அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்!

  தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றி வந்த மேனாள் மனோன்மணியப்பல்கலைக்கழத் துண்வேந்தர் முனைவர் க.ப.அறவாணன்,  இன்று(மார்கழி 08, 2049 / 23.12.2018)  காலை இயற்கை எய்தினார்.

நீரிழிவு நோயால் இடக்கால்  பாதிப்புற்று நடக்க இயலாமல் இருந்தவர்  நலம் பெற்று, 21 நாளில் நநன்றாக நடப்பார் என மருத்துவர் தந்த நம்பிக்கையில் குடும்பத்தினருக்கு உற்சாகம் தந்திருந்தார்.

 ஆனால், நேற்று மாலை எதிர்பாராமல் மாரடைப்பு நேர்ந்து மருத்துமனையில் சேர்த்து இன்று வைகறைப்பொழுதில் 5.15 மணிக்கு அன்பர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும்  வகையில் மரணமுற்றார்.

என்மீது தனிப்பட்ட அன்பு கொண்ட அவர் இழப்பைத்தனிப்பட்ட இழப்பாகவும் கருதுகிறேன்.

எப்பொழுதும் கூட்டத்திற்குத் தொலைபேசிவழி அழைத்ததும்  மறுக்காமல் வந்துவிடுவார்.

அண்மையில், ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை    மூடாதே!’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக்கழகம் பிற அமைப்புகளுடன் இணைந்து நடத்திய உரையரங்கத்தில் பங்கேற்றுத் தொடக்க வுரையாற்றியதை மறக்க இயலாது. “நிகழ்ச்சிக்கு அழைக்க யாரும் வருவார்களா அல்லது நானாக வரவேண்டுமா” எனக் கேட்டார்.  “ஐயா, நீங்களாகவே வழக்கம்போல் வந்துவிடுங்கள்”  என்றேன்.  உரிய நேரத்தில் வந்துவிட்டார்.

நான் ஏற்படுத்திய அறிமுகம் ஒன்று அவரை அறியாதவரகளும் அவரை அறியச் செய்து துணைவேந்தர் பதவியில் அமரத் துணைநின்றது என அப்பதவியில் சேர்ந்தபின் அன்புடன் நினைவுகூர்ந்தார்.(தகுதியில் வந்த பதவியை என் சிறு அறிமுகத்துடன் இணைத்துக் கொண்டார்.)

எப்பொழுது சந்தித்தாலும், “தமிழுக்கு ஏற்படுத்தும் கேடுகளுக்கு எதிராக இதழ்கள் வழியாகக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்” என்று பாராட்டி அன்பை வெளிப்படுத்தும் பண்பாளர்களில் அவரும் ஒருவர்.   

அண்மையில் தொலைபேசியில்  “தமிழைக் காக்குமா தமிழக அரசு?” என நான் தினமணியில் எழுதியதையும் நக்கீரனில் “கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே கலைஞருக்கு உண்மையான அஞ்சலி!”  என எழுதியதையும், “வேறு யாரும் துணிந்து எழுதாதபொழுது எழுதி வருகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்” என ஊக்கப்படுத்தினார். வஞ்சகம் இல்லாமல் பாராட்டும் நல்லுள்ளம் கொண்ட அவர் மறைவு சொல்லொணா இழப்பைத் தருவதாக உள்ளது.

 தமிழரை மட்டம்தட்டும்வகையில் அவர் கருத்துகள் சில இருப்பதாக நான் கூறினாலும், “என் கருத்து அது. என் நோக்கமும் உங்களுக்குப் புரியும். உடன்படாவிட்டால் நீங்கள் அதை மறுத்து எழுதுங்கள்” என்பாரே தவிரச் சினமடையமாட்டார்.

 அவர் நாளை காலை 11.00 மணிக்கு

அரும்பாக்கம் மின்மயானத்தில்

எரியூட்டப்பபடுகிறார்.

 

இல்ல முகவரி

2, முனிரத்னம் தெரு

அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை

சென்னை – 600029

 

தொடர்பிற்கு

 

முனைவர் தாயம்மாள் அறவாணன்   9444064568

திரு அறிவாளன்   9940235525 

முனைவர் வாணி அறிவாளன் 9444188795

[(அமைந்த கரையில் இருந்து பிரியும் நெல்சன்மாணிக்கம் சாலையில் தொடக்கத்தில் உள்ள எம்.ஆர்.மருத்துவமனை &  முகில்நடை(skywalk) கடைவளாகம் எதிர்ப்புறம்]

 

அவரைப்பற்றி அறிய அகரமுதல இதழில் நான் எழுதியுள்ள

 மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன்

கட்டுரையைக் காண்க.

 

குடும்பத்தினருக்கும் அன்பர்களுக்கும் அகரமுதல மின்னிதழ், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 – இலக்குவனார் திருவள்ளுவன்