விடுமுறை நாள் அறிவிக்கை தலைமைச்செயலருக்கு

நன்றியும் பாராட்டும்!

விடுமுறை நாள்களைத் தெரிவிக்கக் கூடத் தமிழுக்குத் தகுதி இல்லையா?” என நாம் கேட்டிருந்தோம். இதனை எழுப்பியதன் காரணம் காலம் காலமாக அப்படித்தான் இருக்கிறது என்பதால்தான். நான் 33 ஆண்டுகள் அரசுப்பணியில் இருந்துள்ளேன்; விடுமுறை ஆணை  ஒரு முறை கூடத் தமிழில் வந்ததில்லை. பின்னர் ஆங்கிலத்தில் ஆணை பிறப்பித்தாலும் தமிழிலும் அதனை வெளியிட வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்தது. அதன் பின் அதற்கிணங்கத் தமிழில் விடுமுறை அறிவிக்கையை வெளியிட்டாலும் உடனே  ஆங்கில அறிவிக்கை சுற்றுக்கு வந்து விடும் எனவே, தமிழ் ஆணை பிறப்பிக்கப்பட்டாலும் சுற்றுக்கு வராது. இப்பொழுது குறைபாடுகளைத் தெரிவிப்பின் உடன் நடவடிக்கை எடுப்பதால் அரசின் கவனத்திற்குக் கொண்டுவர எழுதியிருந்தோம்.

இதனைப்படித்த தலைமைச்செயலர் முனைவர் வெ. இறையன்பு தானே தொலைபேசி இணைப்பில் வந்து தமிழிலும் விடுமுறைப்பட்டியலை வெளியிட்டுள்ளதாகவும் தமிழ், ஆங்கிலம் இரண்டிற்கும் ஒருசேரத்தான் கையொப்பமிட்டதாகவும் கூறினார். அவ்வாறு வெளியிட்டிருக்கலாம்; ஆங்கில ஆணையைச் சுற்றுக்கு விட்டிருப்பார்கள் எனக் கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ளதைத் தெரிவித்தேன். பிற மாநிலங்களுக்கும் செல்வதால் ஆங்கிலத்திலும் வெளியிடுவதாகத் தெரிவித்தார். தமிழ் அறிவிக்கையையும் அன்புடன் அனுப்பிவைத்துள்ளார்.

மிகுதியான பணிச்சூழல் இருப்பினும் நம் கருத்தை மதித்து  விளக்கம் தந்த “காட்சிக்கு எளியரான” தலைமைக்குரிய “செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்பும் உடை”யவரான தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு  அவர்களுக்கு நம் மனப்பூர்வமான நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்