புதிய கல்வித்திட்டத்தில் மொழிக் கொள்கை : அரசு தடம் புரள்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
புதிய கல்வித்திட்டத்தில் மொழிக் கொள்கை :
அரசு தடம் புரள்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
பொதுவாகத் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் எதிர் நிலையில் செயற்பட்டாலும் இந்தி எதிர்ப்பு, மும்மொழித்திட்ட எதிர்ப்பு, தமிழ் முழக்கம், தமிழ் நலத்திட்டங்கள், ஆட்சித்தமிழை வலியுறுத்தல் போன்றவற்றில் செய்வனவற்றிலும் செய்யத் தவறுவனவற்றிலும் ஒற்றுமை உண்டு. ஆட்சி மாறினாலும் அரசு மாறாது என்பதற்கு இவர்களின் இவை தொடர்பான கொள்கைகளே சான்றாகும். இரு கட்சிகளின் அரசுகளுமே அனைத்து வகுப்புகளிலும் தமிழ் கற்பிக்கப்பட வெவ்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளன, இப்போதும் ஆளும் அரசு எடுத்து வருகிறது.
தமிழ் மக்கள் உணர்ச்சிகரமாகப் போராடினாலும் வெற்று அறிவிப்பில் மயங்கும் அளவிற்குத்தான் அறிவுடையவர்கள். அவர்களை வழி நடத்தும் கட்சிகள் பொங்கி எழுந்து அடங்கி விடுவதுதான் காரணமாக இருக்கும்.
கல்லூரிகளில் முன்பு முதல் பிரிவு ஆங்கிலம் மட்டும், இரண்டாம் பிரவு தமிழும் பிற மொழிகளும் என இருந்தன. முதல் பிரிவிற்குத் தமிழை மாற்ற வேண்டும் எனப் போராடினார்கள். அரசும் செவிமடுப்பதுபோல் முதல் பிரிவிற்குத் தமிழை மாற்றியது. முன்பு முதல் பிரிவு ஆங்கிலம் மட்டும் இருந்தது என்பதுபோல் தமிழ் மட்டும் என்னும் நிலைக்குத்தான் போராடினார்கள். ஆனால், முதல் பிரிவு தமிழும் பிற மொழிகளும் என மாற்றியது. அஃதாவது பெயரை மட்டும் மாற்றி விட்டு முந்தைய நிலையையே தொடர விட்டனர். மக்கள் உண்மையை உணர்ந்தும் உணராமல் அமைதியாயினர்.
மற்றொரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது. சனதாக்கட்சியைந் சேர்ந்த மது தண்டவதே(Madhu Dandawate) தொடரித்துறையில் பல முன்னேற்றங்கள் நிகழக் காரணமாக இருந்தவர். அவர் தொடக்கி வைத்ததில் இருந்துதான் பிற ஏந்து/வசதி ஏற்பாடுகள் பெருகின. அவர் தொடரியில் 1978இல் மூன்றாம் வகுப்பை ஒழித்தார் எனப் பெருமை பேசுவர். உண்மையில் அவர் தொடரியில் இருந்த இரண்டாம் வகுப்பை எடுத்தார். எனவே, நடைமுறையில் இருந்த மூன்றாம் வகுப்பு, (இருந்த இரண்டாம் வகுப்பு ஒழிக்கப்பட்டதால் இயல்பாக) இரண்டாம் வகுப்பு எனப் பெயர் பெற்றது. மூன்றாம் வகுப்பு என்னும் பெயர் இல்லாமல் போனது. ஆனால், நடைமுறையில் அஃது இண்டாம் வகுப்பு என்ற பெயரில் பயன்பாட்டில் இருந்தது. இத்தகைய பெயர் மாற்றம்போல்தான் மொழிப்பிரிவுகளின் பெயர் மாற்றமும் இருப்பதாக மக்கள் பேசினர்.
15.08.2003 இல் அப்போதைய முதல்வர் செயலலிதா, 2003-2004 ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் அறிவியல் தமிழ் பாடமாக இருக்கும் எனக் கூறி நடைமுறைப்படுத்தினார். ஆனால், இதற்கு எந்தத் தேர்வும் கிடையாது. எனவே, அரசின் விலையில்லாப் புத்தகங்களைப் பெற்றதுடன் ஆசிரியர்கள் அதைப் பாடமாக நடத்தாததால் மறந்து விட்டனர். பெயரளவு அறிவிப்பாகப் பயனின்றிப் போனது.
2006 ஆம் ஆண்டு தமிழ் கற்பிப்பதற்கான சட்டம் (Tamil Nadu Tamil Learning Act, 2006) இயற்றப்பட்டது. சட்டம் வெளிவந்தபோது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதிதான் இதன் பெருமைக்கு உரியவராக இன்று வரை பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்தச்சட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் 03.02.2006 அன்று ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றிருந்தது. அப்படியானால் அந்த அரசின் நடவடிக்கையால்தான் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. எனினும் கலைஞர் முதல்வராக இருந்தபோது 12.06.2006 இல் வெளியானது.
இதன்படி ஆண்டுதோறும் ஒவ்வோர் வகுப்பாகத் தமிழ் அறிமுகப்படுத்தும் நிலையில்தான் சட்டம் இருந்தது. என்றாலும் நடைமுறையில் பயனில்லை. இருப்பினும் அரசாணை பல்வகை எண் 145, பள்ளிக் கல்வித் துறை நாள் 18.09.2014 இல் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டு அதன் மூலமே இவ்வாணை நடைமுறைப்படுத்தப்பட்டது.
சரிதானே! அதற்கு என்ன இப்பொழுது என்கிறீர்களா? அரசு புதிய கல்விக்கொள்கைக்கான வரைவை அறிவித்துள்ளது. அதில் முதல் பாடம் என்பது தமிழ் முதலான பிற மொழிகள், இரண்டாம் பாடம் ஆங்கிலம் மட்டும் என உள்ளது.
பள்ளிக்கல்வியில் தமிழைக் கட்டாயப்பாடமாக ஆக்கிய அரசு, கல்லூரியிலும் அதைத்தானே தொடர வேண்டும். மாறாகத் தமிழை ஏன் விருப்பப் பாடப் பிரிவில் சேர்த்தது. ஏன் இந்தத் தடுமாற்றம்? அல்லது தடம் புரண்டிருப்பதுதான் அரசின் மொழிக் கொள்கையா?
பள்ளிகளில் உள்ளமைபோல் கல்லூரிகளிலும் தமிழ் பாடமொழியாகவும் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் எனப் போராடினார் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார். அதில் ஓரளவு வெற்றி கண்ட பொழுது தி.மு.க. ஆட்சியில் பெரும்பாலும் பள்ளிகளில் ஆங்கிலம் கட்டாயமாகக் குடிபுகுந்தது.
இதற்குக் காரணம் பெருந்தலைவர் காமராசர் – ஆம் பெருந்தலைவரேதான். அவர் தூண்டுதலால் ஆங்கிலவழி பயில்வோர் போராடி அதன் காரணமாகக் கலைஞருக்கு மாணவர் உலகமே எதிர்ப்பதுபோன்ற அச்சத்தை உண்டாக்கினர். அவரும் வாணாள் முழுவதும் தமிழ்க்கல்விக்கும் தமிழ் வழிக் கல்விக்கும் எதிராக வாதிட்டவரான ஏ.இலக்குமணசாமி(முதலியார்) தலைமையில் ஓராள் குழு அமைத்தது. அவரே உறுப்பினர்! அவரே தலைவர்! அவரது அறிக்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட இருந்த தமிழ் வழிக்கல்வி நின்று போனது. அன்று நடைமுறைக்கு வந்திருந்தால் தமிழ்நாட்டில் எல்லா நிலைகளிலும் தமிழ் என்றோ மாறியிருக்கும்.
கட்டாயத் தமிழ்க்கல்விக்காகத் தமிழன்பர்கள் போராடியதால் 2006 சட்டம் மூலம் பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகக் கல்லூரிகளிலும் கட்டாயத் தமிழைக் கொண்டு வராமல், இப்பொழுது கல்லூரிகளில் தமிழ் விருப்பப்பாடம் என்றால் அதனை நீக்க நாம் எத்தனை ஆண்டுகள் போராட வேண்டுமோ? தெரியவில்லையே!
இதற்குக் காரணம் அரசு இதற்கான மாநில கல்விக்கொள்கை குழுவில் தமிழறிஞர் யாரையும் சேர்க்காமைதான். உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவின் உறுப்பினர்களாக, சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். சவகர்நேசன் (இவர் பின்னர் விலகி விட்டார்), தேசியக் கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுசம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இசுமாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், பன்னாட்டுச் சிறார் நிதிய(யுனிசெப்) முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா இரத்தினம், எழுத்தாளர் எசு. இராமகிருட்டிணன், சதுரங்க வாகையர் விசுவநாதன் ஆனந்து, இசைக் கலைஞர் டி.எம். கிருட்டிணா, கல்வியாளர் துளசிதாசு, கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த செயசிரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரும் தமிழறிஞர் அல்லர். கணிணிக்கும் இசைக்கும் விளையாட்டுக்கும் முதன்மை அளித்ததுபோல் கல்விக்கு அடிப்படையான தாய்மொழிக்கும் முதன்மை அளிததுத் தமிழ்ப்பற்றுள்ள தமிழ்ப்பேராசிரியர்கள் இருவரைக் குழுவில் சேர்த்திருக்க வேண்டுமல்லவா?
மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவில் தமிழறிஞர்களுக்கு இடந் தருக! (அகரமுதல நாள் 24.04.2022 ; அங்குசம் நாள் 06.05.2022) என நாம் வேண்டியிருந்தோம்.
மேத் திங்களில் உறுப்பினர் எல். சவகர்நேசன் விலகியதால் புதிய உறுப்பினர்கள் அமர்த்தத்தில் நம் வேண்டுகோளை அரசு ஏற்றது. அதன்படி, 20.05.2023 இல் காயிதே மில்லத்து அரசு பெண்கள் கல்லூரி, முதல்வர் (ஓய்வு) டி. ஃப்ரீடா ஞானராணி, சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்- தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் பேரா.பழனி ஆகியோர் புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். குழுவின் காலம் முடிவடையும் பொழுது இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் செட்டம்பர் 2023 இறுதிவரை குழுவின் பணிக்காலத்தை அரசு நீடித்துள்ளது. ஆய்வுஅறிக்கை முடிவடைந்த பின்னர் அமர்த்தப்பட்ட பேராசிரியர் என்ன செய்தார் என்று தெரியவில்லை.
தேசியக்கல்விக்கொள்கையை ஏற்காமல் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ், கட்டாயப்பாடமாக இருக்கும் என அறிவித்த தமிழ்நாடு அரசு, கல்லூரிகளிலும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளியைத் தொடர்ந்து கல்லூரிகளிலும் தமிழ், கட்டாயக் கல்வியாக இருக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை எனத் தெரிவித்து அதற்கேற்ப எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்துக் குழுவின் அறிக்கை வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.
இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்
துன்பங்கள் நீங்கும்! – பாவேந்தர் பாரதிதாசன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
சரியான நேரத்தில் வலுவான நினைவூட்டல் ஐயா! ஆம், கல்லூரியிலும் தமிழ் கட்டாயப் பாடமாகத்தான் இருக்க வேண்டும். நம் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழில் ஓரளவு நன்றாகவே எழுதத் தெரிந்திருக்கிறார்கள்; திருக்குறள் முதலான தமிழ் இலக்கியங்களில் சிறிதேனும் மனப்பாடமாக அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கல்லூரிப் படிப்புக்குப் போனதும் சிறிது சிறிதாகத் தமிழை மறக்கிறார்கள். இதற்குக் காரணம் கல்லூரிச் சூழல். எனவே கல்லூரிப் படிப்பிலும் தமிழ் கட்டாயப் பாடமாக இருப்பதே அடுத்த தலைமுறையின் உள்ளத்தில் தமிழை நிலைக்க வைக்கும்.
என் நண்பரான கல்லூரி உதவிப் பேராசிரியர் ஒருவர் சொன்ன நேரிடைத் தகவலை இவ்விடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்றைய தமிழ்நாடு அரசானது கல்லூரி இரண்டாம் ஆண்டிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக்க முனைவதாகவும் கல்வித்துறையில், குறிப்பாகப் பல்கலைக்கழகங்களின் உச்சப்பதவியில் வீற்றிருக்கும் பலர் பா.ச.க., ஆதரவாளர்களாக இருப்பதால் அவர்கள் பேராசிரியர்கள் பலரையும் மனம் மாற்றி அரசின் இந்த முடிவுக்கு முட்டுக்கட்டை இடுவதாகவும் அவர் சொன்னார். இத்தனைக்கும் இதைச் சொன்ன என் நண்பரான அந்த உதவிப் பேராசிரியர் தி.மு.க., ஆதரவாளரும் இல்லை. மாறாக, கடுமையான தி.மு.க., எதிர்ப்பாளர்.
கல்வித்துறையில் மட்டுமில்லை, காவல்துறையிலும் இன்னும் சில துறைகளிலும் கூட இதே குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கேட்க முடிகிறது. எனவே மாண்புமிகு முதல்வர் தாலின் அவர்கள், நடக்கும் அரசு தனது அரசாக இருக்க வேண்டும் என உண்மையிலேயே விரும்பினால் முதலில் தமிழ்நாடு அரசுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பா.ச.க., ஆதரவு அதிகாரிகளைக் களையெடுக்க வேண்டியது இன்றியமையாதது.