடித்து அமெரிக்காவையும் முழுமூச்சான போரில் இழுத்து விட்டது.  இது  நடந்தது 1941 திசம்பர் 7ஆம் நாள்.

அமெரிக்கா தான் புதிதாகக் கண்டு படைத்திருந்த அணுகுண்டுகளை வீசியது: இரோசிமா – 1945 ஆகட்டு 6ஆம் நாள்; நாகசாகி – ஆகட்டு 9ஆம் நாள். முத்துத் துறைமுகத்தில் சப்பானால் தாக்கப்பட்டது ஒரு போர்க்கப்பல்! இரோசிமா நாகசாகியில் அமெரிக்க அணுக்குண்டு வீச்சுகளால் பல்லாயிரக்கணக்கில் எரிந்து சாம்பலானவர்கள் –– சாம்பலும் கூட மிஞ்சாமல் ஆவியாகிப் போனவர்கள் பொதுமக்கள்! அதற்கு இது பழிதீர்ப்பு என்றால் நியாயம்தானா? கேட்போம்.

_____ “ எந்தக் கண்ணும் கண்டிராத, எந்த உள்ளமும் எண்ணிப் பார்க்காத, எந்தச் சொல்லும் சொல்ல முடியாத கொடுமை இது! இன்றைய தேவை ஆணைகளோ சொற்பொழிவுகளோ கட்டுரைகளோ அல்ல! இக்கணமே மாநகரக் காவல் ஆணையரும் காவல் துறைத் தலைமை இயக்குநரும் இடைநீக்கம் செய்யபட வேண்டும். இல்லையெனில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் உயர் நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் மாண்பையும் காப்பாற்ற உடனே பதவி துறக்க வேண்டும் “ ______

இது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியர் வி.ஆர். கிருட்டிணய்யர் கூறியது.

ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? அப்படி என்ன நடந்தது? நினைவிருக்குமானால் எழுதுங்கள்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 27