வேண்டவே வேண்டா சமற்கிருதமும் இந்தியும்
சமற்கிருதத்திணிப்பிற்கும் இந்தித்திணிப்பிற்கும் எதிராகக் கூறுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? இவ்விரு மொழிகளையும் எதிர்க்கவில்லை; இவ்விருமொழிகளின் திணிப்புகளைத்தான் எதிர்க்கின்றோம் என்கின்றனர். ஆனால், நாம் அவ்வாறு கூறப்போவது இல்லை. விருப்பம் என்ற போர்வையில் இவை திணிக்கப்படுகின்றன; தமிழ் நாட்டில் தமிழ் மக்களிடம் இருந்து அவர்களின் தாய்மொழியாம் தமிழை அப்புறப்படுத்துகின்றன; பெரும்பான்மை என்ற தவறான புள்ளிவிவர அடிப்படையிலும், பொய்யான சிறப்புகள் அடிப்படையிலும் உலக மொழிகளின் தாய் மொழியான தமிழை அதன் தோற்றுவாயான தமிழகத்திலிருந்து ஒவ்வொரு துறையிலும் அழித்து வருகின்றன. எனவே, விருப்ப மொழி என்ற போர்வையிலும் இவை தமிழ்நாட்டில் இருக்கக் கூடா.
சமற்கிருதத்தையும் இந்தியையும் பரப்ப எண்ணினால், அவற்றைத் தாய்மொழியாக உள்ளவர்கள் பணத்திலிருந்து செய்யட்டும்! வேண்டா என்று சொல்லவில்லை! இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள பிற தேசிய மொழிகளுக்குச் செலவழிப்பதைவிடப் பன்மடங்கு இவை இரண்டிற்கும் செலவழிக்கும் அறமற்ற செயலுக்கு இனியேனும் முற்றுப்புள்ளி வைக்கட்டும்! இங்குள்ளோர் இந்தி மாநிலத்திற்குப் பணிசெல்ல நேரிடின் அவர்கள் அப்பொழுது கற்றுக் கொள்ளட்டும்! அதற்காக அனைத்து மக்களும் இந்தியைக் கற்க வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் கோவிலாக இருந்தாலும் அனைத்து நிலை அலுவலகங்களாக இருந்தாலும் பிற எதுவாக இருந்தாலும் தமிழ் மட்டுமே ஆட்சி செய்யும் நிலை வந்த பின்பு நாம் பிற மொழிகள் கல்வியில் கருத்து செலுத்தலாம்.
காந்தியடிகளால் விதைக்கப்பட்ட நச்சு விதைகளுள் ஒன்றுதான் இந்தித்திணிப்பு. ஆள்வோருக்கு அடிபணிந்து குறுக்கு வழியில் பரப்பப்படுவதுதான் சமற்கிருதத் திணிப்பு. இது குறித்துத்தனியே பின்னர் ஆராயலாம். ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே காண வேண்டும். 1960 இல் மத்தியஅரசின் பணிகளுக்கு இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டது. 1974 இல் மத்திய அரசு அலுவலகங்கள் என்று இல்லாமல், மத்தியஅரசின் கட்டுப்பாட்டிலுள்ள தன்னாட்சி நிறுவனங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், பிற அமைப்புகள் அனைத்திலும் பணியில் சேர இந்திமொழிப்பயிற்சியும்இந்திமொழியில் தட்டச்சுப்பயிற்சியும் சுருக்கெ(ழுத்துப்பயிற்சியும் தேவை. இதன் மூலம் இந்தி மொழி அறிந்தவர்மட்டுமே மத்திய அரசின் வேலைகளில் சேர முடியும். இவ்வாறு நாம்(, பிற தேசிய இனத்தவர்) நாட்டை ஆள்வதில் தலைமைப் பங்கு வகிக்கும் மத்திய அரசின் முடிவெடுக்கும் இடங்களில் இல்லாமல் ஒழிக்கப்படுகின்றோம்.அங்கே உள்ள நமக்கு எதிரானவர்கள் நமது சிக்கல்களைத்தீர்ப்பதற்காக எவ்வாறு கருத்துடன்செயல்படுவார்கள்? அதனால்தானே சிங்களவர்களால் தமிழக மீனவர்கள் படுகொலையாகும் அவலம் தொடருகின்றது. ஈழத்தில் பன்னூறாயிரத் தமிழ் மக்கள் வஞ்சகமாகக்கொல்லப்பட்டும்கொலையாளிகளுக்கு இங்கே வரவேற்பு நல்கப்படுகின்றது. இவ்வாறு இவ்விருமொழிகள்திணிப்பால் நம் மொழி புறக்கணிக்கப்படும் பொழுது நம் இன நலனும் புறக்கணிக்கப்படுகின்றது என்பதை உணரவேண்டும்.
அறியாமையும் பண்பாடுகளுக்கு ஒவ்வாச் செய்திகளும் நிறைந்ததே சமற்கிருதம். ஆனால்,அதனை அறிவியல்மொழி எனத்தவறாகத்திரித்துப் பரப்பி வருவதால், உண்மையான அறிவியல் மொழியான தமிழ் புறந்தள்ளப்படுகின்றது.
1961 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஐந்துமொழிக்குடும்பங்களைச்சேர்ந்த 1652 மொழிகள் உள்ளன.ஆனால், இரண்டே இரண்டு அயல்மொழிகள் வளர்ச்சிக்காக 1650 தாயகமொழிகள் புறக்கணிக்கப்பட்டுஅழிவுப்பாதைக்குத் திருப்ப விடப்படுவதை மத்திய அரசு தன் கடமையாகக் கொண்டுள்ளது. எனவேதான், நாம் கட்டாயத் திணிப்பு நிலை என்ற நிலையில் இல்லாமல்விருப்பப்போர்வையிலும் இவை புகுத்தப்படக்கூடாஎன்கிறோம். எனவே,
தாய்மொழியும் தாயினமும் காக்கப்பட
இந்தியும் சமற்கிதமும் வேண்டவே வேண்டா!
தாய்நாடு செழித்துத் தழைத்தோங்க
தாய்மொழியாம் தமிழ்மொழியே என்றும் வேண்டும்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
ஆவணி 1, 2045 / ஆக.17,2014
Leave a Reply